Published:Updated:

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 2 | ராயகோபுரம் - கைவிடப்பட்ட பிரமாண்டமும் அதன் வரலாறும்!

மதுரை ராயகோபுரம்

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் மற்ற கோபுரங்களின் அடிப்பகுதியைவிட, ராயகோபுரத்தின் அடிப்பகுதி மூன்று மடங்கு பெரிதானது. திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது. இதன் அஸ்திவாரத்தூண்கள் ஒரே கல்லால் ஆனது.

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 2 | ராயகோபுரம் - கைவிடப்பட்ட பிரமாண்டமும் அதன் வரலாறும்!

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் மற்ற கோபுரங்களின் அடிப்பகுதியைவிட, ராயகோபுரத்தின் அடிப்பகுதி மூன்று மடங்கு பெரிதானது. திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது. இதன் அஸ்திவாரத்தூண்கள் ஒரே கல்லால் ஆனது.

Published:Updated:
மதுரை ராயகோபுரம்
மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்குப் போகிறவர்கள் புதுமண்டபத்தை எட்டிப்பார்க்காமல் வருவதில்லை. புத்தகக்கடைகளும், பாத்திரக்கடைகளும், தையல் கலைஞர்களும், வண்ண வண்ணத் துணிப் பைகளும், ஆயாக்களின் சுருக்கு பைகளும், வளையல் கடைகளுமாய் எப்போதும் 'ஜேஜே' என்று இருக்கும். இந்த மண்டபத்தின் கிழக்கே உள்ளது எழுகடல் தெரு.

புதுமண்டபத்தின் உயிரோட்டத்திற்கு சற்றும் குறையாத ஜீவனோடு இயங்கும் தெரு. கடைகளின் கடல் என்று கூடச்சொல்லலாம். நெரிசலும், சந்தடியும் மிகுந்த தெரு. இந்த இடத்தில் யாரும் பார்க்காமல் கடந்துவிட முடியாத எழிலாய் எழுந்து நின்கிறது ராயகோபுரம்.

சிற்ப அழகுகள் நிரம்பிய கற்தூண்கள் நுழைவாசல் போல, ஆனால் முடிவில்லாமல் வானத்தைப் பார்த்தபடி ஏகாந்தமாய் நிற்கும் பேரெழில். அத்தனை நெரிசல்களுக்கும் ஆக்கிரமிப்புகளுக்கும் இடையே ‘ஒரு வரலாற்றின் சாட்சியாய் நான் நிற்கிறேன்’ என்கிற கம்பீரம் அதில் தொனிக்கும்.

மீனாட்சியம்மன் கோயில்
மீனாட்சியம்மன் கோயில்
என்.ஜி.மணிகண்டன்

பல நூற்றாண்டுகளாய் வாழ்க்கை வீசியெறியும் அன்றாடச் சவால்களைச் சந்திக்கத் தலைதெறிக்க ஓடும் மனிதர்களைப் பார்த்தபடி பூமிக்குக்கீழ் 15 அடி, மேலே 35 அடி என நிமிர்ந்து நிற்கிறது இந்த கோபுரம். இதுதான் மதுரையில் திருமலை நாயக்கர் நிர்மாணிக்க நினைத்த ராயகோபுரம். அடித்தளத்தோடு நிற்கும் மதுரை வரலாற்றின் மற்றுமொரு பக்கம்.

மதுரை சுற்றுவட்டாரப் பகுதியில் யாராவது, ‘மணலைக் கயிறாத் திரித்துவிடுவேன்; வானத்தையே வில்லாக வளைத்துவிடுவேன்’ என்று சாத்தியமற்றவற்றைச் செய்துகாட்டுவதாக வாய்ச்சவடால் அடிப்பதைக் கண்டால் ஊர்ப் பெரியவர்கள், “வந்துட்டாருய்யா, ராயகோபுரத்துக்கு அடி போட்டா மாதிரி” என்று நக்கலாகச் சொல்லிச் சிரிப்பார்கள். முடியாதவற்றின் வரலாற்றுத் தடமாகவே மாறிவிட்ட ராயகோபுரம் குறித்த சில தகவல்களைக் காண்போம்.

‘ராய’ என்பதற்குத் தெலுங்கு மொழியில் ‘கல்’ என்று பொருள். கல்லாலேயே கட்டப்படும் கோபுரம் என்பதால் இதற்கு 'ராயகோபுரம்' என்று பெயர். கிருஷ்ணதேவ ராயர் வழிவந்த நாயக்க மன்னர்களில் ஒருவரான திருமலை நாயக்கரின் முன்னெடுப்பில் ஆரம்பிக்கப்பட்ட மிகப்பெரிய பணி இந்த ராயகோபுரம் கட்டும் பணி! ராயர் என்பது அரசரையும் குறிக்கும் சொல்.

மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில் மதுரை செழிப்பான நகரமாய் உருவெடுத்தது என்று வரலாறு சொல்கிறது. இந்தக் காலகட்டத்தில், எதிர்கொண்ட போர்களில் வெற்றி; விஜயநகரப் பேரரசிடமிருந்து விலகித் தன்னாட்சி; திருச்சியில் இருந்த நாயக்க அரசின் தலைநகரை மதுரைக்கு மாற்றியது என எப்போதும் திருவிழாக்களும், கொண்டாட்டங்களுமாய் மாறி வளர்ந்தது மதுரை மாநகரம். நீர்நிலைகளின் பராமரிப்பு, வண்டியூர் மாரியம்மன் தெப்பக்குளம் என மிகப்பெரிய குளத்தை வெட்டியது என பசுமையும் செழுமையுமாக திருமலை நாயக்கர் காலத்தில் மதுரை வளமிக்க நகராக உருவெடுத்தது என வரலாறு சொல்கிறது. அமைதி நிலவும் காலத்தில் கலைகள் செழிப்புற்று வளரும்தானே!

மதுரை ராயகோபுரம்
மதுரை ராயகோபுரம்

திருமலை நாயக்கர் கலை ஆர்வலராகவும் இருந்திருக்கிறார். மிகப்பெரிய கனவுகளைச் சுமந்திருக்கிறார். தமிழக முகமதிய கூட்டுக் கலையாக, மிகப்பெரிய திருமலை நாயக்கர் மகால் இவரது காலத்தில் கட்டப்பட்டதுதான். இதனைத் ‘தென்னிந்தியாவின் தாஜ்மகால்’ என்று சொல்வதுமுண்டு. மீனாட்சியம்மன் கோயிலின் அடையாளங்களில் ஒன்றாக இன்றும் ஜீவனோடு இயங்கிக் கொண்டிருக்கும் புதுமண்டபமும் இவரது காலத்தில்தான் கட்டி முடிக்கபட்டது. திருமலை நாயக்கர் வைணவ பக்தரான போதும், மத நல்லிணக்கத்தில் நம்பிக்கையும் பற்றும் உள்ளவர். அவரது ஆட்சிக் காலத்தில்தான் ஊட்டத்தூர் முதல் குமரி வரை உள்ள 64 வைணவ, சைவக் கோயில்களில் ராயகோபுரம் என்கிற கல்லாலான வானுயர்ந்த கோபுரங்களைக் கட்டும் பணிக்கு அடிக்கல் போடப்பட்டது. (இந்த 64 கோயில்களின் பட்டியல் யாருக்கும் சரியாகத் தெரியவில்லை. பாண்டிப் பதிநான்கு கோயில்கள் என்று பாடல்பெற்ற சைவக் கோயில்களை மட்டும் பட்டியலிடுகிறார்கள்.)

மதுரை மீனாட்சி சுந்தரேசுவரர் கோயிலின் மற்ற கோபுரங்களின் அடிப்பகுதியைவிட, ராயகோபுரத்தின் அடிப்பகுதி மூன்று மடங்கு பெரிதானது. திராவிடக் கட்டடக்கலைப் பாணியில் கட்டப்பட்டது. இந்த ராயக்கோபுரத்தின் சிறப்பு என்னவென்றால், இதன் அஸ்திவாரத்தூண்கள் ஒரே கல்லால் ஆனது. இதன் உயரம் ஐம்பது அடிகள். இத்தூண்களின் அடிப்பகுதி நிலத்தில் பத்து அடிகள் ஆழத்தில் நிலைகொண்டிருக்கிறது. ஒரு வேளை மீனாட்சி அம்மன் கோயில் ராயகோபுரம் கட்டி முடிக்கப்பட்டிருந்தால், தென்னிந்தியாவிலேயே மிக உயரமான, பிரமாண்டமான, சிற்ப எழில்கொஞ்சும் கோபுரமாக அமைந்திருக்ககூடும்.

இப்போதும் புதுமண்டபத்திற்கு கிழக்கே எழுகடல் தெருவில், நெருக்கியடித்து வளர்ந்திருக்கும் மொத்தக் கடைகளுக்கிடையே, அழகுமிக்க சிற்பங்களோடு நம்மை எட்டிப்பார்க்கிறது ராயகோபுரத்தின் அடித்தளம். முழுவதும் மறைக்கப்படுவதற்குள் மதுரை மீனாட்சியம்மன் கோயிலுக்கு வருகிறவர்கள் இந்த கோபுரத்தின் அடித்தளத்தை மறக்காமல் பார்த்துவிடவேண்டும்.

