Published:Updated:

`கதிமோட்சம் அருளும் கள்ளழகர்...'- அழகர்கோயிலில் இன்று!

கோயிலுக்குள்ளேயே கள்ளழகர் சித்திரைத் திருவிழா 2020
News
கோயிலுக்குள்ளேயே கள்ளழகர் சித்திரைத் திருவிழா 2020

கள்ளழகருக்கு மதுரையில் நடைபெறுகிற அத்தனை உற்சவங்களும் அழகர்மலையிலேயே இன்றைய தினம் முழுவதும் நடைபெறுகின்றன.

'சாபம்பெற்ற மலையிலேயே சுதபஸுக்கு விமோசனம்' என்பது யாரும் எதிர்பார்த்திடாதவாறு இந்த ஆண்டு அமைந்துவிட்டது. வழக்கமாக, வைகைக்கரையில் வந்து சுதபஸ் முனிவருக்குக் கள்ளழகர் கதிமோட்சம் வழங்குவது காலங்காலமாக நடைபெறும் ஒரு வைபவம்.

இந்தாண்டு திருவிழாவுக்குச் சாதகமற்ற சூழல் நிலவுவதால் அழகர்மலையிலேயே ஒருநாள் உற்சவமாக இந்த வைபவம் நடத்தப்படுகிறது. அதிலும் குறிப்பாக, துர்வாச முனிவர் சாபமளித்த மலையிலேயே மோட்சமருளும் நிகழ்வும் நடைபெறுகிறது என்பது கவனிக்கத்தக்கது.

கோயிலுக்குள்ளேயே கள்ளழகர் சித்திரைத் திருவிழா 2020
கோயிலுக்குள்ளேயே கள்ளழகர் சித்திரைத் திருவிழா 2020

'பலபல நாழஞ்சொல்லிப் பழித்தசிசு பாலன் தன்னை

அலவலை மைதவிர்த்த அழகன்அலங் காரன்

மலைகுலமலை கோலமலை குளிர்மாமலை கொற்றமலை

நிலமலை நீண்டமலை திருமாலிருஞ் சோலையதே'

என்று பெரியாழ்வாரால் மங்களாசாசனம் செய்யப்பெற்ற மகிமை பொருந்திய அழகர்மலை. மலை அடிவாரத்தில் கள்ளழகர் உற்சவமூர்த்தியாகவும் சுந்தரராஜபெருமாள் மூலமூர்த்தியாகவும் வீற்றிருக்கின்றனர்.

விகடன் Daily

Quiz

சேலஞ்ச்!

ஈஸியா பதில் சொல்லுங்க...

ரூ.1000 பரிசு வெல்லுங்க...

Exclusive on APP only
Start Quiz

மலைமீது நூபுரகங்கை தீர்த்தம் அமைந்திருக்கிறது. திருமால் வாமன அவதாரத்தில் விஸ்வரூபமெடுத்தபோது அவரின் திருவடிகளுக்குப் பிரம்மன் பாதபூஜை செய்தார். அதில் ஒரு துளி தீர்த்தம் மாலவன் காற்சிலம்பில் பட்டுத் தெறித்து பூவுலகில் வீழ்ந்தது. அதுவே சிலம்பாறாக இம்மலையில் பிரவாகமெடுத்தது என்கிறது புராணம். நூபுரம் என்பது அணிந்திருந்த ஆபரணம் எனப் பொருள்.

அழகர்கோயில்
அழகர்கோயில்

இத்தகைய சிறப்புமிகுந்த நூபுரகங்கையில் சுதபஸ் முனிவர் வந்து நீராடினார். பின்னர் மலையில் பெருமாளை நோக்கித் தவமிருந்தார். அப்போது அங்கே துர்வாச முனிவர் வந்தார். தவத்தில் மூழ்கியிருந்த சுதபஸ் முனிவர் துர்வாசரின் வருகையைக் கவனிக்கவில்லை. தன்னை முறையாக மதித்து வரவேற்கவில்லை எனக் கோபம் கொண்ட துர்வாசர், சுதபஸ் முனிவரை நோக்கி 'மண்டூகோ பவ' என சாபம் தந்தார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

சட்டென, சுதபஸ் முனிவர் தவளையாக மாறினார். தனக்கு சாப விமோசனம் தர சுதபஸ் வேண்ட, வைகைக் கரையை அடைந்து அங்கேயே தவமிருக்கச் சொன்னார். சித்ரா பௌர்ணமிக்கு அடுத்தநாள் கிருஷ்ணபட்ச பிரதமையில், இங்குள்ள அழகர் வைகை ஆற்றங்கரைக்கு வந்து விமோசனம் அளிப்பார் எனப் பரிகாரம் கூறினார், துர்வாசர்.

கள்ளழகர் வைகை
கள்ளழகர் வைகை

இந்தப் புராண நிகழ்வை அடியொற்றியே ஒவ்வோராண்டும் சுதபஸ் முனிவருக்கு சாப விமோசனம் தரும் முகமாக அழகர்மலையிலிருந்து மதுரைக்குக் கள்ளழகராக எழுந்தருளுகிறார் சுந்தரராஜபெருமாள். சோழவந்தான் அருகே தேனூர் வைகையாற்றில் நடந்துவந்த இந்த அழகர் உற்சவத்தை மதுரை நகருக்குள் தற்போதைய ஆழ்வார்புரம் பகுதியில் நடத்தச் செய்தவர் மதுரையை ஆண்ட திருமலை நாயக்கர் என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து.

மேலும், மீனாட்சியம்மன் கோயிலில் வெவ்வேறு மாதங்களில் நடைபெற்று வந்த பட்டாபிஷேகம், திருக்கல்யாணம், தேரோட்டம் ஆகியவற்றை சித்திரைத் திருவிழாவாக ஒருங்கிணைத்ததும் திருமலை நாயக்கரே என்கின்றனர் ஆய்வாளர்கள். இதுவே காலப்போக்கில் மீனாட்சித் திருக்கல்யாணத்தைக் காண்பதற்கு கள்ளழகர் வந்து, ஏமாற்றத்துடன் கோபித்துக்கொண்டு செல்வதாக கிராமங்களில் கதை வழக்குகள் உண்டாகின.

எளிமையாக நடந்த மீனாட்சி கல்யாணம் 2020
எளிமையாக நடந்த மீனாட்சி கல்யாணம் 2020

தற்போது, உலகம் முழுவதும் பரவிய கொரோனா வைரஸ் அச்சம் காரணமாக நிலவும் ஊரடங்குச் சூழலால் இந்த ஆண்டு சித்திரைத்திருவிழா முழுமையாக ரத்து செய்யப்பட்டது. அதற்கு மாற்று ஏற்பாடாக, கள்ளழகருக்கு மதுரையில் நடைபெறுகிற அத்தனை உற்சவங்களும் அழகர்மலையிலேயே இன்றைய தினம் முழுவதும் நடைபெறுகின்றன.

வழக்கப்படி இன்றைக்குத் தேனூர் மண்டபத்தில் நடைபெறவேண்டிய சுதபஸ் முனிவர் சாப விமோசன வைபவம் இன்று மாலை 4.30 மணிமுதல் 5.30 மணிக்குள் அழகர்கோயில் பிராகாரத்தினுள் நடைபெறுகிறது. எந்த ஆண்டும் இல்லாதவாறு இந்த ஆண்டு, சாபம்பெற்ற மலையிலேயே மோட்ச நிகழ்வும் நடக்கிறது. கருட வாகனத்தில் எழுந்தருளும் கள்ளழகர் முன்னிலையில் மோட்ச புராணமும் வாசிக்கப்படுகிறது.

கோயிலுக்குள்ளேயே கள்ளழகர் சித்திரைத் திருவிழா 2020
கோயிலுக்குள்ளேயே கள்ளழகர் சித்திரைத் திருவிழா 2020

இதை நேரலையாக ஒளிபரப்புவதற்கான ஏற்பாட்டைக் கோயில் நிர்வாகம் செய்திருக்கிறது. சித்திரைத் திருவிழா நேரலையைக் காண... அழகர்கோயில் யூடியூப் சேனல் லைவ்.