Published:Updated:

`சகல பிணிகளையும் தீர்க்கவல்ல மூலிகை லிங்க தரிசனம்'- சக்திவிகடன் சார்பில் திருவண்ணாமலையில்!

அற்புதமான மூலிகைப் பிரசாதத்தை நீங்களும் பெறலாம். அதற்கு கீழ்க்காணும் படிவத்தை நிரப்பினால் போதுமானது. அதில் கேட்கப்படும் பெயர், ஊர், முகவரி, தொலைபேசி எண் முதலான விவரங்களை முறையே பூர்த்தி செய்யுங்கள்.

மூலிகை லிங்கம்
மூலிகை லிங்கம்

ஆதியும் அந்தமும் இல்லாத அருட்பெருஞ்ஜோதியான சிவபெருமானை உருவமாய், அருவமாய், அருவுருவமாய் வணங்குவது நம் மரபு. பெரும்பாலும் ஈசனை சிவலிங்க வடிவாய் வழிபடுவதன் சிறப்பை ஆகமங்கள் எடுத்துரைக்கின்றன.

`காணாத அருவினுக்கும் உருவினுக்கும் காரணமாய்

நீணாகம் அணிந்தார்க்கு நிகழ்குறியாம் சிலைலிங்கம்’ என்பார் சேக்கிழார் பெருமான்.

மூலிகை லிங்கம்
மூலிகை லிங்கம்

லிங்கம் அருவுருவம். மனிதர்கள் மட்டுமல்லாது அனைத்து உயிர்களும் வழிபட்டுப் பேறுபெரும் வகையில் இந்தப் பூவுலகில் நிலைகொண்ட வடிவம் அது. அத்தகைய லிங்கத்தை உலகின் உயர்ந்த திரவியங்களால் செய்து வழிபடுவது மரபு.

ஆலயங்களில் சிறிதும் பெரிதுமான திருமேனியோடு எழுந்தருளியிரும் லிங்கங்கள் மட்டுமல்லாமல்... அடியார்கள் தங்களின் வழிபாட்டுக்கு ஏற்ப சந்தனம், மஞ்சள், புற்றுமண் எனப் பல மங்கல திரவியங்களாலும் சிவலிங்கங்கள் அமைத்து வணங்குவது உண்டு. ஷணிக லிங்கங்களாகவும் போற்றப்படும் அவை அற்புதமான பலன்களை அருளவல்லவை.

அவ்வகையில், கடந்த இரண்டு வருடங்களாக திருக்கார்த்திகை மகா தீபவிழாவை முன்னிட்டு, நினைத்தாலே முக்தி தரும் திருவண்ணாமலையில், லட்சக்கணக்கில் திரளும் பக்தர்கள் தரிசித்து அருள்பெறும் விதமாக, சக்தி விகடனின் சார்பில் பிரமாண்டமான சிவலிங்க மூர்த்தம் எழுந்தருளச் செய்யப்பட்டு வருகிறது. முதலாண்டு (2017) தர்ப்பை லிங்கமும் கடந்த ஆண்டு (2018) ருத்திராட்ச லிங்கமும் திருவண்ணாமலையில் இடம்பெற்று அருள் தந்தன.

மூலிகை லிங்கம்
மூலிகை லிங்கம்

அதேபோன்று இந்த வருடமும், திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் - ஈசான்ய லிங்கம் சந்நிதிக்கு எதிரிலுள்ள அம்மணி அம்மன் சித்தர்பீடம் கோயிலில், பிரமாண்ட மூலிகை லிங்கம் எழுந்தருளப்பெற்றுள்ளது. சித்தர்கள் அருளிய விதிப்படி 108 மூலிகைகளால் ஆன அற்புதச் சிவலிங்கம் இது.

ஈசனுக்கு வைத்தியநாதன் என்றும் திருப்பெயர் உண்டு. நம் உடல் நோய்களையும் பிறவிப்பிணியையும் நீக்கும் வைத்தியவன் அல்லவா அவன். அந்த வைத்தியநாதனை மூலிகை லிங்க வடிவில் தரிசிப்பதும் அந்த லிங்கத்தை வழிபடுவதும் மிக மிக விசேஷம்.

பிணிகள் தீர்க்கும் மூலிகை லிங்கம்!

