Published:Updated:

மின்தடையால் இருளில் கங்கைகொண்ட சோழபுரம் கோயில்... கேள்விக்குறியாகிறதா பக்தர்கள் பாதுகாப்பு?

ராஜேந்திர சோழனுக்கு கம்போடியாவில் சிலை வைக்கிறார்கள் என்று பெருமைப்பட்டுக்கொள்கிறோம். ஆனால், இங்கு அவன் கட்டிய பிரமாண்ட ஆலயத்தின் பராமரிப்பில் அசட்டையாக இருக்கிறோம்.

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

கங்கைகொண்ட சோழபுரம்... ஆயிரம் ஆண்டுகளைக் கடந்து நிற்கும் அதிசயம். உலகமே தலைநிமிர்ந்துபார்க்கும் கலைப் பொக்கிஷம். தமிழர் கட்டடக் கலையின் பெருமைகளுக்குச் சோழர்கள் சூட்டிய மணிமகுடம்.

ராஜராஜ சோழன் எழுப்பிய தஞ்சைப் பெரியகோயில், சோழர்காலக் கட்டடக் கலையின் பெருமிதம். அதற்கு இணையான கலைச் செழுமையோடு ராஜராஜ சோழனின் மகன் ராஜேந்திர சோழன் உருவாக்கிய ஆலயம்தான் கங்கைகொண்ட சோழபுரத்தில் இருக்கும் கங்கை கொண்ட சோழீச்சுவரர் கோயில்.

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

நாற்திசைகளிலும் படைகளைச் செலுத்தித் தன் வாள்வலிமையால் பெரும் நிலத்தை ஆண்ட ராஜேந்திர சோழன், அரசு நிர்வாக வசதிக்காக உருவாக்கிய நகரம்தான் கங்கைகொண்ட சோழபுரம். அதன் மையமாக இந்த ஆலயம் உருக்கொண்டு விளங்குகிறது. சுமார் 15 ஏக்கர் பரப்பளவில் காணப்படும் இந்த பிரமாண்டக் கட்டுமானத்தில் அமைந்திருக்கும் சிற்பங்கள் கலை அழகு கொஞ்சுபவை. தொல்லியல்துறையின் பாதுகாப்பில் இருக்கும் இந்த 1,000 ஆண்டு பொக்கிஷம் யுனெஸ்கோவின் பாரம்பர்யச் சின்னமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.

இத்தனை பெருமைகளோடு நிமிர்ந்து நிற்கும் இந்த ஆலயத்தின் நிர்வாகக் குறைபாடுகள் ஊர் மக்களிடையே பெரும் மன வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. குறிப்பாக, மாலை வேளைகளில் ஏற்படும் மின்தடையால் கோயில் இருண்டு காணப்படுகிறது. இதனால் இங்கு தரிசனம் செய்ய வரும் பக்தர்கள் மிகுந்த சிரமத்துக்கு உள்ளாகிறார்கள்.

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

சிறு மழை பெய்தாலும் இந்தப் பகுதியில் நீண்ட நேர மின்தடை என்பது வாடிக்கையாக இருக்கிறது. இதனால் மாலை 5 மணிக்கு மேல் ஆலயத்துக்குள் இருள்சூழ்ந்து காணப்படுகிறது. மின்கலத்தின் உதவியுடன் கருவறையில் எரியும் விளக்கு மற்றும் ஓரிரு இடங்களில் உள்ள விளக்குகளும் சில நிமிடங்களிலேயே அணைந்துவிடுகின்றன. பிறகு ஆலயத்தின் உள்ளே இருள்சூழ்ந்து காணப்படுகிறது.

சுற்றியிருக்கும் மாவட்டங்களிலிருந்து புதிதாகத் திருமணம் ஆனவர்கள் மற்றும் அறுபதாம் கல்யாணம் செய்துகொண்டவர்கள் மாலையில் இங்கு வந்து வழிபடும் வழக்கம் காணப்படுகிறது. மின்சாரத் தடைகாரணமாக இருள் சூழ்ந்த நிலையில் அவர்கள் மிகவும் சிரமத்துக்கு ஆளாகிறார்கள்.

