Published:Updated:

சென்னை, திருவண்ணாமலை டு பழனி வரை... 11 கோயில்களில் ஆன்லைன் தரிசனம் புக்கிங் செய்வது எப்படி? #HowTo

கோயில்களில் ஆன்லைன் புக்கிங்
கோயில்களில் ஆன்லைன் புக்கிங்

புகழ்பெற்ற 11 தமிழகக் கோயில்களில் இனி ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்தே தரிசனம் செய்ய முடியும் என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.

5 மாத லாக்டௌனுக்குப் பிறகு தமிழக அரசு அனைத்து வழிபாட்டுத் தலங்களையும் திறக்க அனுமதியளித்துள்ளது. மேலும் அங்கு பின்பற்றப்பட வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்த வழிகாட்டுதல்களையும் தெரிவித்துள்ளது. முகக்கவசம் அணிவது, கைகளை சானிடைஸ் செய்துகொள்வது, தனிமனித இடைவெளியைப் பின்பற்றுவது போன்ற கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. மேலும் பக்தர்கள் வருகையைப் பதிவு செய்யவும் தரிசனம் செய்ய வரும் பக்தர்களின் எண்ணிக்கையைக் கட்டுப்படுத்தவும் ஆன்லைன் மூலம் முன்பதிவு செய்ய ஏற்பாடு செய்துள்ளது. இந்த நடைமுறை தற்போது புகழ்பெற்ற 11 ஆலயங்களில் நடைமுறைப் படுத்தப்பட்டுள்ளது.

ஆன்லைன் புக்கிங்
ஆன்லைன் புக்கிங்

ஆன்லைன் மூலம் பதிவு செய்து தரிசனம் செய்ய வேண்டிய 11 கோயில்கள்

  1. அருள்மிகு கபாலீசுவரர் திருக்கோயில், மயிலாப்பூர், சென்னை.

  2. அருள்மிகு பார்த்தசாரதி சுவாமி திருக்கோயில், திருவல்லிக்கேணி, சென்னை.

  3. அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில், வடபழனி, சென்னை.

  4. அருள்மிகு தியாகராஜ சுவாமி திருக்கோயில், திருவொற்றியூர், சென்னை.

  5. அருள்மிகு தேவிகருமாரியம்மன் திருக்கோயில், திருவேற்காடு.

  6. அருள்மிகு காமாட்சி அம்மன் திருக்கோயில், மாங்காடு.

  7. அருள்மிகு அருணாச்சலேஸ்வரர் திருக்கோயில், திருவண்ணாமலை.

  8. அருள்மிகு கல்யாண வெங்கட்ரமண சுவாமி திருக்கோயில், தான்தோன்றிமலை, கரூர்.

  9. அருள்மிகு தண்டாயுதபாணி சுவாமி திருக்கோயில், பழனி.

  10. அருள்மிகு ராமநாதசுவாமி திருக்கோயில், ராமேஸ்வரம்.

  11. அருள்மிகு சுப்பிரமணியசுவாமி திருக்கோயில், திருச்செந்தூர்.

ஆன்லைன் புக்கிங்

இந்த ஆலயங்களில் தரிசனம் செய்ய ஆன்லைன் புக்கிங் அவசியம். சென்னைக் கோயில்களில் இந்த நடைமுறை தொடங்கிவிட்டது. பிற மாவட்டக் கோயில்களில் 6 ம் தேதி முதல் இந்த நடைமுறை பின்பற்றப்ப உள்ளது. ஆன்லைனில் புக் செய்வதற்கு ஆதார் கார்டு அவசியம்.

ஆன்லைன் புக்கிங்
ஆன்லைன் புக்கிங்

ஆன்லைன் புக்கிங்க்

முதலில் https://tnhrce.gov.in/ தளத்துக்குச் செல்ல வேண்டும். இந்த தளத்தில் இருக்கும் இ சேவை என்னும் பகுதியை க்ளிக் செய்தோ அல்லது கீழ்கண்ட இணைப்பு மூலமாகவோ புக்கிங் செய்ய வேண்டிய பகுதிக்கு வந்துவிடலாம்.

இங்கே க்ளிக் செய்யவும்!

தற்போது இந்தப் பகுதியில் முன்பதிவின் மூலம் அனுமதிக்கப்படும் கோயில்களின் பட்டியல் இருக்கும். அவற்றில் நீங்கள் தரிசனம் செய்ய வேண்டிய கோயிலை க்ளிக் செய்து தேர்ந்தெடுங்கள். அந்தக் கோயிலின் முன்பதிவுப் பக்கத்துக்கு வந்துவிடுவீர்கள். அங்கு இலவச தரிசனமா அல்லது கட்டண தரிசனமா என்பதைத் தேர்ந்தெடுங்கள்.

அதைத் தேர்ந்தெடுத்ததும் தோன்றும் படிவத்தை நிரப்புங்கள். அதில் உங்கள் பெயர், வயது, முகவரி, மொபைல் எண், அடையாள அட்டை எண் (ஆதார்கார்டு, ஓட்டுநர் உரிமம், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை இவற்றில் ஏதேனும் ஒன்று) ஆகியவற்றை நிரப்புங்கள்.

நிபந்தனைகளுக்கு உட்படுகிறேன் என்னும் கட்டத்தை செக் செய்யுங்கள். நீங்கள் இலவச தரிசனத்தைத் தெரிவு செய்திருந்தால் சப்மிட் பட்டனை க்ளிக் செய்ததும் உங்களுக்கான டிக்கெட் வந்துவிடும். அந்த டிக்கெட்டைப் பிரிண்ட் செய்து அதோடு ஆதார் கார்டு நகலையும் இணைத்து குறிப்பிட்ட நேரத்துக்கு 15 நிமிடம் முன்பாகச் சென்று சுவாமி தரிசனம் செய்யலாம்.

நீங்கள் கட்டண தரிசனம் தேர்ந்தெடுத்திருந்தால், சப்மிட் செய்ததும் பேமெண்ட் கேட்வேக்குள் செல்லும். அங்கு இன்டெர்நெட் பேங்கிங் மற்றும் கிரெடிட் கார்டு மூலம் பணம் செலுத்தினால் உடனே உங்களுக்கான டிக்கெட் வந்துவிடும். அந்த டிக்கெட்டோடு அடையாள அட்டை நகலை இணைத்து எடுத்துக் கொண்டு சென்று தரிசனம் செய்யலாம்.

ஆன்லைன் புக்கிங்
ஆன்லைன் புக்கிங்

சில சிக்கலகள்

சில ஆலயங்களில் ஆதார் கார்டு மட்டுமே அடையாள அட்டையாக ஏற்கிறார்கள். ஆதார் இல்லாமல் அந்த ஆலயங்களில் தரிசனம் புக் செய்ய முடியாது. இது ஆதார் இல்லாத பிற பக்தர்களை மனம் வருத்தமடையச் செய்யும். ஒருமுறை தரிசனம் செய்தவர் குறிப்பிட்ட நாள்களுக்குப் பிறகே மீண்டும் புக் செய்ய முடியும். சில கோயில்களில் இலவச தரிசனம் மட்டுமே தற்போது அனுமதிக்கப்படுகிறது. இலவச தரிசனம் மற்றும் சிறப்பு தரிசனம் ஆகியவற்றுக்கு எவ்வளவு பேரை அனுமதிக்கலாம் எந்த அடையாள அட்டையை ஏற்கலாம் என்பதெல்லாம் அந்த அந்தக் கோயில் நிர்வாகங்களே முடிவு செய்வதால் புக் செய்யும் போது குழப்பம் நிகழ்கிறது.

அடுத்த கட்டுரைக்கு