Published:Updated:

கந்த சஷ்டி ஆரம்பம்... புகழ்பெற்ற மயிலம் முருகன் கோயிலின் சிறப்புகள் என்ன?

மயிலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டுப் பழைமை வாய்ந்த ‘சுப்பிரமணிய சுவாமிகள்’ ஆலயத்தில் ஆண்டுதோறும் 6 நாள்கள் கந்த சஷ்டித் திருவிழா சிறப்பாக நடைபெறும்.

முருகப்பெருமானுக்குக் கொண்டாடப்படும் புகழ்பெற்ற திருவிழாக்களில் கந்த சஷ்டி விழாவும் ஒன்று. ஐப்பசி மாதம் கொண்டாப்படும் தீபாவளிப் பண்டிகையைத் தொடர்ந்து, கந்த சஷ்டி விழாவை பக்த கோடிகள் பெரிதும் எதிர்நோக்குவர். கந்த சஷ்டியின் இறுதி நாளான 6 வது நாள் விழாவில் சூரபத்மனின் வதம் நடைபெறுகிறது. முருகப்பெருமானின் அறுபடை வீடுகளில் ஒன்றான திருச்செந்தூரில் உள்ள கடற்கரையில் இந்த வதம் நடைபெற்றதினால், ஆண்டு தோறும் இந்த விழா அங்கு வெகு விமர்சையாகக் கொண்டாடப்படும். பக்த கோடிகள் பலபகுதிகளில் இருந்தும் வந்து இந்த விழாவைக் கண்டுகளித்து ஆறுபடையப்பனின் அருளைப் பெற்றுச்செல்வர்.

அத்தகு சிறப்புகள் வாய்ந்த இத்திருவிழா, மயிலத்தில் உள்ள ஆயிரம் ஆண்டு பழைமை வாய்ந்த ‘சுப்பிரமணிய சுவாமிகள்’ ஆலயத்திலும் ஆண்டுதோறும் 6 நாள்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அந்த வகையில் இந்த வருடமும் (04.11.2021 – 09.11.2021) ஆகிய தேதிகளில் இனிதே நடைபெற உள்ளது.
மயிலம் முருகன் கோயில்
மயிலம் முருகன் கோயில்

விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள சிறப்புவாய்ந்த ஆலயங்களில் ஒன்று ‘மயிலம் சுப்பிரமணிய சுவாமிகள் திருக்கோயில்’. திண்டிவனம் அடுத்த கூட்டேரிப்பட்டில் இருந்து சுமார் 5 கி.மீ தொலைவில் உள்ளது இந்த அழகிய கோயில். 'மயிலம் பொம்மபுரி ஆதீனம், ஸ்ரீமத் சிவஞான பாலய சுவாமிகள் திருமடம்' மூலமாக நிர்வகிக்கப்பட்டு வருகிறது.

மேல்மலையனூர்: அமாவாசை ஊஞ்சல் உற்சவம் ரத்து... வழக்கமான தரிசனத்திற்கு மட்டுமே அனுமதி!

சூரபத்மன், முருகனுக்கு எதிராகப் பல தந்திரங்களைப் பயன்படுத்தியும் போரில் தோற்றான். தோல்வியுற்ற சூரபத்மன், தன் தவற்றினை உணர்ந்து “முருகப்பெருமானே உங்களுடைய வாகனமாக என்னை ஏற்றுக் கொள்ளுங்கள்” எனக் கண்ணீர் மல்க வேண்டினான். அவனுடைய வேண்டுதலை ஏற்றுக்கொண்ட முருகப்பெருமான், "நீ மயில் வடிவத்தை எடுக்க உறுதியுடன் தவத்தை மேற்கொள்வாயாக" எனக் கூறி மறைந்தாராம்.

அதன்படி, இங்கு சூரபத்மனும் தவம்புரிந்து மயில் வடிவம் பெறுகிறான். அப்போது முருகப்பெருமான் காட்சி அளிக்கிறார். அவரிடம், “இறைவா நான் மயில் வடிவமாக இருந்து தவம் புரிந்த இந்த மலைக்கு 'மயூராசலம்' எனப் பெயர் வழங்க வேண்டும். அதோடு தாங்களும், எந்நாளும் இங்கு வீற்றிருந்து அன்பர்களுக்கு அருள்புரிய வேண்டும்” எனும் கோரிக்கைகளை வைத்தான் சூரபத்மன்.

கந்த சஷ்டியில் சிங்கார வேலனுக்குச் சிறப்பான ஆராதனை... மஹாஸ்கந்த ஹோமத்தில் நீங்களும் சங்கல்பிக்கலாம்!

அதற்கு முருகப்பெருமானோ, "எதிர்காலத்தில் பாலசித்தர் என்பவர் இங்கு வந்து தவம் புரிவார். அப்போது உன் ஆசை நிறைவேறும்" எனக் கூறி மறைகிறார். சூரபத்மனும் இங்கு மயில்வடிவ மலையாக மாறிக் காத்திருந்ததாகக் கூறுகிறது தல வரலாறு. ‘மயூராசலம்’ என அழைக்கப்பட்ட இந்த இடம் நாளடைவில் மயிலம் என மாறியுள்ளது.

மயிலம் முருகன் கோயில்
மயிலம் முருகன் கோயில்

பொதுவாக முருகன் கோயில்களில் உள்ள மயில் தெற்கு நோக்கியபடியோ அல்லது நேர் திசையிலோ இருப்பது வழக்கம். ஆனால், இந்த ஆலயத்தில் உள்ள மயில், வடக்கு நோக்கிபடி காணப்படுகிறது. இது சூரபத்மன் வழிபட்ட திசையைக் குறிப்பதாகக் கூறப்படுகிறது. யாருக்கும் வணங்காத கந்தனின் வேல் இங்கு தவம் புரிந்த பாலசித்தரின் தவத்தைக் கண்டு வணங்கியதாகவும் நம்பப்படுகிறது. இதன் நினைவாக, இன்றளவும் இங்கு நடைபெறும் கந்த சஷ்டி விழாவில் சூரசம்ஹாரத்திற்கு முருகன் புறப்படும்போது பாலசித்தரிடமிருந்தே முருகப்பெருமான் வேல் வாங்கிச் செல்கிறார். இந்த கோயிலில், பாலசித்தர் சந்நிதியும் உள்ளது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

ஒவ்வொரு வாரமும் செவ்வாய்க்கிழமை நடைபெறும் முருகனுடைய வேலாயுத பூஜையில், வேலாயுதத்திற்கு அர்ச்சனை செய்து வழிபடும் பக்தர்களின் கடன் பிரச்னைகள் அகலும் என்றும், இந்த ஆலயத்தில் காட்சி தரும் முருகப்பெருமானின் படைத்தளபதி வீரபாகுவை செவ்வாய்தோறும் வழிபட்டால் விரைவில் திருமணம் நடைபெறும் என்றும் பக்தர்கள் நம்புகிறார்கள்.
கந்த சஷ்டிக் கவசம் பிறந்த கதை - kanda shashti kavacham| #LordMurugan
இத்தகு சிறப்பு வாய்ந்த கந்த சஷ்டி திருவிழா, இந்த தலத்திலும் இன்று (4.11.2021) முதல் தொடங்கி 6 நாள்கள் இங்கு சிறப்பாக நடைபெற உள்ளது. 6வது நாளான 9.11.2021 (செவ்வாய் கிழமை) அன்று காலை பாலசித்தரிடம் இருந்து வேல் வாங்கும் நிகழ்ச்சியும், அன்று மாலை சூரசம்ஹாரமும், 7 வது நாள் அன்று தெய்வானை திருமணமும் நடைபெற உள்ளது.

கோயிலுக்குச் செல்லும் வழியில் மலையேற்ற பாதையில் இடப்புறம் அமைந்துள்ளது விநாயக பெருமானின் சந்நிதி. அருகாமையில், ஸ்ரீ பாலசித்தர் அக்னி தீர்த்தக் குளம் உள்ளது. விநாயகரை தரிசித்ததை தொடர்ந்து முருகனின் சந்நிதி நோக்கி செல்லலாம்.

மயிலம் முருகன் கோயில் உற்சவ மூர்த்திகள்
மயிலம் முருகன் கோயில் உற்சவ மூர்த்திகள்

உள்சுற்று மண்டபத்தின் இடபுறமாக சென்றால் பாலசித்தரின் சந்நிதி உள்ளது. மேலும், விநாயகர் மற்றும் முருகப்பெருமான் காட்சி தருகின்றனர். கருவறைக்கு எதிர் திசையில் சற்று இடப்புறமாக நவகிரகங்கள் சந்நிதி உள்ளது. கருவறை அருகே விநாயகரும், சிவபெருமானும் தனி சந்நிதி கொண்டு வீற்றுள்ளனர். கருவறையில், வள்ளி - தெய்வானை உடன் நின்ற கோலத்தில் புன்னகை பொங்க அருள்பாளிக்கிறார் சுப்பிரமணியர். கோயிலின் உள்சுற்று மண்டபத்தில் அமைந்துள்ளது உற்சவர் சந்நிதி. விநாயகர், வள்ளி - தெய்வானை உடனான சுப்பிரமணியர் (சூரசம்ஹாரத்திற்கு செல்லும் உற்சவ மூர்த்தி), வீரபாகு, தீர்த்தவாரி செல்லும் முத்துக்குமார சுவாமி, ஆலயத்தின் பிரதான உற்சவ மூர்த்தி, பாலசுப்பிரமணியர், நடராஜர் ஆகிய உற்சவ மூர்த்திகள் காட்சி தருகின்றனர்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு