Published:Updated:

தீர்க்க ஆயுள் அருளும் திருக்கடையூர்... 25 ஆண்டுகளுக்குப்பின் கோலாகலக் கும்பாபிஷேகம்!

திருக்கடையூர் அபிராமி

25 ஆண்டுகளுக்குப்பின் திருக்கடையூர் ஶ்ரீ அமிர்த கடேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை (27.3.22) நடைபெற இருக்கிறது.

தீர்க்க ஆயுள் அருளும் திருக்கடையூர்... 25 ஆண்டுகளுக்குப்பின் கோலாகலக் கும்பாபிஷேகம்!

25 ஆண்டுகளுக்குப்பின் திருக்கடையூர் ஶ்ரீ அமிர்த கடேஸ்வரர் திருக்கோயில் கும்பாபிஷேகம் நாளை (27.3.22) நடைபெற இருக்கிறது.

Published:Updated:
திருக்கடையூர் அபிராமி

மயிலாடுதுறை மாவட்டத்திலுள்ள திருக்கடவூர் திருத்தலம் காவிரியின் தென்கரையில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க திருத்தலம் ஆகும்.தேவார மூவராலும் பாடல் பெற்று, மார்க்கண்டேயற்காக காலனை வதம் செய்தது, அபிராமி பட்டருக்காக அம்மாவாசை திதியை பௌர்ணமி ஆக்கியது என்று பல்வேறு அற்புதங்கள் நடந்தேறிய திருத்தலம் இது. அமிர்த கடத்திலிருந்து உருவாகிய லிங்கத் திருமேனியரான மூலவர் அமுதீசர் எனும் நாமத்துடன் நிலைபெற்றுள்ள தலம்.

அமுதீசர் அகலாத சுகபாணியான அன்னை அபிராமியானவள் சாக்த வழிபாட்டின் பெருமையை அபிராமி பட்டர் மூலமாக உலகிற்கு உணர்த்திய தலம்.
திருக்கடவூர்
திருக்கடவூர்

மகாமண்டபத்தில் எழுந்தருளியுள்ள காலசம்கார மூர்த்தியை சாதாரண நேரங்களில் (யம)சம்ஹாரக் கோலத்தில் காணலாம். தீபாராதனை சமயத்தில் பீடத்தின் கீழ்க்கொடித் திறக்கப்பெறுவதால் அடியில் யமன் வீழ்ந்து கிடப்பதையும்; அருகில் கூப்பிய கரங்களுடன் மார்க்கண்டேயர் நிற்பதையும் காணலாம். ஆக யமனை சம்ஹரிக்கும் கோலம், அனுக்ரஹிக்கும் கோலம் ஆகிய இரு நிலைகளிலும் இம்மூர்த்தியைத் தரிசிக்கலாம் என்பது விசேஷம்.

காலசங்கார மூர்த்தியின் திருவடிகளில் வீழ்ந்து கிடக்கும் நிலையிலும், இம்மூர்த்திக்கு நேர் எதிரில் அனுக்ரஹம் பெற்ற நிலையிலும் ஆக இரு விதங்களில் யமதர்மனை தரிசிக்க இயல்வதும் இங்கு மட்டுமே விசேஷம்.

கால சம்ஹார மூர்த்தி
கால சம்ஹார மூர்த்தி

மார்க்கண்டேயர் வழிபட்ட 108 சிவ தலங்களில் 108வது தலம். 107வது தலம் கடவூர் மயானம் எனப்பெறும் திருமெய்ஞானம். ஆக ஒன்றுக்கொன்று தொடர்புடைய இரட்டைத் தலங்களினால் சிறப்புடையது. ஆதி காலத்தில் வில்வாரண்யம் எனவும் பின்னர் பிஞ்சிலாரண்யம்எனவும் வழங்கப்பெற்ற தலம்

சிவபெருமானுக்கு உகந்த வில்வமும்; அம்பிகைக்கு உகந்த பிஞ்சிலம் எனப்பெறும் ஜாதிமுல்லையும் இங்கு தல விருட்சங்கள்.

அகஸ்த்திய முனிவர் (பாபஹரேஸ்வரர்) மற்றும் புலஸ்த்தியமுனிவர் (புண்ணியகரேஸ்வர்) ஆகிய இருவரும் வழிபட்ட இரு லிங்கத்திருமேனிகள் சிறப்புடையவை.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாவங்களைப் போக்கி, புண்ணிய பலன்களை அருளுபவை.
கீழ்க்கோபுர வாயிலிலுள்ள‌ தீர்த்தம் அமிர்தத்துளிகள் உறைந்துபட்டமையால் 'அமிர்த புஷ்கரணி' என்ற சிறப்புடையது. மார்க்கண்டேயருக்காக உற்பத்தியான கங்கைத் தீர்த்தம் 'மார்க்கண்டேய‌ தீர்த்தம் , காசி தீர்த்தம்' (கடவூர் மயானம்) எனப்பெறுகிறது.

தினந்தோறும் கொண்டுவரப்பெறுகின்ற காசி தீர்த்தத்தினால் மூலவருக்கு திருமஞ்சனம் நிகழ்த்தப் பெறுவது இத்தலத்து சம்பிரதாயம்.

காலதத்துவம் இரண்டு..!

காலம், காலாதீதம் ஆகிய இரு தத்துவங்களின் தாத்பரியத்தினை உணர்த்துகின்ற தலம். இப்படிப் பல சிறப்புகளை உடைய தருமை ஆதீனத்தின் பரிபாலனத்தில் உட்பட்டு வரும் இந்த கோயிலின் குடமுழுக்குப் பெருவிழா நாளை (27.3.22) நடைபெற இருக்கிறது.
திருக்கடவூர் !
திருக்கடவூர் !

தருமை ஆதீன 26 ஆவது குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ சண்முக தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகள் காலத்தில் 1997 - ம் ஆண்டு மார்ச் 26 -ல் குடமுழுக்கு விமரிசையாக நடைபெற்று தற்போது வரும் 27 -ம் தேதி ஞாயிற்றுக்கிழமை தருமை ஆதீன 27 ஆவது நட்சத்திர குருமணிகள் ஸ்ரீலஸ்ரீ கயிலை மாசிலாமணி தேசிக ஞானசம்பந்த பரமாசாரிய சுவாமிகளின் திருமுன்னிலையிலும் பல்வேறு திருமடத்தின் தலைவர்களின் முன்னிலையிலும், அமைச்சர்கள், அரசு அதிகாரிகள் மற்றும் பொதுமக்களின் பெரும் ஆதரவு மற்றும் வருகையோடும் வெகு விமரிசையாக நடைபெற உள்ளது.

இந்த வைபவம் மயிலாடுதுறை மாவட்டமாக மாறிய பின் நடக்கும் முதல் குடமுழுக்கு ஆகும். மார்க்கண்டேயர்க்கு சிரஞ்சீவி என்ற வரத்தையும், எமதர்மருக்கு சிவத்தை வழிபடும் எவரையும் நெருங்க கூடாது என்ற கட்டளையும், தனம், கல்வி, தளர்வு இல்லா மனம், தெய்வ வடிவம், வஞ்சம் இல்லா நெஞ்சம் என்று நல்லன எல்லாவற்றையும் இங்கு எழுந்தருளியுள்ள இறைவரும், இறைவியும் குறைவில்லாமல் அளிப்பதனால் தமிழ்நாடு மட்டுமல்லாது வட மாநிலங்களிலில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் பக்தர்கள் வந்த வண்ணம் உள்ளனர்.

மூர்த்தி, தலம், தீர்த்தம் என மூன்றாலும் சிறப்பு பெற்ற இத்தலத்தை முறையாக வழிபட்டு பலன் பெற்றோர் ஏராளம்.

25 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் இந்தக் குடமுழுக்கு அரசு நெறிகாட்டுதலின்படி மிகுந்த பாதுகாப்போடு ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

பொதுவாகவே கும்பாபிஷேகத் தினத்தன்று ஆலயத்துக்குச் சென்று வழிபட்டால் பெருமான் அகமகிழ்ந்து ஆசி நல்குவார், முப்பது முக்கோடித் தேவர்களின் ஆசி நமக்குக் கிட்டும். வினைகள் நீங்கி பல்வேறு புண்ணியங்களை பெறலாம்.

தவிர்க்க முடியாத காரணங்களால் கும்பாபிஷேகத்தில் கலந்துகொள்ள இயலாதவர்கள், 48 நாள்கள் நடக்கும் மண்டல பூஜையில் கலந்துகொண்டு நன்மைகளைப் பெறலாம். பிறவிப்பெரும்பயன் அடையலாம். ஒரு கும்பாபிஷேகத்தைக் காண்பது மூன்று ஜன்மங்களில் நாம் செய்த பாவத்தைப் போக்கக் கூடியது.

திருகடவூர் கும்பாபிஷேகம்
திருகடவூர் கும்பாபிஷேகம்

அதுமட்டுமல்லாமல் சிறப்பு மிக்க இந்த கடவூர் ஆலயத்தை மார்க்கண்டேயர், குங்குலியக்கலயர், காரி நாயனார், சப்த கன்னிகளில் நவதுர்கை, சிபி, பிரமன், வாசுகி, சோமசருமன், சிவசருமன், ஏமகிரீடன், ரத்தின கைடன், சந்திர பூடணன், பிரமாதிராசன், ரத்தினாகரன், பஞ்ச சூரியர்கள் எனும் பலர் வழிபட்டு உய்ந்துள்ளனர். அவர்கள் அனைவர் ஆசிகளையும் இந்தக் குடமுழுக்கு நேரத்தில் நாம் பெறலாம்.

வரும் அன்பர்களுக்கு தங்கும் இடம், அன்னதானம், பாதுகாப்பான பொதுக் கழிப்பிட வசதி, முதலுதவி சிகிச்சை மையம், அவசரத் தகவல் மையம் என பலத்தரப்பட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.

கூட்ட நெரிசல் இல்லாமல் தகுந்த பாதுகாப்போடு தரிசனம் செய்யவும், இறைவர், இறைவியை வழிபட சிறப்பு வழிகளும் உரிய காவல்துறை உதவியோடு நடைபெற உள்ளன.

சிறப்பு கருத்தரங்கங்கள், கலைநிகழ்ச்சிகள், பட்டி மன்றங்கள் மற்றும் நேரில் வர இயலாத பக்தர்கள் தங்கள் இல்லங்களில் இருந்தே தரிசிக்கும் வகையில் இணையம் மூலம் நேரலை செய்யப்படுகிறது.

இத்தகைய வரலாற்று சிறப்புமிக்க மகா கும்பாபிஷேகத்தில் மக்கள் அனைவரும் தவறாமல் கலந்துகொண்டு இறைவன் திருவருளையும் நட்சத்திர குருமணிகளின் குருவருளையும் பெற்று அருளோடு வாழலாம் என்பது திண்ணம்.