Gangaikonda cholapuram
Gangaikonda cholapuram

இன்றைய காலகட்டத்தில் கண்காணிப்புக் கேமராக்கள் மிகவும் அவசியமான ஒன்று. ஆனால், இந்தப் பாரம்பர்யக் கலைக்கோயிலில் கண்காணிப்புக் கேமராக்கள் இல்லை. இதனால் ஆலயத்தின் பாதுகாப்பு குறித்து கேள்வி எழுகிறது.

நேற்று (16.9.2019) நீண்ட நேரம் மின்சாரத் தடை இருந்தது. பல ஊர்களிலிருந்து பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்ய வந்திருந்தனர். ஆனால், இருளில் இறைவனை தரிசிக்க முடியாமலும் ஆலயத்தின் எழிலை ரசிக்க முடியாமலும் மன வருத்தமடைந்தனர். அப்போது அங்கு உறவினர்களோடு வந்த முதிய தம்பதியோடு பேசினோம்.

Gangaikonda Cholapuram
Gangaikonda Cholapuram

"திருமணஞ்சேரியில் அறுபதாம் கல்யாணம் முடிச்சுக்கிட்டு சுவாமி தரிசனம் செய்ய வந்தோம். ஆனால், முடியல. திருடனே உள்நுழைந்தால்கூடக் கண்ணுமண்ணு தெரியாத அளவுக்கு இருட்டு. தட்டுத் தடுமாறி வர்றோம். கரண்டு இல்லை. கருவறைல சுவாமியே தெரியலை. ராஜாக்கள் எல்லாம் பெருமை வாய்ந்த கோயிலைக் கட்டி வச்சிருக்காங்க. ஆனா, அதைப் பராமரிக்க முடியாம நாம இருக்கோம். இதுக்கு அரசாங்கம் ஏதாவது செய்யணும்" என்று தம் மனக் குறையை நம்மோடு பகிர்ந்துகொண்டனர். இவர்களைப் போலவே புதுமணத் தம்பதியினர் சிலரும் அங்கு வந்து ஏமாற்றத்தோடு திரும்பிப் போயினர்.

இருள் மட்டும் பிரச்னை இல்லை. இங்கு இருக்கும் புல்வெளிகளில் இரவில் பாம்புகள் நடமாட்டம் இருப்பதாகச் சொல்லி ஊர்க்காரர் நம்மிடம் வருத்தப்பட்டுச் சொல்லிக்கொண்டிருந்தபோதே ஒரு சிறு கட்டுவிரியன் பாம்பு ஒன்று பக்தர்கள் கூட்டத்துக்கு அருகே பாய்ந்துவந்தது. செல்போன் வெளிச்சத்தில் அதைப் பார்த்துவிட்டு பக்தர் ஒருவர் பயந்து கத்த, மற்றவர்கள் அலறி ஒதுங்கினர். பின்பு துணிச்சலான ஒருவர் அதை அடித்து வீசினார். பக்தர்கள் தங்களுக்குள்ளாகப் புலம்பியபடி வெளியேறினர். கோயிலில் ஜென்செட் ஒன்று உள்ளது. ஆனால், அதில் ஊற்ற டீசல் இருக்காது என்கிறார் உள்ளூர்வாசி ஒருவர்.

Gangaikonda cholapuram
Gangaikonda cholapuram

இவ்வளவு பராமரிப்புக் குறைபாடுகளுக்கும் பாதுகாப்பற்ற சூழலுக்கும் என்ன காரணம்?

