திருத்தலங்கள்
திருக்கதைகள்
Published:Updated:

ஏற்றங்கள் அருளும் 7 தீபத் தூண்கள்!

ஶ்ரீசாதுசிதம்பர ஸ்வாமிகள்
பிரீமியம் ஸ்டோரி
News
ஶ்ரீசாதுசிதம்பர ஸ்வாமிகள்

வல்லநாட்டுச் சித்தர் ஸ்தாபித்த ஜோதி ஸ்தம்பங்கள் படங்கள்: பே.சுடலைமணி செல்வன், கா.அபிஷ்விக்னேஷ்

புண்ணியம் செழிக்கும் தென்னகம் கண்ட எத்தனையோ அற்புதப் புனிதர்களில் ஒருவர், வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள். தூத்துக்குடி மாவட்டம் வல்லநாடு பாறைக்காடு கிராமத்தில், ஐப்பசி மாதம் அமாவாசையன்று சித்திரை நட்சத்திரத்தில், சண்முகம் - உலகம்மை தம்பதிக்கு மகனாகப் பிறந்தவர். வல்லநாடு மலையில் ஆடு மேய்க்கும்போது திடீரென்று தோன்றிய சித்தர் மூலம் உபதேசம் பெற்று சித்தரானார்.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

சிறுவயது முதலே விஷத்தை இறக்கும் சக்தி பெற்றவர்; ஒரே நேரத்தில் மூன்று இடங்களில் இருக்கும் வல்லமை படைத்தவர். வெண்குஷ்டம் உட்பட பல நோய்களைத் தனது மருத்துவ வலிமையால் விரட்டியவர். `அருட்பெருஞ்ஜோதி தனிப்பெருங்கருணை’ என்ற வள்ளலாரின் வாசகத்தைத் தனது வாழ்நாளில் நோக்கமாகக் கொண்டு மக்களை வழிநடத்தியவர்.

இவரின் நிழல் தரையில் விழாது; அவர் நடக்கும்போதும் பாதத்தின் தடம் தரையில் பதியாது என்று வியப்புடன் விவரிக்கிறார்கள் பக்தர்கள். அதுமட்டுமா? அதுமட்டுமா நாகங்கள், சிறுத்தை, யானை, புலி ஆகியவற்றை தமது கட்டுக்குள் அடக்கியவர் சுவாமிகள்.

சதுரகிரியில் மதம் கொண்ட ஒற்றை கொம்பன் யானையை தன் அன்புக்கு அடிமையாக்கினார். யானை இறந்தபோது அதன் சிரசை பாறைக்காடு சித்தர்பீடத்தில் வைத்து விளக்கு போட்டு வணங்க ஆரம்பித்தார். அவர் ஏற்றிய விளக்கு தற்போதும் எரிந்து கொண் டிருக்கிறது. அன்னதானத்தைப் போற்றியவர். தற்போதும் இவர் பீடத்தில் தினமும் அன்னதானம் நடைபெறுகிறது.

திருநெல்வேலி - தூத்துக்குடி நான்கு வழிச்சாலையில் வல்ல நாட்டில் இறங்கி கலியாவூர் செல்லும் சாலையில் ஒரு கி.மீ. தொலைவு பயணித்தால் பாறைக்காடு சித்தர் பீடத்தை அடையலாம். வல்ல நாட்டிலிருந்து ஆட்டோ வசதி உண்டு.

வியாழன்தோறும் இங்கு வந்த வழிபடுவது சிறப்பாகும். பௌர்ணமி, அமாவாசை நாள்களிலும், பூச நட்சத்திர நாள்களிலும் இங்கு சிறப்பாக பூஜை நடைபெறுகிறது. தைபூசத்தன்று பாறைக்காடு பீடம் ஜோதி மண்டபத்தில் தொண்டர்குலம் மக்களால் 1008 தீபங்கள் ஏற்றப்பட்டு சிறப்பு வழிபாடுகள் நடைபெறுகின்றன. இந்த தினங்களில் பீடத்துக்கு வந்து வழிபட்டால் கேட்ட வரம் கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள். கோயில் தினமும் காலை 6 முதல் இரவு 8 மணி வரை திறந்திருக்கும்.

மகிமைகள் பல புரிந்த வல்லநாட்டுச் சித்தர் சாது சிதம்பர சுவாமிகள், உலக மக்கள் நன்மை அடையும் விதம் ஏழு தலங்களில் நவகிரக நூதன தீப தண்டங்களை ஸ்தாபித்துள்ளார். இந்தத் தலங்களை ஏழு நிலைகள் என்கிறார்கள். ஒவ்வோரு நிலையிலும் (தலத்திலும்) ஆண்டுக்கு இரண்டு அமாவாசை தினங்களில் ஜோதி வழிபாடும், அன்னதானமும் நடைபெறுகின்றன.

ஏதேனும் ஒரு மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வரும் நிலை யில், இரண்டாவது அமாவாசை தினத்தில் ஏழாவது தலத்தில் ஜோதி வழிபாடு நடைபெறும் விதம் வழிகாட்டியுள்ளார். அந்த ஏழு இடங்களின் மகத்துவத்தையும் நாம் அறிவது அவசியம்.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

1. அருள் அன்பு மலை:

முதல் ஜோதி மண்டபம் நெல்லையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ள மூலைக்கரைப் பட்டியில் உள்ளது. வல்லநாடு சுவாமிகள் திருவண்ணாமலைக்குச் சென்று வந்தபோது, அங்கு பெற்ற ஆகம சக்தி மூலம், குன்னத்தூர் பொத்தையில் ஜோதி வைக்க வேண்டும் என்று தீர்மானித்தாராம். ஆனால் அந்த இடம் மத்திய தொல்லியல்துறை வசம் இருந்ததால், உரிய அனுமதி கிடைக்கவில்லை.

இந்த நிலையில் மூலைக்கரைப்பட்டியைச் சேர்ந்த கே.ரா.முத்துசாமி ரெட்டியார் என்ற அன்பர், அமாவாசை ஜோதி வழிபாட்டின் முதல் நிலையை மூலைக்கரைப்பட்டியில் வைக்க வேண்டும் என்று சுவாமியிடம் விண்ணப்பித்தார். அதன்படி அங்கேயே ஜோதி மண்டபம் அமைந்தது. இந்த இடம் மலைப்புறம் இல்லை என்றாலும் பெயரளவில் அருள் அன்பு மலை என்றே சிறப்பிக்கப்படுகிறது.

இங்கு வருடம்தோறும் இரண்டுமுறை ஆடி மற்றும் தை மாதத்தில் அமாவாசை ஜோதி வழிபாடு நடைபெறுகிறது. ஒருமுறை இங்கே 1008 ஜோதிகள் ஏற்றும் முயற்சியில் பக்தர்கள் ஈடுபட, பலத்த காற்று வீசியதாம். பக்தர்கள் அனைவரும் சுவாமியை தியானிக்க காற்று நின்று, தீபங்கள் சுடர்விட்டனவாம். இந்த இடத்துக்கு வந்து சுவாமியை தியானித்து வழிபட்டால் இயற்கைச் சீற்றங்கள் மற்றும் ஆபத்துகளிலிருந்து தப்பலாம் என்பது நம்பிக்கை.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

2. அருள் ஆனந்த மலை: சுவாமியின் அணுக்கரான ராமையா ஸ்தபதி என்ற அன்பர் கேட்டுக்கொண்டபடி, செங்கோட்டை ராமலிங்க பொத்தையில் அமைந்துள்ளது, இரண்டாவது ஜோதித் தூண். தென்காசி மாவட்டம், செங்கோட்டை ரயில் நிலையத்துக்கு வடபுறம் உள்ள இம்மலை மிகவும் உயரமானது. ஜோதிக் கொப்பறையை லாரி மூலம் மேலே ஏற்ற இயலாது என்றே அனைவரும் நினைத்தனர்.

ஆனால் லாரி டிரைவர் சுவாமியை தன் அருகில் அமரும்படி கேட்டுக் கொண்டார். சுவாமிகளும் டிரைவர் அருகில் அமர்ந்துகொள்ள எவ்வித சிரமமுமின்றி ஜோதி ஸ்தம்பம் மலைக்குமேல் கொண்டு சேர்க்கப்பட்டது. ஜோதி ஸ்தம்பம் 7 அடுக்குகள் கொண்டது. ஒவ்வொன்றையும் மருந்து சாத்தி பிணைத்து வைத்திருப்பார் சுவாமி. ஜோதியின் ஒருபுறம் கன்றுக்குப் பால் கொடுக்கும் பசுவும் மற்றொரு பகுதியில் யானையின் உருவமும் செதுக்கப்பட்டிருக்கும்.

இங்கே ஆவணி மற்று மாசி அமாவாசைகளில் ஜோதி வழிபாடு நடைபெறும். தற்காலத்தில் மாதம்தோறும் பக்தர்கள் சென்று தீபம் ஏற்றி வழிபட்டு வருகிறார்கள். மேலே முருகன் பாதங்களுக்கும் ஜோதி ஸ்தம்பத்துக்கும் பூஜை செய்து வழிபடுவர். இங்கு வந்து சென்றால் அரசு வேலை கிடைக்கும்; தீராத பிரச்னைகளும் தீரும். இங்கிருந்தபடி எதிரில் உள்ள பண்பொழில் முருகன் கோயிலை தரிசிக்கலாம்.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

3. அருள் இன்ப மலை: தென்காசி மாவட்டம் புளியங்குடிக்குத் தெற்கில் சுமார் 5 கி.மீ. தொலைவில் உள்ளது புன்னையாபுரம். இந்தப் பகுதியில் மேற்குத் தொடர்ச்சி மலையின் அடுக்குகளில் ஒன்றான முந்தல் மலையில் அமைந்திருக்கிறது 3-வது ஜோதி ஸ்தம்பம். தொண்டர் குலம் அடியார்கள் இதை அருள் இன்பமலை என்கிறார்கள். சுற்றுவட்டாரத்தில் உள்ள அனைவரும் வணங்கும்விதம் இந்த ஸ்தம்பத்தை ஸ்தாபித்தாராம் சுவாமி.

இங்கே புரட்டாசி மற்றும் பங்குனி அமாவாசை நாட்களில் ஜோதி வழிபாடு நடைபெறும். அமாவாசைக்கு ஒரு வாரத்துக்கு முன்பாகவே... புளியங்குடி மற்றும் அதைச் சுற்றியுள்ள ஊர்களில் வசிக்கும் தொண்டர் குலத்தினர் ஒன்றுகூடுகிறார்கள். பூஜை - அன்னதானத்துக்குத் தேவையான பொருள்களை நன்கொடையாக சேகரிக்கிறார்கள்.

அமாவாசைக்கு முதல்நாள் வேன் அல்லது மாட்டு வண்டியில் பொருள்களை ஏற்றிக்கொண்டு மலையடிவாரத்துக்குச் சென்று பணிகளைத் தொடங்குவார்கள். மேலே செல்லும் பாதை சீர்செய்யப் படும். கற்பக நாச்சியார் அம்மன் கோயிலிலிருந்து மலை முகட்டில் அமைக்கப்பட்டிருக்கும் தீப ஸ்தம்பம் வரையிலும் வழிநெடுக சுண்ணாம்புக் கரைசல் கொண்டு அடையாளம் இடுவார்கள்.

இரவு நேரங்களில் பக்தர்களுக்கு இந்த அடையாளங்கள் உதவியாக இருக்கும். பக்தர்கள் சேர்ந்து செல்வது சிறப்பு. இந்த இடத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால் இதய நோய் குணமாகும் என்கிறார்கள்.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

4. குப்பக்குறிச்சி ஜோதி அருள் ஈன்ற மலை:

நெல்லையிலிருந்து சுமார் 16 கி.மீ. தொலைவில் உள்ளது குப்பக் குறிச்சி. இங்கே தாமிரபரணியில் சிற்றாறு சங்கமாகும் இடத்தில் அமைந்துள்ளது ஜோதி ஸ்தம்பம். புரட்டாசி - பங்குனி அமாவாசை நாட்களில் இங்கு ஜோதி ஏற்றப்படுகிறது. மக்கள் எளிதில் தரிசிக்கும்படி இதை ஸ்தாபித்துள்ளார் வல்லநாட்டு சாது சிதம்பர சுவாமிகள். வயதானவர்களும் மலை ஏற இயலாத நிலையில் உள்ளவர்களும் இந்தத் தலத்துக்கு (நிலைக்கு) வந்து ஜோதியை தரிசித்து பேரருள் பெறலாம்.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

5. அருள் நீ உண்மை மலை:

ழநியிலிருந்து மேற்கே சுமார் 22 கி.மீ. தொலைவில் உள்ளது ஐவர் மலை. ஐந்தாவது ஜோதி அமைந்துள்ள இத்தலத்தை அருள் நீ உண்மை மலை என்கிறார்கள் பக்தர்கள். பஞ்சபாண்டவர்கள் இங்கு தங்கியதால் ஐவர் மலை எனப் பெயர்பெற்றது. தென்பகுதியில் இருந்து பார்த்தால் யானை படுத்து இருப்பது போல தோன்றும்.

வள்ளலார் சுவாமிகள் விளக்கும் சூரியக் கலைகளைக் குறிக்கும் விதமான 64 தாமரை இதழ் வடிவங்கள் மற்றும் பஞ்சபூதங்களைக் குறிக்கும் பஞ்சவரிகளுடன் கூடிய ஜோதி ஸ்தம்பம் இங்குள்ளது. இங்கிருந்து பழநி முருகன் கோயிலை தரிசிக்கலாம். பழநி முருகனுக்கு இந்த ஜோதி ஸ்தம்பம் என்பது வல்லநாடு சுவாமிகளின் திருவாக்காம். இங்கே வைகாசி, ஐப்பசி அமாவாசையில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் நடைபெறும். தற்போது ஜெயபால் என்ற அன்பர் அமாவாசைதோறும் ஜோதி ஏற்றி பிரசாதம் வழங்கி வருகிறார். இந்த வழிபாட்டில் கலந்துகொண்டு, மலைக்கு மேல் உள்ள தீர்த்தத்தை அருந்தினால் பிணிகள் தீரும் என்பது நம்பிக்கை.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

6. காடுவெட்டி அருள் ஊற்று மலை:

திருநெல்வேலி மாவட்டம் அழகியபாண்டியபுரத்திலிருந்து சுமார் 8 கி.மீ. தொலைவில், உக்கிரன்கோட்டை அருகே உள்ள காடுவெட்டி கிராமத்தில் 6-வது ஜோதி ஸ்தம்பம் உள்ளது. இங்கே ஆனி மற்றும் மார்கழியில் அமாவாசை ஜோதி வழிபாடு விசேஷம். இந்த இரண்டு மாதங்களில் நடைபெறும் அமாவாசை ஜோதி வழிபாடுகளில் சுவாமிகளுக்குப் பெரும் விருப்பமும் மகிழ்ச்சியும் உண்டு. காரணம்... சுவாமியின் அன்னை உலகம்மையின் குருபூஜை ஆனி - மகத்தில் நிகழும். தகப்பனார் சண்முக சாதுவின் குருபூஜை மார்கழி அவிட்டம். வல்லநாடு சித்தர் பீடத்தில் இந்த வைபவங்கள் சிறப்புற நிகழும்!

காடுவெட்டி கிராமத்தில் ஜோதி ஸ்தம்பம் அமைப்பதற்கான இடங்களைப் பார்வையிட்டாராம் சுவாமிகள். அப்போது அவர் விநாயகர் கோயில் அருகில் வந்து, மேற்குநோக்கி நின்று சிறிது நேரம் வானத்தையே பார்த்துக்கொண்டிருந்தாராம்.

அப்போது 12 வயது சிறுமி ஒருத்தி நிறைகுடத்தைக் கொண்டு வந்து அங்கே இறக்கி வைத்தாளாம். உடன், `அம்மனே அருளிவிட்டாள்... இதுவே சரியான இடம்’ என்று தீர்மானித்தாராம் சுவாமிகள். 20 அடி உயரத்தில் சுமார் 10 டன் எடையுள்ள தீபஸ்தம்பம் நடப்பட்டது. நியாயமான காரியங்கள் நிறைவேறுவதில் தடங்கல்கள் ஏற்படின், இங்கு வந்து வழிபட்டால் தடைகள் நீங்கி காரியம் விரைவில் நடந்தேறுமாம்.

ஏற்றங்கள் அருளும் 
7 தீபத் தூண்கள்!

7. குன்னத்தூர் அருள் எல்லை மலை:

இரண்டு அமாவாசை தினங்கள் ஒரு தலத்துக்கு என்று வகுத்து, ஆறு ஜோதி ஸ்தம்ப தலங்களில் ஜோதி வழிபாடும் அன்னதானமும் நடைபெற வழிகாட்டிய சுவாமிகள், வழிபாடு நிறைவு பெற 7-வதாக ஒரு ஸ்தலம் அவசியம் என்று கருதினார். இப்படியான வழிபாடும் தரிசனமும் மனித உடம்பிலுள்ள குண்டலினி சக்தியை ஏழாவது நிலையாகிய சிரசில் நிலைபெறச் செய்வதற்கு ஒப்பாகும்.

அதன்படி குன்னத்தூரில் அமைந்தது 7-வது ஜோதி ஸ்தம்பம். இத்தலத்தை அருள் எல்லை மலை என சுவாமிகளின் பக்தர்கள் போற்றுகிறார்கள். நெல்லை டவுன் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் உள்ளது குன்னத்தூர்.

எந்த மாதத்தில் இரண்டு அமாவாசைகள் வருகின்றனவோ, அதில் இரண்டாவது அமாவாசை இந்தத் தலத்துக்கு உரியது. அன்று இங்கே ஜோதி வழிபாடும் அன்னதானமும் நடைபெறும். தற்போது ஈஸ்வரன் என்ற அன்பரின் முயற்சியில் பெளர்ணமி பூஜையும் கிரிவலமும் நடைபெறுகின்றன. மேலும் பரணி, கார்த்திகை, ரோகிணி நட்சத்திர நாட்களிலும் குன்னத்தூர் பொத்தை தலத்தில் வழிபடலாம்.