Election bannerElection banner
Published:Updated:

Rama Navami: தென்னிந்தியாவின் அயோத்தி போயிருக்கிறீர்களா... இந்தக் கோயிலின் சிறப்புகள் என்னென்ன?

தென்னக அயோத்தி - ராமசாமி திருக்கோயில்
தென்னக அயோத்தி - ராமசாமி திருக்கோயில்

இந்த ஆலயத்தை பக்தர்கள் 'தென்னக அயோத்தி' என்றே அழைக்கிறார்கள். காரணம், இந்த ஆலயத்தின் கருவறையில், ஶ்ரீ ராம பிரான் பட்டாபிஷேக திருக்கோலத்திலேயே காட்சி தருகிறார்.

பொதுவாக ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று அல்லது ஒன்பது என்னும் கணக்கில் வலம் வருவோம். அவ்வாறு ஓர் ஆலயத்தின் பிராகாரத்தில் மூன்று முறை வலம் வந்தாலே சம்பூர்ணமாக ராமாயணத்தைப் பாராயணம் செய்த பலன் கிடைக்கும் என்றால் நம்புவீர்களா... அப்படி ஓர் அற்புதக் கோயில் கும்பகோணத்தில் இருக்கிறது. அந்த ஆலயத்தில் விசேஷம் குறித்து அறிந்துகொள்வதற்கு முன்பாக இந்த ஆலயத்தை எழுப்பிய மன்னன் குறித்து முதலில் அறிந்துகொள்வோம்.

ஶ்ரீராமர்
ஶ்ரீராமர்

ராம பக்தியில் திளைத்த மன்னன்

கும்பகோணத்தில் இருக்கிறது ராமசாமி கோயில். பழைமையான இந்தக் கோயிலைக் கட்டியவர் தஞ்சையை ஆண்ட ரகுநாத நாயக்கர் என்பார். இவருக்கு ராம சரிதத்தைக் கேட்பதிலும் படிப்பதிலும் பேரார்வம் இருந்தது. தினமும் தன் அவையில் ராமாயணத்தைப் படிக்கச் சொல்வாராம். பண்டிதர்கள் அந்தப் புண்ணியக் கதையைக் கேட்கும்போது மெய் சிலிர்ந்துக் கேட்பாராம். ராமாயணத்தைப் படிக்கும் பண்டிதர்களுக்குத் தன் கையாலேயே தாம்பூலம் மடித்துக்கொடுத்து மகிழ்வானாம். அதனால் இந்த மன்னனுக்கு, 'அனுவிரத ராமகதாம்ருத சேவகன்' என்னும் திருப்பெயர் ஏற்பட்டது என்கிறார்கள். அத்தைகய ராம பக்தர் எடுப்பித்த கோயில்தான் குடந்தை ராமசாமி கோயில்.

குடந்தை - கோயில் நகரம். திரும்பும் திசையெங்கும் கோபுரங்கள் அழகு செய்யும் ஊர். சைவம் வைணவம் ஆகிய இரு சமயங்களின் ஆலயங்களும் நிறைந்திருக்கும் க்ஷேத்திரம். காசிக்கு நிகரான புனிதமும், அயோத்திக்கு நிகரான சிறப்பும் கொண்ட தலம். கலையும் ஆன்மிகமும் கலந்து செழித்திருக்கும் பூமி. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த புண்ணிய பூமியான குடந்தையில் நடுநாயகமாகத் திகழ்கிறது இந்த ராமசாமி திருக்கோயில்.

தென்னிந்தியாவின் அயோத்தி!

இந்த ஆலயம் கி.பி 1614ம் ஆண்டு இந்த ஆலயம் கட்டப்பட்டது. குடந்தைக்கு அருகே உள்ள தாராசுரத்தில் குளம் வெட்டும்போது ஶ்ரீராமன் மற்றும் ஶ்ரீ சீதா தேவியின் மூர்த்தங்கள் கிடைத்தன. இதைக் கண்டு மகிழ்ந்த ரகுநாத நாயக்க மன்னர், குடந்தையில் இந்த ஆலயத்தை எழுப்பி இந்த மூர்த்தங்களைப் பிரதிஷ்டை செய்தார் என்கிறது தல வரலாறு.

