கட்டுரைகள்
Published:Updated:

ஆறு விரல்களுடன் அபூர்வ மகாலட்சுமி!

சூரியகோடீஸ்வரர்
பிரீமியம் ஸ்டோரி
News
சூரியகோடீஸ்வரர்

ஒரு தலம் 9

தஞ்சை மாவட்டம், கும்பகோணத்துக்குக் கிழக்கே சுமார் 15 கி.மீ தொலைவில் உள்ளது கீழச்சூரியமூலை எனும் சிற்றூர். இங்குள்ள சூரியகோடீஸ்வரர் ஆலயத்தில்தான் ஆறு விரல்களுடன் சுக்ர யோகம் அருளும் அபூர்வ மகாலட்சுமி அருள்பாலிக்கிறாள். சூரிய பகவான் பிரதோஷப் புண்ணியத்தைப் பெற்றதும் இங்குதான். ஆகவே, பிரதோஷ வழிபாட்டுக்கு உகந்த தலமாகவும் திகழ்கிறது இவ்வூர்.

உலகுக்கெல்லாம் ஒளி வழங்கும் சூரிய பகவான், மாலை நேரத்தில் வரும் பிரதோஷ வழிபாட்டைத் தான் தரிசிக்க முடியவில்லையே என ஏங்கி வருந்தினாராம். அனுதினமும் செய்ய வேண்டிய பணியை விட்டுவிட்டு அவரால் எப்படி வர முடியும்?

தனது ஏக்கத்தைத் தன் சீடரான யாக்ஞவல்கிய முனிவரிடம் தெரிவித்தார். அந்த முனிவர் சூரியனிடம் தான் கற்ற வேதங்கள் அனைத்தையும் இறைவனுக்குத் தட்சணையாக்கி, வேதாக்னி யோகப் பாஸ்கர சக்கர வடிவமாகச் செய்து, அதன் பலன்களைப் பொறித்து, அதை இவ்வூர் ஈசன் சூரிய கோடிப் பிரகாசரிடம் சமர்ப்பித்து வேண்டினார். அப்படி அவர் சமர்ப்பித்த வேதமந்திர சக்திகள் ஒன்று சேர்ந்து இலுப்பை மரமாகத் தோன்றி வளர்ந்தது. தொடர்ந்து அந்த இடமே இலுப்பைக் காடாக மாறியது. இந்தக் கோயிலின் ஸ்தல விருட்சம் இலுப்பை மரம்.

இலுப்பை விதைகளைச் சேகரித்து அவற்றிலிருந்து இலுப்பை எண்ணெய் எடுத்த முனிவர், மாலைவேளையில் கோடி தீபங்கள் ஏற்றி இறைவனை வழிபட ஆரம்பித்தார். பிரதோஷ காலத்தில், ஏற்றி வைத்த தீபங்கள் அப்படியே சுடர்விட்டுக்

கொண்டிருக்க, மறுநாள் காலையில் உதித்தெழுந்த சூரியதேவன், கோடி தீபங்களை வணங்கி, பிரதோஷ வழிபாட்டின் பலன்கள் அனைத்தையும் பெற்றதாகத் தலவரலாறு விவரிக்கிறது.

ஆறு விரல்களுடன் அபூர்வ மகாலட்சுமி!

தினமும் நிகழும் சூரிய பூஜை!

அதேபோல், தட்ச யாகத்தில் கலந்து கொண்டதால் சிவனாரின் கோபத்துக்கு ஆளான சூரியன் ஒளியிழந்தான். பின்னர் அவன், இவ்வூர் வந்து வழிபட்டு மீண்டும் ஒளிபெற்றதாகவும் திருக்கதை உண்டு. இன்றைக்கும் இக்கோயிலில் அனுதினமும் சூரிய பூஜை நிகழ்கிறது.

சூரியனுக்கு மூலாதாரச் சக்தியை கொடுத்ததால் சூரிய மூலை என இத்தலம் அழைக்கப்பட்டது. நவகிரக தலங்களில் ஒன்றான சூரியனார்கோயில் தலத்தின் ஈசான்ய பாகத்தில், அதாவது கீழ் மூலையில் இருப்பதால், இந்த ஊருக்கு `கீழச் சூரிய மூலை’ எனப் பெயர் வந்தது என்றும் கூறுவர். இங்கே சூரியன் உதயத்திலிருந்து அஸ்தமனம் வரை சூட்சும வடிவில் வழிபடுவதாக நம்பிக்கை.

சூரியன் அருள்பெற்ற இந்தத் தலம், பித்ரு சாபத்தை நிவர்த்திசெய்யும் தலமாகவும் விளங்குகிறது. சூரியன் வணங்கும் இடம் என்பதால் கண் நோய்கள், பார்வைக் குறைபாடுகளை நீக்கும் தலமாகவும் இருக்கிறது. கிழக்குப் பார்த்த சந்நிதியில் அருள்கிறார் சூரிய கோடீஸ்வரர். தெற்கு நோக்கிய சந்நிதியில் பவளக்கொடி அம்பாள். இந்தச் சந்நிதிகள் அமைந்த மண்டபத்திலேயே பைரவரும் சூரியனும் எழுந்தருளியுள்ளனர்.

