Published:Updated:

மாமன்னன் வேண்டுகோளின்படி சைவத் திருமுறைகள் தொகுத்த அடியார் நம்பியாண்டார் நம்பியின் குருபூஜை தினம்!

சைவக்குரவர்
சைவக்குரவர்

திருமுறை அடங்கிய ஓலைகளை அப்படியே நம்பிகளிடம் ஒப்படைத்த மன்னன், அவற்றைத் தொகுத்துத் தரும்படி வேண்டிக்கொண்டார். அதன்படி தேவார- திருவாசகங்களைத் தொகுத்துத் தமிழுக்கும் சைவத்துக்கும் மாபெரும் தொண்டாற்றினார் நம்பிகள்.

அந்நிய மதங்களின் செல்வாக்கால் புகழ்மங்கியிருந்த சைவ சமயத்தை மீண்டும் பெரும்புகழோடு நிறுவியவர்கள் சமயக் குரவர் நால்வர். அவர்களின் பக்தி நெறியும் தமிழ்மொழியும் திருமுறைகளாகித் தமிழ்வேதங்களாகப் போற்றப்பட்டன. ஆனால் காலப்போக்கில் அந்தத் திருமுறைகள் வழக்கிலிருந்து மறைந்தன. தேசங்கள் பலவற்றையும் வென்ற மாமன்னன் ராஜராஜசோழனின் மனதில் சைவத் திருமுறைகளைத் தேடிக் கண்டடைந்து தொகுக்க முடியவில்லையே என்ற கவலை இருந்தது. அதைத் தீர்க்க வழி தேடினான். அப்போது நம்பியாண்டார் நம்பி குறித்துக் கேள்விப்பட்டு அவரை தரிசிக்கப் பொள்ளாப் பிள்ளையார் கோயிலுக்கு வந்தான்.

நம்பியாண்டார் நம்பி
நம்பியாண்டார் நம்பி

நம்பியாண்டார் நம்பி சிறுவயதுமுதலே பொள்ளாப் பிள்ளையாரின்மீது பக்தியும் நம்பிக்கையும் கொண்டவர். நம்பி சிறுபிள்ளையாக இருக்கும்போதே அவரோடு திருவிளையாடல் புரிந்து காட்சி கொடுத்து ஆட்கொண்டவர் பொள்ளாப் பிள்ளையார். நேருக்கு நேராய்த் தோன்றி நம்பியோடு உரையாடுபவர். மன்னன் ராஜராஜனின் மனக் குறிப்பை அறிந்து அதைப் பிள்ளையாரிடம் கூறி சைவத் திருமுறைகள் இருக்கும் இடத்தைக் காட்டியருளுமாறு வேண்டினார் நம்பிகள்.

உடனே பிள்ளையார், தமிழ்வேதங்களைத் தொகுக்க இதுவே தருணம் என்பதைச் சொல்லி, திருமுறைகள் இருக்கும் இடத்தைச் சொல்லியருளினார்.  

'தில்லை நடராஜப் பெருமான் அருளும் தலத்தில் தென்மேற்கு மண்டபத்தில், கை இலச்சினை (முத்திரை) கொண்ட அடையாளத்துடன் சுவடிகள் இருக்கும்' எனக் கூறியருளினார் விநாயகப் பெருமான்!

இந்தத் தகவலை நம்பியாண்டார் நம்பி மன்னனுக்குத் தெரிவித்தார். மாமன்னன் இதை அறிந்து மனம் நெகிழ்ந்து நம்பியையும் உடன் அழைத்துக்கொண்டு தில்லைப்பதிக்கு விரைந்தார். விநாயகப் பெருமான் கூறிய இடத்தில் புற்றால் மூடியிருந்த ஓலைச்சுவடிகளைக் கண்டு சிலிர்த்தார் நம்பிகள். தில்லைவாழ் அந்தணர்கள் விருப்பப்படி சைவ மூவருக்கு அங்கே திருமேனிகளை ஸ்தாபித்து வணங்கினான் ராஜராஜன்.

ராஜராஜ சோழன்
ராஜராஜ சோழன்

அங்கு திருமுறை காட்டிய விநாயகருக்கும் சந்நிதி அமைந்து வழிபட்டனர். திருமுறை அடங்கிய ஓலைகளை அப்படியே நம்பிகளிடம் ஒப்படைத்த மன்னன், அவற்றைத் தொகுத்துத் தரும்படி வேண்டிக்கொண்டார். 

அதன்படி தேவார- திருவாசகங்களைத் தொகுத்துத் தமிழுக்கும் சைவத்துக்கும் மாபெரும் தொண்டாற்றினார் நம்பிகள். 

இத்தகைய சிறப்புகளையுடைய நம்பியாண்டார் நம்பிகளின் குருபூஜை தினம் வைகாசிமாதம் புனர்பூச நட்சத்திர நாளில் கொண்டாடப்படுகிறது. இன்று (26.5.20) வைகாசி புனர்பூசம். வழக்கமாகத் திருநாரையூரில் இந்த வைபவம் மிகவும் சிறப்பாகக் கொண்டாடப்படும். அனைத்து சிவாலயங்களிலும் சிறப்பு வழிபாடுகள் நடைபெறும். தற்போது பக்தர்கள் ஆலயம் சென்று வழிபாடு செய்ய இயலாத நிலை ஏற்பட்டுள்ளது. இந்த நிலைமாறவும் நம்பியாண்டார் நம்பியின் திருவடிகளைப் போற்றவும் இன்று இல்லத்திலிருந்து சைவத் திருமுறைகளை ஓதி வழிபாடு செய்து திருவருளையும் குருவருளையும் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு