Published:Updated:

`முறையான அழைப்பு வந்திருக்கிறது!'- களைகட்டப்போகும் கச்சத் தீவு திருவிழா

கச்சத் தீவு திருவிழா
கச்சத் தீவு திருவிழா

கச்சதீவு திருவிழாவிற்கான முறையான அழைப்பிதழ் வந்துள்ளது. மார்ச் 6-ம் தேதி காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து படகுகள் புறப்படும். அன்று மாலை கச்சத்தீவில் திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிலுவைப்பாதை நடைபெறும்.

கச்சத் தீவு அந்தோணியார் ஆலயத் திருவிழா வரும் மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவுள்ளது. இதில் இந்திய மக்கள் பங்குபெறுவதற்கான விழா அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ராமேஸ்வரம் பங்குத்தந்தை தேவசகாயத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

கச்சத் தீவு ஆலயம்
கச்சத் தீவு ஆலயம்
உ.பாண்டி

இந்தியாவிற்கும் இலங்கைக்கும் இன்னும் பிரச்னைக்குரிய தீவாக கச்சத்தீவு இருந்துவந்தாலும் அது புனிதத் தீவாகத்தான் இருநாட்டு மக்களிடையே பார்க்கப்படுகின்றது. இதற்கு அங்குள்ள புனித அந்தோணியார் கோயிலே காரணம். இங்கு ஒவ்வொர் ஆண்டும் பிப்ரவரி அல்லது மார்ச் மாதங்களில் திருவிழா நடைபெறுவது வழக்கம். கச்சத்தீவு அந்தோணியார் கோயிலில் இந்த ஆண்டிற்கான திருவிழா மார்ச் 6 மற்றும் 7 தேதிகளில் நடைபெறவுள்ளது இதற்கான அழைப்பிதழை யாழ்ப்பாணம் மறை மாவட்ட ஆயர் ஜஸ்டின் ஞானப்பிரகாசம் ராமேஸ்வரம் பங்குத்தந்தை தேவசகாயத்திற்கு அனுப்பி வைத்துள்ளார்.

பங்குத்தந்தை தேவசகாயம்.
பங்குத்தந்தை தேவசகாயம்.
உ.பாண்டி

இது குறித்து ராமேஸ்வரம் பங்குத்தந்தையும், கச்சத்தீவு திருப்பயண ஒருங்கிணைப்பாளருமான தேவசகாயம், ``கச்சதீவு திருவிழாவிற்கான முறையான அழைப்பிதழ் வந்துள்ளது. மார்ச் 6-ம் தேதி காலை ராமேஸ்வரம் துறைமுகத்திலிருந்து படகுகள் புறப்படும். அன்று மாலை கச்சத்தீவில் திருச்சிலுவை ஆராதனை மற்றும் சிலுவைப்பாதை நடைபெறும். அதன்பின் திருப்பலியும், தேர்பவனியும் நடைபெறும். மறுநாள் காலை வழிபாட்டுடன் திருவிழா திருப்பலியுடன் விழா நிறைவு பெறும்.

மாவட்ட நிர்வாகத்தின் சார்பில் வழக்கம் போல் இந்தத் திருப்பயணத்திற்கான ஏற்பாடுகளைச் செய்து தர வேண்டி மாவட்ட ஆட்சியரிடம் கேட்டுள்ளோம். இதன்படி இந்த ஆண்டு 70 விசைப்படகுகள் மற்றும் 20 நாட்டுப்படகுகளில் கச்சதீவுக்கு பக்தர்கள் செல்ல ஏற்பாடு செய்யப்பட உள்ளது. விசைப்படகில் படகோட்டிகள் உள்ளிட்ட 35 பயணிகளும், நாட்டுப்படகில் படகோட்டி உள்ளிட்ட 15 பேரும் அனுமதிக்கப்படுவார்கள். கச்சதீவு செல்ல விரும்பும் பக்தர்கள் தாங்களே நேரடியாக வேர்க்கோட்டில் உள்ள ஆலயத் திருப்பயண அலுவலகத்தில் பதிவு செய்ய வேண்டும். விசைப்படகு கட்டணமாக ஒரு பயணிக்கு ரூ.1500-ம், நாட்டுப்படகு கட்டணமாக ரூ.400-ம் செலுத்த வேண்டும்.

திருவிழா அழைப்பு கடிதம்.
திருவிழா அழைப்பு கடிதம்.
உ.பாண்டி

இதற்கான விண்ணப்பங்கள் நாளை (ஜனவரி 24 தேதி) தொடங்கி 28-ம் தேதி வரை வழங்கப்படும். பயணிகள் உரிய ஆவணங்களுடன் விண்ணப்பங்களை பிப்ரவரி 10-ம் தேதிக்குள் சேர்ப்பிக்க வேண்டும். வெளி மாவட்ட, மாநில பக்தர்கள் அருகில் உள்ள காவல் நிலையங்களில் தடையில்லாச் சான்று பெற்றிருக்க வேண்டும்.

மேலும், அரசு வழங்கியுள்ள அடையாள அட்டையினைக் கச்சதீவு செல்லும் பயணிகள் அனைவரும் வைத்திருக்க வேண்டும். புனித அந்தோணியார் மீது பக்தி கொண்டுள்ள பக்தர்கள் மட்டும் இவ்விழாவில் பங்கேற்பதுடன், இருநாட்டு உறவுகளும் சங்கமிக்கும் இந்த விழாவில் உறவுகளை மதிக்கும் உன்னத நோக்கத்துடனும் பங்கேற்க அழைப்பதாக'' தெரிவித்தார்.

அடுத்த கட்டுரைக்கு