Published:Updated:

குருப்பெயர்ச்சி 2021: திருலோக்கி திருத்தலம் சிறப்பிடமாகக் கருதப்படுவதேன்?

இன்று (13.11.2021) குருப்பெயர்ச்சி - இது தொடர்பாக திருலோக்கி திருத்தலம் சிறப்பிடமாகக் கருதப்படுவதேன்?

'குரு' என்ற‌ பதத்திற்கு நம் சமயத்தில் ஒரு தனியிடம் உண்டு. மானுட வாழ்க்கையில் பரிபக்குவம் தந்தருளிட ஞானாசாரியராக வருபவர் 'குரு'. தவிர, நவகிரகங்களில் ஒன்றாக விளங்கிடும் கோளும் 'குரு' என்ற பெயராலேயே விளங்குகிறது.

'பிருகஸ்பதி' எனப்பெறும் தேவகுருவான இவர் பெரிதும் போற்றப்பெறுபவர். சூரியனைச் சுற்றிவரும் கோள்களில் அளவில் பெரியதான 'வியாழன்' என்பதாகிய இக்கோள் சூரியனை ஒருமுறைச் சுற்றி வர 12 ஆண்டு காலங்கள் ஆகும். அதனால் சற்று ஏறத்தாழ ஆண்டுக்கு ஒரு ராசியாக 12 ராசிகளையும் கடக்கிறது இக்கிரகம்.

திருலோக்கி
திருலோக்கி

அதன்படி ஐப்பசி மாதம் 27-ம் தேதி (13.11.2021) சனிக்கிழமையான இன்று மாலை 6.10 மணிக்கு இதுவரை மகர ராசியில் சஞ்சரித்து வந்த குருபகவான், கும்ப ராசிக்கு இடம் பெயர்கிறார்.

"குரு பார்த்திடக் கோடி நன்மை' என்பது சான்றோர் வாக்கு. இல்லறம் நல்லறமாக அமைந்திட குருவினருள் வேண்டும். திருமகள் நிகர்த்த இல்லாள் அமைவதற்கும், சத்புத்திர பிராப்தி கிடைப்பதற்கும் அருளுபவர் இந்த குருபகவான்.

குருபகவான் வீற்றிருந்து அருள்பாலிக்கும் பல திருத்தலங்கள் உண்டு. எனினும் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே ஆடுதுறையிலிருந்து 5 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள திருலோக்கி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஸ்ரீ அகிலாண்டேஸ்வரி சமேத ஸ்ரீ சுந்தரேசுவரர் திருக்கோயில் தனிச்சிறப்பு வாய்ந்ததாகும்.

பொதுவாகப் பெரும்பாலான தலங்களில் நவகிரக குரு பகவானைத் தரிசிக்க இயலும். ஆனால் தேவ குருவான இவரை, சிவகுருவான ரிஷபாரூடனரைத் தரிசிக்கும் படியான அமைப்பு உலகத்திலேயே இங்கு மட்டும்தான் உள்ளது. சோழர் காலத்தில் நான்கு வேதங்கள் அறிந்த அந்தணர்களால் சிறந்திருந்த ஊர் இது‌.

கருவூர் தேவர் திருவிசைப்பா செய்வித்த சிவத்தலமும் இதுவாகும். ராஜராஜ சோழரின் பட்டத்தரசிகளில் ஒருவரான திரைலோக்கிய மாதேவியார் திருப்பெயரால் 'திரைலோக்கிய மாதேவி சதுர்வேதி மங்கலம்' என்றும் 'திரைலோக்கிய மாதேவி சுந்தரம்' என்றும் அழைக்கப்பட்டுள்ளதாகக் கல்வெட்டுகள் மூலம் அறிகிறோம். பரசுராமர் சிவபெருமானை வழிபட்ட இடம் ஆகையால் 'ஸ்ரீ பரசுராமேஸ்வரம்' என்றும் இத்தலம் புராணங்களில் குறிப்பிடப் பெற்றுள்ளது.

திருலோக்கி
திருலோக்கி

"ஒருமுறை நவகிரகங்களில் சுபரான குருபகவான் தாம் பலம் குன்றி வருந்திய நிலையில், மத்யார்ஜுனம் எனப்பெறும் திருவிடைமருதூர் மகாலிங்க பெருமானைத் தொழுது வேண்டிட, அப்பெருமானோ இத்தலத்தில் வழிபட பணித்தாராம். அதன்பேரில், இங்குள்ள இறையைத் தவமியற்றி வேண்டிநிற்க நல்லதோர் மார்கழித் திருவாதிரைத் தினத்தில் தேவகணங்கள் புடைசூழ ரிஷபாரூடனராய்க் காட்சித் தந்த சிவபெருமான் குருபகவான் தோஷத்தினைப் போக்கி அருளினார்" என்பது புராண வரலாறு.

இதன் அடிப்படையில் அமைக்கப்பெற்ற ரிஷபாரூடனர் கல்திருமேனியராக இத்தலத்தில் மட்டுமே காட்சியளிப்பது விசேஷம். பிரதோஷ காலத்தில் வழிபட வேண்டிய ரிஷபாரூடனர் திருக்கோலமானது ஏனைய தலங்களில் உலோகத்திருமேனியாக கொண்டாடப்பெறுவது மரபு.

ஆயினும் அம்மையும் அத்தனும் இணைந்து ரிஷப வாகனத்தவராய், கல் திருமேனியராய்க் காட்சி தருவது இத்தலத்தில் மட்டுமே‌! ஒற்றைக் கல்லில் எழில் வாய்ந்த இத்தகையதோர் அமைப்பு சிற்பக்கலையின் உச்சகட்டமாகக் கொண்டாடப்படுகிறது. ‘ராஜேந்திர சோழர் தம் வட இந்திய படையெடுப்பின் வெற்றிச்சின்னமாகக் கொண்டு வரப்பெற்ற நுளம்பர் படைப்பு இது’ என்கிறார்கள்.

இத்திருக்கோலக்காட்சிக்குப் பின்புறம் சுந்தரேஸ்வரப் பெருமான் லிங்கத் திருமேனியராகக் காட்சித் தருவதாக ஐதிகம். எதிரே இந்த ரிஷபாரூடனரை கை கூப்பி, சிவபெருமானை வணங்கிடும் அஞ்சலி பாவனையில் நவகிரக குருபகவான் நிலைபெற்றுள்ளார். இது மிகுந்த விசேஷமானதோர் அரிய கோலமாகும்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இத்தலத்து குரு பகவானை வழிபடுபவர்கள் வெற்றி மேல் வெற்றிகளைப் பெறுவார்கள் என்பது அனுபவத்தார் கூற்று. குறிப்பாக, மகர ராசிக்காரர்கள் குருவினால் நற்பலன்களைப் பெற்றிட வணங்கவேண்டிய தலம் இது எனலாம்‌. ஜாதகத்தில் குருபகவான் பலம் இழந்தவர்கள் இங்கு வழிபட தோஷங்கள் அகன்று வளமான வாழ்வு பெறுவது கண்கூடு. நெடுநாள் திருமணத்தடை உள்ளவர்கள் குருவாரங்களிலும், பிரதோஷ காலங்களிலும் இம்மூர்த்தங்களை வழிபட்டு விவாகப்ராப்தமும், சத்புத்திர பிராப்தமும் பெறுகின்றனர்‌.

குரு பகவான் ஓயாத உழைப்பு, தியாகம், தன்னம்பிக்கை, உடற்பலம், மனோதிடம் ஆகியவற்றிற்குக் காரணராக அமைகிறார்.

நல்ல வலுவான உடல் அமைவதற்கு புரதச்சத்து (protein) செறிந்த நாட்டுக் கொண்டைக்கடலை ஆகச்சிறந்த உணவு. எனவே, குருபகவானுக்கு உரித்தானதாக அமைந்த இத்தானியத்தினை நிவேதனமாக உண்பதை மறைமுகமாக வழக்கப்படுத்தினர் நம் முன்னோர்கள்.

குருபகவானுக்கு உரிய

நிறம் - பொன் மஞ்சள்

குலம் - அந்தணர்

சுவை - இனிப்பு

ரத்தினம் - கனக புஷ்பராகம்

தானியம் - கொண்டைக் கடலை

திருலோக்கி
திருலோக்கி

மஞ்சள் நிற ஆடைகளை அணிவதாலும், குருபகவானுக்கு உரிய கனக புஷ்பராகம், பொன், மஞ்சள் வஸ்திரம், இனிப்பு,
கொண்டைக்கடலை இவைகளில் இயன்றவற்றை அந்தணருக்குத் தானமாக அளிப்பதாலும் குருவினருளை அடைய இயலும்.

குருவாரங்களில் (வியாழன்) சிவாலய தக்ஷிணாமூர்த்திக்கு தீபமேற்றி வணங்குவதால் குருவினருளைப் பெற இயலும்.

மேலும் சித்தர்களின் ஜீவ சமாதிகளை வழிபடுவதும், குருமார்களின் இடையறாத தரிசனமும் மிக எளிதில் குருவினருளைப் பெற்றுத் தந்திடும் எளிய வழிகள் ஆகும்.

இன்று குருபெயர்ச்சியை முன்னிட்டு இத்தலத்தில் சிறப்பு யாகப்பூஜைகளும், குருபகவானுக்கு அபிஷேக, ஆராதனைகளும் நடைபெறுகின்றன. இத்தகு மூர்த்தியைத் தரிசித்து சகல வளங்களையும் பெற்றிட வணங்கலாமே!
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு