கன்னியாகுமரி மாவட்டத்தில் கொல்லங்கோடு, மூவோட்டுக்கோணம், இட்டகவேலி உள்ளிட்ட மூன்று கோயில்களில் குழந்தைகளுக்கான தூக்கத்திருவிழா நடைபெறும். அதில் கொல்லங்கோடு ஸ்ரீ பத்திரகாளி அம்மன் கோயிலில் நடைபெறும் தூக்கத்திருவிழா மிகவும் பிரசித்திபெற்றதாகும். கொல்லங்கோடு பத்திரகாளி அம்மனுக்கு இரண்டு கோயில்கள் உள்ளன. ஒன்று பழைய முடிப்புரை என்றும், மற்றொன்று புதிய முடிப்புரை என்றும் அழைக்கப்படுகிறது. வட்டவிளைப்பகுதியில் மூலஸ்தானக் கோயில் அமைந்துள்ளது, வெங்கஞ்சி பகுதியில் தூக்கத் திருவிழா நடைபெறும் கோயிலும் அமைந்துள்ளது.

குழந்தை வரம் வேண்டி தம்பதியினர் இந்தக் கோயிலில் தூக்க நேர்ச்சை நடத்திக்கொடுப்பதாக வேண்டுதல் செய்கிறார்கள். அம்மன் அருளால் பிறக்கும் குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நிறைவேற்றுகின்றனர். அதுபோல, குழந்தைகள் நோய் நொடி இல்லாமல் வாழ வேண்டும் என்ற வேண்டுதலுடன் பெற்றோர் தூக்க நேர்ச்சையை நடத்துகின்றனர். பெரும்பாலும் மூன்று வயதுக்கு உட்பட்ட குழந்தைகளுக்கே தூக்க நடைபெறுகிறது. தூக்க நிகழ்ச்சிகளுக்காக குழந்தைகள் மட்டுமல்ல, குழந்தையைத் தூக்கும் 'தூக்கக்காரர்'களும் விரதம் இருக்கின்றனர்.
கொல்லங்கோடு பத்திரகாளி அம்மன் கோயிலில் கடந்த 16-ம் தேதி கொடியேற்றத்துடன் மீன பரணித் திருவிழா தொடங்கியது. அன்றில் இருந்து குழந்தைகளுடன் சேர்ந்து பெற்றோரும் விரதம் இருக்கத்தொடங்கினர். அதுபோல தூக்க வில்லில் குழந்தைகளைத் தூக்கிச் செல்லும் தூக்கக்காரர்கள் கடும் விரதம் மேற்கொள்வார்கள். 3-ம் நாள் திருவிழாவின்போது தூக்கக்காரர்களுக்கு மருத்துவப் பரிசோதனை நடத்தப்படும். திருவிழாவின் 4-ம் நாள் முதல் தூக்கக்காரர்கள் கோயிலிலே தங்கியிருப்பார்கள்.


கோயிலில் வழங்கப்படும் பிரசாத உணவையே உண்பார்கள். காலையிலும், மாலையிலும் கடலில் நீராடி கோயிலில் நமஸ்காரம் செய்வார்கள். முட்டுக்குத்தி வழிபாடு, உருள் நமஸ்காரம் என உடலை உறுதி செய்யும் வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடிக்கின்றனர். எந்தக் குழந்தையை எந்தத் தூக்கக்காரர் வில்லில் தூக்கிச்செல்வார் என்பதைக் குலுக்கல் மூலம் முடிவு செய்கின்றனர்.
குழந்தைகளையும், தூக்கக்காரர்களும் தொங்கியபடி செல்லும் ரதத்தின் வெள்ளோட்டம் 9-ம் நாள் இரவு நடைபெற்றது. இதை வண்டியோட்டம் என அழைக்கின்றனர். ரதத்தில் சுமார் 40 அடி நீளமுள்ள இரண்டு பெரிய மரக்கம்புகள் பொருத்தப்பட்டிருக்கும். அதைத் 'தூக்க வில்' என அழைக்கின்றனர். தூக்கவில்லில் ரதத்தைப் பராமரிக்கும் தச்சர் தொங்கியபடி இருக்க, ஒருமுறை கோயிலைச் சுற்றி வலம் வருகின்றனர்.

நேற்று காலை 6.30 மணியளவில் தூக்க நேர்ச்சை தொடங்கியது. முதலில் அம்மன் தூக்கம் நடைபெற்றது. பின்னர் ஏற்கனவே டோக்கன் வழங்கியதன் அடிப்படையில் தூக்கக்காரர்கள் வில்லில் தொங்கியபடி, குழந்தைகளைக் கையில் ஏந்துவார்கள். சுமார் 40 அடி உயரத்தில் குழந்தைகளும், தூக்கக்காரர்களும் இருக்க. அந்த ரதத்தை பக்தர்கள் கோயிலைச் சுற்றி இழுத்துச் சென்றனர்.

ஒரு முறை நான்கு தூக்கக்காரர்களும், நான்கு குழந்தைகள் ஆகியோர் தூக்க நேர்ச்சையில் கலந்துகொள்ள முடியும். அதன் அடிப்படையில் நேற்று இரவுவரை 1,352 குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நடத்தப்பட்டது. அம்மன் தூக்கம் உள்ளிட்டவைகளுடன் சுமார் 347 முறை ரதம் கோயிலைச் சுற்றிவந்து தூக்கத் திருவிழா நடைபெற்றது. தமிழகம் மட்டுமல்லாது, கேரள மாநிலத்தில் இருந்தும் அதிக அளவு குழந்தைகளுக்குத் தூக்க நேர்ச்சை நிறைவேற்றப்பட்டது. தமிழ் மாதமான பங்குனியில் பரணி நட்சத்திரம் அன்று இந்தத் தூக்கத்திருவிழா நடைபெறுவது வழக்கம். பங்குனி மாதத்தை மலையாளத்தில் மீன மாதம் என அழைப்பதால் 'மீன பரணித் தூக்கம்' திருவிழா என இவ்விழா பிரபலம் ஆகி உள்ளது.