இந்த ஆலயத்தை பக்தர்கள் 'தென்னிந்தியாவின் அயோத்தி' என்றே அழைக்கிறார்கள். காரணம், இந்த ஆலயத்தின் கருவறையில், ஶ்ரீ ராம பிரான் பட்டாபிஷேக திருக்கோலத்திலேயே காட்சி தருகிறார். மூலஸ்தானத்தில் ஶ்ரீ ராம பிரானும் சீதா பிராட்டியும் ஒரே பீடத்தில் அமர்ந்து காட்சி அருள்கின்றனர். பரதன் குடைபிடிக்க, சத்ருக்கனன் சாமரம் வீச, இலக்குவணன் ராமச்சந்திர மூர்த்தியின் வில்லையும் சேர்த்துத் தாங்கி நிற்கும் திருக்கோலத்தில் காட்சி தருகின்றனர்.
குடந்தை ராமசாமி கோயில்
குடந்தை ராமசாமி கோயில்

'அரியணை அனுமன் தாங்க' என்று பாடுவார் கம்பநாட்டாழ்வார். ஆனால் இங்கோ, ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியையும் சீதா தேவியையும் தரிசித்தபடி கருவறையின் வலப்புறத்தில் மாறுபட்ட திருக்கோலத்தில் அமர்ந்திருக்கிறார் அனுமன். ராம கானப் பிரியனான இந்த அனுமனின் திருக்கரத்தை வீணை அலங்கரிக்கிறது. சதா சர்வ காலமும் ஶ்ரீ ராமபிரானின் சந்நிதியில் அமர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்யும் சிரஞ்சீவியாக இங்கு அனுமன் அருள்பாலிக்கிறார். இந்த சந்நிதியில் சில கணங்கள் நின்று ராம நாமத்தை உச்சரிப்பவர்கள், ஶ்ரீராமச்சந்திர மூர்த்தியின் அருளைப் பெறுவதோடு ஶ்ரீ ஆஞ்சநேயரின் பாதுகாப்பையும் அடைவார்கள் என்பது நம்பிக்கை.

இந்த ஆலயத்தின் அர்த்த மண்டபத்தில் கரம்கூப்பி ராமபிரானை வழிபடும் கோலத்தில் காட்சி தருகிறது கோவிந்த தீட்சிதரின் சிற்பம். இவரே இந்தத் திருப்பணியில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக்கொண்டவர்.

ஆலயத்தின் மகாமண்டபச் சிற்பங்கள் அனைத்தும் கண்ணுக்கு விருந்தளிக்கும் கலைப்பொக்கிஷங்கள். நாயக்கர் காலக் கலையின் சான்றுகள். இந்த மகாமண்டபத்தில் இருக்கும் சிற்பங்கள் எவை?

இந்த ஆலயத்தின் பல்வேறு சிறப்புகளில் குறிப்பிடத்தக்கன இரண்டு. ஒன்று, ஆலயத்தின் மகாமண்டபச் சிற்பங்கள். மற்றொன்று பிராகாரச் சித்திரங்கள். அந்த பிராகாரச் சித்திரங்களின் மகிமை என்ன? மகாமண்டபத்தில் உள்ள சிற்பங்களின் சிறப்பு யாது... இந்த ஆலயத்தில் மும்முறை பிராகார வலம் வந்தால் முழு ராமாயணத்தையும் பாராயணம் செய்த பலன் கிடைக்குமாம். அது எவ்வாறு என்னும் தகவல்களை அறிந்துகொள்ளக் மேலே உள்ள வீடியோவைப் பாருங்கள்.

ராமபிரானின் திருக்கோயிலை தரிசித்துப் பல்வேறுப் புண்ணிய பலன்களை அடையுங்கள்.

Election bannerElection banner
அடுத்த கட்டுரைக்கு