சென்னைக்கு அருகே உள்ள காஞ்சிபுரம், ஏழு புண்ணிய நகரங்களுள் ஒன்று. கோயில்களுக்கு மிகவும் புகழ் பெற்ற ஆன்மிக நகரம், இது பல்லவர்கள் மற்றும் சோழர்களின் தலைநகராக இருந்துள்ளது.
இந்நகரை ஆண்ட பல்லவ மன்னர்கள் இங்கு பல சிறப்பான ஆலயங்களை சிவனுக்கும், விஷ்ணுவிற்கு எடுப்பித்துள்ளனர். இவை 1150 ஆண்டுகள் பழமை வாய்ந்ததாகும்.
ஆனால் பலருக்கும் தெரிந்த கோயில்களாக காஞ்சி காமாட்சி அம்மன், ஏகாம்பரநாதர் மற்றும் அத்திவரதர் கோயில்கள் மட்டுமே உள்ளது. இவை தவிர்த்து உள்ள சிறப்பு வாய்ந்த மற்ற கோயில்களை நாம் கண்டுகொள்வதே இல்லை. அதில் சில...
1. பிறவாதீஸ்வரர் கோயில்
காஞ்சி கைலாசநாதர் கோயிலை எடுப்பித்த ராஜசிம்மனால், இந்நகரில் எடுக்கப்பட்ட மற்றோரு ஆலயம் இதுவாகும். அளவில் சிறிய கோயிலாக இருந்தாலும் பல்வேறு அழகிய சிற்பங்களை கொண்ட இக்கோயில் மாமல்லபுர கோயிலை போன்றே பல்வேறு கட்டிட, சிற்ப அழகுறுப்புகளை கொண்ட கோயிலாகும். வாமதேவ முனிவர் பூமியிற் பிறந்து, காஞ்சிக்கு வந்து சிவலிங்கம் பிரதிட்டை செய்து வழிபட்டு பிறவி நீங்கப் பெற்றார் என்று காஞ்சிபுராணம் கூறுகிறது.

2. இறவாதீசுவரர் கோயில்
ராஜசிம்மனால் கட்டப்பட்ட மற்றோரு ஆலயம் இதுவாகும். இதிலும் துர்கை, கங்காதரர், காலஸம்ஹரா மூர்த்தி என சிவனின் பல்வேறு வடிவங்கள் சிற்பங்களாக செதுக்கப்பட்டுள்ளன. மார்கண்டேயர், சுவேதன் மற்றும் சாலங்காயன முனிவரின் பேரன் முதலியோர்கள் பிரமனின் அறிவுரைப்படி காஞ்சி நகரத்திற்கு வந்து சிவபெருமானை வழிபட்டு இறப்பு நிலையைக் கடந்துள்ளனர் என்பது தல வரலாறாக உள்ளது.
3.ஐராவதேசர் கோயில்
தேவர்கள் திருப்பாற்கடலைக் கடைந்த காலத்தில் அக்கடலில் தோன்றிய வெள்ளை யானையாகிய ஐராவதம் இந்திரனைத் தாங்குதற்குப் பூஜித்த தலமாக இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது. இக்கோயில் நகரின் முக்கிய வீதியில் அமைந்திருந்தாலும் மக்களால் பெரிதும் கவனிக்கப்படாத உள்ளது. இங்கும் சக்கரதான மூர்த்தி, ஊர்த்துவ தாண்டவ மூர்த்தி, திரிபுராந்தகர் என அழகிய புடைப்பு சிற்பங்கள் மணற்கல்லால் செதுக்கப்பட்டுள்ளது.
4.மதங்கீசுவரர் கோயில்
மதங்க முனிவர் இப்பெருமானை வழிபட்டு ஐம்புலன்களையும் அடக்கியாளும் ஆற்றலைப் பெற்றார் என்று இத்தல வரலாற்றில் சொல்லப்படுகிறது. மணற்கல்லால் கட்டப்பட்ட இக்கோயில் முழுவதும் சிற்ப வேலைப்பாடுகளுடன் எழிலார்ந்த முறையில் கட்டப்பட்டுள்ளது. கைலாய மலையை அசைக்கும் ராவணனின் புடைப்பு சிற்பம் மிக சிறப்பாக இங்கு செதுக்கப்பட்டுள்ளது.
5. முத்தீசுவரர் கோயில்
பல்லவ மன்னனின் அரசியால் எடுப்பிக்கப்பட்ட இவ்வாலயம் வடிவத்தில் பார்ப்பதற்கு மதங்கீசுவரர் கோயிலை போன்றே ஒத்திருக்கும். இங்கு தளிச்சேரியை பற்றி குறிப்பிடும் கல்வெட்டு மிக சிறப்பான ஒன்றாகும். இதுவும் நகரின் முக்கிய பகுதியில் அமைந்துள்ளது.

