கரூர் மாவட்டம், குளித்தலை அருகே உள்ள வளையப்பட்டியில் ஸ்ரீ காளியம்மன், விநாயகர், முருகன் கோயில் அமைந்துள்ளது. அந்தப் பகுதியில் மிகவும் பிரசித்திப்பெற்ற இந்தக் கோயிலுக்கு, ஏராளமான பக்தர்கள் உள்ளனர். இந்தக் கோயிலைப் புனரமைத்துக் குடமுழுக்கு விழா நடத்துவது என்று ஊர் பொதுமக்கள் மற்றும் விழா கமிட்டியினர் முடிவெடுத்து, புனரமைப்புப் பணிகளில் ஈடுபட்டனர்.
இந்நிலையில், புனரமைப்புப் பணிகள் நிறைவடைந்ததையடுத்து, குடமுழுக்கு விழா வெகு விமர்ச்சையாக நடைபெற்றது. முன்னதாக, காவிரி ஆற்றில் இருந்து புனித நீர் கொண்டுவரப்பட்டது. புனித நீர் அடங்கிய கும்பத்தை சிவாசார்யர்கள் யாக வேள்வி சாலையில் வைத்து, விக்னேஸ்வர பூஜை, மகா கணபதி பூஜை, வாஸ்து சாந்தி பூஜை, திரவ்யாஹூதி, பூர்ணாஹூதி, நாடி சந்தனம் லட்சார்சனை, மகா தீபாராதனை உள்ளிட்ட இரண்டு கால யாக வேள்விகளைச் செய்தனர். இந்நிலையில், வேள்விகள் நிறைவடைந்ததும் புனிதநீர் அடங்கிய கும்பத்தினை சிவாசார்யர்கள் மங்கல இசை முழங்க ஊர்வலமாகக் கொண்டுவந்தனர்.

வானில் கருட பகவான் வட்டமிட்டத்தை அடுத்து சிவாசார்யர்கள் கலசத்திற்குப் புனித நீரினை ஊற்றிக் குடமுழுக்கு செய்தனர். அதனைத் தொடர்ந்து, கலசத்திற்குச் சிறப்பு பூஜைகள் செய்யப்பட்ட பின், பக்தர்களுக்குப் புனித நீர் தெளிக்கப்பட்டது. இதில், வளையப்பட்டி மற்றும் அதனை சுற்றியுள்ள கிராமப் பகுதியைச் சேர்ந்த ஏராளமான பொதுமக்கள், பக்தர்கள் கலந்து கொண்டு, சாமி தரிசனமும், கோபுர தரிசனமும் செய்து வழிபட்டனர்.