அவ்வகையில் வெற்றிலை, வேம்பு, வில்வம், வல்லாரை, வகுளம், வெட்டுக்காயப் பூண்டு, வெள்ளெருக்கு, வசம்பு, வால்மிளகு, சுண்டை, சுடுகாட்டு மல்லி, சிறுகுறிஞ்சான், சிற்றரத்தை, சிறுநெருஞ்சி, செம்பருத்தி, சீந்தில், செண்பகம், கோரை, கோவைக்கொடி, கொழுஞ்சி, கொத்தமல்லி, குன்றுமணி, குப்பைமேனி, கீழாநெல்லி, காட்டு எலுமிச்சை, கிச்சிலி, கண்டங்கத்திரி, கறிவேப்பிலை, அருநெல்லி, கற்பூரவல்லி, கருநொச்சி, கற்றாழை, கருவேலம், கடுக்காய், கண்டந்திப்பிலி, கரிசலாங்கண்ணி, ஓமம், ஓரிதழ் தாமரை, புன்னை, புதினா, புளியம், பிரண்டை, பப்பாளி, பசலி, புரசு, பலாசு, ஊமத்தை, இலுப்பை, இஞ்சி, நொச்சி, நீர்முள்ளி, நெருஞ்சி, நுணா, நாவல், நாயுருவி, நிலவேம்பு, நன்னாரி, நந்தியாவட்டை, ஆல், ஆரை, ஆடுதொடா, ஆவாரை, ஆமணக்கு, அழுகண்ணி, அசோகு, அரசு, அதிமதுரம், அம்மான் பச்சரிசி, அகத்தி, அரளி, அறுகு, அவுரி, அவரை, தனியா, திப்பிலி, துத்தி, தூதுவளை, திருநீற்றுப் பச்சை, சிவனார் வேம்பு, தொழுகண்ணி... ஆகிய மூலிகைகளோடு இன்னும் பல அபூர்வ வகை மூலிகைகளையும் சேர்த்து, சிவனடியார்களால் பயபக்தியோடு உருவாக்கப்பட்ட லிங்க மூர்த்தம் இது.

`சகல பிணிகளையும் தீர்க்கவல்ல மூலிகை லிங்க தரிசனம்'- சக்திவிகடன் சார்பில் திருவண்ணாமலையில்!

இந்த லிங்கத்துக்கான அரிய மூலிகைகளைத் திரட்டும்பணியில் சிவனடியார்கள் கடந்த இரண்டுவாரங்களாக ஈடுபட்டு அவற்றை சேகரித்து லிங்கமாகச் செய்து வைத்துள்ளனர்.

என்னென்ன பலன்கள் கிடைக்கும்..?

மூலிகை லிங்கத்தை வழிபடுவதன் மூலம் நம் மனத்தில் இருக்கும் சகல துயரங்களும் விலகியோடி மகிழ்ச்சி கூடும். மூலிகை லிங்கத்தின் முன்பாக விளக்கேற்றி, சிவ நாமாக்களைப் பாராயணம் செய்தால், சிந்தை, சொல், செயல் ஆகியவற்றால் செய்த பாவங்கள் விலகும். அருமருந்தான மூலிகைகளின் மகிமையால் நோய்கள் தீரும். சித்தர் பெருமக்களின் ஆசிகள் கிட்டும் என்பது ஐதீகம்.

மகா தீப தரிசனத்துக்காக திருவண்ணாமலைக்குச் செல்லும் பக்தர்கள், கிரிவலப்பாதையில் ஈசான்ய லிங்கத்துக்கு எதிரில், அம்மணி அம்மன் சித்தர்பீடம் ஆலயத்தின் வளாகத்தில் அமைந்துள்ள இந்த அற்புத லிங்கத்தையும் அவசியம் தரிசித்து வாருங்கள். அந்த மகாதேவனின் திருவருளால் சகல தோஷங்களும் துயரங்களும் நீங்கப்பெற்று, மகிழ்வான வாழ்வையும் வரத்தையும் பெற்று வாருங்கள்.

மூலிகை லிங்கம் மூலிகைப் பிரசாதம் உங்கள் வீடுதேடி...

தீபத் திருவிழா நிறைவடைந்ததும் மூலிகை லிங்கம் புண்ணிய நீர் நிலைகளில் சேர்க்கப்படும். முன்னதாக மூலிகைக்காப்பு பிரிக்கப்பட்டு இந்த லிங்கத் திருப்பணியில் பங்கேற்ற அடியார்களுக்கும் - பக்தர்களுக்கும் பிரசாதமாக வழங்கப்படவுள்ளது. இந்தப் பிரசாதத்தை வீட்டில் வைத்திருக்க நோய் நொடிகள் அகலும், நன்மைகள் கைகூடும் என்பது நம்பிக்கை.

`சகல பிணிகளையும் தீர்க்கவல்ல மூலிகை லிங்க தரிசனம்'- சக்திவிகடன் சார்பில் திருவண்ணாமலையில்!

மூலிகைப் பிரசாதத்தை நீங்களும் பெறலாம்...

அற்புதமான மூலிகைப் பிரசாதத்தை நீங்களும் பெறலாம். அதற்கு கீழ்க்காணும் படிவத்தை நிரப்பினால் போதுமானது. அதில் கேட்கப்படும் பெயர், ஊர், முகவரி, தொலைபேசி எண் முதலான விவரங்களை முறையே பூர்த்தி செய்யுங்கள். அத்துடன், மகாதீப தரிசனத்தின் மகிமை அல்லது மகாதீப தரிசனம் குறித்த உங்களின் அனுபவத்தைச் சுருக்கமாக நான்கைந்து வரிகளில் பகிர்ந்துகொள்ளுங்கள்.

தேர்வு செய்யப்படும் மிகச்சிறந்த பகிர்வுகளுக்குரிய வாசகர்கள் 500 பேருக்கு மூலிகை லிங்கப் பிரசாதம் அனுப்பிவைக்கப்படும். அதனுடன் விகடன் வழங்கவிருக்கும் ஓர் ஆச்சர்யப் பரிசும் காத்திருக்கிறது. சிறப்பான பகிர்வுகளைத் தேர்வு செய்வதில் ஆசிரியர் முடிவே இறுதியானது.