6.சுரகரேசுவரர் கோயில்
உரநோய், உடல்வெப்பம் முதலிய நோய்கள் நீங்கவல்ல சிறப்பு தலமாக உள்ளது.தமிழ்நாட்டிலுள்ள கோயில்களிலே மிக தனித்துவமான வடிவமைப்பை கொண்டுள்ள கோயில் இது ஒன்றேயாகும். இங்குள்ள சாளரங்கள் மிக அழகாய் இருக்கும்.சிற்ப வேலைப்பாடுகள் மிகுந்த கோயில் இதுவாகும்.

7.சொக்கீசுவரர் கோயில் (கௌசிகீசம்)
சோழ மன்னர் காலத்திய இக்கோயில் காஞ்சி காமாட்சி அம்மன் ஆலய அருகே உள்ளது. பார்வதிதேவியின் திருமேனியிலிருந்து உதித்த கௌசிகி என்பவள் அன்பினால் வழிபட்ட தலம். இக்கோயிலில் தலவரலாற்றுச் குறுஞ் சிற்பங்கள் பெருமளவில் உள்ளன. மேலும் இங்குள்ள கரிகால சோழப் பிள்ளையாருக்கு பல்வேறு நிவந்தங்கள் அளிக்கப்பட்டுள்ளது.
8. மத்தவிலாச பிரஹசன சிற்பம்
பல்லவ மன்னர்களில் மிக புகழ் பெற்றவரும், கலைகளிலே சிறந்து விளங்கியவருமான மகேந்திர வர்மனால் இயற்றப் பெற்ற நையாண்டி நாடகம் மத்தவிலாச பிரஹசனம் ஆகும். இந்த நாடகத்தில் வரும் காட்சிகள் மணற் கல்லால் இங்குள்ள ஒரு கோயில் சுற்று சுவரில் பதிக்கப்பட்டுள்ளது. மிக அழகாய் தத்ரூபமாய் இக்காட்சிகளை வடித்திருப்பர்.
இத்தகைய பல்வேறு சிறப்புகளை கொண்ட காஞ்சி ஆலயங்களை, பல்வேறு இடங்களை சேர்ந்த பொதுமக்களும் வரலாற்று ஆர்வலர்களும் காணும் விதமாக ஜனவரி மாதம் 29-ம் தேதியன்று காலை எட்டு மணி முதல் மாலை ஆறு மணி வரை மரபு நடையாக செல்லவுள்ளனர். இந்த நிகழ்வை சாஸ்த்ரா மற்றும் சித்திரம் பேசுதடா குழுவினர் இணைந்து நடத்தவுள்ளனர். தேசமெங்கும் பயணித்து தமிழர்களின் குறிப்பாக சோழர்களின் பெருமைகளை இன்றைய இளைஞர்களுக்கு எடுத்து சொல்லும் இந்த குழுவினரின் முயற்சிக்கு பாராட்டுக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.