மதுரை ராயகோபுரம்
மதுரை ராயகோபுரம்

ஸ்ரீரங்கத்தில் கட்டாமல் விட்ட ராயகோபுரம் சமீபத்தில்தான் கட்டி முடிக்கப்பட்டு, குடமுழுக்கு செய்யப்பட்டது. திருமலைநாயக்கர் ஏன் இதனை முடிக்காமல் விட்டார் என்பதற்கு ஒரு செவிவழிக் கதை சொன்னார் திருவேடகத்தில் வாழும் பெரியவர் ஒருவர். பணி நடைபெற்றுக்கொண்டிருந்த நாளில், அடிக்கல் நாட்டிய தூணில் ஒரு தேரை இருந்தததைப் பார்த்தார்களாம் சிற்பிகள். இந்தக் கல்லில் தேரை வாழ்கிறது என்றால், ஈரமும், காற்றும் உட்புகும் இளங்கல்லாக அது இருக்கலாம். அந்த மாதிரியான கல் கோபுரம் கட்ட நல்லதல்ல என்று அப்படியே பணியைப் பாதியில் விட்டு விட்டார்களாம். அவருக்குப் பின்னால் வந்த மன்னர்கள் இந்தக் கோபுரங்களில் பெரிதும் ஆர்வம் காட்டாததும் காரணமாய் இருக்கலாம்.

ஒரே நாளில் 64 கோயில்களில் அடிக்கல் நாட்டியதாகச் சொல்லப்படும் முழுமையடையாத ராயகோபுரங்கள், பல கேள்விகளுக்கு பதில் தேட வைக்கின்றன.

ஊட்டத்தூர் முதல் குமரி வரை உள்ள 64 கோயில்கள் என்பதை எந்த அடிப்படையில் தேர்ந்தெடுத்து அடித்தளமிட்டார்கள்? ராயகோபுரத்தை 64 கோயில்களிலும் ஒரே உயரத்தில் கட்ட திட்டமிட்டிருந்தார்களா? ஓர் இடத்தில் இருந்துதான் இப்படி 50 அடி உயரமுள்ள ஒரே கல்லால் ஆன தூண்கள் எடுத்து வரப்பட்டனவா? சுதைச் சிற்பங்களால் கோபுரங்களை எழுப்பும் காலத்தில் கல்லால் மிக உயர்ந்த கோபுரங்கள் கட்டும் கனவு திருமலை நாயக்கருக்கு எப்படித் தோன்றியது? போர்களா, கட்டிடக்கலைஞர்கள், சிற்பிகளின் மனத்தாங்கலா, பொருள் போதாமையா... இப்படி எந்தக் காரணத்தால் திருமலை நாயக்கரின் இந்த ராயகோபுரக் கனவு ஏன் நனவாகவில்லை எனப் பலப்பல கேள்விகளைப் பார்க்கிறவர்களின் மனசுக்குள் எழுப்புகிறது ராயகோபுரம்.

திருவேடகம் ராயகோபுரம்
திருவேடகம் ராயகோபுரம்

சைவக் கோயில்களான ‘பாண்டி பதினான்கு கோயில்கள்’ என்று சொல்லப்படுகிற மதுரை மீனாட்சியம்மன் கோயில், திருப்பரங்குன்றம், திருவேடகம், திருவாப்புடையார் கோயில், திருப்புவனம், கொடுங்குன்றம் என்கிற பிரான்மலை, காளையார்கோவில், திருப்புனவாயில், திருவாடனை, திருப்பத்தூர், திருச்சுழி, ராமேஸ்வரம், திருநெல்வேலி, குற்றாலம் ஆகிய ஊர்களில் உள்ள சிவன் கோயில்களில் அடித்தளம் மட்டும் போடப்பட்டு முற்றுப்பெறாத நிலையில் இருக்கும் ராயகோபுரங்களின் மிச்ச சொச்சங்களை இப்போதும் பார்க்கலாம். ஒரு வேளை, இன்றைய நகர் வளர்ச்சியில், சில கற்தூண்கள் காணாமல் போயிருக்கலாம். சில புதைந்திருக்கலாம். சில ஆக்கிரமிப்பில், சாலை விரிவாக்கத்தில் அகற்றப்பட்டிருக்கலாம்.

ஆனால், முழுதாகக் கட்டி முடிக்கப்படாமல் நிற்கிற இந்த மொட்டைக் கோபுரங்களுக்குப் பின்னால் ஒவ்வோர் ஊரிலும் சில நாட்டார் கதைகளும், வரலாறுகளும் உள்ளன. கைவிடப்பட்ட காலம் நம் கண்முன் நிற்கிறபோது அதை வாஞ்சையோடு வருடிப் பார்ப்போம். புதைந்துகிடக்கும் வரலாறுகள் நம் மனதோடு பேசக்கூடும்.