Published:Updated:

நல்லது நடந்தது! - ‘வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்!’

காக்கமொழி கார்கோடகபுரீஸ்வரர் கோயில்

பிரீமியம் ஸ்டோரி

பாரத நாடு ஆன்மிக பூமி. அதற்கு எடுத்துக்காட்டு, ஊர்தோறும் அமைந்திருக்கும் அற்புதமான ஆலயங்கள். நம் முன்னோர்கள் கோயில்கள் அமைத்து ஆன்மிகம், கலை, கல்வி ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர்.

ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்தன. ஆலயங்களைப் புனரமைப்பதன் மூலம் புண்ணிய பலன்களையும் தீராத பாபங் களிலிருந்து விமோசனமும் பெறலாம்.என்கின்றன சாஸ்திரங்கள். அதுமட்டுமா? நம் பாரம்பர்யத்தையும் மீட்டெடுக்கலாம்

கார்கோடகபுரீஸ்வரர்
கார்கோடகபுரீஸ்வரர்இந்த அடிப்படையில் `ஆலயம் தேடுவோம்' பகுதி மூலம் வாசகர்கள் கவனத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, அவர்களின் பங்களிப் போடும், ஆன்மிக அமைப்புகள் - ஆன்றோர் களின் ஒத்துழைப்போடும் திருப்பணி கண்ட ஆலயங்கள் நூற்றுக்கும் மேல்!

அந்த வரிசையில் அண்மையில் இணைந் துள்ளது காக்கமொழி அருள்மிகு கற்பகாம்பாள் சமேத கார்கோடகபுரீஸ்வரர் கோயில். இந்த ஆலயம் குறித்து 16.7.19 தேதியிட்ட சக்திவிகடன் இதழில் எழுதியிருந்தோம்.

கார்கோடகபுரீஸ்வரர் கோயில்
கார்கோடகபுரீஸ்வரர் கோயில்

`இந்த ஆலயத்தில் கும்பாபிஷே கம் நிகழ்ந்து 1,100 ஆண்டுகள் ஆகி விட்டன. சுந்தரச் சோழன் காலத்தில் வாழ்ந்து, மகிமைகள் பல புரிந்த குண்டு சித்தர்,இங்கு வந்து முன்ஜன்ம வினைகளைத் தீர்த்துக் கொண்டார். அதனால் சுந்தரச் சோழனிடம் சொல்லி இந்த ஆலயத்தைப் புனரமைத்தார். இந்த ஆலயத்தைப் பற்றிய மேலும் பல குறிப்புகள் பிரமாண்ட புராணம், நைடதம் போன்ற ஞானநூல்களில் காணப்படுகின்றன.

ஆதிசேஷனும் கார்கோடகனும் வணங்கிய தலம் இது என்பதால் நாக தோஷம் நீக்கும் ஆலய மாகவும், ராகு-கேது பரிகாரத் தலமாகவும் திகழ்வது. நளனுக்கு அருள் கிடைத்த தலம் என்பதால், சனி தோஷ நிவர்த்தி தலமாகவும் திகழ்கிறது. தேவாதிதேவர்கள் வந்து ஈசனிடம் எப்போதும் வேண்டியவண்ணம் இருக்கும் தலம் இது. அவர்களின் வேண்டுதல்களைத் தொடர்ந்து செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்து அமைந்திருப்பது விசேஷ அம்சம்!

காக்கமொழி கார்கோடகபுரீஸ்வரர் கோயில்
காக்கமொழி கார்கோடகபுரீஸ்வரர் கோயில்

இந்த ஆலயத்தில் நித்ய பிரதோஷம் நடை பெறுகிறது. அதில் கலந்துகொண்டு சிவனாரை யும் நந்திதேவரையும் வழிபடுவதால் நாம் முன் வைக்கும் பிரார்த்தனைகள் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை.

இத்தனை சிறப்புகளை உடையதாக விளங்கி காலவெள்ளத்தில் நிலைத்து நின்ற இந்த ஆலயம் சில நூற்றாண்டுகளாக முறையான பராமரிப்பு இன்றி புனரமைப்பை வேண்டி நிற்கிறது' என்று இந்த ஆலயம் குறித்து எழுதியிருந்தோம்.

அந்தக் கட்டுரையைப் படித்துவிட்டு, ஏராளமான வாசகர்களும் நல்லுள்ளம் கொண்ட கொடையாளர்களும் ஆலய நிர்வாகத்தைத் தொடர்புகொண்டு திருப்பணி மேற்கொள்ள உதவ ஆரம்பித்தனர். புனரமைப்புப் பணிகள் வேகம் பிடித்தன. திருப்பணிகள் முடிந்து இந்தக் கோயில் கடந்த ஆண்டே கும்பாபிஷேகம் கண்டிருக்கவேண்டும். ஆனால் கொரோனா பெருந்தொற்று பாதிப்பு காரணமாக சிறிதளவு தாமதம் ஏற்பட்டது. எனினும் தற்போது அந்தப் பணிகள் யாவும் நிறைவடைந்துவிட்டன.

காக்கமொழி கற்பகாம்பிகை
காக்கமொழி கற்பகாம்பிகை

கடந்த 4.2.2021 (தை 22-ம் நாள்) புதன் கிழமை அன்று கோயிலின் மகா கும்பாபிஷேக வைபவம் சீரும் சிறப்புமாக நடந்துமுடிந்தது. ஆலயத்தின் சந்நிதிகள் புதுப்பிக்கப்பட்டு வண்ணமயமாகக் காட்சி தருகின்றன. ஈசனும் அம்மையும் கோலாகலமாய் உற்சவம் கண்டு அருள்பாலிக்கிறார்கள்.

இவையனைத்தும் சக்திவிகடன் வாசகர்களின் பங்களிப்பு இல்லாமல் சாத்தியமில்லை என்று மகிழ்வோடும் நன்றியோடும் தெரிவிக்கின்றனர் ஆலய நிர்வாகிகள். நாமும் இந்தச் சந்தர்ப்பத்தில் வாசகர்களுக்கு மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்.

கும்பாபிஷேகம் கண்ட கோயிலை ஒரு மண்டல காலத்துக்குள் தரிசிப்பது விசேஷம் என்கின்றன ஞானநூல்கள். நீங்களும் ஒருமுறை காக்கமொழி ஈசனை வழிபட்டு வரம்பெற்று வாருங்கள்.

எப்படிச் செல்வது?: காரைக்காலிலிருந்து 5 கி.மீ தொலைவில் (நிரவி- ஊழியபத்து சாலையில்) உள்ளது காக்கமொழி கிராமம். நிரவி, ஊழியபத்து, விழிதியூரில் இருந்து வாகன வசதிகள் உள்ளன.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு