Published:Updated:

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!

கேசாவரம் சிவாலயம்
பிரீமியம் ஸ்டோரி
News
கேசாவரம் சிவாலயம்

திருப்பணிக்குக் காத்திருக்கும் கேசாவரம் சிவாலயம்!

இரண்டு வாரங்களுக்கு முன்பு சென்றபோதுகூட அந்த இடம் இப்படியில்லை. அந்தக் கோயிலில் பூஜை செய்துவரும் செல்வம் அந்த இடத்தின் நீர் வளம் குறித்துச் சொன்னபோது, உள்ளூர சிரிப்பு வந்தது.

``இந்த இடத்துக்கு மோக்ஷ த்வீபம் என்று பெயர். வடக்குநோக்கிப் பாய்கிற நதிகளுக்கு உத்திரவாகினின்னு பெயர். உத்திரவாகினியில் நீராடினால் மோட்சம் கிடைக்கும் என்கின்றன நம் புராணங்கள். அப்படி வடக்கு நோக்கிப் பாய்கிற கொசஸ்தலை ஆறு, ஈசனின் திருப்பாதத்தில் உருவானதாகப் புராணங்கள் போற்றும் வ்ருத்த க்ஷீரம் எனும் கூவம் நதி, கல்லாறு ஆகிய மூன்று நதிகளும் இந்தப் பூமியில் சங்கமிக்கின்றன.

அப்படிச் சங்கமிக்கும் இடத்தில் உருவானதே இந்த மோட்சத் தீவு. கங்கையே இங்கு மூன்று நதிகளாகிப் பாய்கிறது என்றும், இந்தத் தலம் தட்சிணகாளகஸ்தி ஆகும் என்றும் கல்வெட்டுக் குறிப்புகள் சொல்கின்றன” என்றார் செல்வம்.

சுற்றிமுற்றிப் பார்த்தோம். முட்புதர்களும் மணல்வெளியுமே இருந்தன. அந்தக் கணத்தில் நமக்குள் `இப்படித்தான் எல்லாவற்றை யும் புராணங்களில் மிகைப்படுத்திவிட்டார்களோ' என்ற சிறு அவ நம்பிக்கை பிறந்தது.

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!

ஆனால் மழைக்குப் பிறகு செல்வம் அனுப்பிவைத்த வீடியோவைக் கண்டதும் மெய்சிலிர்த்தது. வெள்ளம் பெருக்கெடுக்கும் நதி அழகைக் கண்டு வியந்தோம். ஈஸ்வரமுடையாரை மனக்கண்ணில் நிறுத்தி உருகினோம்; முன்னர் மனத்தில் தவறாகக் கணித்ததற்காக மன்னிப்பு வேண்டினோம்.

மேலை நாட்டுக்காரர்கள் எழுதிவைத்த நூல்களை எல்லாம் வரலாறு என்று நம்பும் நவீன மனம், ஏன் நம் தேசத்தில் நம் முன்னோர்கள் எழுதி வைத்தவற்றைக் கட்டுக் கதை என்று புறந் தள்ளுகிறது. அவை எல்லாம் உண்மை என்பதைக் குறிப்பிட்டுக் காட்டவே அடிக்கடி இயற்கையும் பல்வேறு பிரயத்தனங்களைச் செய்கிறது போலும். அப்படி ஒரு பிரயத்தனமே நாம் கண்ட காணொளிக் காட்சி. ஊரே கூடி புதுவெள்ளத்தை வணங்கி, தீபம் ஏற்றி நீரில் விட்டு வழிபடும் காட்சி சிலிர்க்கவைத்தது!

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!

நதிப் படுகைகளை - நீர்நிலைகளை முறைப்படி பராமரித்தால் நம் புண்ணிய பூமி எப்போதும் செழிப்புடன் திகழும். நம் மன்னர்கள் நீர் மேலாண்மையைப் போற்றிப் பாதுகாத்தனர். அப்படி ஒரு மன்னன்தான் முதலாம் குலோத்துங்கன். கலிங்கத்துப் பரணியின் பாட்டுடைத் தலைவனாகிய இவன் மனைவி ஏழுலகமுடையாள்.

ஒருமுறை இருவரும் திருவூறல் தலத்துக்கு வந்தனர். அப்போது இந்தத் தீவின் பெருமைகளை அறிந்து, நதி சங்கமஸ்தானத்துக்கு வந்து தீர்த்தமாடினர். இங்கு பஞ்சாக்ஷர கிரியின்மீது அமைந்திருந்த கூடல்சங்கமேஸ்வரரையும் `கயிலாச ஈஸ்வரம்' என்று போற்றப்பட்ட இத்தலத்தின் சிவனை யும் தரிசனம் செய்தனர் (பஞ்சாக்ஷரகிரி எனும் குன்று 20 ஆண்டுகளுக்கு முன்புவரை இங்கு இருந்தது. ஆனால் இன்று குன்றையும் காணோம், கூடல் சங்கமேஸ்வரரையும் காணோம்).

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!

கயிலாசநாதருக்கென்று ஓர் ஆலயம் இல்லாமல் இருப்பது கண்டு மனம் வருந்திய ஏழுலகமுடையாள். தன் கணவனிடம் சொல்லி அங்கே ஒரு கற்றளியை ஈசனுக்கு உருவாக்கச் சொன்னாள். அவ்வாறு எழுந்த கஜபிருஷ்ட விமானத்தோடு கூடிய கற்றளிதான் பலநூறு ஆண்டுகளைக் கடந்து நிற்கிறது. அற்புதமான இந்த ஆலயத்தை தரிசிக்கும் ஆவலுடன் பேரம்பாக்கத்திலிருந்து புறப்பட்டோம்.

திருவள்ளூர் அருகிலுள்ள பேரம்பாக்கத் திலிருந்து 5 கி.மீ தொலைவு கடந்ததும் வலதுபக்கம் திரும்பச் சொன்னார்கள். சின்ன கிராமத்துக்குள் நுழைவதுபோல் தோன்றினாலும் சில நூறு அடிகளில் கிராமம் முடிந்துவிட்டது. அதன்பின் சாலை என்று ஒன்று இல்லை. ஏரிக்கரையின் மீது செல்லும் வண்டித்தடம் போன்ற பகுதி. அதில்தான் வாகனத்தைச் செலுத்த வேண்டியிருந்தது.

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!

நம்மோடு வழிகாட்டிக் கொண்டு வந்த ஆலயம் கண்டேன் அமைப்பின் பத்மப்ரியா, சில தகவல்களைப் பகிர்ந்துகொண்டார்.

“இப்போதாவது இந்த வழி இருக்கிறது. நாங்கள் முதன் முதலில் தேடி வந்தபோது இந்த இடமெல்லாம் வயல்வெளி; தோட்டங்கள்! அவற்றின் நடுவே நடந்துபோனோம்.

இடதுபுறத்தில் இருப்பது தான் கேசாவரம் அணை. இங்கிருந்துதான் கொசஸ்தலை ஆறும் கூவமும் பிரிகின்றன. வயல்களைக் கடந்துவந்தபோது இந்த ஆலயம் இருளடைந்து கிடந்தது. அவ்வப்போது சிவனடியார்கள் சிலர் வந்து பிரதோஷ பூஜை செய்துபோவதாக அறிந்தோம்.

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!

ரயில்வேயில் பணிபுரியும் பாலாஜி, சி.ஆர்.பி.எஃப் வீரர் பத்மகுமார், டாக்டர் விஜய ராஜ் மற்றும் அவரின் நண்பர்... இவர்களே பிரதோஷ பூஜைகள் செய்கிறார்கள் என்று அறிந்து, அவர்களோடு அறிமுகம் ஆகிக் கொண்டேன். அதன்பின் சிவனடியார்கள் பலரோடும் கலந்து பேசினோம்.

முதல் வேலையாக ஆலயத்துக்கு வந்து செல்ல ஒரு வழி வேண்டும் என்று தோன்றியது. சுற்றி இருந்த வயல்வெளியின் சொந்தக்காரரோடு பேசினோம். முதலில் மறுத்தவர், பின் ஈசனின் திருவுள்ளத்தால் மனம் மாறி இடம் தர சம்மதித்தார். தற்போது இடம் வழங்கிய அந்த அன்பரே கோயிலுக்குப் பலவிதங்களிலும் உதவி வருகிறார். இப்போது நாம் பயணிப்பது நாம் ஈசனுக்காகப் பெற்ற வழியில்தான்” என்றார் பத்மபிரியா.

