திருத்தலங்கள்
திருக்கதைகள்
ஜோதிடம்
Published:Updated:

மரகதவல்லி மீனாட்சி! - மதுரை நாயகி!

மரகதவல்லி மீனாட்சி
பிரீமியம் ஸ்டோரி
News
மரகதவல்லி மீனாட்சி

நமசிவாயம்

சித்திரை மாதம் என்றதும் நம் நினைவுக்கு வருவது மதுரை மாநகரமும் சித்திரைத் திருவிழாவும்தான். அதேபோல் மதுரை என்றதும் நம் நினைவுக்கு வருபவள், தூங்காநகரத்தின் பேரரசியான அன்னை மீனாட்சியே.

சித்திரையில் அன்னையைச் சிறப்பிப்பது விசேஷம் அல்லவா. ஆகவே, `இளமென்பிடி' என்றும், `சிவனார்தம் உள்ளத்தில் திகழும் உயிரோவியம்' என்றும், `இளவஞ்சிக்கொடி' என்றும், `சொக்கர் அழகினுக்கு ஒத்தகொடி பொன்னூஞ்சல் ஆடி அருள்க' என்றும் குமரகுருபர சுவாமிகளாலும் இன்னும் பல மகான்களாலும் போற்றிச் சிறப்பிக்கப்பட்ட மீனாட்சியம்மையின் மகிமையை நாமும் படித்து மகிழ்வோம்!

`மதுரையே மீனாட்சி; மீனாட்சியே மதுரை’ என்று கூறும் அளவுக்கு சக்திக்கு முக்கியத்துவம் அளிக்கும் தலம் மாமதுரை. இங்குள்ள திருக்கோயில், சக்தி பீடங்களில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. இந்த பீடத்துக்கு ‘ராஜமாதங்கி சியாமள பீடம்’ என்று பெயர்.

மீனாட்சியம்மனுக்கு பச்சைதேவி, மரகதவல்லி, தடாதகை, அபிஷேகவல்லி, அபிராமவல்லி, கயற்கண்குமாரி, கற்பூரவல்லி, குமரித்துறையவள், கோமகள், சுந்தரவல்லி, பாண்டிப் பிராட்டி, மதுராபுரித் தலைவி, மாணிக்க வல்லி, மும்முலைத்திருவழுதி மகள் போன்ற பெயர்களும் உள்ளன.

மலையத்துவஜ பாண்டியனுக்கும் காஞ்சனமாலைக்கும் நீண்டகாலமாக மகப்பேறு இல்லாததால், யாகம் செய்ய, அந்த வேள்வித் தீயிலிருந்து தோன்றிய பெண் குழந்தையாகக் காஞ்சனமாலையின் மடியில் அமர்ந்தவள் இவள்.

மூன்று மார்பகங்களுடன் குழந்தை தோன்ற, கலங்கி நின்றனர் பெற்றோர். அப்போது அசரீரி ஒலித்தது... `இந்தக் குழந்தை ஆண்பிள்ளையைப் போல வளர்க்கப்பட வேண்டும். தக்க கணவனைக் காணும்போது மூன்றாவது மார்பகம் மறைந்துவிடும்' என அறிவுறுத்தியது. அதன்படியே வளர்க்கப்பட்டாள். `தடாதகை' என்று பெயர் சூட்டப்பட்டாள்.

மரகதவல்லி மீனாட்சி
மரகதவல்லி மீனாட்சி

முடிசூட்டு விழா முடிந்த பின்னர், பல திசைகளுக்கும் வெற்றி யாத்திரை போனவள், திருக்கயிலாயத்துக்கும் அவ்வாறே செல்ல, நந்திதேவரால் நினைவூட்டப்பட்ட சிவனார் போருக்கு வர, அவரைக் கண்டதும் மூன்றாவது மார்பகம் மறையப் பெற்றாள். அமைச்சரான சுமதி என்பவள் மூலம் அசரீரி வாக்கு குறித்து அறிந்து கொண்டாள். அதன் பின்னரே, சிவபெருமான் மதுரைக்குச் சொக்கனாக எழுந்தருளி, அம்மையை மணம் புரிந்தார்.

பாண்டிய குலம் தழைக்க வேண்டும் என அம்பிகை, ஆண்டவனிடம் வேண்டினாள். அதன்படியே, பூவுலகில் வாழ்ந்த அவர்களுடைய திருமகனாக உக்கிர பாண்டியன் பிறந்தான். தக்க பருவத்தில் அவனுக்கு, காந்திமதி எனும் நங்கை நல்லாளை மணமுடித்து, முடிசூட்டி வைத்து, பின்னர் தடாதகை பிராட்டியும் சொக்கநாதப்பெருமானும் திருக்கோயிலுள் புகுந்து மறைந்தனர்.

