Published:Updated:

தொடர் மழை: 20 வருடங்களுக்குப் பிறகு நிரம்பிய அய்யர்மலை தெப்பக்குளம்! - மகிழ்ச்சியில் பக்தர்கள்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
வழிபாடு நடத்தும் பக்தர்கள்
வழிபாடு நடத்தும் பக்தர்கள்

ரத்தினகிரீசுவரர் கோயில் மலைமீது மழை பெய்யும்போது, அந்த மழைநீர் வடிகால் வழியாக இநதத் தெப்பகுளத்திற்கு வந்து சேரும்.

கடும் வறட்சியில் கடந்த 20 வருடங்களாக நிரம்பாமல் இருந்த, அய்யர்மலை ரத்தினகிரீஸ்வரர் தெப்பக்குளம், கடந்த சில நாள்களாகப் பெய்துவரும் கனமழையால், நிரம்பி வழிந்தோட, அந்தப் பகுதி மக்கள் மகிழ்ச்சியடைந்திருக்கிறார்கள். அக்கம்பக்கத்து கிராமங்களைச் சேர்ந்த பக்தர்கள் அந்தக் குளத்துக்கு வருகை தந்ததோடு, அந்தக் குளம் நிரம்பி வழிந்தோடும் நீரின் மீது மாலை அணிவித்து, தீபம் ஏற்றி, தேங்காய் உடைத்து வழிபட்டனர்.

அய்யர்மலை தெப்பக்குளம்
அய்யர்மலை தெப்பக்குளம்
50 மாணவர்கள்; 116 மரங்கள்; அரசுப்பள்ளியில் மாணவர்களே உருவாக்கிய பழத்தோட்டம்!

கரூர் மாவட்டம், குளித்தலையில் இருந்து மணப்பாறைக்குச் செல்லும் பிரதான சாலையில் ஏழாவது கிலோமீட்டரில் வருகிறது அய்யர்மலை. இங்குதான் மிகவும் பிரசித்தி பெற்ற சிவத்தலமான ரத்தினகிரீஸ்வரர் கோயில் உள்ளது. சுமார் 4 கி.மீ சுற்றளவு கொண்ட மலையின் உச்சியின்மேல் அமைந்துள்ள இக்கோயிலைச் சென்று சேர, 1,017 படிகளை ஏறிக் கடக்க வேண்டும். இந்த கோயிலின் எதிரே உள்ள பகுதியில் இக்கோயிலுக்குச் சொந்தமான தெப்பக்குளம் அமைந்திருக்கிறது. ரத்தினகிரீசுவரர் கோயிலின் மலைமீது மழை பெய்யும்போது, அந்த மழைநீர் வடிகால் வழியாக இந்தத் தெப்பகுளத்திற்கு வந்து சேரும். இந்தத் தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பினால், அதிலிருந்து வெளியேறும் தண்ணீர் சிறிய வடிகால் வழியாக அய்யர்மலை அரசு மேல்நிலைப்பள்ளி அருகே உள்ள குளத்திற்குச் செல்லும். அய்யர்மலை மற்றும் அதனைச் சுற்றியுள்ள கிராமங்களில் மிகவும் வறட்சி நிலவியதால், கடந்த 15 வருடங்களுக்கும் மேலாக சரியான மழை இல்லை.

வழிபாடு நடத்தும் பக்தர்கள்
வழிபாடு நடத்தும் பக்தர்கள்

சுமார் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தத் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிறைந்து வழிந்தோடுவதைப் பார்த்த இப்பகுதி மக்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர். பின்னர், தண்ணீர் வெளியேறும் இடத்தில் தேங்காய் உடைத்து, சூடம் ஏற்றி வழிபட்டனர். அதோடு, மாலை சாத்தியும் வழிபாடு நடத்தினர். குளித்தலையைச் சுற்றியுள்ள பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள், பக்தர்கள் உள்பட பலர் இக்குளத்தைப் பார்வையிட்டுச் செல்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இதுகுறித்து, நம்மிடம் பேசிய சுந்தர் என்ற இளைஞர்,``இந்தத் தெப்பக்குளம் முழுவதும் கடைசியாக நிரம்பி 20 வருடங்களுக்கு மேல் ஆகிறது. அதற்கு பிறகு, இப்போதுதான் நிரம்பியிருக்கிறது. இந்தப் பகுதியில் கடுமையான வறட்சி நிலவியதால், இங்கே சரியாக மழை பெய்யவில்லை. அதனால், இந்தத் தெப்பக்குளம் நிரம்பாமல் இருந்தது. ஆனால், கடந்த வருடம் கொஞ்சம் மழை பெய்தது. அப்போது, இந்தத் தெப்பக்குளம் பாதியளவு நிரம்பியது. அப்போது, குளத்தில் ஆகாயத்தாமரை பரவியதால், அதை இங்குள்ள சிவனடியார்கள் ஒன்றுசேர்ந்து அகற்றினர். ஆனால், முழுமையாக இந்தத் தெப்பக்குளம் நிரம்பவில்லை. ஆனால், இப்போது தொடர்ச்சியாக மழை பெய்ததால், இந்தத் தெப்பக்குளம் முழுகொள்ளளவை நிரம்பியதோடு, உபரிநீர் வெளியேறுகிறது.

சுந்தர்
சுந்தர்

இந்தக் குளத்தின் உபரிநீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் நிரம்பும்வகையில் முன்னோர்கள் நீர்வழித்தடம் அமைத்திருந்தனர். ஆனால், காலப்போக்கில் அந்த நீர்வழித்தடங்கள் பல்வேறு காரணங்களால் அழிக்கப்பட்டுவிட்டன. அதனால், உடனே அந்த நீர்வழித்தடத்தை கண்டுபிடித்து, சரிசெய்து அய்யர்மலை தெப்பக்குளத்தின் உபரிநீரை அருகில் உள்ள நீர்நிலைகளில் சேமிக்க வழிவகை பண்ண வேண்டும்" என்று கோரிக்கை விடுத்தார்.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு