Published:Updated:

`தங்கக் கரங்களைத் தாங்கிய தருணம்!'

திருப்பதி பெருமாளுக்குத் தங்க ஹஸ்தங்கள் சமர்ப்பணம்

பிரீமியம் ஸ்டோரி

சர்வலோக ரட்சகன் திருப்பதி ஏழுமலையான். அவரை அலங்கா ரப் பிரியன் என்று அன்பின் மிகுதியில் போற்றுவார்கள் அடியார் பெருமக்கள். பாசுரங்களாலும் பூச்சரங்களாலும் எம்பெருமானை அலங்கரித்து போற்றிய அன்பர்கள் ஏராளம்.

இன்னும் பலர் விலை மதிப்பற்ற அணிமணிகளைச் சமர்ப்பித்து, அந்த அணியழகில் அலங்காரபூஷிதனாக தரிசனம் தரும் திருவேங்கட வனைக் கண்ணார தரிசித்து பேறுபெறுவது உண்டு. `எல்லாம் உன்னுடையவை’ எனும் சமர்ப்பண மனப்பான்மையின் பக்திப் பாவனை அது. அவ்வகையில், அன்பர் ஒருவர் பங்களிப்பில் திருப்பதி திருவேங்கடவனுக்குச் சமர்ப்பிக்க, தங்கக் கரங்கள் (ஹஸ்த கவசங்கள்) தயாராகிவுள்ளன.

`தங்கக் கரங்களைத் 
தாங்கிய தருணம்!'

கலியுக தெய்வமாம் திருவேங்கடவனின் கரங்களில் பொருந்தி, வரும் அடியார்களுக்கெல்லாம் அருள்வாரி வழங்கவுள்ள பொற்கரங்களை தரிசிப்பது பெரும் பேறு அல்லவா? நேரில் தரிசிக்கச் சென்றோம்.

அபய - வரத நிலையில் திகழ்ந்தன தங்க ஹஸ்த கவசங்கள். சுமார் 5.8 கிலோ தங்கத்தில் கெம்புக்கற்கள், பவளம் பதிக்கப்பட்டு உருவாகியிருக்கும் பொற்கரங்களும் அவற்றின் வேலைப்பாடுகளும் நம்மை மெய்ம்மறக்கச் செய்தன.

சென்னை தி-நகரில் உள்ள சலானி ஜுவல்லரி நிறுவனத்தினர் இந்த ஹஸ்தங்களை வடிவமைத்துத் தயாரித்துள்ளனர். இந்த நிறுவனத்தின் இயக்குநர்களில் ஒருவரும் ஏழுமலையானின் பக்தருமான ஶ்ரீபால் சலானியிடம் பேசினோம்.

``அந்த ஏழுமலையானின் சங்கல்பம் இது என்றெ கருதுகிறோம். இதுவரையிலும் நிறைய கோயில்களுக்குப் பலவிதமான ஆபரணக் கைங்கர்யங்களைச் செய்துள்ளோம். இந்த நிலையில் அன்பர் ஒருவர் திருப்பதி பெருமாளின் திருக்கரங்களை பொன்னால் செய்துதர விரும்பி எங்களை அணுகினார். மிகவும் மகிழ்ச்சியுடன் ஒப்புக்கொண்டோம். எவ்வித லாப நோக்கமும் இல்லாமல், பெருமாள் அருளால் பணியை நிறைவேற்றினோம்.

எத்தனை ஜன்மத்து புண்ணியமோ தெரியவில்லை இந்த பாக்கியம் எங்களுக்குக் கிடைத்தது. ஹஸ்தத்துக்கான அளவுகள் எடுக்க வேண்டும் என்று திருப்பதி கோயிலுக்குச் சென்றபோது, பெருமாள் பல காலமாகத் தாங்கியிருந்த பழைய தங்க ஹஸ்தத்தை எங்களிடம் கொடுத்து அளவு எடுத்துக்கொள்ளச் சொன்னார்கள்.

அந்தத் தருணத்தில் பிறவியின் பலனை அடைந்துவிட்டதாகவே எண்ணி உருகிப் போனேன். எத்தனையோ மகான்கள், யோகிகள், கோடிக்கணக்கான பக்தர்கள் தரிசித்த அந்த திருக்கரங்களை மடியில் தாங்கி அளவு எடுக்கும் பேறு பெற்றேன்.

`தங்கக் கரங்களைத் 
தாங்கிய தருணம்!'

இந்த வாய்ப்பை அளித்த அந்த நன்கொடையாளருக்குத்தான் நாங்கள் நன்றி தெரிவிக்க வேண்டும். அவர் வடநாட்டு வியாபாரி; திருப்பதி பெருமாள்மீது அதீத பக்தி கொண்டவர். ‘கனவில் பெருமாள் வந்து தனக்கு ஹஸ்தம் செய்து தர வேண்டும் என்று சொல்லியிருக்கிறார். எனவே, நீங்கள் அதைச் செய்து தர வேண்டும்’ என்று எங்களிடம் கேட்டுக்கொண்டார். பெரும்பாக்கியமாக ஏற்று, அந்த வேலையைத் தொடங்கினோம். இந்தப் பெரும் கைங்கர்யத்தில் எங்களுக்கும் ஒரு பங்கு கிடைத்ததில் மனம் நிறைய மகிழ்ச்சி!

அந்தப் பணியை ஏற்ற புண்ணியமோ என்னவோ... இப்போதுகூட திருவல்லிக்கேணி பார்த்தசாரதி பெருமாள் கோயிலின் நாச்சியாருக்கு ஹஸ்தம் செய்து அர்ப்பணிக்க வுள்ளோம். இந்தப் பணி முழுக்க முழுக்க எங்களின் கைங்கர்யம். இதற்கு முன்னால் சென்ற ஆண்டில் பார்த்தசாரதி பெருமாளுக்கு `பாண்டியன் கொண்டை’ என்ற திருமுடி கிரீடத்தைச் செய்து கொடுத்தோம். தற்போது, சிதம்பரம் நடராஜருக்குப் பூமாலை செய்து கொண்டு இருக்கிறோம். எல்லாம் கடவுள் செயல்.

நாங்கள் பொதுவாக தெய்வங்களுக்கான ஆபரணங்கள், கவசங்கள் என்று கோயில் வேலைகளையே அதிகம் செய்கிறோம். நீண்டகாலமாக செய்து வரும் இப்படியான திருப்பணிகளே எங்கள் வளர்ச்சிக்குக் காரணம் என்றும் சொல்லலாம்’ என்று சிலிர்ப்பும் நெகிழ்வுமாகச் சொல்கிறார் ஶ்ரீபால் சலானி.

‘சுந்தரமான அங்கங்களுடன் நீண்ட இரு கரங்களுடன் திகழ்பவரே... திருமாலே... தோளில் ரத்ன வளைகள் மின்ன, பாம்பணி வளையங்கள் கைகளில் ஒளிவீசிட விளங்கும் பெருமாளே... சரணடைந்தோரின் ஆசைகளை நிறைவேற்றும் வேங்கடேசனே... உமது நேசக்கரங்களை எனக்காக நீட்டுங்கள்...’ என்று பலவாறு ஶ்ரீஶ்ரீவேங்கடேச கராவலம்ப ஸ்தோத்திரம் பெருமாளைப் போற்றுகிறது.

நாமும் அதே வேண்டுதல்களை மனதில் தியானித்து, ஏழுமலை வள்ளலின் அற்புதக் கரங்களை அலங்கரிக்கப் போகும் தங்க ஹஸ்தங்களை மீண்டும் மீண்டும் தரிசித்து விடைபெற்றோம்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு