Published:Updated:

நவராத்திரி எளிய முறையில் வழிபடுவது எப்படி?

காளிகாம்பாள்
பிரீமியம் ஸ்டோரி
காளிகாம்பாள்

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

நவராத்திரி எளிய முறையில் வழிபடுவது எப்படி?

ஆன்மிகக் கேள்வி பதில்கள்

Published:Updated:
காளிகாம்பாள்
பிரீமியம் ஸ்டோரி
காளிகாம்பாள்

? அம்பாளுக்குக் குங்கும அர்ச்சனை செய்து வழிபடுவது சிறப்பு என்கிறார்களே, அதன் பலன்களையும் மகத்துவத் தையும் விளக்குங்களேன்.
- தேவிகா கருப்பசாமி, திண்டிவனம்

மஞ்சள் கலந்து தயாரிக்கப்படும் குங்குமம் மங்கலத்தின் அடையாளம். குங்குமம் இட்டுக்கொள்வதன் மூலம் சகல விதமான மங்கலங்களும் ஸித்திக்கும் என்பது ஞானநூல்கள் நமக்குத் தரும் வழிகாட்டல். குங்குமம் அம்பாளின் அம்சம்; அந்த அன்னையின் சக்தியைப் பிரதிபலிப்பது.

ஶ்ரீகாளிகாம்பாள்
ஶ்ரீகாளிகாம்பாள்

சிவ-சக்தி சாந்நித்தியத்தை விளக்கும் ஞானநூல்கள் சிவப்பு வண்ணத்தை அம்பாளாகவும், வெண்மையை சிவமாகவும் சுட்டிக்காட்டும். ஆலயச் சுவர்களில் நீங்கள் கவனித்திருக்கலாம் காவியும் வெள்ளையும் கலந்து பட்டை தீட்டியிருப்பார்கள். ரத்த அணுக்களிலும் சிவப்பு மற்றும் வெள்ளை வண்ணம் குறிக்கப்படுகிறது. சிவமும் சக்தியும் இணைந்தே இந்தப் பிரபஞ்சத்தின் ஆக்கத்துக்கும் அசைவுக்கும் காரணமாகின்றன. ஆக, சிவப்பு சக்தியின் சாந்நித்தியத்தைச் சுட்டிக்காட்டுகிறது. அந்த வண்ணத்திலான குங்குமத்தைச் சூடுவதால் அம்பாளின் சாந்நித்தியம் முழுமையாகக் கிடைக்கும்.

உணவோ, உடையோ, கனியோ, மலர்களோ பூமி நமக்களித்த பொருள்களை இறையிடம் சமர்ப்பித்து பிரசாதமாகப் பெறும்போது, அந்தப் பொருளின் மூலம் இறையின் அருட்கடாட்சம் நம்மை வந்தடைகிறது. நம்மையே இறைவனின் பாதங்களில் சமர்ப்பணம் செய்துவிட வேண்டும் என்று பெரியோர்கள் சொன்ன தற்கும் இதுவே காரணம் எனலாம்.

ஆக, ஆதிமூலமான ஆதிசக்தியின் பொற் பாதங்களில் மங்கலம் நிறைந்த குங்குமத்தை அர்ச்சனையால் சமர்ப்பித்து ஏற்கும்போது கிடைக்கும் பலன்கள் அற்புதமாக இருக்கும். அந்தக் குங்குமத்தை `ஆக்ஞை’யைக் குறிக்கும் புருவமத்தியில் இட்டுக்கொள்வதன் மூலம் சகல நன்மைகளும் உண்டாகும்.

? நவராத்திரி வழிபாடுகளில் விரிவான உபசாரங்களுடன்தான் ஆராதிக்க வேண்டுமா? இயலாதவர்கள் வழிபட ஏதுவான எளிய வழிமுறைகள் உண்டா?
- சங்கரி மணிகண்டன், கருங்குளம்

‘நவ’ எனில் ஒன்பது; ‘ராத்ரீ’ எனில் இரவு. ஆக ‘நவ ராத்ரீ’ (நவ ராத்திரி) எனில், 9 இரவுகள் கூடிய நாட்கள். ‘நவ’ எனில் ‘புதுமையான’ என்றும் பொருள் உண்டு. ஆக, இந்த நாட்களில் நாம் கடைப்பிடிக்கும் பூஜைகளினால் நமக்குப் புதுமையான புத்துணர்ச்சி கிடைக்கும் என்பதில் எவ்வித சந்தேகமும் இல்லை.

அதுமட்டுமா? நவகிரகங்களினால் ஆபத்து ஏற்படாமல் இருக்க இந்த நவராத்திரி காலங்களில் அனைவரும் அம்பிகையை வழிபடுதல் வேண்டும். அவள்தானே உலகுக்கெல்லாம் மூல கரு (‘விச்வஸ்ய பீஜம்’).

மனிதப்பிறவி என்பது மிகப்பெரிய வரம். கண்ணாடி முன் நின்று எதைப் பார்க்கிறோமோ அதுவே உலக அதிசயம். ஆம், நாம் எல்லோருமே அதிசயங்கள்தான். இறைவன் எவ்வளவு சக்தி உடையவர்களாக நம்மைப் படைத்திருக்கிறார். அவருக்கு நன்றி செலுத்துவது நம் கடமை அல்லவா? எப்படி தாயானவள்... அவளுக்குக் குழந்தைகள் என்ன அளித்தாலும், அவற்றைப் பெற்றுக்கொண்டு குழந்தைகளிடமே திருப்பி அளித்துவிடுகிறாளோ, அப்படியே நம் பிரார்த்த னைகளை எல்லாம் ஏற்று, அவற்றை நிறைவேற்றும் ஆற்றலை நமக்கு அளிக்கிறாள் சக்திதேவி. அத்தகைய சக்திக்கு நன்றி செலுத்த வாய்ப்பு நல்கும் திருநாட்களே நவராத்திரி திருநாட்கள்.

ஆச்வின மாதம் அதாவது, புரட்டாசி மாத அமாவாசைக்கு அடுத்த நாளை (பிரதமை முதல்) நவராத்திரியின் தொடக்க நாளாகக் கொள்ள வேண்டும் என்கிறது ஸ்கந்த புராணம். எவரொருவர் இந்த விரதத்தை தொடர்ந்து 9 நாட்கள் கடைப்பிடிக்கிறார்களோ, அவர்களுக்கு தேவர்களுக்குக் கிட்டாத இன்பமும், பிணியின்மையும் வரமாகக் கிட்டும்; சத்ருக்கள் தொல்லையும் நீங்கும் எனவும் விவரிக்கிறது அந்தப் புராணம்.

ஒன்பது நாட்கள் விரதம் இருக்க முடியாத வர்கள் கடைசி மூன்று நாட்களிலோ அல்லது அஷ்டமி, நவமி ஆகிய தினங்களிலோ அம்பிகையை ஆராதித்தால்... துக்கம் என்பதே இல்லாதவர்களாக (எப்போதும் ஆனந்தம் கொண்டவர்களாக) இருப்பார்கள் என்று நவராத்திரியின் மகிமையை விவரிக்கிறது பவிஷ்ய புராணம்.

சரி... இந்த விரதத்தை விரிவான உபசாரங் களுடன்தான் ஆராதிக்க வேண்டுமா? இதுபோன்று செய்ய முடியாதவர்களும் இந்த விரதத்தில் பங்குகொள்ளும்படி ஏதேனும் வழி உண்டா என்று நீங்கள் கேட்டுள்ளீர்கள்.

இதற்கு மிக அருமையாக பதில் சொல்கிறது பவிஷ்ய புராணம். ‘இதுபோன்ற உபசாரங்கள் இல்லை என்றாலும், பூவும் நீரும் அளித்தாலே போதும்; அதுவும் இல்லையென்றாலும் உண்மையான பக்தியுடன், ‘அம்மா என்னைக் காப்பாற்று’ என்று சக்தியைச் சரணடைந்தாலே போதும்; நாம் கேட்டதை மட்டுமன்றி, நமக்கு நன்மை யானவை அனைத்தையும் அளிக்க, எல்லாம்வல்ல அன்னை காத்துக் கொண்டிருக்கிறாள்’ என்கிறது அந்தப் புராணம்.

நவராத்திரி எளிய முறையில் வழிபடுவது எப்படி?

? ஜாதகத்தில் 7-ம் இடம் பாதிப்புற்று இருப்பதாக ஜோதிடர் மூலம் அறிந்தோம். இந்தக் குறை தீர எளிய பரிகார வழிபாடுகள் ஏதேனும் உண்டா?
- கி.சண்முகநாதன், தூத்துக்குடி

நமது சநாதன தர்மத்தில், பல ஆயிரம் நூல்கள் ஜோதிடங்களின் பலாபலன்களைச் சொல்வதுடன், உரிய பரிகாரங்களையும் அவரவர் செய்யத்தக்க வகையில் அளித்துள்ளன.

செவ்வாய்க்கிழமைகளில் துர்கை வழிபடுவது விசேஷம். அதேபோல், வெள்ளிக் கிழமைகளிலும் பெளர்ணமி தினங்களிலும் அம்பிகையை வழிபடுவதால், தீய விளைவுகள் குறைந்து நன்மை பெருகும். எனினும் இது பொதுவான பரிகார வழிமுறையே. அவரவர் ஜாதகத்தைப் பார்த்து தோஷ பரிகாரங்களைக் கணிப்பதே சிறப்பு. தோஷ நிவர்த்தி வேண்டுவோர், தங்களின் குடும்ப ஜோதிடரின் வழிகாட்டுதலின்படி பரிகாரங்களைச் செய்வதே சரியானதாக இருக்கும். அத்துடன், குலதெய்வ வழிபாட்டையும், சிராத்தம், தர்ப்பணம் போன்றவற்றையும் தவறாமல் செய்து வாருங்கள்; சகல தடைகளும் நீங்கி நன்மை நடக்கும்.

?`ஆறுமுகம் படைத்த ஐயா வருக, நீறிடும் வேலவன் நித்தம் வருக' என முருகப் பெருமானை வணங்கிப் போற்றுகிறது சஷ்டி கவசம். இன்னும்பல ஞானநூல்கள் அறுமுகன் என்றும் சண்முகர் என்றும் கந்தனைப் போற்றுகின்றன. முருகப்பெருமானின் ஆறுமுகங்கள் உணர்த்தும் பாடம் என்ன?
- எம்.சிவக்குமார், கோவை-3

உடலில் காணப்படும் ஆறு சக்கரங் களைத் தாண்டி, ஏழாவது நிலையான ஆயிரம் இதழ்களைக் கொண்ட தாமரை யில் ஆனந்த அனுபவத்தை அளிக்க வல்ல கடவுள் ஆறுமுகர். இதனாலேயே சண்முகருக்கு, ஆறு கோணங்களில் பூஜை, ஆறு அக்ஷரங்கள் கொண்ட மந்திரம், ஆறு கார்த்திகை பெண்கள் வளர்த்த திருக்கதை, ஆறு சிறப்புத் தலங்கள், சஷ்டி விரதம் என்று ` 6' என்ற எண்ணிக்கை சிறப்பானதாகக் கருதப்படுகிறது.

சிவபெருமானின் ஐந்து முகங்களும், சக்தியின் ஒரு முகமும் கூடிய ஆறுமுகமே - சண்முகர். அவரைப் பாலன் என்று நினைத்ததாகவும், பின்னர், அவரே அனைத்துக்கும் மூலகாரணம் என்று உணர்ந்ததாகவும் கந்தபுராணத்தில் விளக்குகிறார் கச்சியப்ப சிவாசார்யர்.

பஞ்சபூதங்களே இந்த உலகம். அதை ஒருநிலைப் படுத்துவதே சக்தி. சிவனும் சக்தியும் இணைந்த சண்முகர், நமக்கு அனைத்து ஆற்றலையும் அளிப்பதுடன், நம்மைக் காக்கக் கூடிய கடவுளா கவும் விளங்குகிறார். சிவாகமங்கள் சண்முகரை சிறப்பாகப் போற்றுகின்றன. அனைத்துச் சித்தர் களும் சிவபெருமானின் அருளைப் பெற்றிட கந்தனைத் துதித்தார்கள்.

முருகனின் ஆறுமுகங்களும் நான்கு திசைகளில் மட்டுமன்றி மேற்புறமும் உள்புறமுமாக தன்னுடைய ஆற்றல்களை வெளிப்படுத்த வல்லவை. எப்படி காற்றானது ஒரு மனிதனுக்கு இன்றியமையாததோ, அதுபோல் முருகனின் அருள் மிகவும் அவசியமானது. ஆகவே, அனுதினமும் ஆறுமுகனை வேண்டி வணங்கி ஆனந்தம் பெறுவோம்.

- பதில்கள் தொடரும்...