பிரீமியம் ஸ்டோரி

குழந்தை வரம் தரும் ஆலயம், எப்போதும் நந்தி வாயிலிருந்து நீர் சுரந்து கொண்டிருக்கும் க்ஷேத்திரம், மரண பயம் போக்கும் கால பைரவர் தலம், வாலீஸ்வரர் கோயில் கொண்டிருக்கும் ஊர், பஞ்ச பிரம்ம தலங்களில் ஒன்று, மலைக்கு மேல் முருகனின் ஆலயம்... இத்தனை சிறப்புகளையும் ஒருங்கே கொண்ட புண்ணிய தலம்தான் ராமகிரி.

தொண்டைவள நாட்டில்... தற்போது ஆந்திர மாநிலத்தில் அமைந்துள்ள நகரி மலையிலிருந்து தோன்றும் நதிக்கு ஆரணி நதி என்று பெயர். பிரம்மனால் தோற்றுவிக்கப்பட்டது என்பதால் பிரம்ம ஆரண்ய நதி என்ற பெயரும் உண்டு. பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் ரிஷிகள் பலரும் இந்த நதி தீரத்தில் ஆசிரமங்கள் அமைத்து தவமியற்றியும், சிறு சிவாலயங்கள் உருவாக்கி வழிபட்டும் வந்தனர். அவற்றில் ஒன்றுதான் ராமகிரி அருள்மிகு வாலீஸ்வரர் ஆலயம்.

காலபைரவர்
காலபைரவர்

பிரம்மன் உருவாக்கிய ஆரணி நதியின் கரையில் திகழும் ராமகிரி, சுருட்டப்பள்ளி, ஆரணி, அரியத்துறை, பழவேற்காடு ஆகிய ஐந்து தலங் களைப் பஞ்ச பிரம்ம தலங்கள் எனப் போற்றுகின்றன ஞானநூல்கள். இவற்றில் முதல் இரண்டு தலங்கள் ஆந்திர மாநிலத்திலும், மற்ற மூன்று தலங்கள் தமிழகத்திலும் அமைந்துள்ளன. இவற்றில் ராமகிரியின் மகிமையை புராணங்கள் சிலாகித்துச் சொல்கின்றன.

குழந்தை வரம் அருளும் காலபைரவர்!

ராவணன வதத்துக்குப் பிறகு அயோத்திக்குப் பயணமானார் ராமன். வழியில் தன்னைப் பீடித்திருக்கும் பிரம்மஹத்தி தோஷம் நீங்க, குலகுரு வசிஷ்டரின் ஆலோசனைப்படி, காசியிலிருந்து லிங்கம் கொண்டு வந்து ராமேஸ்வரத்தில் பிரதிஷ்டை செய்து வழிபட விரும்பினார். அதன் பொருட்டு காசியிலிருந்து லிங்கம் கொண்டு வரப் பணிக்கப்பட்டார் அனுமன். அவர் காசியிலிருந்து லிங்கம் கொண்டு வருவதை அறிந்த - திருக்காரிக்கரை எனப்படும் ராமகிரியில் கோயில்கொண்டிருந்த காலபைரவர், அந்த லிங்கத்தைத் தனது தலத்தில் வைத்துக்கொள்ள விரும்பினார்.

குழந்தை வரம் அருளும் காலபைரவர்!

அதற்காக சூரியன், கங்கை மற்றும் வாயுதேவனிடம் தனக்கு உதவும்படி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று சூரிய கடும் வெப்பத்தை வெளிப்படுத்தினார்; வாயு பெருங்காற்றை வீசச் செய்தார்; கங்கை, அனுமனின் கண்களுக்குத் தெரியாமல் மறைந்தாள். வெயிலின் தாக்கத் தால் அனுமனுக்குக் கடும்தாகம் ஏற்பட்டது. அப்போது ராமகிரியில் ஒரு நீர்நிலை (காளிங்க மடு) தென்பட்டது. அனுமன் தாகம் தீர்க்க ராமகிரியில் தரையிறங்கினார்.

எனினும், தன்னிடமிருந்த சிவலிங்கத்தை கீழே வைக்க மனமின்றி தவித்தார். அப்போது சிறுவனாக உருவெடுத்து வந்த காலபைரவர், அனுமனுக்கு உதவிசெய்வதாகக் காட்டிக்கொண்டு சிவலிங்கத்தைப் பெற்றுக்கொண்டார். அத்துடன், `தாமதமாக வந்தால் லிங்க மூர்த்தத்தைத் தரையில் வைத்துவிடுவேன்’ என்று நிபந்தனையும் விதித்தார். அனுமனும் விரைந்து சென்று காளிங்கமடுவுக்குச் சென்று நீர் அருந்திவிட்டுத் திரும்பினார். ஆனால், அதற்குள் பைரவச் சிறுவன் தனது திட்டப்படி லிங்கத்தைத் தரையில் வைத்துவிட்டான். இதைக் கண்ட ஆஞ்சநேயர், அந்த லிங்கத்தைத் தூக்க எவ்வளவோ முயற்சி செய்தார். ஆனால் அதை அசைக்கக்கூட முடியவில்லை.

குழந்தை வரம் அருளும் காலபைரவர்!

`சஞ்ஜீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்த தன்னால் இது முடியாதா’ என்ற எண்ணத்துடன், தன் வாலால் லிங்கத்தைச் சுற்றி இழுத்தார். இறைவனின் கருணையால் சிவலிங்கம் லேசாக சாய்ந்தது... அவ்வளவே. முயற்சியில் தோல்வி கண்ட அனுமன், சிறுவன் மீதும் குளத்தின் மீது கோபம் கொண்டார். அங்கிருந்து சற்றுத் தொலைவில் தென்பட்ட காரிகிரி எனும் மலையைப் பெயர்த்து எடுத்துவந்து காளிங்க மடுவின் மீது போட்டு அதை மூடினார். அத்துடன், `ஜலப் பிரதேசம் இனி வனப் பிரதேசமாக மாறட்டும்’ என்று சபிக்கவும் செய்தார்.

குழந்தை வரம் அருளும் காலபைரவர்!

நிறைவில், நடந்தது அனைத்தும் இறைவனின் அருளாடலே என்பதை உணர்ந்தார்.தரையில் பதிந்துவிட்ட லிங்கத்தை வழிபட்டுவிட்டு, மீண்டும் காசிக்குச் சென்றுவேறொரு லிங்கத்தை எடுத்துக்கொண்டுராமேஸ்வரம் சென்றடைந்தார் என்று விவரிக்கிறது தலபுராணம். ராமனுக்காகக் கொண்டுசெல்லப்பட்ட லிங்கம் இவ்வூரில் நிறுவப்பட்டதாலும், அனுமன் மூலம் மடு மறைந்து மலை (கிரி) உருவானதாலும் ராமகிரி என்று பெயர் பெற்றது இந்தத் தலம்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

கல்வெட்டுகள்... திருப்பணிகள்...

கி.பி. 1904-ம் ஆண்டு, இந்தியத் தொல்லியல் ஆய்வில் 26 கல்வெட்டுகள் இத்தலத்தில் கண்டறியப்பட்டுள்ளன. இவற்றில் மிகவும் தொன்மை வாய்ந்தது, கி.பி. 9-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு திருக்குளத்தின் வாய்ப்பகுதியில் அமைந்துள்ளது இது.

குழந்தை வரம் அருளும் காலபைரவர்!

முதலாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1070), இரண்டாம் ராஜராஜன் (கி.பி. 1163), மூன்றாம் குலோத்துங்கச் சோழன் (கி.பி. 1184-1210), மூன்றாம் ராஜராஜன் (கி.பி. 1224-1245), வீரநரசிங்கதேவ யாதவராயன், மதுராந்தகப் பொத்தப்பிச் சோழன், வீரகண்ட கோபாலதேவன், கண்டகோபாலர் போன்றோர் இந்த ஆலயத்துக்குத் திருப்பணி செய்த தகவல்கள் தெரிய வருகின்றன. இவற்றின் மூலம் இந்தக் கோயிலுக்கு விளக்கெரிக்கவும், பூஜை செய்யவும் பல்வேறு கொடைகள் வழங்கப்பட்டதை அறிய முடிகிறது.

குழந்தை வரம் அருளும் காலபைரவர்!

லிங்கத் திருமேனியில் அனுமன் வாலின் தழும்பு!

கோயிலின் மூலவரான அருள்மிகு வாலீஸ்வரர் சந்நிதி மிகுந்த சாந்நித்தியத்துடன் திகழ்கிறது. அனுமன் வாலால் கட்டி இழுத்ததற்குச் சான்றுகளாக, ஸ்வாமியின் லிங்கத் திருமேனி சற்றே சாய்ந்திருக்கும் நிலையும், வாலின் தழும்பும் உள்ளன. பொதுவாக ஈசனின் சந்நிதிக்கு எதிரில் நந்திதேவர் எழுந்தருளியிருப்பார். இங்கே, நந்திக்குப் பதில் அனுமன் கூப்பிய கரங்களுடன் காட்சி தருகிறார். இது, வேறெங்கும் காண்பதற்கரிய அமைப்பாகும்.

மூலவர் சந்நிதியைச் சுற்றிலும் கருவறைக் கோட்டங்களில், கலைநயம் மிக்க தெய்வச் சிற்பங்களை தரிசிக்கலாம். ஸ்வாமியின் கருவறையை அடுத்து அன்னை மரகதாம்பிகையின் சந்நிதி அமைந்துள்ளது. மங்கல வரங்கள் அருளும் கருணைநாயகி இவள் என்கிறார்கள் பக்தர்கள்.

மகா சிவராத்திரியன்று இறைவனுக்கும் இறைவிக்கும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன. அன்றிரவு வீதியுலா மற்றும் வான வேடிக்கைகள் வெகு விமரிசையாக நடத்தப்படும்.

காலபைரவர் தரிசனம்

இத்தலத்தின் ஆதி நாயகர் காலபைரவரே. ஆகவே இது பைரவ க்ஷேத் திரமாகப் போற்றப்படுகிறது. இங்கே, மனைவி காளிகாதேவியுடனும் நாய் வாகனத்துடனும் காட்சி தருகிறார் காலபைரவர். எட்டுத் திருக் கரங்களுடன் அருளும் பைரவரின் வலக்கரங்களில் சூலம், உடுக்கை, கத்தி, தண்டம் ஆகியவையும்; இடக் கரங்களில் அங்குசம் பாசம், மணி, கபாலம் ஆகியவையும் திகழ்கின்றன.

சூரிய - சந்திரன், கங்கையுடன் திகழும் ஜடாமுடியும் கோரைப்பற்களு மாக தெற்கு நோக்கி அருளும் இந்தப் பைரவ மூர்த்தி குழந்தை வரம் அருளும் ஒப்பற்ற தெய்வமாக விளங்குகிறார்.

ஆலயத்தை அடுத்துள்ள மலையின் மீது அருள்மிகு பாலசுப்ரமணிய ஸ்வாமி கோயில் கொண்டிருக்கிறார். வருடம்தோறும் ஆடி மாத பரணி, கிருத்திகை, ரோகிணி ஆகிய மூன்று தினங்களில், இந்த முருகனுக்குத் திருவிழா-தெப்போத்ஸ்வம் நடைபெறுகின்றன! அடுத்த முறை திருப்பதி அல்லது சுருட்டப்பள்ளிக்குச் செல்லும் வாய்ப்பு கிடைத்தால், அப்படியே இந்த ராமகிரி க்ஷேத்திரத்துக்கும் சென்று வாருங்கள்; காலபைரவரின் திருவருளால் கவலையில்லாத வாழ்வை வரமாகப் பெற்று மகிழலாம்.

எப்படிச் செல்வது?

ஆந்திரமாநிலம் சித்தூர் மாவட்டம், சத்தியவேடு வட்டத்தில் அமைந் துள்ளது ராமகிரி. சென்னை- புத்தூர் நெடுஞ்சாலையில், நாகலாபுரம்-பிச்சாட்டூர் இடையே, ஆரணி ஆற்றங்கரையில் உள்ளது.

ராமகிரி பேருந்து நிறுத்தத்திலிருந்து, வடக்கே ஒரு கிலோமீட்டர் தொலைவில், மலையடிவாரத்தில் காலபைரவர் திருக்கோயில் அமைந் துள்ளது. திருப்பதி - சென்னை வழித்தடத்தில் ஊத்துக்கோட்டை மற்றும் சுருட்டப்பள்ளிக்கு அருகே ராமகிரி அமைந்துள்ளது. இத்திருக்கோயில், தொல்லியல் துறை நிர்வாகத்தின்கீழ் செயல்பட்டுவருகிறது.

குழந்தை வரம் அருளும் காலபைரவர்!

நந்தி வாயில் தீர்த்தத் தாரை!

இந்த ஆலயத்தின் அருகில் திருக்குளம் ஒன்று உள்ளது. காளிங்க மடுவை மலை மூடியிருந்தாலும், தரைக்குக் கீழேயுள்ள மடுவில் உற்பத்தி யாகும் நீர், இந்தத் திருக்குளத்தில் அமைக்கப்பட்டுள்ள நந்தியின் வாய் வழியே இடைவிடாமல் கொட்டுகிறது. இதன் மூலம் திருக்குளம் நிரம்புவ துடன், உபரிநீர் பாசனத்துக்கும் பயன்படுகிறது என்கிறார்கள். இந்தத் தீர்த்தத்தின் நீர் சுவை மிகுந்தது மட்டுமன்றி கொடும் பிணிகளைத் தீர்க்கவல்ல மருத்துவத் தன்மையும் வாய்ந்தது என்கிறார்கள், பக்தர்கள்.

குழந்தை வரம் வேண்டி பிரார்த்தனை!

குழந்தைப்பேறு வேண்டுவோர், இங்குள்ள நந்தி தீர்த்தத்தில் நீராடி, கால பைரவரின் சந்நிதிக்கு வரவேண்டும். சந்நிதியின் எதிரில் சிறியளவிலான கல்லில் வடிக்கப்பட்ட நாய்க்குட்டிச் சிலைகள் உள்ளன. அவற்றில் ஒன்றை எடுத்துக் கொண்டு, பைரவரை மனதார வேண்டியபடி, பைரவரின் நாய் வாகனத்தை மும்முறை வலம் வர வேண்டும். பின்னர் முறைப்படி காலபைரவரை வழிபட்டுச் செல்லவேண்டும்.

பைரவரின் அருளால் குழந்தைப்பேறு வாய்த்ததும், புதிதாக கல் நாய்ச்சிலை ஒன்றைச் செய்து எடுத்து வந்து சமர்ப்பிப்பதுடன், பைரவருக்கு அபிஷேக ஆராதனைகள் செய்து நேர்த்திக்கடனை நிறைவேற்ற வேண்டும். பிள்ளை வரம் அருள்வதில் கண்கண்ட தெய்வம் இந்தப் பைரவர் என்பதற்கு, ஆலயத்தில் காணப்படும் கல்நாய்ச் சிலைகளே சான்றாகும்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு