
திருவரங்கத்தின் சரிதம்!
வான் திகழும் சோலை மதிள் அரங்கர் வன்புகழ் மேல்
ஆன்ற தமிழ் மறைகள் ஆயிரமும் ஈன்ற
முதல் தாய் சடகோபன் மொய்ம்பால் வளர்த்த
இதத் தாய் இராமானுசன்
- நாலாயிரத் தனியனிலிருந்து...

விஜயநகரத்தின் அரியணையைக் கைப்பற்றும் நோக்கத்துடன், வேங்கட பதி ராயரின் மனைவியரில் ஒருத்தியான பாயம்மாவும் அவளின் சகோதர ரான ஜக்கராயனும் தங்களின் சதித் திட்டத்தை அரங்கேற்றத் தொடங்கினர். அதன்படி, பாயம்மா தான் கருவுற்று இருப்பதாக நடிக்கத் தொடங்கினாள்!
மரணப் படுக்கையில் கிடந்த வேங்கடபதி ராயர், பாயம்மாள் கருவுற்றிருக்கிறாள் என்ற தகவலை அறிந்து மகிழ்ந்தார். எப்படியோ தனக்கும் ஒரு வாரிசு உருவாகப் போவதாக கருதி நிம்மதி கொண்டார். இந்த வாரிசுக்கே விஜயநகர ஆட்சிக் கட்டிலில் அமர உரிமை உண்டு. ஆனால், நடப்பது ஒரு நாடகம் என்பது வேங்கடராயருக்குத் தெரியாது.
அதேவேளை, இந்த நாடகத்தைக் கனகச்சித மாய் அரங்கேற்றுவதில் தன் சகோதரிக்குப் பெரிதும் துணையாக இருந்தான் ஜக்கராயன். அவளின் வயிற்றுப் பகுதியில் தலையணையை வைத்துக் கட்டி, அவளைக் கர்ப்பிணியாகக் காட்டி எல்லோரையும் நம்பச் செய்தான்.
இந்த நிலையில் குழந்தை பிறந்தாக வேண்டுமே? தலையணைக் கர்ப்பம் குழந்தை பெறுவதற்கு வழிவகுக்காதே!
எனவே, தனக்குத் தெரிந்த பிராமணப் பெண் ஒருத்தி அப்போது கர்ப்பமாக இருப்பதை அறிந்தான் ஜக்கராயன். அவளுக்குப் பிறக்கப் போகும் குழந்தையைப் பாயம்மாளுக்குப் பிறந்ததாகக் காட்டி, நாடகத்தைத் தன் விருப்பப்படி சுபமாக முடிப்பது என்கிற முடிவில் இருந்தான் ஜக்கராயன்.
அந்தப் பிராமணப் பெண்ணுக்குக் குழந்தை பிறந்தது. உடனே அதைப் பாயம்மாளிடம் சேர்த்தான். அதுவே பாயம்மாளின் குழந்தை என்று எல்லோரையும் நம்பவைத்துவிட்டான். ஆனால் விதிவசத்தால், அவர்களின் கபடநாடகம், எப்படியோ ஒருவருக்குத் தெரிந்துவிட்டது.
அவர் வேறு யாரும் அல்ல; வேங்கடபதி ராயரின் மிக நெருங்கிய நண்பரும், ஆலோசகருமான ரங்கய்யா என்பவரே ஆவார்.
இந்தச் செய்தியை அவர் தன்னிடம் சொன்னதும் அதிர்ந்துபோனார் வேங்கடபதி ராயர். இருப்பினும் தான் ஒரு பிள்ளைக்கு தகப்பன் என்று கருதப்படுவதையே அவர் விரும்பினார். ஆகவே, தன் நண்பரிடம் `இந்த விஷயத்தை எவரிடமும் கூறவேண்டாம்’ என்று வேண்டுகோள் வைத்து, அவருக்கு வாய்ப்பூட்டு போட்டுவிட்டதோடு, தனக்கும் போட்டுக்கொண்டார்.
இது எதுவுமே தெரியாத பாயம்மா மிகுந்த மகிழ்ச்சியில் இருந்தாள். தன் குழந்தைக்கே அடுத்த அரசப்பதவி என்கிற நம்பிக்கையில் இருந்தாள். ஜக்கராயனும் அந்தக் குழந்தையைத் தன் பிடிக்குள் வைத்துக்கொண்டு விஜயநகர பேரரசை ஆளும் கனவில் இருந்தான்.

ஆனால் எப்போதும் நினைப்பது போலவே எல்லாமும் எல்லாருக்கும் நடந்து விடுவதில்லையே? இங்கும் அப்படித்தான் ஆயிற்று!
வேங்கடபதி ராயர், தனக்கு மரணம் மிக சமீபித்துவிட்ட நிலையில், தனது வாரிசை அறிவிக்கும் நெருக்கடிக்கு ஆளானார். இந்த வேளையில் ராயரின் ஆலோசகரான ரங்கய்யா, ``எவருக்கோ பிறந்த ஒரு குழந்தைக்கு இந்த ராஜ்ஜியம் சொந்தமாவது துளியும் சரியில்லை. அதிலும் வேதம் ஓதவேண்டிய பிள்ளை நாடாள்வது இயலாத ஒன்று. எனவே, உங்கள் ரத்த சம்மந்தத்தில் வாரிசுகள் வருவதே சரி.
