மதுரை மூதூர் குறைந்தது இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய வரலாற்றுத் தொன்மையும், தொடர்ச்சியும் கொண்டது. மதுரையின் தொன்மையை இன்று கீழடி அகழாய்வுகள் மெல்ல, மெல்ல வெளிக்கொணர்ந்து வருகின்றன. அத்தோடு கூடவே, மதுரையின் தொன்மைக்கான சான்றுகளாகக் குகை ஓவியங்கள், சங்க இலக்கியங்கள், தமிழ்பிராமிக் கல்வெட்டுகள், வடமொழி மற்றும் பிறநாட்டு அறிஞர்களின் பயணக்குறிப்புகள், நாட்டுப்புறக் கதைகளும், பாடல்களும் என ஏராளம் இருக்கின்றன.
மதுரை என்ற பெயரைக் குறிக்கும், இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய தமிழ் பிராமிக் கல்வெட்டு அழகர்கோயிலுக்கு அருகில் உள்ள கிடாரிப்பட்டி குன்றிலும், அணைப்பட்டி அருகிலுள்ள சித்தர்மலையிலும் பார்க்கலாம். மதுரைக்கு சமணர்களின் வருகை கி.மு. மூன்றாம் நூற்றாண்டிலேயே இருந்திருக்க வேண்டும். திருப்பரங்குன்றம், யானைமலை, அழகர்மலை, கீழக்குயில்குடி சமணர்ம்லை, முத்துப்பட்டி, கொங்கர்புளியங்குளம், நடுமுதலைக்குளம், விக்கிரமங்கலம், சித்தர்மலை, அரிட்டாபட்டி, மாங்குளம், கீழவளவு, ஓவாமலை, வரிச்சியூர் என எண்பெருங்குன்றமான மதுரையின் குன்றுகளில் சமணர் வாழ்ந்திருக்கிறார்கள்.

இந்தத் தொடரில் நாம் கொஞ்சம் எட்டிப்பார்க்கப் போவது கொங்கர்புளியங்குளம் என்ற கிராமத்தின் குன்றின் மீதுள்ள சமணர்படுகைகளைத்தான்.
கொங்கர் புளியங்குளம், மதுரையிலிருந்து 15 கி.மீ தொலைவில், மதுரை – உசிலம்பட்டி நெடுஞ்சாலையில், மதுரைக் காமராசர் பல்கலைக்கழகத்திற்கு மேற்கே 2 கி.மீ தூரத்தில் உள்ளது. மதுரை – உசிலம்பட்டி நெடுஞ்சாலையில் பயணிக்கும் யாரும் இக்குன்றைப் பார்க்காமல் கடந்து போக முடியாது. தொல்லியல் துறையின் அறிவிப்புப் பலகையும், குன்றின் கம்பீரத்தோற்றமும் நிச்சயம் வரலாற்றுத் தேடலுள்ள பயணிகளை, கடந்து போக முடியாதவாறு, தன்னை நோக்கி ஈர்த்துவிடும்.
சமணர் படுகை உள்ள குன்றில் ஏறுவதற்கு கொங்கர்புளியங்குளம் ஊரிலிருந்து முறையான பாதை இல்லை. முதலில், மாயன் கோயிலும், மண்டபமும் இருக்கிற நாட்டார் தெய்வத்தைப் பார்த்து, ஒரு வணக்கம் சொல்லிவிட்டு, மேற்கு நோக்கி பாறையும், கல்லும், முள்ளும் கலந்திருக்கும் ஒற்றையடிப்பாதையில் கொஞ்சதூரம் நடந்தால், தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சமணர்படுகைக்குச் செல்லும் படிகளை எட்டிவிடலாம்.
இந்த ஒற்றையடிப்பாதையின் இருபுறமும் சம்பங்கி, மல்லிகை எனப் பூந்தோட்டம் இருப்பது மழைக்காலங்களில் போகும்போது நம் கண்ணுக்கு விருந்தாகும், மாறாக, கோடை நம்மைச் சுட்டெரித்துவிடும்.

இரண்டாயிரத்து நூறு ஆண்டுகள் பழைமையான மூன்று தமிழ் பிராமி கலவெட்டுகள் இயற்கையாக அமைந்த இக்குகைத்தளத்தில் பார்க்கமுடிகிறது. 50க்கும் மேற்பட்ட கல்படுகைகள் இருக்கின்றன. கீழக்குயில்குடி சமணர்மலையில் இயங்கிய மாதேவிபெரும்பள்ளியின் நீட்சியாக, இங்கும் சமணர்பள்ளி செயல்பட்டுள்ளது.
இங்கிருக்கும் தமிழ் பிராமிக் கல்வெட்டுகள் இங்குள்ள கல்படுகைகளைச் செதுக்கியவர்கள் பெயர்களையும், உதவியவர்கள் பெயர்களையும் ஊருக்குச் சொல்லி நிற்கின்றன. இக்கல்வெட்டுக்களையும், படுகைகளையும் பார்த்துவிட்டு, சென்ற வழியே கீழிறங்கி, மேற்கு நோக்கிச் சென்றால், மலைப்பாறையில், அரசமரத்தின் கீழ் முக்குடையின்கீழ் இயக்கியர்களோடு அமர்ந்திருக்கும் தீர்த்தங்கரர் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காணலாம். அப்புடைப்புச் சிற்பத்தின்கீழ், வட்டெழுத்தில், ஸ்ரீ அச்சனந்தி செயல் என்ற 9-10 நூற்றாண்டைச் சேர்ந்த வட்டெழுத்துக் கல்வெட்டு வரி காணப்படுகிறது. கி.பி. 9-10 நூற்றாண்டுகளில் சமண சமயத்தை மீண்டும் தமிழகத்தில் பரப்பிய அச்சனந்தி என்ற சமணத்துறவி இப்புடைப்புச்சிற்பத்தை செய்திருக்கிறார். சிற்பம் அமைந்துள்ள பாறை அடுக்குப்பாறை அமைப்பைச் சேர்ந்ததால், எழுத்துகள் தெளிவாகச் செதுக்கப்படவில்லை. காற்றின் வேகத்தில், சிற்பமும் அரிக்கப்பட்டுள்ளது.
வரலாறும், தொல்லியலும் தெரிந்தவர்கள் கி.மு., கி.பி என்று பேசிக் கொண்டிருக்க, உள்ளூர்க் குழந்தைகள் இந்தத் தீர்த்தங்கரர் சிற்பத்தை எட்டுக்கல்சாமி என்கிறார்கள். நாம் நின்றால் தொடமுடியாத பத்தடிக்கும் மேலான உயரத்தில் செதுக்கப்பட்டிருக்கும் இப்புடைப்புச் சிற்பத்தின் மேல்பகுதியில் சிறிய அளவில் எட்டு செவ்வகக் குழிகள் செதுக்கப்பட்டுள்ளன. வாழ்க்கையை எட்டு எட்டாகப் பிரிக்கும் தத்துவக் குறியீடோ, என்னவோ?
அங்கிருந்த சிறுவர்கள் சொன்ன கதைதான் யோசிக்க வைக்கிறது. இப்புடைப்புச் சிற்பத்தின் கீழ் நின்று, கற்களை எடுத்து அந்த செவ்வகக் குழிகளில் எறிய வேண்டுமாம். அப்போது, அந்தக் கற்கள் கீழே விழுந்துவிடாமல், அந்தக் குழிகளில் பொருந்திக் கொண்டால், அதுவும் எட்டுக்கற்களும் பொருந்திக் கொண்டால், அந்த மலை பிளந்து கொண்டு, நமக்கு வேண்டிய அளவிற்கு தங்கத்தை வாரி, வாரிக் கொடுக்கும் என்று கண்களில் தங்கப்புதையலின் நம்பிக்கை மின்னச் சொன்னார்கள். அத்தோடு, மலையின் பின்புறம் ஒரு சிறு குகையும், அதனுள்ளே ஒரு சுரங்கப்பாதையும் இருப்பதாகவும் சொன்னார்கள். இப்போது யாரும் நுழைய முடியாத அளவு அவை முட்புதர்கள் மண்டி, மூடிய நிலையில் இருக்கிறது என்பது உள்ளூர் சிறுவர்கள் தந்த தகவல். மதுரை மூதூர் இப்படி எத்தனையெத்தனை சுரங்கங்களை மூடி வைத்திருக்கிறதோ, தெரியவில்லை. மதுரையின் சுரங்கங்கள் என்பது தனித்ததொரு ஆய்வுக்கு உட்பட்ட பகுதி என எனக்குத் தோன்றுகிறது.

நாம் தீர்த்தங்கரர் சிலையின் கீழ்தான் நிற்கிறோம். அச்சனந்தி முனிவரின் செயல் என செதுக்கப்பட்ட கல்வெட்டுக்குக் கீழேயே, இப்போதைய ‘சிற்பி’களும் தங்களின் கைவண்ணத்தை மலைப்பாறையில் காட்டியிருக்கிறார்கள் என்பது வருந்ததக்க விஷயம்.
காற்றின் அரிப்பு மட்டுமன்றி, தங்கப்புதையலின் ஆசையோடு வீசியெறிப்பட்ட கற்களின் அடியாலும், தீர்த்தங்கரர் சிற்பம் தேய்ந்திருக்கக்கூடும் என்று தோன்றியது. நம் கையெட்டும் தூரத்தில் இருக்கும் அழகான வரலாற்றுத் தடயங்களின் சிறப்பை, பாதுகாக்க வேண்டிய அவசியத்தை அடுத்த தலைமுறைக்குக் கடத்தாமல் விடுகிற நம் மெத்தனப் போக்கை என்னவென்று சொல்வது?
கொங்கர்புளியங்குளத்தின் மிக அருகில் இருப்பது மதுரைக்காமராசர் பல்கலைக்கழகம். அதில், சிறப்புமிக்க வரலாற்றுத்துறையும் இயங்கி வருகிறது. சமூகம், மற்றும் உள்ளூர் சார்ந்த பங்களிப்புகளுக்கு பல்கலைக்கழக மானியக்குழுவும், தரம் நிர்ணயிக்கும் கமிட்டியும் மதிப்பெண்கள் போடுவதுண்டு. அதற்காகவேனும், பல்கலைக்கழகத்தைச் சுற்றியுள்ள மூதூர் மதுரையின் பாரம்பர்யச் சின்னங்களைப் பாதுகாக்கும் பணியையும், இளைய தலைமுறைக்கு எடுத்துச் சொல்லும் பணியையும் வரலாற்றுத்துறை மாணவர்கள் செய்யலாம்.

இப்புடைப்புச் சிற்பத்தைத் தாண்டி, பின்பக்கமாக மலையில் ஏறினால், பிற்காலத்தில் கட்டப்பட்ட முருகன் கோயிலும், சில சிற்பங்களும் காணமுடிகிறது. எட்டாம் நூற்றாண்டில் சமணம் வீழ்ந்திருந்த காலத்தில், சைவ, வைணவக் கோயில்கள் சமணர்கள் வாழ்ந்த குன்றுகளில் ஏற்படுத்தப்பட்டன என்கிற வாதத்துக்கு இக்கோயிலும் ஒரு சான்றாக இருக்ககூடும். மலையின் உச்சிக்குப் போகும் வழியெங்கும் மூலிகைச் செடிகள், வெப்பாலை மரங்கள் என சித்தர்களின் வாழ்விடமாய் இக்குன்று இருந்ததன் அடையாளம் புரிகிறது.
மலையின் அடிவாரத்தில், குவாரிக்காரர்கள் ஏற்படுத்திய குளமும், தேங்கி நிற்கும் நீரும் உள்ளூர்க் குழந்தைகளுக்கு நீச்சல் குளம்போல் இருக்கிறது. அருகிலுள்ள கருப்பசாமி கோயிலும், முன்புறம் காணப்படும் கிராமதேவதைகளின் சிலைகளும், உயிர்ப்பான பயணத்தை பலவித தேடல்களோடு, நம்முன் நிறுத்துகின்றன.