Published:Updated:

அரண்மனைபுகுந்த கள்வர்; மனம் இரங்கிய மன்னர் - கொடும்பாளூர் இடங்கழிநாயனார் குருபூஜை!

சிவலிங்கம்
சிவலிங்கம்

அடியார்க்குப் பொருள் ஈந்து புண்ணியம் ஈட்டிய அருட்செல்வராகத் திகழ்ந்தவர், இடங்கழிநாயனார்

`மடல்சூழ்ந்த தார்நம்பி இடங்கழிக்கு அடியேன்' - சுந்தரமூர்த்தி நாயனார்

இந்த உலகில் விற்கக்கூடாதது மூன்று என்கின்றன தர்ம சாஸ்திரங்கள். ஒன்று உணவு, மற்றொன்று கல்வி, அடுத்தது மருந்து. அதில் முதன்மையானது உணவு. `உண்டிகொடுத்தோர் உயிர்கொடுத்தோரே' என்பது நம் மரபின் வேதவாக்கு.

சிவலிங்கம்
சிவலிங்கம்

அதிதியாக வீடுதேடி வந்து உணவு கேட்கும் எவர்க்கும் அன்னமிடுவது இல்லறத்தில் இருப்பவர்களின் கடமை. அதிலும் வந்து கேட்பவர் சிவனடியாராக இருந்தால் தன் உயிரைத் தந்தாவது அவருக்கு அன்னமிடுவது பெருந்தொண்டு. பிள்ளைக் கறிகேட்ட சிவனடியவர்க்கும் முகம் கோணாது உணவிடும் அடியவர்கள் வாழ்ந்த புண்ணிய பூமி நம் பூமி.

இப்படிப்பட்ட பூமியில் கொடும்பாளூர் என்னும் கிராமத்தில் சிவனந்தன் என்னும் அடியவர் ஒருவர் வாழ்ந்துவந்தார்.

சிவனடியாருக்குத் தொண்டு செய்வதைத் தன் வாழ்நாள் குறிக்கோளாகக் கொண்டு வாழ்ந்துவந்தார். ஒருநாள் இரவு அவர் இல்லம்தேடி ஒரு சிவனடியார் வந்து உண்ண உணவு வேண்டினார். கைவசம் பொருளும் நெல்லும் இல்லாத நிலையில் என்ன செய்வது என்று தடுமாறிய அந்த அடியவர், அரசனுக்குச் சொந்தமான நெல் பண்டாரங்களுக்குள் நுழைந்து திருடுவது என்று முடிவு செய்து காவல் நிறைந்திருந்த அரசப் பண்டாரத்தில் நுழைந்து நெல்லைத் திருடினார். காவலர்கள் அவரைச் சிறைப்பிடித்து அரண்மனைக்குக் கொண்டு சென்றனர்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

அப்போது மன்னனாக விளங்கியவர் இடங்கழியார். தில்லைத் திருத்தலத்துக்குப் பொன்வேய்ந்த ஆதித்தசோழனின் வழித்தோன்றல். கொடும்பாளூர் கோனாட்டின் குறுநிலமன்னர். தன் ஆட்சியில் ஒருவர் திருடினார் என்பது கேட்டு ஆச்சர்யப்பட்டார்.

பிடிபட்ட சிவனந்தனின் திருநீறுபூசிய தோற்றத்தைக் கண்ட இடங்கழியார், திருடியதன் காரணம் என்ன என்று அறிந்துகொள்ள கேட்டார். உடனே சிவனந்தனும் ``நாள்தோறும் சிவபூஜை செய்து அடியவர்க்கு உணவிடுவது வழக்கம். இன்று அடியவர்க்கு உணவிட நெல்லும் பொருளும் இல்லாமல் போயின. அதனால் அரசின் பண்டாரத்தில் நுழைந்து திருடினேன்" என்று பதில் சொன்னார்.

`ஆயிரம் ஆண்டு பழமை.. நான்கு பக்கமும் நீர்'- கடைசியாய் தேவாரப்பாடல் பெற்ற திருவிடைவாய் கோயில்!

சிவப் பணியை தன் தலைப் பணியாகக் கொண்டு செயல்பட்ட மன்னன் இப்படித் தன் நாட்டில் சிவனடியார் துயருருவதைப் பொறுப்பானா? தன் பொக்கிஷத்தைத் திறந்துவிட்டான். வேண்டியவர்கள் கொள்ளலாம் என்று உத்தரவிட்டான். சிவனடியார்கள் வேண்டுமட்டும் எடுத்துக்கொள்ளட்டும் என்று தன் செல்வம் அனைத்தையும் பொதுவுடமை ஆக்கினான்.

அடியார்க்கு இரங்கும் அடியாராகவும், இறைநெறி பூண்டொழுகும் அரசனாகவும், சிவ சிந்தனைகளில் சிறந்து விளங்குபவராகவும், ஈசன் ஆட்சிக்கு அடிபணிந்து அரசாட்சி செய்து அடியார்க்குப் பொருள் ஈந்து புண்ணியம் ஈட்டிய அருட்செல்வராகவும் திகழ்ந்த இடங்கழி நாயனார், தான் அவதரித்த தலமான கொடும்பாளூரிலேயே இறைகதியடைந்து முக்தியும் பெற்றார்.

சிவலிங்கம்
சிவலிங்கம்

`குருகு உறங்கும் கோனாட்டுக் கொடிநகரம் கொடும்பாளூர்' என்று இடங்கழி நாயனார் புராணம் குறிப்பிடுகிறது. புதுக்கோட்டை மாவட்டத்தில் இலுப்பூர் வட்டத்தில் இருக்கின்ற இந்தக் கொடும்பாளூர், புதுக்கோட்டையிலிருந்து 36 கி.மீ தூரத்திலும் திருச்சியிலிருந்து 42 கி.மீ தூரத்திலும் அமைந்துள்ளது. இன்று இங்குள்ள சிவாலயத்தில் குருபூஜையொட்டி காலையில் திருமுறை பாராயணமும், அபிஷேகம் தீபாராதனையும், மதியத்தில் மகேஷ்வர பூஜையோடு அன்னதானமும் நடைபெற்றது. இரவு 7 மணியளவில் கயிலாய வாத்தியங்களோடு திரு இடங்கழி நாயனார் திருவீதியுலா நடைபெறுகிறது.

இந்த நல்ல நாளில் சிவாலயம் சென்று அடியார்களையும், அந்த ஆலவாயனையும் தொழுது நீங்காத அருள் செல்வத்தைப் பெறுவோம்.

அடுத்த கட்டுரைக்கு