Published:Updated:

``அத்திவரதர் தரிசனத்தில் போலி அனுமதிச் சீட்டு..!" - மாவட்ட ஆட்சியர் கடும் எச்சரிக்கை

JAYAVEL B

காஞ்சிபுரம் அத்திவரதர் தரிசனத்துக்குப் போலி அனுமதிச்சீட்டுகள் வழங்குவோர் மீது கைது நடவடிக்கை எடுக்கப்படும் என காஞ்சிபுரம் ஆட்சியர் எச்சரிக்கை.

அத்தி வரதர்
அத்தி வரதர்

அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பக்தர்களிடம் போலி அனுமதிச் சீட்டுகள் விற்பனை செய்வது அதிகரித்துள்ளது. போலி அனுமதிச் சீட்டுகள் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் பொன்னையா அறிவித்துள்ளார்.

அத்தி வரதர்
அத்தி வரதர்

காஞ்சிபுரம் அத்திவரதர் வைபவத்துக்கு தினமும் லட்சத்துக்கு மேற்பட்ட பக்தர்கள் தரிசனம் செய்ய வருகிறார்கள். 12-ம் நாளான இன்று காவிப் பட்டாடை உடுத்தி அத்திவரதர் பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார்.

கிழக்கு கோபுரம் வழியாக பொது தரிசனத்துக்கு பக்தர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். சுமார் ஐந்து மணி நேரம் கழித்தே அவர்கள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடிகிறது. மேற்கு கோபுரம் வழியாக வி.ஐ.பி. `டோனர் பாஸ்' (நன்கொடையாளர் சிறப்பு அனுமதிச்சீட்டு) வைத்துள்ளவர்கள் அனுமதிக்கப்படுகிறார்கள். இந்த வழியாகச் சென்றால் ஒரு மணிநேரத்துக்குள் அத்திவரதரை தரிசனம் செய்ய முடியும். இதனால் வி.ஐ.பி தரிசனம் வழியாக சிரமம் இல்லாமல் தரிசனம் செய்ய சிலர் நினைக்கிறார்கள். அவர்களிடம் போலி `டோனர் பாஸ்' விற்பனை செய்யப்படுகிறது.

வரதராஜ பெருமாள்
வரதராஜ பெருமாள்

இன்று சிங்கப்பூரிலிருந்து அத்திவரதரை தரிசிக்க தன் தந்தையுடன் ஒருவர் வந்திருந்தார். அவர்கள் வி.ஐ.பி வாயில் வழியாக டோனர் பாஸைக் காட்டி உள்ளே சென்றனர். அவர்களிடமிருந்த டோனர் பாஸில் உள்ள பார்கோடு ஸ்கேன் செய்யப்பட்டது. அந்த பார்கோடு ஸ்கேன் ஆகவில்லை. அவர்கள் கொண்டுவந்தது போலியான பாஸ் என்று தெரியவந்தது. காவல்துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர்கள் ஏமாற்றப்பட்டுள்ளது தெரியவந்தது. சில நிமிடங்கள் கழித்து அவர்களை காவல்துறையினர் தரிசனம் செய்ய அனுமத்தித்தனர். இதுபோல் கடந்த மூன்று நாள்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்திலிருந்து வந்தவர்களிடம் இருந்து 6 போலி டோனர் பாஸ்கள் சிக்கின.

அத்திவரதரை தரிசனம் செய்ய வரும் வி.ஐ.பி-க்களுக்கு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் மூலம் பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கட்டணமும் செலுத்த வேண்டியது இல்லை. அத்திவரதர் தரிசனத்துக்கு வரும் பிற மாநிலத்தவர்களிடம் டோனர் பாஸ் இருந்தால் உடனடியாக அத்திவரதரை தரிசிக்கலாம் என சிலர் கூறி அவர்களிடம் கலர் ஜெராக்ஸ் போட்ட டோனர் பாஸை 500 ரூபாயிலிருந்து சில ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்கிறார்கள். இவர்கள் வைத்துள்ள பாஸை பார் கோடு ஸ்கேன் செய்யும்போது அது போலி எனத் தெரியவருகிறது.

அத்திவரதர்
அத்திவரதர்

இது குறித்துக் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியர் பொன்னையா, `` சில விஷமிகள், வி.ஐ.பி டோனர் பாஸை கலர் ஜெராக்ஸ் எடுத்து உள்ளே நுழைய முயல்கிறார்கள். பார்கோடு ஸ்கேன் செய்யும்போது அவர்கள் பிடிபடுகிறார்கள். பெரும்பாலும் வெளி மாநிலங்களைச் சேர்ந்தவர்கள்தான் இதுபோல் ஏமாறுகிறார்கள். போலி பாஸ் வைத்திருந்தால் அதில் உள்ள பார்கோடை ஸ்கேன் செய்யாமல் அவர்கள் உள்ளே அனுமதிக்கப்பட மாட்டார்கள். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மட்டுமே வி.ஐ.பி பாஸ் வழங்கப்படுகிறது. இதற்கு எவ்வித கட்டணமும் இல்லை. வெளிநபர்களிடம் பணம் கொடுத்து ஏமாற வேண்டாம். போலி வி.ஐ.பி டோனர் பாஸ் விற்பனை செய்பவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அவர்கள் கைது செய்யப்படுவார்கள்” என எச்சரிக்கை விடுத்துள்ளார்.