Published:Updated:

குலசையில் எதிரொலிக்கும் காளி கோஷம்! - மகிஷா சூரசம்ஹாரத்தைக் காணக்குவிந்த பக்தர்கள்

மகிஷா சூரசம்ஹாரத்தைக் காண தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் குவிந்துள்ளனர். பக்தர்களின் “ஓம் காளி.. ஜெய் காளி” கோஷம் விண்ணை முட்டுகிறது.

காளி வேடமணிந்த பக்தர்கள்
காளி வேடமணிந்த பக்தர்கள்

இந்தியாவில் கர்நாடக மாநிலம் மைசூரு சாமுண்டீஸ்வரி அம்மன் கோயிலுக்கு அடுத்தபடியாக தமிழகத்தில், தூத்துக்குடி மாவட்டத்தில் குலசை என்றழைக்கப்படும் குலசேகரப்பட்டினம் முத்தாரம்மன் கோயிலில்தான் தசரா திருவிழா விமரிசையாகக் கொண்டாடப்படுகிறது. இந்த ஆண்டு தசரா திருவிழா, கடந்த 29-ம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகிஷா சூரசம்ஹாரம் (கோப்பு படம்)
மகிஷா சூரசம்ஹாரம் (கோப்பு படம்)

இத்திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான மகிஷா சூரசம்ஹாரம், இன்று இரவு 12 மணிக்குக் கடற்கரையில் நடைபெற உள்ளது. இதை முன்னிட்டு, இரவு 11 மணிக்கு அம்பாளுக்குச் சிறப்பு அலங்கார பூஜை நடைபெறுகிறது. இதைத் தொடர்ந்து, சிம்ம வாகனத்தில் மகிஷாசூரமர்த்தினி திருக்கோலத்தில் விரிசடை கூந்தலுடன், கையில் திரிசூலம் ஏந்தியபடி எழுந்தருளி, கடற்கரைக்குச் செல்கிறார்.

அங்கு, போர் புரியக் காத்திருக்கும் மகிஷாசூரனை வதம் செய்யும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. முதலில் தன் முகத்துடன் வந்த மகிஷாசூர வதமும், இரண்டாவதாக யானைமுகம், மூன்றாவதாக சிங்கமுகம் மற்றும் இறுதியாக சேவல் உருவம் என மகிஷாசூரனின் நான்கு முக சம்ஹாரமும் நடைபெறுகிறது. அதற்குப் பிறகு, வதம் செய்த வெள்ளி திரிசூலம், கடலில் நனைக்கப்படுகிறது.

வேடமணிந்த பக்தர்கள் கூட்டம்
வேடமணிந்த பக்தர்கள் கூட்டம்

பின்னர், விரிந்த தலைக்கூந்தல் இயல்பாகவும், கையில் ஏந்திய திரிசூலம் சாந்தமாகவும் மாற்றப்பட்டுக் கடற்கரை மேடையில் சிறப்பு தீபாராதனையும் நடைபெறுகிறது. அம்பாளின் போர்க்கோலக் கோபம் நீங்கி, தாய்க்கோலம் கொண்டு பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் விதமாக, தொடர்ந்து சாந்தாபிஷேக ஆராதனையும் தேர்பவனியும் நடைபெறுகிறது. காப்புக் களைதலுடன் விழா நிறைவு பெறுகிறது.

தூத்துக்குடி, நெல்லை, கன்னியாகுமரி மாவட்டங்கள் மட்டுமல்லாமல் தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் சூரசம்ஹார நிகழ்ச்சியைக் காணப் பல்வேறு வேடமணிந்த லட்சக்கணக்கான பக்தர்கள் குழுக்களாக மேள, தாளம் முழங்க ஆட்டம் பாட்டத்துடன் குலசை நோக்கிப் படையெடுத்து வருகிறார்கள்.

ஆக்ரோஷத்துடன் காளி வேடமணிந்த பக்தர்
ஆக்ரோஷத்துடன் காளி வேடமணிந்த பக்தர்

இதில், காளி, அம்மன், துர்கை போன்ற வேடமணிந்து தீச்சட்டி ஏந்தி ஆடி வரும் பக்தர்கள் எழுப்பும் குலவைச் சத்தமும், ஆக்ரோஷம் நிறைந்த ஆட்டமும் நிறைந்த காட்சி மெய்சிலிர்க்க வைக்கிறது.

பக்தர்களின் ``ஓம் காளி.. ஜெய் காளி” கோஷமும், அம்மன் பாடல்களும் விண்ணை முட்டுகின்றன. திரும்பும் திசையெங்கும் வேடமணிந்த பக்தர்களாலும் மாலை அணிந்த செவ்வாடை பக்தர்களாலும் குலசையே குலுங்கி உள்ளது.

ஆக்ரோஷத்தில் காளி பக்தர்
ஆக்ரோஷத்தில் காளி பக்தர்

இது தவிர, பக்திச் சொற்பொழிவுகள், கரகாட்டம், ஒயிலாட்டம், மயிலாட்டம், சின்னத்திரை நட்சத்திரங்களின் மேற்கத்திய நடனமும் ஆங்காங்கே நடந்து வருகிறது.

தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும் குலசைக்குச் சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளன. மாவட்ட எஸ்.பி அருண்பால கோபாலன் தலைமையில் சுமார் 1,600 போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

குலசைக்குச் செல்லும் பக்தர்கள்
குலசைக்குச் செல்லும் பக்தர்கள்

குற்றச் செயல்களைத் தடுக்கும் வகையில் கடற்கரைப் பகுதி, கோயில் வளாகம், சாலைச் சந்திப்புகள் என சுமார் 120 இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் மூலம் பக்தர்கள் கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.