Published:Updated:

பழைமை வாய்ந்த கூறைநாடு அய்யனார்கோயிலில் கும்பாபிஷேகம்... பூர்வாங்கப் பணிகள் தொடங்கின!

சைலபதி

கும்பகோணம் அருகேயுள்ள கூறைநாட்டில், கோயில்கொண்டுள்ள ஶ்ரீவெள்ளந்தாங்கி அய்யனார்கோயிலில், வரும் 11.9.19 அன்று கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

KOORAINAADU
KOORAINAADU

மயிலாடுதுறைக்கு அருகே அமைந்துள்ளது கூறைநாடு. இங்கு கோயில்கொண்டு அருள்பாலிக்கிறார், பூரணாம்பிகா புஷ்களாம்பிகா சமேத வெள்ளந்தாங்கி அய்யனார். இந்தக் கோயில், மிகவும் பழைமை வாய்ந்த கோயிலாகக் கருதப்படுகிறது.

AYYANAR KOIL
AYYANAR KOIL

பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு காவிரியில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. அப்போது, காவிரியின் கரையில் இருந்த இந்த கிராமத்தில், இந்த ஸ்வாமியின் திருமேனி வந்து கரை ஒதுங்கியது. சுற்றி இருந்த கிராமங்கள் எல்லாம் காவிரி வெள்ளத்தில் மூழ்கிப்போக, அய்யனார் கரை ஒதுங்கிய இந்த கிராமம் மட்டும் தப்பிப் பிழைத்தது. இதனால், இந்தக் கிராம மக்கள் 'தங்களை அய்யனாரே காத்தார்' என்று சொல்லி அவருக்கு கோயிலெடுத்து வழிபட்டனர். வெள்ளத்தில் வந்துதாங்கிய தெய்வம் ஆதலால், ஶ்ரீ வெள்ளந்தாங்கி அய்யனார் என்ற திருநாமம் ஏற்பட்டது.

இந்த ஆலயத்தில் விநாயகர், மதுரை வீரன், நொண்டிவீரன், சப்தகன்னியர்கள், மதனகுருசுவாமி ஆகியோர் தனிச் சந்நிதி கொண்டு அருள்பாலிக்கின்றனர்.

Nondiveeran
Nondiveeran

இங்கு நொண்டிவீரன் சந்நிதி உருவானது குறித்த சம்பவம் ஒன்று சொல்லப்படுகிறது. முன்னொரு காலத்தில், இந்தப் பகுதிக்கு ஒரு மந்திரவாதி பல்லக்கில் இந்த வழி வந்தானாம். மந்திரவாதியின் பல்லக்கை மூன்று பக்கம் மனிதர்கள் தாங்கிப்பிடிக்க, நான்காம் பக்கம் கண்ணுக்குத் தெரியாத தேவதைகள் தாங்கிவருவர். அவ்வாறு வந்த ஆண் தேவதை ஒன்று , வெள்ளந்தாங்கி அய்யனாரின் மகிமையை உணர்ந்து, அவரை தரிசனம் செய்யச் சென்றதாம். இதை அறிந்த மந்திரவாதி கோபம்கொண்டு, அந்த தேவதையின் காலை வெட்டிவிட்டான். இதனால் கால் இழந்த தேவதை, அய்யனாரிடம் வந்து வேண்டிக்கொண்டாராம். தன் வலிமை அறியாது, இந்தப் பாதகத்தைச் செய்த மந்திரவாதி ஆலயத்தின் எல்லையைத் தாண்டியதும், அய்யனார் அவன் தலையைக் கொய்து, தன் கோபத்தை தீர்த்துக்கொண்டார். மேலும், கால் இழந்த அந்த வீரனைத் தன் ஆலயத்தில் இருந்த மதுரை வீரன் சந்நிதியிலேயே, நொண்டிவீரனாகக் கோயில்கொள்ளுமாறு அபயம் அளித்துக் காத்தார் அய்யனார்.

இந்த ஆலயத்தில் வந்து வேண்டிக்கொண்டால், தீராத நோய்கள் தீர்கின்றன என்கின்றனர் பக்தர்கள். பூரண புஷ்களா சமேதராகக் காட்சிகொடுக்கும் வெள்ளந்தாங்கி அய்யனாரைத் தரிசனம் செய்து, சப்த கன்னி மாதர்களை வேண்டிக்கொள்வதன் மூலம் திருமணத் தடைகள் நீங்கும் என்று நம்பப்படுகிறது. இத்தகைய சிறப்புகள் வாய்ந்த இந்தத் திருக்கோயிலின் திருப்பணிகள் முடிவடைந்து, வரும் 11.9.19 அன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

Madhana Guru swamy
Madhana Guru swamy

இதற்கான பூர்வாங்க பூஜைகள் இன்று (7.9.19) தொடங்கின. 8.9.19 அன்று, லட்சுமி ஹோமமும் 9.9.19 மற்றும் 10.9.19 அன்று ஆச்சார்ய சந்தி யாக சாலை பூஜைகளும் நடைபெறவிருக்கின்றன. 11.9.19 அன்று,, யாக சாலை பூஜைகள் நிறைவுற்று மகாகும்பாபிஷேகம் நடைபெறும்.

இந்த விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொள்வர் என்று எதிர்பார்க்கப்படுகிறது.