Published:Updated:

காடவர்கோன் கழற்சிங்க நாயனார் குருபூஜை தினம்... சிவ வழிபாடு செய்ய உகந்த நாள்!

கழற்சிங்க நாயனார் குருபூஜை
கழற்சிங்க நாயனார் குருபூஜை

பூக்கும் மலர்கள் எல்லாம் இறைவனுக்கு அலங்காரம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் படைக்கப்பட்டவை என்றும், திருக்கோயில்களில் மலர்கள் முதலில் இறைவனுக்கே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் சிவனடியார்கள் கருதுவர்.

சிவ வழிபாட்டில் கூறப்படும் போற்றி வாக்கியங்களில் ஒன்று, `தென்னாடுடைய சிவனே போற்றி, எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி’ என்பது. சிவபெருமான் வழிபாடு, இந்த உலகம் முழுவதும் காணப்பட்டாலும் தென்னாடாகிய தமிழ்நாட்டில் மிகவும் சிறப்புடன் நடைபெறும் மரபினை உடையது. இங்குதான் 63 திருத்தொண்டர்கள் தோன்றி சைவ நெறி வளர்த்தனர். பிற சமயங்கள் செல்வாக்குப் பெற்றிருந்த காலங்களில், அவற்றை மீறி வீரமும் வைராக்கியமும் கொண்டு சிவநெறியை வளர்த்தனர். அப்படிப்பட்டவர்களோடு இறைவன் திருவிளையாடல் புரிந்தும், தோன்றித் திருக்காட்சி தந்தும் வழிநடத்தியது குறித்த சமய வரலாறுகள் அநேகம் உள்ளன. அப்படி சிவனுக்காக வைராக்கியம் பூண்டு வாழ்ந்த மன்னர்களில் ஒருவர், கழற்சிங்கர்.

சிவபெருமான்
சிவபெருமான்

பல்லவ வம்சத்தில் தோன்றிய இந்த மன்னன், தன் மனைவியோடு ஒரு முறை திருவாரூர் தலத்துக்குச் சென்றார். அரசி, திருவாரூர் கோயிலை தரிசிக்கச் சென்றாள். அப்போது, திருப்பூ மண்டபத்தில் இருந்த ஒரு மலரைக் கண்டு, அதன் அழகில் மயங்கிய அரசி, அதை எடுத்து முகர்ந்தாள். பூக்கும் மலர்கள் எல்லாம் இறைவனுக்கு அலங்காரம் செய்யவும் அர்ச்சனை செய்யவும் படைக்கப்பட்டவை என்றும், திருக்கோயில்களில் மலர்கள் முதலில் இறைவனுக்கே சமர்ப்பிக்கப்பட வேண்டும் என்றும் சிவனடியார்கள் கருதுவர். அவ்வாறு இறைவனுக்கு சமர்ப்பிக்க இருந்த மலரை எடுத்து அரசி முகர்ந்துவிட்டதைக் கண்ட செருத்துணையார் என்னும் சிவனடியார் வெகுண்டு, மலரினை முகர்ந்ததை சிவ அபராதமாகக் கருதி அரசியின் மூக்கை அரிந்துவிட்டார்.

கடல் சூழ்ந்த உலகெலாம் காக்கின்ற பெருமான் காடவர்கோன் கழற்சிங்கன் அடியார்க்கும் அடியேன்
திருத்தொண்டத்தொகை.

இந்த நிகழ்வினைப் பற்றி கேள்விப்பட்ட மன்னர் அங்கு வந்து, நடந்ததை அறிந்தார். பின்பு, சிவ அபராதம் முதலில் செய்தது மலரை எடுத்த அரசியின் கைகளே அதையே வெட்டியிருக்க வேண்டும் என்று சொல்லி அரசியின் கையை வெட்டினார். இதைக் கண்ட தேவர்கள் கழற்சிங்கரின் பக்தியைக் கண்டு சிலிர்த்துப் பூமாறிப் பொழிந்தனர். சிவபெருமான் சிவனடியார்களின் பக்தியால் மனம் கனிந்து ரிஷபாரூடராகக் காட்சி தந்து அருளினார். அரசியையும் சுகமாக்கினார் என்கிறது திருத்தொண்டர் புராணம். தன்னலமில்லா வீர பக்தி நெறியைப் பரப்பிய கழற்சிங்க நாயனாரின் குருபூஜை, வைகாசி மாதம் பரணி நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது.

Siva Lingam
Siva Lingam

இன்று அனைத்து சிவாலயங்களிலும் கழற்சிங்க நாயனாருக்கு சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். ஆலயம் சென்று தொழ இயலாத இந்தச் சூழலில், மனத்தில் சிவனையும் அடியார்களையும் நினைத்து வழிபட்டு, திருவருளும் குருவருளும் பெறலாம்.

அடுத்த கட்டுரைக்கு