ஆறு விரல்களுடன் அருளும் மகாலட்சுமி!

இந்தக் கோயிலின் குபேர மூலையில், பத்மாசன கோலத்தில் இருக்கும் மகாலட்சுமியின் வலக்காலில் ஆறு விரல்கள் அமைந்துள்ளன. ‘ஆறு’ என்பது சுக்கிரனுக்குரிய எண். எனவே சுக்கிரனின் ஆதிக்கம் அவளிடம் நிறைந்திருக்கிறது என்கிறார்கள் பக்தர்கள். வெள்ளிக் கிழமைகளில் இந்த அன்னையை வணங்குவோருக்கு செல்வ போகமும் சுக்ர யோகமும் கிடைக்கும் என்பது ஐதீகம்.

சூரியனை நிமிர்ந்து பார்த்து வணங்கும் நாம், சுக்கிரனைக் குனிந்து வணங்குமாறு லட்சுமித்தாயாரின் வலக்காலில் ஆறு விரல்கள் அமைந்திருப்பது சிறப்பு.

ஆறு விரல்களுடன் அபூர்வ மகாலட்சுமி!

சூரியன் வழிபடும் இறைவன் இக்கோயிலின் ஈசன். அம்பிகை குருவின் சக்தியைத் தன்னகத்தே கொண்டவள். மகாலட்சுமியோ சுக்ர சாந்நித்தியம் நிறைந்தவள். ஆக, இந்தக் கோயிலுக்கு வந்து வழிபடும் பக்தர்களுக்குச் சூரிய பகவான், குரு மற்றும் சுக்கிர பகவானின் அருள் பூரணமாகக் கிடைப்பதுடன், பித்ரு சாபங்களும் நீங்கும்.

பைரவ மேனியில் அற்புதம்!

இங்கு அருள்பாலிக்கும் சொர்ண பைரவரும் விசேஷமானவர். சுவாமி, அம்பாளுக்கு ஆரத்தி காண்பித்துவிட்டு, பைரவரிடம் ஆரத்தி காட்டும்போது மட்டும், பைரவரின் கழுத்துப் பகுதியில் சிவப்பு நிறத்தில் பவழம் போல ஓர் ஒளி தோன்றி, அசைந்து மறைகிறது. சிறு பொறி போல வந்து மறையும் அந்தப் பவழ மணியின் ஒளிக்கிரணங்கள்தான், நம் பித்ரு சாபத்தையும், சூரிய சந்திரர்களின் கிரணங் களால் ஏற்படும் தோஷங்களையும், பிணி களையும் நிவர்த்தி செய்வதாக நம்பிக்கை.

வலக்காலை முன்வைத்த கோலத்தில் துர்கை!

சூரியகோடீஸ்வரர் ஆலயத்தில் துர்கையும் தனிச்சந்நிதியில் அருள்கிறாள். இந்த அம்பிகை வலக்காலை ஓரடி முன்வைத்து நிற்கிறாள். அதோடு காலில் மெட்டியும் அணிந்துள்ளது, வேறெங்கும் காண்பதற்கரிய தரிசனம்!

துர்கை ராகுவால் ஏற்படும் சோதனைகளி லிருந்து நம்மைக் காப்பவள். இங்கே ராகு காலத்தில் தீபம் ஏற்றி வணங்குவோருக்கு, ஓடி வந்து அருள்செய்கிறாள் துர்கை. அதனால்தான் காலை முன் வைத்த கோலத்தில் நிற்கிறாளாம்!

ஆறு விரல்களுடன் அபூர்வ மகாலட்சுமி!

சிறப்பு வழிபாடுகள்...

இங்கிருக்கும் நவகிரக மூர்த்தியர் அனைவரும் தத்தமது வாகனங்களுடன் இருக்கிறார்கள். அதுமட்டுமன்றி அனைவருமே சூரியனைப் பார்த்தபடி இருப்பது விசேஷ அம்சம்.

இந்த ஆலயத்துக்கு வந்து சுவாமி, அம்பாளுக்கு அபிஷேகம், மகாலட்சுமிக்கு ஹோமம், அபிஷேகம் செய்து, வஸ்திரம் சார்த்தி, பிரார்த்தனை செய்வதால், கண் சம்பந்தமான பிரச்னைகள், பார்வைக் குறைபாடுகள் நீங்குவதாக ஐதிகம்.

இங்கே அன்னதானம் செய்வதால் பித்ரு தோஷமும் சாபமும் நீங்கும்; சந்ததியினரின் எதிர்காலம் சிறக்கும். மேலும், பிரதோஷ காலத்தில் அகல் தீபம் ஏற்றிவைத்து சூரிய கோடீஸ்வரரை வணங்குவதால் சகல செளபாக்கியங்களும் உண்டாகும். சூரிய தோஷம் உள்ளவர்கள், மூலவருக்கு இளநீர் அபிஷேகம் செய்து தோஷம் நீங்கப் பெறலாம்.