Published:Updated:

`பம்பையில் குளிக்கத் தடை; கொரோனா சான்றிதழ் அவசியம்!’- வரும் 14 முதல் சபரிமலை தரிசனத்துக்கு அனுமதி

சபரிமலை
சபரிமலை

10 வயதுக்குக் கீழே உள்ளவர்களுக்கும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் முன்பதிவு செய்ய இயலாது.

கொரோனா நோய்த் தொற்று பரவாமல் தடுப்பதற்காக நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது. அதன் காரணமாக கடந்த மூன்று மாதங்களாக மக்கள் வெளியே நடமாடுவது, பொது வாகனங்களில் பயணிப்பது, பொது இடங்களில் கூடுவது உள்ளிட்டவை தடை செய்யப்பட்டிருந்தன. அனைத்து வழிபாட்டுத்தலங்களும் மூடப்பட்டன. அதே சமயம் வழக்கமாக நடக்கும் சடங்குகள் மட்டும் தடைபடாமல் குறைந்த நபர்களைக் கொண்டு நடத்தப்பட்டன.

இந்த நிலையில் நாடு முழுவதும் ஊரடங்கு படிப்படியாகத் தளர்த்தப்பட்டு வருகிறது. அதன் ஒருபகுதியாக வழிபாட்டுத்தலங்களை 8-ம் தேதி முதல் திறக்கலாம் என மத்திய அரசு அறிவித்துள்ளது. இதையடுத்து மக்கள் கடைப்பிடிக்க வேண்டிய விதிமுறைகளை வெளியிட்டு வழிபாட்டுத்தலங்களைத் திறக்க மாநில அரசுகள் நடவடிக்கை எடுத்து வருகின்றன. தமிழக அரசு வழிபாட்டுத்தலங்களைத் திறப்பதற்கான தேதியை அறிவிக்கவில்லை. அதேசமயம் கேரள அரசு வழிபாட்டுத்தலங்களைத் திறப்பதற்கான வழிமுறைகளை அறிவித்துள்ளது.

குருவாயூர்
குருவாயூர்

அதன்படி குருவாயூர் கோயிலில் நாளை (செவ்வாய்க்கிழமை) முதல் பக்தர்கள் அனுமதிக்கப்படுவதாகக் கேரள தேவசம்போர்டு அமைச்சர் கடகம்பள்ளி சுரேந்திரன் அறிவித்துள்ளார். அதற்காக www.guruvayurdevaswom.in என்ற இணையதளத்தில் ஆன்லைன் புக்கிங் செய்யலாம். காலை 9.30 முதல் 1.30 மணிவரை தரிசனத்தில் ஒரு மணி நேரத்திற்கு 150 பேர் வீதம் ஒரு நாள் 600 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். அதிகாலை 5 மணி முதல் மதியம் 1 மணி வரை திருமணம் நடைபெறும். ஒரு நாள் 60 திருமணங்கள் மட்டுமே அனுமதிக்கப்படும். திருமணம் செய்துகொள்ளும் தம்பதிகள் உட்பட 10 பேர் மட்டுமே கலந்துகொள்ளலாம். குருவாயூர் மற்றும் சபரிமலை கோயில்களில் வி.ஐ.பி தரிசனம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

பிரசித்திபெற்ற சபரிமலை ஐயப்ப சுவாமி கோயிலில் மாதாந்திர பூஜைகளுக்காகவும், திருவிழாவுக்காகவும் வரும் 14-ம் தேதி முதல் 28-ம் தேதிவரை நடை திறக்கப்படுகிறது. ஆன்லைனில் முன்பதிவு செய்தவர்கள் தனி வழி மூலம் சந்நிதானத்தில் அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு 200 பக்தர்கள் அனுமதிக்கப்படுவார்கள். காலை 4 மணி முதல் 1-மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 11 மணி வரையும் பக்தர்கள் தரிசனத்துக்கு அனுமதிக்கப்படுவார்கள். ஒருநாள் 3,200 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவார்கள். ஒரே சமயத்தில் 50 பேர் வீதம் சமூக இடைவெளி விட்டு தரிசனம் செய்யும் வகையில் ஏற்பாடு செய்யப்படுகிறது.

சபரிமலை
சபரிமலை

10 வயதிற்குக் கீழே உள்ளவர்களுக்கும், 65 வயதுக்கு மேல் உள்ளவர்களுக்கும் முன்பதிவு செய்ய இயலாது. சபரிமலை செல்பவர்களுக்குப் பம்பையில் குளிக்க அனுமதி இல்லை. அங்கு தங்குவதற்கும் அனுமதி கிடையாது. வெளி மாநிலங்களிலிருந்து சபரிமலை செல்பவர்கள் 'கோவிட் ஜாக்ரதா' என்ற போர்ட்டல் வழியாக அனுமதி சீட்டுக்கு விண்ணப்பிக்க வேண்டும். சபரிமலை செல்வதற்கு இரண்டு நாள்களுக்கு முன்பு ஐ.சி.எம்.ஆர் அங்கீகாரம் பெற்ற ஆய்வகங்களிலிருந்து கொரோனா சோதனை செய்து நெகட்டிவ் சான்றிதழை ஆன்லைனில் அப்லோடு செய்ய வேண்டும் என்பது போன்ற விதிமுறைகள் அறிவிக்கப்பட்டுள்ளன.

அடுத்த கட்டுரைக்கு