Published:Updated:

நல்லது நடந்தது! - 1,100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஶ்ரீ கார்கோடபுரீஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம்!

எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார்.

பாரத நாடு ஆன்மிக பூமி. அதற்கு எடுத்துக்காட்டு ஊர்தோறும் எழுந்தருளும் ஆலயங்கள். நம் முன்னோர்கள் ஊர்தோறும் கோயில்கள் அமைத்து ஆன்மிகம், கலை, கல்வி ஆகியவற்றைப் போற்றி வளர்த்தனர். ஆனால் அவை எல்லாம் பிற்காலத்தில் பராமரிப்பு இன்றிச் சிதிலமடைந்தன. 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பாபிஷேகம் செய்து புதுப்பிக்க வேண்டும் என்பது ஆகம விதி. ஆனால் ஓர் ஆலயம் 1,100 ஆண்டுகளாகக் கும்பாபிஷேகம் காணாமலும் புனரமைக்கப்படாமலும் இருந்தது.

சக்தி விகடன் இதழில் புனரமைக்கப்பட வேண்டிய ஆலயங்களைத் தேடிக்கண்டுபிடித்து வாசகர்களின் கவனத்துக்குக் கொண்டு செல்வது வழக்கம். அவ்வாறு 2 ஜூலை 2019-ம் அன்று வெளியான சக்தி விகடன் இதழில் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள காக்க மொழி கிராமத்தில் எழுந்தருளியிருக்கும் ஶ்ரீ கார்கோடக புரீஸ்வரர் கோயில் குறித்து எழுதியிருந்தோம்.
ஶ்ரீ கார்கோடக புரீஸ்வரர்
ஶ்ரீ கார்கோடக புரீஸ்வரர்

நளமகராஜன், ஆதிசேஷன், பரீட்சித்து, குண்டுச் சித்தர் போன்றோரின் முன்வினைத் துயரங்களைத் தீர்த்து சகல நலங்களும் அருளிய ஈசன் காக்கமொழி கார்கோடகபுரீஸ்வரர். இந்த ஆலயத்துக்குச் சென்று கார்கோடகபுரீஸ்வரரை வணங்கினால், ஏழேழ் பிறவிகளிலும் அவர்கள் அறிந்தும் அறியாமலும் செய்த பாவங்கள் நீங்கிவிடும் என்கிறது தலபுராணம். ஆயிரம் ஆண்டுகளைக் கடந்த இந்த ஆலயம் பாழ்பட்டுக் கிடக்கிறது என்று அறிந்து அதை சக்தி விகடனில் இதழில் 'ஆலயம் தேடுவோம் பகுதியில் எழுதினோம். வாசகர்களின் பங்களிப்பாலும், நல்ல உள்ளங்களின் ஒத்துழைப்பாலும் தற்போது ஆலயம் புனரமைக்கப்பட்டு நாளை கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

நலமே அருளும் இந்த ஆலயத்தில் ஸ்ரீ கற்பகாம்பாள், பைரவ மூர்த்தி, ஸ்ரீநடராஜர், கார்கோடகன் எனும் நாகன், நவகிரகங்கள் ஆகிய தெய்வச் சந்நிதிகள் உள்ளன. சந்திர புஷ்கரணி தீர்த்தம்; வில்வம் தல விருட்சம். இங்குள்ள தீர்த்தத்தில் நீராடி வெள்ளி நாக மோதிரத்தை உண்டியலில் செலுத்தினால் ராகு - கேது தோஷம் நீங்கும்; வில்வ மரத்தில் தொட்டில் கட்டி வேண்டிக்கொண்டால், சந்தான வரம் கிட்டும்; நாகர் சிலைகளுக்கு மஞ்சள் கயிறு கட்டி வழிபட்டால், கல்யாண வரம் கிடைக்கும் என்று கூறுகிறார்கள்.

ஸ்ரீ கற்பகாம்பாள்
ஸ்ரீ கற்பகாம்பாள்

எப்போதும் இங்கே 18 விதமான சிவ கணத்தாரும் இங்குவந்து ஈசனிடம் வேண்டிய வண்ணமே இருப்பதால், அவர்களின் வேண்டுதல்களை செவிமடுக்கும் விதமாக, இங்குள்ள நந்திதேவர் தலையை வலப்புறமாகச் சாய்த்தே அமர்ந்துள்ளார். இந்த ஆலயத்தில் நித்ய பிரதோஷம் நடைபெற்று வருவதால் இதில் கலந்துகொண்டு வழிபடுபவரின் பிரார்த்தனைகளும் விரைவில் நிறைவேறும் என்பது நம்பிக்கை. மேலும் ஆதிசேஷனும் கார்கோடகனும் தொழுத தலம் என்பதால் இங்கு வந்தாலே நாக தோஷம் நீங்கும். ராகு - கேது இருவருக்கானப் பரிகாரத் தலமாகவும், சனியின் பாதிப்பிலிருந்து விடுபட நளனுக்கு அருள் செய்த தலம் என்பதால், சனி தோஷ நிவர்த்தித் தலமாகவும் இது திகழ்கிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

அதுமட்டுமில்லை கார்கோடகன் நளனைத் தீண்டி தண்டனைப் பெற்றதால், இந்த ஊரில் இன்றுவரை எந்த நாகமும் எந்த ஜீவராசியையும் தீண்டுவதில்லை என்று ஆச்சர்யம் தெரிவிக்கிறார்கள் ஊர் மக்கள். மனநலம் பாதிக்கப்பட்டவர்கள், நாக தோஷ பாதிப்பு கொண்டவர்கள், உறவுகள் - சொத்துக்கள் இழந்தவர்கள் இங்கு வந்து கார்கோடகனுக்கு வெண்பட்டு வஸ்திரம் சாத்தி, மருக்கொழுந்து மொட்டு அல்லது தாழம்பூ சூட்டி வழிபட்டால், எல்லா சிக்கலும் தீர்ந்து நலம் பெறுவார்கள் என்கிறது தலவரலாறு.

நல்லது நடந்தது! - 1,100 ஆண்டுகளுக்குப் பிறகு நடைபெறும் ஶ்ரீ கார்கோடபுரீஸ்வரர் ஆலயக் கும்பாபிஷேகம்!

பெருமைகள் பல கொண்ட இந்த ஆலயத்துக்கு 1100 ஆண்டுகளுக்கு பிறகு வரும் தை 22-ம் நாள் அதாவது 4.2.2021 அன்று மகாகும்பாபிஷேக பெருவிழா நடைபெற உள்ளது. இந்த சிறப்பு வைபவத்தில் கலந்து கொண்டு ஈசன் அருளால் தங்களின் பிறவி பயன் அடைய ஓர் அறிய வாய்ப்பை ஆலய நிர்வாகம் ஏற்பாடு செய்துள்ளது. இந்த நல்ல சந்தர்ப்பத்தில் பக்தர்கள் திரளாகக் கலந்து கொண்டு திருவருள் பெற வேண்டுமாய்க் கேட்டுக்கொள்கிறோம் என ஆலய நிர்வாகத்தினர் கேட்டுக்கொண்டுள்ளனர்.

எப்படிச் செல்வது?

காரைக்காலிலிருந்து 5 கி.மீ தொலைவில் (நிரவி - ஊழியபத்து சாலையில்) உள்ளது. நிரவி, ஊழியபத்து, விழிதியூரில் இருந்து வாகன வசதிகள் உள்ளன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு