Published:Updated:

காளையார்கோவில் பற்றி அறிந்துகொள்ளவேண்டிய அற்புதத் தகவல்கள்! #Video

காளையார்கோவில்
காளையார்கோவில்

காளையார்கோவில் கோபுரம் கட்டி முடித்தவுடன், கோயிலுக்கு எழிலார்ந்த தேர் ஒன்றையும் செய்ய வேண்டும் என்று மருது சகோதரர்கள் விரும்பினர். விருப்பம் நிறைவேறி, தேரும் செய்தார்கள்.

* காளையார்கோவில்! சிவகங்கையிலிருந்து சுமார் 20 கி.மீ.; தேவகோட்டையிலிருந்து சுமார் 30 கி.மீ.; மதுரையிலிருந்து சுமார் 66 கி.மீ. தொலைவில் உள்ள ஊர். இதன் இலக்கியப் பெயர் 'திருக்கானப்பேர்' என்பதாகும்.

* புறநானூற்றுக் காலத்திலேயே, 'கானப் பேரெயில்' என்று அழைக்கப்பட்ட இந்தத் தலம், சம்பந்தராலும் சுந்தரராலும் பாடப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல், அருணகிரிநாதரின் திருப்புகழ், வள்ளலாரின் அருட்பா, பதினோராம் திருமுறையில் கபில தேவர் மற்றும் பரணத்தேவர் பாடல்கள், திருவிளையாடல் புராணம் ஆகியவற்றிலும் இந்தத் தலம் பற்றிய குறிப்புகள் உள்ளன.

காளையார்கோவில் சிவன்
காளையார்கோவில் சிவன்

சங்க காலத்தில், இந்த ஊரைத் தலை நகராகக் கொண்டு ஆண்டவர் வேங்கை மார்பன் என்னும் அரசர். அப்போது பாண்டிய மன்னராக இருந்த உக்கிரப் பெரு வழுதி, இவரைப் போரில் வென்று கானப்பேரைக் கைப்பற்றினார். இதனால், 'கானப்பேர் எயில் கடந்த உக்கிரப் பெருவழுதி' என்னும் பட்டமும் பெற்றார். ஐயூர் மூலங்கிழாரின் புறநானூற்றுப் பாடல் இந்தப் பெருமையைப் பற்றிக் கூறும். உக்கிரப் பெருவழுதி, கடைச் சங்க காலத்தில் வாழ்ந்தவர்; சங்கப் புலவர்களை ஆதரித்தவர்; அகநானூறு நூலைத் தொகுப்பித்தவர்; ஒளவையாரால் பாடப் பெற்றவர்; இவர் சபையில்தான் திருக்குறள் அரங்கேறியதாகவும் கருத்துண்டு. கானப்பேரின் மதில் பெருமைக்குரியது என்பதாலேயே, 'கானப்பேர் எயில்' என்னும் பெயர் வந்திருக்க வேண்டும்.

18-ம் நூற்றாண்டில் அதாவது 1780 முதல் 1801 வரை, சிவகங்கையின் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றிருந்த மருது பெருமக்கள், மிகச் சிறந்த ஆன்மிகவாதிகள். இவர்கள் பல்வேறு திருக்கோயில்களுக்குத் திருப்பணிகள் செய்தனர். காளையார்கோவிலின் கோபுரத்தை, மதுரை மீனாட்சி அம்மன் ஆலய கோபுரம் போல் கட்ட வேண்டும் என்று விரும்பித் திருப்பணி செய்தனர்.

காளையார்கோவில் கோபுரத்திலிருந்து பார்த்தால், சுமார் 66 கி.மீ. தொலைவிலுள்ள மதுரை கோபுரம் தெரியும். அசப்பில் மதுரை மீனாட்சியம்மன் கோபுரம் போன்றே இருக்கும் இந்தக் கோபுரம் மிக உயரமாக எழுப்பப்பட்டுள்ளது.

மருது சகோதரர்கள்
மருது சகோதரர்கள்

காளையார்கோவில் கோபுரம் கட்டி முடித்தவுடன், கோயிலுக்கு எழிலார்ந்த தேர் ஒன்றையும் செய்ய வேண்டும் என்று மருது சகோதரர்கள் விரும்பினர். விருப்பம் நிறைவேறி, தேரும் செய்தார்கள். அழகான தேர். தேரோட்டத்துக்கான எல்லா ஏற்பாடுகளும் நடைபெற்றன. தேரோட்டத் திருநாளும் வந்தது.

காளையார்கோவிலில் நடைபெற்ற அந்தத் தேரோட்டமும் அதன்பின்னான நிகழ்வுகளும் வரலாற்றில் பொறிக்கப்பட்டுள்ளன. அது மருதுசகோதரர்களின் வாக்குத் தவறாமையையும் கலைக்கும் ஆன்மிகத்துக்கும் தலைவணங்கிய தன்மையையும் விளக்கும்.

மேலும் நம் ஆன்மிக தர்மம் உயிரைவிட உயர்ந்தது என்பதை விளக்கும் நிகழ்வுகளும் மருது சகோதரர்கள் வாழ்வில் நிகழ்ந்தன. இதுகுறித்து விரிவாக அறிந்துகொள்ள கீழே உள்ள வீடியோவைப் பாருங்கள். மருதுசகோதரர்களின் வீரத்தையும் தியாகத்தையும் அறிந்துகொள்வீர்கள்

அடுத்த கட்டுரைக்கு