அப்படிப் பார்த்தால்... உங்களுக்கு நேரடி வாரிசு இல்லாவிட்டாலும், உங்கள் சகோதரன் சிக்கதேவராயனின் மகனான இரண்டாம் ரங்கன் இருக்கிறான். மிகவும் திறமையானவன். எனவே, அவனே ராஜ்ஜியத்தை ஆள்வதற்குத் தகுதியானவன்’’ என்று எடுத்துக்கூறி, வேங்கடபதி ராயரின் மனதில் ஒரு மாற்றத்தை உருவாக்கினார்.
அதன் விளைவாக தன் சகோதரனின் மகனான இரண்டாம் ரங்கனே அடுத்த விஜயநகர வாரிசு என்று அறிவித்தார். அதற்கான உரிமையை வழங்கும் விதம் தனது முத்திரை மோதிரத்தையும் அவனுக்கு அணிவித்து ஆசீர்வதித்தார் வேங்கடபதி ராயர். மறுநாளே இறந்தும் போனார்.
இதை அருகிலிருந்து பார்த்தபடி இருந்த பாயம்மாளும், ஜக்கராயனும் கொதித்தனர். வேங்கடபதி ராயரின் விருப்பம் நிறைவேறாமல் தங்களின் விருப்பப்படியே நடக்க என்ன செய்யலாம் என்று திட்டம் தீட்ட தொடங்கினர்.
அதன்படி அரண்மனையிலிருந்த மந்திரிகள், தளபதிகள், அதிகாரிகள், பணியாளர்கள் என்று சகலரையும் தங்களின் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்த ஜக்கராயன், முதலில் ரங்கய்யாவை வெட்டிக் கொலை செய்தான். பின்னர், வேங்கடபதி ராயரிடம் முத்திரை மோதிரம் பெற்று ஆட்சிக் கட்டிலில் அமர இருந்த இரண்டாம் ரங்கனையும் அவன் மனைவி, மூன்று பிள்ளைகள் ஆகியோரை ரகசிய சிறையில் தள்ளினான். விஜயநகரப் பேரரசை முழுமையாக தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தான்.
ஜக்கராயன் இங்ஙனம் சதித் திட்டம் தீட்டிச் செயல்படுவதை அறிந்த விஜயநகரப் பேரரசின் உண்மையான விசுவாசிகளில் சிலர் ‘வெலுக்கோட்டி யாசம நாயக்கர்’ என்ற ஒரு குறுநில மன்னனின் தலைமையில் தனியே பிரிந்து ரகசியமாகச் செயல்படத் தொடங்கினர்.

இவர்களுக்கு ஒரே நோக்கம்தான்! உண்மையான வாரிசே விஜயநகரப் பேரரசை ஆள வேண்டும் என்பதுதான் அது. அதற்காக அவர்கள் பல வீரதீர செயல்களிலும் இறங்கினர். ஜக்கராயனால் ரகசிய சிறையில் வைக்கப்பட்டிருந்த இரண்டாம் ரங்கனைச் சந்திப்பது என்றும், அவனிடம் தங்களின் எண்ணத்தை எடுத்துக் கூறி, அவன் பிள்ளைகளில் ஒருவனைச் சிறையிலிருந்து வெளியில் கொண்டு வந்து ஆட்சிக் கட்டிலில் அமர்த்துவது என்றும் தீர்மானித்தனர்.
ஆனால், ரகசிய அறைக்குள் நுழைவது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. சலவைத் தொழிலாளி ஒருவர் மட்டும் இரண்டு தினங்களுக்கு ஒருமுறை அந்தச் சிறைக்குச் சென்று, இரண்டாம் ரங்கன் குடும்பத்தாரின் துணிகளை வாங்கி வந்து வெளுத்துத் தருபவராக இருந்துவந்தார்.
அவர் ஒரு ராஜ விசுவாசி. எனவே அவரையே தங்கள் திட்டத்துக்குப் பயன்படுத்தினார்கள். அவரும் இரண்டாம் ரங்கனின் மூன்றாவது பிள்ளையை அழுக்குத் துணிகளுக்கு மத்தியில் வைத்துக் கட்டி வெளியே கொண்டு வந்தார். அந்தப் பிள்ளைக்கு அப்போது 10 வயது. அவன் பெயர் ராம். அவன் குறுநில மன்னனான யாசம நாயக்கரிடம் சேர்க்கப்பட்டான்.
இந்தச் செய்தி ஜக்கராயனுக்கும் தெரிய வந்தது. ரகசிய சிறைக்கு சென்று பார்த்தபோது, அங்கே மூன்று பிள்ளைகளில் ஒன்று இல்லை. தான் கேள்விப்பட்ட செய்தி உண்மை என்பதை அறிந்ததும், அக்கணமே இரண்டாம் ரங்கனையும், அவன் மனைவியையும், அங்கிருந்த இரண்டு பிள்ளைகளையும் வாளால் வெட்டிக் கொன்றான் ஜக்கராயன்.