கங்கைகொண்ட சோழபுரம் கோயில் தொல்லியல்துறையின் பாதுகாப்பிலும் இந்து அறநிலையத்துறையின் பராமரிப்பிலும் உள்ளது. பெரம்பலூர் நிர்வாக அதிகாரியே இந்த ஆலயத்தின் நிர்வாகப் பொறுப்பையும் கூடுதலாகச் சுமக்கிறார். பொதுவாக ஆலயத்தின் ஆண்டு வருமானம் 10 லட்சத்துக்கு மேல் இருந்தால் அதை 'கிரேடு 2' கோயிலாக அறிவிக்கலாம். கங்கைகொண்ட சோழபுரம் கோயில் அதற்குமேலேயே வருமானம் உடையதாக விளங்குகிறது. ஆனால், அதை 'கிரேடு 3' கோயிலாகவே அறநிலையத்துறை பட்டியலிட்டுள்ளது. கிரேடு 2 வாக மாற்றினால் உடனடியாகத் தனி நிர்வாக அதிகாரி நியமிக்கப்பட வேண்டும். தனி நிர்வாக அதிகாரியிருந்தால் செலவுக்கான பணத்தை உடனடியாகப் பெற்றுத் தேவைகளைப் பூர்த்தி செய்ய முடியும். அதுவே பல சிக்கல்களுக்குத் தீர்வாகிவிடும் என்று சொல்கிறார்கள்.

கோயிலைச் சுற்றியிருக்கும் காணப்படும் புல்வெளிப் பராமரிப்புக் குறைபாடுகளே பாம்புகள் நடமாட்டம் போன்ற பிரச்னைகளுக்குக் காரணம் என்றும் சொல்கிறார்கள். இதுகுறித்துக் கங்கைகொண்ட சோழபுரம் மேம்பாட்டுக் குழுமத்தின் தலைவர் கோமகனிடம் பேசினோம்.

Gangaikonda cholapuram
Gangaikonda cholapuram

"இது முழுக்க முழுக்க நிர்வாகச் சிக்கல்களால் உருவாகும் பிரச்னைகள். தனி நிர்வாக அதிகாரியை நியமிக்க வேண்டியது அவசியம். 13.5 ஏக்கர் பரப்பிலுள்ள இந்த ஆலயத்தின் தோட்டத்தைப் பராமரிக்க தொல்லியல்துறை வட இந்திய நிறுவனத்துக்கு டெண்டர் ஒதுக்கியுள்ளது.

சென்ற ஆண்டுவரை இந்தப் பராமரிப்புகளை மத்திய அரசின் கீழ் செயல்பட்டுவந்த தொல்லியல்துறையே கவனித்துவந்தது. அதுவரை எந்தப் பிரச்னைகளும் எழவில்லை. பராமரிப்பு சிறப்பாக இருந்தது. எப்போது தனியார்வசம் ஒப்படைக்கப்பட்டதோ அப்போதே சீரழிவும் தொடங்கிவிட்டது. இது இன்னும் அதிகமாகவே வாய்ப்புள்ளது. எனவே, உடனடியாக அரசு தலையிட்டு இதைச் சரிசெய்ய வேண்டும். மேலும், இந்த ஆலயத்தின் தரத்தைக் கருத்தில் கொண்டு உடனடியாக 'கிரேடு 2' ஆலயமாக அறிவித்து அரசு நிர்வாகத்தைச் சீர்செய்ய வேண்டும்" என்று தெரிவித்தார்.  

கம்போடியா முதல் சீனா வரை உள்ள விநாயகர்கள்...

ராஜேந்திர சோழனுக்கு கம்போடியாவில் சிலைவைக்கிறார்கள் என்று பெருமைப் பட்டுக்கொள்கிறோம். ஆனால், இங்கு அவன் கட்டிய பிரமாண்ட ஆலயப் பராமரிப்பில் அசட்டையாக இருக்கிறோம். அரசும் அறநிலையத்துறையும் இதைக் கவனத்தில் கொண்டு உடனடியாகச் செயல்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள் கங்கைகொண்ட சோழபுரம் வாசிகள்.