அடுத்த சில நிமிடங்களில் ஆலயத்தை அடைந்தோம். பழைய கருங்கல் கட்டடம். வாசலிலேயே நந்திதேவர் நம்மை வரவேற்றார். ஆனால் அவர் புதிய நந்தியாகத் தெரிந்தார்.

“பழைய நந்தி சேதம் அடைந்துவிட்டதால் புதிய நந்தி செய்தோம்” என்றார் உடன் வந்த பாலாஜி. இவரும் இவரின் நண்பர்களும்தான் இந்தப் பகுதியில் இருக்கும் பழைய சிவாலயங் களைக் கண்டுபிடித்து வழிபாட்டுக்கு வகை செய்தவர்கள்.

கோயிலின் சிறப்பு கோஷ்ட தெய்வங்கள். குறிப்பாக விநாயகர். எங்கு நின்று தரிசித்தாலும் அவர் நம்மையே பார்ப்பதுபோல் தோன்றும்!

நந்தியை வணங்கி உத்தரவு பெற்று ஆலயத் துக்குள் சென்றோம். உள்ளே பிரமாண்ட திருமேனியராக கயிலாச ஈஸ்வரமுடைய மகாதேவர் லிங்க ரூபனாய் வீற்றிருந்தார். அவரைக் கண்ணாற தரிசித்தோம். பின்பு பிரதட்சிணம் செய்ய வந்தோம்.

“இந்த ஆலயத்தின் விசேஷமே கோஷ்டம் தான். பாருங்கள் இந்தக் கோஷ்டத்தில் இருக்கும் திருமேனிகளை. எல்லாம் முப்பரிமாணத் தோற்றத்தில் அமைந்தவை.

வழக்கமாக கோஷ்டத்துக்குள் அடங்கி யிருக்கும் திருமேனிகள் இங்கு பிரமாண்டமாக கோஷ்டத்துக்கு வெளியேயும் விரிந்து நிற்கும். இதுவே நமக்கு முப்பரிமாண உணர்வை ஏற்படுத்துகிறது. குறிப்பாக இந்த விநாயகர்... நீங்கள் எங்கு நின்று பார்த்தாலும் உங்களையே பார்ப்பார்” என்று பத்ம பிரியா சொல்ல, நாம் பல இடங்களில் நின்று விநாயகரைப் பார்த்து வியந்து - தரிசித்தோம்.

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!

அதன்பின் கோஷ்டத்தில் தட்சிணாமூர்த்தி. அவரின் காலடியில் முயலகன். வழக்கமாகச் சின்ன உருவமாகப் படைக்கப்படும் முயலகன் இங்கு நன்கு பெருத்த மேனியனாக இருந்தான். தட்சிணாமூர்த்தி அவனை மிதிக்கும் கோலத்தை தரிசித்தபோது, எவ்வளவு பெரிய ஆணவமாயினும் இந்தத் தல தட்சிணாமூர்த்தி அதை அழித்து ஞானம் அருள் வார் என்று சொல்வதைப் போல இருந்தது.

கோஷ்டத்தின் பின்புறம் லிங்கோத்பவர். லிங்கோத்பவர் திருவுருவத்தில் அன்ன ரூபம், விஷ்ணு, தாழம்பூ ஆகியன மிகவும் தெளிவாகக் காணும்படி பிரமாண்டமாக இருந்தன. அதற்கு நேர்மேல் விமானத்தில் நரசிம்மர். இந்தக் காட்சியே சிலிர்ப்பூட்டுவதாக இருந்தது.

சைவ வைணவ வேற்றுமை என்பது இல்லாத நிலமாகவும் இந்தத் தலம் இருந்திருக் கிறது என்பதன் சான்றாகவும் அது விளங்கியது.

தொடர்ந்து வலம் வந்தபோது, வடக்குக் கோஷ்டத்தில் துர்கை எழுந்தருளியிருந்தாள். இவள் கொற்றவையின் அம்சம். கைகளில் பிரயோகச் சக்கரம் ஏந்தியிருக்கும் இந்த துர்கை, ஒருகாலை முன்னெடுத்து வைத்து பக்தர்களின் அழைப்புக்கு ஓடோடிவரத் தயாராக நிற்பது போல் அருள்காட்சியருள்கிறாள்.

கோஷ்ட தெய்வங்களில் சில மழையில் நனைந்து சிறிது சிதைந்திருந்தாலும் அவற்றின் கம்பீரமும் அழகும் கொஞ்சமும் மாறவில்லை. மீண்டும் கருவறை வந்து ஈசனைத் தொழுதோம். கற்பூர ஆரத்தியில் ஈசனின் திருவடிவம் மனத்தை நிறைத்தது. உள்ளூர் அடியவர்கள் அங்கு கூடி பதிகங்கள் பாடினார்கள்.

தரிசனம் முடிந்ததும் ஆலயத்தில் காணப் படும் கல்வெட்டுகள் குறித்துக் கேட்டோம்.

“இங்கே மூன்று கல்வெட்டுகள் உள்ளன. அவற்றில் ஒன்று 12-ம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர்காலக் கல்வெட்டு. அதில் இந்த ஆலயத்துக்காக மூன்று கிலோமீட்டர் தொலைவில் உள்ள உரியூர் என்னும் கிராமத்தையும் கைலாசன் நல்லூரையும் இறை யிலி நிலமாக சோழன் அளித்த செய்தியும், ஏழுலகமுடையாள் இங்கு ஆலயம் எழுப்பச் சொன்ன செய்தியும் காணப்படுகின்றன.

17-ம் நூற்றாண்டைச் சேர்ந்த கல்வெட்டு ஒன்றில் இந்தத் தலம் தட்சிண காளஹஸ்தி; இங்கு ஈஸ்வரனை தரிசனம் செய்தால் காசி, கயை ஆகிய தலங்களில் தரிசனம் செய்த புண்ணியம் கிடைக்கும் என்ற செய்தி காணக் கிடைக்கிறது” என்று விளக்கினார் பாலாஜி.

இவ்வளவு வரலாற்றுச் சிறப்பும் ஆன்மிக முக்கியத்துவமும் வாய்ந்த இந்த ஆலயம் பல காலம் பலராலும் அறியப்படாமல் இருந்தது.

`‘இந்த ஆலயத்தை வழிபாட்டுக்குக் கொண்டுவந்த பின்பு, பல்வேறு மக்களும் இதை நாடிவருகிறார்கள். அதிசயங்களும் அற்புதங்களும் நிகழ்கின்றன'’ என்கிறார் தன்னார்வலராக எவ்வித ஊதியமும் இன்றிக் அர்ச்சகராகப் பணியாற்றும் செல்வம்.

“கோவையில் ஒரு பெண் மனநலம் பாதிக்கப்பட்டவர். அவர் கனவில் அடிக்கடி ஒரு சித்தர் தோன்றி, ஓர் ஆலயத்தைக் காட்டி அங்கு வருமாறு அழைப்பாராம். அந்தக் கனவு வரத்தொடங்கியபின் அவள் அந்த ஆலயத்தையே தன் மனத்தில் நினைத்து தியானிக்கத் தொடங்கியிருக்கிறாள்.

சில ஆண்டுகளுக்கு முன் இந்த ஆலயத்தில் பூஜைகள் நடைபெறுவதை அறிந்து ஒரு தனியார் தொலைக்காட்சியிலிருந்து வந்து படம் பிடித்துச் சென்றனர். ஒருநாள் அதிகாலை அந்தப் படம் தொலைக்காட்சியில் ஒளிபரப்பானது. அதை அந்தப் பெண் கண்டாள். அதுதான், தான் கனவில் காணும் ஆலயம் என்பது அவளுக்குப் புரிந்தது.

தன்னையும் அறியாமல் தான் அமர்ந்திருந்த சக்கர நாற்காலியிலிருந்து எழுந்தாள். பல ஆண்டுகளாக நடக்க முடியாமல் இருந்த அவள் எழுந்து தன் நினைவு இல்லாமல் அப்படியே தொலைக் காட்சியை நோக்கி சில அடி தூரம் நடந்துசென்று, அப்படியே கீழே விழுந்து வணங்கினாள்.

இதைக் கண்ட அவளின் தந்தை சிலிர்த்துப் போனாராம். அந்தத் தொலைக்காட்சி நிலையத்துக்கு போன் செய்து நடந்தவற்றைச் சொல்லி, அந்த ஆலயம் எங்கிருக்கிறது என்று விவரம் கேட்டு இங்கு அழைத்து வந்தார்.

அந்தப் பெண் ஈஸ்வரனைக் கண்ட மாத்திரத்தில் உடலும் உள்ளமும் புத்துணர்வு கொண்டு துதித்தாள். அவள் ஈஸ்வரனை ‘அப்பா’ என்று அழைத்து தொழுததைக் கண்ட கிராமமே சிலிர்த்தது.

அதுமட்டுமா, அன்பர்கள் பலரும் இங்கு வந்து வேண்டிக்கொண்டு குழந்தை பாக்கியம் பெற்றிருக்கிறார்கள். எனக்குத் தெரிந்து இந்த ஆறு ஆண்டுகளில் 36 அன்பர்கள் குழந்தை வரம் பெற்ற செய்தியை மகிழ்ச்சியோடு பகிர்ந்துகொண்டார்கள்!

இப்படி வேண்டிக்கொண்டவர்களுக்கு, அவர்களின் வேண்டுதல்கள் அனைத்தையும் அருளும் இந்த ஈசனை நாடி இன்னும் ஏராளமான பக்தர்கள் வரவேண்டும்; வந்து பயன்பெற வேண்டும் என்பதுதான் எங்கள் ஆசை” என்றார் செல்வம்.

செல்வத்தின் ஆசை மட்டுமல்ல, இப்போது நமது ஆசையாகவும் அது மாறியிருக்கிறது.

ஆலயத்தின் கற்கோபுரம் கொஞ்சம் கொஞ்சமாக சிதைவுற்று வருகிறது. அதை இரும்புத் தகடுகள் கொண்டு அணைத்து கயிற் றால் வைத்துக் காப்பாற்றுகிறார்கள். ஒரு பெருமழை அதைக் குலைத்துவிடலாம். அப்படி நிகழ்வதற்கு முன் ஆலயம் மீண்டும் புனரமைக்கப்பட வேண்டும். அதற்கு ஏராளமான பக்தர்களின் வருகையும் நிதி உதவியும் தேவை.

சிவாலயத் திருப்பணிக்கு உதவுவது, நாம் சேர்த்த செல்வத்துக்கு அர்த்தம் சேர்க்கும் ஓர் அரிய வாய்ப்பு. ஒரு பிடி பிட்டுக்கு மண் சுமந்து வந்திக்கு மோட்சமளித்தவன் ஈசன். சிறிய அன்புக்கே நெகிழ்ந்து போகும் நம்பிரான், சிவாலயத் திருப்பணிக்கான பங்களிப்புக்கு நிச்சயம் பலன் அருள்வான். நீங்காத செல்வமும் புகழும் அருள்வான்.

குலோத்துங்கச் சோழன் அமைத்த இக்கோயில் பொலிவுபெற வேண்டுமென்றால் பக்தர்கள் பலர் ஒன்றுசேர்ந்தால் மட்டுமே முடியும். அப்படி ஒன்று சேர்ந்து கயிலாச ஈஸ்வரமுடைய மஹாதேவரின் ஆலயத்தைப் புனரமைப்போம்; சிவனருள் பெறுவோம்.

எப்படிச் செல்வது?!: வேலூர் மாவட்டம் பேரம்பாக்கத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் உள்ளது கேசாவரம். புறநகர் ரயிலில் பயணம் மேற்கொள்பவர்கள், கடம்பத்தூர் ஸ்டேஷனில் இறங்கிக்கொள்ளலாம். அங்கிருந்து சாலை மார்க்கத்தில் பயணித்தால் புதுகேசாவரம் செக்போஸ்டை அடையலாம். அங்கிருந்து ஒன்றரை கி.மீ. தொலைவில் உள்ளது ஆலயம்.

பேரம்பாக்கம், மாரிமங்கலம், புதுகேசாவரம் மற்றும் தக்கோலத்திலிருந்து ஆட்டோ வசதி உண்டு (தொடர்புக்கு: 99766 71701).

வங்கிக் கணக்கு விவரம்:

Sri Kailasan Eeswaramudaiya Mahadevar Seva Trust - Kesavaram

Federal Bank - Acc N0: 18380200002604

IFSC : FDRL0001838

ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!
ஆலயம் தேடுவோம்: கனவில் சித்தர் காட்டிய திருக்கோயில்!