அத்துடன் இந்தத் திட்டத்துக்கு உதவியாக இருந்த சலவைத் தொழிலாளியின் தலையையும் வெட்டி, விஜயநகரத்தின் உண்மை விசுவாசிகள் பயந்து அடங்கும்படிச் செய்தான்.
மறுபுறம், விஜயநகரத்தின் உண்மை வாரிசும் 2-ம் ரங்கனின் மகனுமான ராமையும், அவனுக்குத் துணையாக நின்ற யாசம நாயக்கரையும் எதிர்த்துப் போர் செய்தான். தனக்குத் துணையாக செஞ்சி கிருஷ்ணப்ப நாயக்கர், மதுரை முத்துவீரப்ப நாயக்கர் ஆகியோரைச் சேர்த்துக்கொள்ள விரும்பினான். அவனுடைய இந்தச் சதிச் செயலுக்குத் தஞ்சையை ஆட்சிசெய்த ரகுநாத நாயக்கர் மட்டும் ஆதரவளிக்க விரும்பவில்லை.
அவர் ஜக்கராயனையும் பாயம்மாளையும் ரகுநாத நாயக்கர் அரசக்குடும்பத்தவராக அங்கீகரிக்க விரும்பவில்லை. அவரைத் தன் வழிக்குக் கொண்டுவர விரும்பியே, அவர் ஈழத்திற்குப் போரிடச் சென்றிருந்த தருணத்தில் திருவரங்கத்துக்கு வந்து தன் படையை நிறுவியிருந்தான். கல்லணை வரையிலும் படை வல்லமை பரவியிருந்தது.
இதுதான் ஜக்கராயனின் பூர்வ கதை. ரகுநாத நாயக்கர் ஈழத்தில் இருந்து திரும்பியதும் விஷயத்தை அறிந்தர். மிக வேகமாக ஒரு நல்ல காரியத்தைச் செய்ய முனைந்தார். ராமை விஜயநகரத்தின் வாரிசாக நாம் அறிவித்து விடலாம் என்று திட்டம் தீட்டினார்.
அதன் பொருட்டு யாசம நாயக்கரையும் ராமையும் தஞ்சைக்கு அருகிலுள்ள கும்பகோணத்துக்கு வரச்செய்தார் ரகுநாத நாயக்கர். ராமனுக்கு அங்கேயே முடியும் சூட்டிவிட்டார்.
அவரின் இந்தச் செயல் ஜக்கராயனை மேலும் வெகுண்டெழச் செய்தது. இதன் காரணமாக தான் திரட்டி வந்திருந்த படைகளோடு ரகுநாத நாயக்கரின் படையைக் கல்லணை பகுதியில் எதிர்கொண்டு போர் புரியத் தொடங்கினான் ஜக்கராயன்.
இந்தச் செய்திகள் அவ்வளவும் இன்றும் தஞ்சை சரஸ்வதி மஹால் நூலகத்தில் உள்ள ‘இரகுநாதாய்யுதம்’ என்கிற ஏடுகளில் காணக் கிடைக்கின்றன!
-தொடரும்...

ஆயிரம் மடங்கு பலன் தரும் ஏகாதசி!
வைகாசி மாதம் தேய்பிறையில் வரும் ஏகாதசி ‘வரூதினி ஏகாதசி’ எனப் போற்றப்படுகிறது. அறிந்தோ அறியாமலோ நாம் செய்த பாவங்களைப் போக்கி, சகல செல்வங்களையும் அருளக் கூடியது இந்த விரதம். இந்த வரூதினி ஏகாதசியைக் கடைப்பிடித்து மாந்தாதா, துந்துமாரன் ஆகிய அரசர்கள் மேன்மை அடைந்தார்கள். பிரம்மதேவனின் ஐந்தாவது தலையைக் கிள்ளியதால் ஏற்பட்ட பாவம் நீங்க, சிவபெருமான் இந்த ஏகாதசி விரதமிருந்து பலன் பெற்றதாக ஏகாதசி மஹாத்மியம் கூறுகிறது. தானங்களில் சிறந்தவை அன்னதானமும் கல்வி தானமும். இதில் வித்யா (கல்வி) தான பலனை அளிக்கக் கூடியது வரூதினி ஏகாதசி. இந்த நாளில் செய்யப்படும் எந்த ஒரு தானமும் ஆயிரம் மடங்கு பலனைப் பெற்றுத் தரும்.
வரூதினி ஏகாதசி நியதிகளைக் குறித்து விரிவாகச் சொல்கிறது ஏகாதசி மஹாத்மியம். அவை: இந்த ஏகாதசி விரத நாளில் உண்ணா நோன்பு இருப்பது உத்தமம். தாம்பூலம் தரிக்கக் கூடாது; சந்தனம் மற்றும் பூக்கள் போன்றவற்றை அணிவதும் எண்ணெய் தேய்த்தலும் கூடாது. அன்று தூங்காமலிருந்து மகாவிஷ்ணுவை வழிபடுவதால் சகல நன்மைகளும் உண்டாகும்.