Election bannerElection banner
Published:Updated:

பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்படும் அலங்காரத் திருக்குடைகள்... எப்படித் தயாராகின்றன தெரியுமா? #Video 

Mahesh
Mahesh

மார்கழி மாதத்துக்குப் பிறகு அதாவது நவம்பர், டிசம்பர் மாதத்தில் வேலை அதிகம் இருக்காது. இந்த இரண்டு மாதங்களில் கூடுகளுக்கான மூங்கில்களை வாங்கித் தயார் செய்யும் வேலைகளைச் செய்வோம்.

புரட்டாசி மாதம் `பெருமாள் மாதம்’ என்றும் சிறப்பிக்கப்படுகிறது. காக்கும் கடவுளான பெருமாளுக்கு, சனிக்கிழமை விரதம் இருந்து வழிபட உகந்த மாதம். அவ்வாறு விரதம் இருந்து வழிபட  பிரச்னைகள் அனைத்தும் விலகி, வளமான வாழ்க்கை கிடைக்கும் என்பது ஐதிகம். இந்த மாதத்தில்தான் பெரும்பாலான பெருமாள் கோயில்களில் பிரம்மோற்சவம் நடைபெறும். இதில் தவறாமல் இடம்பிடிப்பவை அலங்காரத் திருக்குடைகள்.

Temple umbrella
Temple umbrella

சென்னை சிந்தாதிரிப்பேட்டை மீன் மார்க்கெட்டின் எதிரே உள்ளது அய்யா முதலி தெரு. இங்குதான் அலங்காரத் திருக்குடைகள் தயாரிக்கும் கடைகள் அணிவகுத்து நம்மை வரவேற்கின்றன. குடைகள் மட்டுமல்ல கோயிலை அலங்கரிக்கப் பயன்படும் பல்வேறு கலை அலங்காரப் பொருள்களைத் (முத்தங்கி, தேர்ச்சீலை) தயாரிக்கும் பணிகளும் மும்முரமாக நடைபெற்று வருகின்றன. நான்கு தலைமுறைகளாக இந்தத் தொழிலைச் செய்துவரும் குடும்பத்தைச் சேர்ந்த மகேஷ் என்பவரை சந்தித்தோம்.

குடைகளின் அளவுக்கு ஏற்றபடி அதைத் தயார் செய்யுறதுக்கான நாள்களும் தேவைப்படும். ஒன்பது அடியுள்ள குடையைத் தயாரிக்க குறைந்தது ஆறு நாள்களை எடுத்துப்போம். நான்கரை அடியுள்ள ஒரு குடையை மூன்று நாள்களில் முடித்துவிடலாம்.

``எங்க பூர்வீகத் தொழிலே அலங்காரத் திருக்குடைகளைச் செய்யறதுதான். என் கூட பிறந்த இரண்டு அண்ணன்களும் வேறு வேலைகளுக்குப் போயிட்டாங்க. விதவிதமான குடை செய்யுறதுல எனக்கு ஆர்வம் அதிகம். அதனால பத்து வயசுல இருந்து இந்தத் தொழிலை அப்பாக்கிட்ட கத்துக்க ஆரம்பிச்சேன். 2000-ம் ஆண்டுல டிப்ளோமா இன் சிவில் இன்ஜினீயரிங் முடிச்சேன். ஆனா, மனசுக்குப் பிடிச்சிருந்ததால முழுநேரமா இந்தத் தொழிலையே செய்ய முடிவு செஞ்சேன்.

அலங்காரத் திருக்குடைக்கு மூலப் பொருளே மூங்கில்தான். மூங்கில்களை வாங்கி வந்து, தேவையான அளவுக்கு வெட்டி வச்சிப்போம். ஒவ்வொரு குடையும் ஒவ்வோர் அளவில் இருக்கும். அதற்கேற்ற மாதிரி மூங்கில் குச்சிகளைத் தயார் செய்ய வேண்டியிருக்கும்.

Bamboo
Bamboo

வண்ண வண்ணக் குடைகள்!

பிரம்மோற்சவத்துக்கு 4.5 அடி முதல் 9 அடிவரை அலங்காரக் குடைகளைத் தயாரிப்போம். கோயில் நிர்வாகத்தைச் சேர்ந்தவங்க தங்களுக்கு எந்த நிறத்தில், என்னவகையான துணியைப் பயன்படுத்தச் சொல்றாங்களோ அதற்கேற்றபடி தயார் செய்துகொடுப்போம். பெரும்பாலான கோயில்களில் இரண்டு நிறங்களைத்தான் பயன்படுத்துவாங்க. அதாவது சிவப்பு - வெள்ளை, சிவப்பு - மரூன்தான் விரும்புவாங்க. ஐந்து, ஆறு நிறங்களையெல்லாம் பயன்படுத்துறது குறைவாகவே இருக்கும்.

பிரம்மோற்சவத்துக்கான குடைகளைத் தயாரிக்க மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராகிடுவோம். அதில் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அதிகம் இருக்கும். ஒவ்வொரு வருடமும் வித்தியாசம் காட்ட வேண்டியிருக்கும்.
மகேஷ் (அலங்காரத் திருக்குடைகள் தயாரிப்பாளர்)

சிவன் கோயில், பெருமாள்கோயில்னு எல்லாக் கோயில்களுக்கும் தனித் தனியாகக் குடைகள் செய்வோம். சிவன் கோயில்களுக்குப் பல நிறங்களைப் பயன்படுத்தி அலங்காரக் குடைகளை தயாரிப்போம். விஷ்ணு கோயில்களுக்கு இரண்டு நிறங்கள் மட்டும்தான். பெரும்பாலும் வெள்ளை நிறத்தைதான் அதிகமாகப் பயன்படுத்துவாங்க என்பதால் வெள்ளை - மரூன் பயன்படுத்துவோம்.

Temple umbrella
Temple umbrella

அலங்காரக் குடைகளின் விலை?

குடைகளின் அளவுக்கு ஏற்றபடி அதைத் தயார் செய்யுறதுக்கான நாள்களும் தேவைப்படும். ஒன்பது அடியுள்ள குடையைத் தயாரிக்க, குறைந்தது ஆறு நாள்களை எடுத்துப்போம். நான்கரை அடியுள்ள ஒரு குடையை மூன்று நாள்களில் முடித்துவிடலாம். கூடு ரெடி செய்ய (மூங்கில்களைக் கொண்டு செய்யப்படுவது) ஒரு நாள் தேவைப்படும். துணியும், மெட்டீரியலும் தயாராக இருந்தால், அடுத்த இரண்டு நாள்களில் குடையைத் தயார் செய்துவிடுவோம். நான்கரை அடி குடையின் விலை சுமார் ரூ.5,500 செலவாகும்.

பிரம்மோற்சவத்துக்கான குடைகளைத் தயாரிக்க மூன்று மாதங்களுக்கு முன்பே தயாராகிடுவோம். அதில் நுணுக்கமான கலை வேலைப்பாடுகள் அதிகம் இருக்கும். ஒவ்வொரு வருடமும் வித்தியாசம் காட்ட வேண்டியிருக்கும். அதேபோல இந்தத் தொழிலில் உள்ளவர்கள் தங்களை வித்தியாசப்படுத்திக் காட்டறதுக்காக கிரியேட்டிவா செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. அதனால நாங்களும் அதற்கு ஈடுகொடுத்து குடைகளை உருவாக்க வேண்டியிருக்கு.

Koil Kodai
Koil Kodai

ஆண்டு முழுக்க வேலை உண்டா?

ஆண்டு முழுக்க வேலையிருக்கும்னு சொல்ல முடியாது. மார்கழி மாதத்துக்குப் பிறகு அதாவது நவம்பர், டிசம்பர் மாதத்தில் வேலை அதிகம் இருக்காது. இந்த இரண்டு மாதங்களில் கூடுகளுக்கான மூங்கில்களை வாங்கித் தயார் செய்யும் வேலைகளைச் செய்வோம். அதேபோல சென்னையிலுள்ள திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில், மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயில்களுக்குப் பிரமாண்டமான திருக்குடைகள் தேவைப்படும். அவற்றைத் தயார் செய்ய ஆறு மாதங்கள்வரை பிடிக்கும். வேலையில்லாத அந்த இரு மாதங்களில் இந்தக் கோயில்களுக்கான குடைகளைத் தயாரிப்போம்.

திருப்பதி குடை ஊர்வலம்!

திருமலை வேங்கடேச பெருமாளுக்கான திருக்குடைகளைத் தயாரிக்கும் பணிகளை ஆறு மாதத்துக்கு முன்பே தொடங்கிவிடுவோம். முன்னாடி திருப்பதி குடைகளை ஒண்ணு ரெண்டு பேருதான் செஞ்சுக்கிட்டு இருந்தாங்க. இப்போ ஏழு பேர் செய்யுறோம்.

C.N. Mahesh
C.N. Mahesh

இந்த ஆண்டுக்கான திருப்பதி குடை ஊர்வலம் வரும் 25-ம் தேதி சிந்தாதிரிப்பேட்டை முருகன் கோயிலிலிருந்து தொடங்கயிருக்கு. அதற்கான குடைகள் தயார் செஞ்சுக்கிட்டு இருக்கேன். இன்னும் இரண்டு குடைகள் பாக்கியிருக்கு. அதை இன்னும் ரெண்டு நாள்ல முடிச்சிடுவேன்!

சென்னை சிந்தாதிரிப்பேட்டையில் தயாராகும் பேரெழில் கொஞ்சும் பெருமாள் குடை.. இப்படித்தான் உருவாக்கப்படுகிறது! வீடியோ : கிராபியென் ப்ளாக்

Posted by Vikatan EMagazine on Thursday, September 19, 2019

மறக்க முடியாத அனுபவம்!

2014-ம் ஆண்டு சென்னை மயிலாப்பூர் கபாலீசுவரர் கோயிலுக்கு மஞ்சள் - பச்சை நிறம் கொண்ட அலங்காரத் திருக்குடை ஒண்ணு செய்துகொடுத்தேன். அது எல்லோருக்கும் ரொம்பப் பிடிச்சிப்போச்சு. அதுக்குப் பிறகுதான் நான் பாப்புலரானேன். நிறைய ஆர்டர்கள் வர ஆரம்பிச்சது. என் அனுபவத்துல அதுதான் மறக்க முடியாதது. அதேபோல குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில்கள் மேம்பாட்டு நிறுவனம் (MSME) சார்பில் விருதும் வாங்கியிருக்கேன். மேலும் நிறைய ஆர்ட் கேலரிகள் சார்பில் விருதுகள் கொடுத்திருக்காங்க.

Mahesh
Mahesh

இந்தத் தொழிலை சொல்லித்தர பயிற்சிக் கூடங்கள் எல்லாம் கிடையாது. தொழில் மேல ஆர்வம் இருக்கிறவங்க, செய்றவங்க பக்கதில் இருந்து பார்த்தே நிறைய விஷயங்களைத் தெரிஞ்சுக்கலாம். சில நுணுக்கமான வேலைப்பாடுகளை மட்டும் கேட்டா, நாங்க சொல்லித் தருவோம். இது எங்களோட பூர்வீகத் தொழில். என் அப்பாகிட்ட நான் கத்துக்கிட்டேன். எனக்குப் பிறகு இதை என் மகன் ஸ்ரீஜி செய்வான் என்கிற நம்பிக்கையிருக்கு!” என்கிறார் மகேஷ் உறுதியான குரலில்!

திருப்பதி பிரம்மோற்சவம், நவராத்திரி, கேதார கௌரிவிரதம்... புரட்டாசிமாத விழாக்கள் விசேஷங்கள்!
Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு