திருமலை திருப்பதியில் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவை டிக்கெட் பெறுவதற்கு என்ன வழி? #DoubtofCommonMan

வேங்கடேசப் பெருமாளை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிதான், சுப்ரபாத தரிசனம். இந்த தரிசனத்தைப் பெறுவதில் மிகப்பெரிய ஆர்வமும் ஆவலும் பக்தர்களுக்கு எப்போதுமே உண்டு.
கௌசல்யா சுப்ரஜா ராம பூர்வா சந்த்யா ப்ரவர்த்ததே!
உத்திஷ்ட நரசார்தூல கர்த்தவ்யம் தைவமாஹ்நிகம்!
காற்றின் திசைகளில் இந்த கானம் எந்தச் சூழலில் ஒலித்தாலும், எந்த இடத்தில் ஒலித்தாலும், அந்த இடத்தை ஆன்மிகத்தால் நிரப்பி, தெய்வீகப் பேரொளியைத் தரும் வலிமை இப்பாடலுக்கு உண்டு. இது, திருமலையில் அருள்பாலிக்கும் ஸ்ரீவேங்கடேசப் பெருமாளுக்கு நாள்தோறும் அதிகாலையில் பாடப்படும் சுப்ரபாதம். அதிகாலையில் பெருமாளை எழுப்பும் விதமாக மங்கலப் பொருள்களோடு வேதியர்கள் கூடி நிகழ்த்தும் சேவைக்கு சுப்ரபாத சேவை என்று பெயர். அப்போது பாடப்படும் ஸ்தோத்திரமாக இந்தப் பாடல் அமைகிறது. திருமலையில் பல்வேறு சேவைகள் தினமும் நடைபெற்றுவருகின்றன. அவற்றுள் சுப்ரபாத சேவையைக் காணும் ஆவல் பக்தர்கள் அனைவருக்கும் உண்டு.

திருமலை திருப்பதியில் தினமும் நடைபெறும் சுப்ரபாத தரிசன சேவைக்கான டிக்கெட்டுகளைப் பெறுவது எப்படி என்பது பற்றி விகடன் 'Doubt of Common Man' பகுதியில் செந்தில்குமார் பிரசன்னா என்ற வாசகர் கேள்வியெழுப்பியிருந்தார்.
இந்தக் கேள்வியை திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் மக்கள் தொடர்பு அதிகாரி ரவியிடம் முன்வைத்தோம்.
''திருப்பதி வேங்கடேசப் பெருமாளுக்கு சுப்ரபாதம், அர்ச்சனை, கொலுவு, தோமால சேவை, கல்யாணோத்ஸ்வம், வசந்தோத்ஸவம், ஆர்ஜித பிரம்மோற்ஸ்வம், சகஸ்ர தீப அலங்கார சேவை, ஊஞ்சல் சேவை ஏகாந்த சேவை எனப் பலவிதமான சேவைகள் செய்யப்படுகின்றன. ஒவ்வொரு சேவைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரம் ஒதுக்கப்பட்டுள்ளது.

திருமலையில், நாள் முழுவதும் வேங்கடேசப் பெருமாளுக்கு நடைபெறும் சேவை மற்றும் பூஜைகளுக்குப் பிறகே, ‘ஸ்பெஷல் தரிசனம்’, ‘சர்வ தரிசனம்’, ‘திவ்ய தரிசனம்’ எனக் காண வரும் பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள்.

இந்தச் சேவைகள் எல்லாம் இன்று நேற்றல்ல, ஶ்ரீராமாநுஜர் அவர்களால் வரையறுக்கப்பட்டு, ஆயிரம் ஆண்டுகளாக நடந்து வருபவை. இவற்றில் மிக முக்கியமானதும் முதலாவதுமான சேவை சுப்ரபாத சேவை.
வேங்கடேசப் பெருமாளை எழுப்பும் திருப்பள்ளி எழுச்சிதான் சுப்ரபாத தரிசனம். இந்த தரிசனத்தைப் பெறுவதில் மிகப்பெரிய ஆர்வமும் ஆவலும் பக்தர்களுக்கு எப்போதுமே உண்டு.
ஒவ்வொரு நாளும் பிரம்ம முகூர்த்தத்தில் (விடியற்காலை 3.00 - 3.30) சுப்ரபாத சேவையில் பங்கேற்பதற்கு, தேவஸ்தான சார்பில் வழிமுறைகள் உள்ளன.
முன்பதிவு செய்வது எப்படி?
சுப்ரபாத சேவையில் கலந்துகொள்ள விரும்பும் பக்தர்கள், ஆன்லைனில் முன்பதிவு செய்துகொள்ளவேண்டியது அவசியம். இதற்கான கட்டணம் 120 ரூபாய். இதற்கான முன்பதிவு டிக்கெட்டுகள் 3 மாதங்களுக்கு ஒருமுறை, அதாவது 90 நாள்களுக்கு முன்பாக மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமை வெளியிடப்படும்.

சுப்ரபாத டிக்கெட்டுகள் நாளொன்றுக்கு 200 டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும். ஆன்லைனில் மட்டும்தான் டிக்கெட்டுகளை முன்பதிவு செய்யமுடியும். இதற்கு, உங்களைப் பற்றிய தகவல்களை முன்பே அளித்து லாக் இன் (உள் நுழையீடு) செய்திருக்க வேண்டும்.

ஒருமுறை உங்களின் ஆதார் கார்டுக்கு நீங்கள் முன்பதிவு செய்து டிக்கெட்டைப் பெற்றுவிட்டால், மீண்டும் ஆறு மாதங்களுக்குப் பிறகுதான் இந்த வாய்ப்பு வழங்கப்படும். ஒருவருக்கு இரண்டு டிக்கெட்டுகள் மட்டுமே வழங்கப்படும்.

சேவா டிக்கெட்டுகள் வெளியான சில மணித்துளிகளில் ஹைதராபாத், மும்பை, சென்னை என இந்தியா முழுவதுமிருக்கும் திருமலை திருப்பதி தேவஸ்தானத்தின் 81 மையங்களில் முன்பதிவு செய்ய பக்தர்கள் காலை 9.30 மணியிலிருந்து காத்திருப்பார்கள் என்பதையும் நினைவில் கொள்ள வேண்டும்.
இதுதவிர, திருமலை திருப்பதி தேவஸ்தான நிர்வாக அதிகாரிக்கு கட்டணத்துடன்கூடிய காசோலையை மூன்று மாதங்களுக்கு முன்பாக அனுப்பி, தங்களது பெயரைப் பதிவுசெய்துகொண்டும் பெறலாம். ஆனால், இவையெல்லாமே முதலில் வருபவர்களுக்கே முன்னுரிமை என்ற அடிப்படையில் வழங்கப்படும்.
ஒருவேளை உங்களுக்கு சுப்ரபாத சேவை டிக்கெட்டுகள் வழங்கப்படாவிட்டால், உங்களின் காசோலை உங்களுக்குத் திருப்பி அனுப்பப்படும்.

சுப்ரபாத தரிசனத்தைப் பெற இன்னொரு வழிமுறை, 'லக்கி டிப்' என்னும் குலுக்கல் முறை வாய்ப்பு. இதற்கும் ஆன்லைனில்தான் முன்பதிவு செய்ய வேண்டும். மேலும், கோயில் மற்றும் உங்கள் வழிபாடு தொடர்பான தகவல்களுக்கு, திருமலை திருப்பதி தேவஸ்தான அலுவலகம் ஏதேனும் ஒன்றைத் தொடர்புகொள்ளலாம் அல்லது www.tirumala.org இணையதளத்தின் வழியாக அறியலாம்" என்றார்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களைக் கீழே பதிவுசெய்யுங்கள்!