பச்சைத் திருமேனி கொண்டதால் உலகுக்குப் பசுமை தருகிற இந்தப் பெருவல்லி, அழகே உருவானவள். அவளுடைய அழகைப் பருகிப் பருகித் திளைத்த சிவனார், அவளைவிட்டுப் பிரியாமல் இருப்பதற்காகச் சில விளையாடல்களைப் புரிந்தாராம். அவளுடைய புன்னகையே முழு நிலவு; நிலவின் கிரணங்களைப் பருகுகிற சகோரப் பறவையாக மாறினார். அவளுடைய கூந்தலின் மலர்களில் திகழும் வண்டாக மாறினார்; ஏன், அவளுடைய கையில் இருக்கும் கவினுறு கிளியாகவே மாறிக் கொண்டார் என்கின்றன ஞான நூல்கள்.

மரகதவல்லி மீனாட்சி
மரகதவல்லி மீனாட்சி

மீன்கள், முட்டையிலிருந்து தங்களது குஞ்சு களைப் பார்வையின் வழியாகவே பொரிப்பது போன்று நயனத்தின் வழியாகவே பக்தர்கள் எங்கிருந்தாலும் அருள் தருவாள் மீனாட்சி!

மீனாட்சியம்மனை மணம் புரிவதற்காக, சுடலையாண்டியான ஈசன், மணக்கோலத்தில் வந்தமையால் சுந்தரேஸ்வரர் என்றும், சொக்கன் என்றும் அழைக்கப்படுகிறார். மீனாட்சியம்மன் அரசியாக இருந்ததால், அவளுக்கான அபிஷேகங்களை பக்தர்கள் பார்க்க அனுமதி இல்லை. அலங்காரம் செய்த பிறகே பார்க்கலாம். இந்தத் தலத்தின் பிரசாதம் தாழம்பூ குங்குமம். இந்தக் குங்குமம் வேறு எங்கும் கிடைக்காது.

இங்குள்ள மீனாட்சியம்மனது விக்கிரகம் மரகதக் கல்லால் ஆனது. மீனாட்சி சுந்தரேஸ்வரர் என்ற பெயரில் தமிழகத்தில் உள்ள 366 கோயில்களில் முதன்மையானது இது. நின்ற திருக்கோலம்; பச்சைத் திருமேனி; வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தமாகத் (தொங்கு கரம்) திகழ... வலது தோளில் பச்சைக் கிளி; இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ்சிறுமியின் முகம் என அருள் காட்சி தருகிறாள் அன்னை மீனாட்சி.

வேதப் பழம்பாடல்; ஞானியர் தேடிய நல்மணி; அருள் பழுத்த கற்பகம்; தோன்றாத் துணையாம் சிவனுக்கே துணையானவள்; துவாதசாந்தப் பெருவெளியில் பரமானந்தப் பெருக்கைத் தரும் பூரண நிலவு; அடியார் துயரை அடியோடு துடைக்கும் காருண்ய தேவதை... என்றெல்லாம் இந்த அம்பிகையை - அருள்மிகு மீனாட்சியம்மையை ஞானியர் போற்றுகிறார்கள்.

மீனாட்சி திருமணத்தில் அரசர்கள், முனிவர்கள், தவசீலர்கள், மக்கள் என்று எல்லோரும் உண்ட பின்னரும், நிறையவே மீதம். இதில் சற்றே கர்வம் கொண்ட அம்பிகை, `பூத கணங்களை அனுப்பக் கூடாதா' என்று ஈசனிடம் வினவ, ஐயனும் `குண்டோதரன் பசியால் துடிக்கிறான்; அவனை அனுப்புகிறேன்' என்றார். அவனும் வந்தான்; உண்டான். எல்லாம் உண்ட பின்பும் பசி அடங்காமல், `இன்னும் வேண்டும்' எனக் கேட்டு நின்றான். பிராட்டியார் ஐயன் முன் நாணத்தால் தலைகுனிந்து நின்றாள். தீயவர்களின் தீமையெல்லாம் ஒன்று திரண்டு, குண்டோதரனது வயிற்றில் பசியாக முற்றுகையிட்டிருந்தன. அம்பிகையைப் புன்சிரிப்போடு சிவனார் பார்க்க... அவரின் திருவுளபடி, தானே அன்னம் வடிவம் கொண்டாள்; தயிரும் சோறுமாக நிறைந்து குண்டோதரனின் பசி தீர்த்தாள்.

மதுரை வடக்குமாசி வீதி கோயிலில் எழுந்தருளி யுள்ள செல்லத்தம்மன், மீனாட்சியின் அம்சம் என்பதால், மீனாட்சி திருக்கல்யாணத்தின்போது முதலில் இந்த அம்மனுக்குப் புடவை, தாலி, மெட்டி ஆகியவற்றைப் பல்லக்கில் ஏற்றி அனுப்பி வைக்கிறார்கள்.

ஶ்ரீகாஞ்சி காமகோடி பீடம் மற்றும் ஶ்ரீசிருங்கேரி சாரதா பீடம் ஆகியவற்றில் ஆஸ்தான வித்வானாக விளங்கிய மகான் தேதியூர் சுப்பிரமணிய சாஸ்திரிகள், பார்வை இழந்து அவதிப்பட்டார். அவர் மீனாட்சி அம்பாளை நோக்கிப் பதினைந்து பாடல்கள் கொண்ட துதி ஒன்றைப் பாடி பார்வை பெற்றார். பார்வை குறைவு உள்ளவர்கள், அந்தப் பாடல்களைப் பாடி அம்பாளை துதிப்பது இன்றும் கண்கூடு.

ஆதிசங்கரர், மீனாட்சியம்மனை தரிசித்து மீனாட்சி பஞ்சரத்தினம், மீனாட்சி அஷ்டக ஸ்தோத்திரம் ஆகியவற்றைப் பாடியுள்ளார். மீனாட்சியம்மன் கோயில் மடைப் பள்ளியில் பணிபுரிந்த ஶ்ரீநிவாஸன், மீனாட்சியின் அருளால், மீனாட்சி துதிப் பாடல்களைப் பாடியுள்ளார். அப்போது இவருக்குப் பதிலாக அம்பிகையே சமைத்ததுடன், வெளிச்சத்துக்காக தனது மூக்குத்தியை பயன்படுத்தியதாகவும் கூறப்படுவது உண்டு.

கொட்டும் மழையில் சிறுமி வடிவில் வந்து, ஆங்கிலேய அதிகாரி ஒருவரை அவரது வீட்டிலிருந்து வெளியே இழுத்து வந்தாள் மீனாட்சி. அடுத்த கணம் வீடு இடிந்து விழுந்தது. சிறுமி மறைந்து போனாள். தன்னைக் காப்பாற்றியது மீனாட்சியே என்பதை உணர்ந்த அந்த அதிகாரி ஏராளமான ஆபரணங்களை மீனாட்சி அம்பாளுக்கு சமர்ப்பித்தார். அவை இன்றும் மீனாட்சி கோயிலில் உள்ளன. அந்த அதிகாரி - பீட்டர் பாண்டியன்.

சொக்கநாதரின் உள்ளம் மகிழ்விக்கும் அங்கயற்கண்ணியம்மையின் சிறப்புகளை தமிழ்த்தாத்தா உ.வே.சா தம்முடைய கயற்கண்ணி மாலை நூலில் 100 பாடல் களில் அற்புதமாய் விளக்குகிறார். அம்மையின் இயல்புகளைப் பின்வருமாறு கூறுகிறார். கண்டுஆர் மொழிக்கிள்ளாய் என்றும் கனகச் சிலம்படித் தேனே என்றும் போற்றுகிறார். மேலும்...

எல்லா வுலகும் அளித்தர சாளும் இயல்புடைநீ

மல்லார் திணிபுயப் பாண்டிய நாட்டினை மட்டும்அணி

வில்லார் முடியணிந் தேயர சாளும் விதம் என்கொலோ

என்றும் பாடலால் வினவுகிறார் அன்னையை! அதாவது, அம்மையின் திருவிழிகளுக்கு எத்தனையோ பொருள்கள் உவமையாக அமையும். அவற்றுள்ளும் கயல்மீன்கள் மட்டும் உவமையாக உன் திருவிழிகளுக்குச் சொல்லப்படுவதற்கு, அவை என்ன புண்ணியம் செய்தனவோ என்று வியக்கிறார் அவர்.

அம்மையின் மகத்துவத்தைப் படிக்கப் படிக்க நாமும் வியந்துகொண்டே இருக்கலாம்!