கட்டுரைகள்
Published:Updated:

குறையைத் தீர்ப்பான் குற்றாலநாதன்!

குற்றாலநாதன்
பிரீமியம் ஸ்டோரி
News
குற்றாலநாதன்

பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என மூவரும் மூன்று சிகரங்களாக வீற்றிருக்கும் குற்றால மலை, திரிகூட மலை என்றும் அழைக்கப் படும்.

பொதிகை மலைகளை மாபெரும் சிவாலயமாக அகத்தியர் உருவகப்படுத்தி வணங்கிவந்தார். அதில் குற்றாலம் கோமுகமாக விளங்கிவந்துள்ளது. ஆலயத்தில் அதிகம் சாந்நித்யம் நிறைந்த இடம் கோமுகமே. கருவறை மூர்த்தமும் கோமுகத் தீர்த்தமும் ஒன்றுதான் என்பது சைவத்தின் தெளிவு.

* குறுகிய ஆலமரங்கள் நிறைந்த காடு என்பதால் குற்றாலம் என்றானது. இங்கு குறும்பலா மரத்தினடியே சுயம்புவாகத் தோன்றி அருள்பாலிப்பவர் குறும்பலா ஈசர் எனும் குற்றாலநாதர். `கு’ என்றால் பிறவி, `தாலம்’ என்றால் தீர்ப்பது என்றும் பொருள் உண்டு.

* பிரம்மா, விஷ்ணு, ருத்திரன் என மூவரும் மூன்று சிகரங்களாக வீற்றிருக்கும் குற்றால மலை, திரிகூட மலை என்றும் அழைக்கப் படும். ஊழிக்காலங்களில் மீண்டும் உலகைப் படைத்துக் காத்து ஈசன் நிலையாக வீற்றிருந்து அருள் பாலிக்கும் தலம் இந்தக் குற்றாலம் என்று சைவம் போற்றும்.

* உடலின் ராஜ உள் உறுப்புகளில் இந்தத் தலம் `பித்தப் பை’யைக் குறிப்பது என்பர். பித்த நீரின் அளவே உடல் மற்றும் மன ஆரோக்கியத்தைக் கட்டுப்படுத்துகிறது என்பார்கள். பித்தநீர் ரத்தத்தில் கலந்து விட்டால், அது ஆபத்து என்கிறது மருத்துவம். பிறப்பிலிருந்து மட்டுமல்ல, இறப்பிலிருந்து காப்பவனும் குற்றாலக் கூத்தனே என்கிறது சைவம்.

குறையைத் தீர்ப்பான் குற்றாலநாதன்!

* குற்றாலநாதர், குறும்பலாநாதர், திரிகூடநாதர், திரிகூடாசலேஸ்வரர் எனப் பல்வேறு திருநாமங்களில் இங்கே சுவாமி சுயம்பு மூர்த்தியாக அருள்பாலிக்கிறார். இடைவிடாத அருவியின் ஓசையால் சுவாமிக்குத் தலைவலி உண்டாகும் என்று அன்றாடம் காலையில் நடக்கும் பூஜையில், லிங்க பாணத்தின் மீது விசேஷ தைலம் தடவுகின்றனர். இரவு பூஜையில் ‘கடுக்காய் கஷாயம்’ படைக்கின்றனர்.

* குழல்வாய் மொழியம்மை, பராசக்தி என இரு அம்பிக்கைகள் இங்கே அருள் பாலிக்கின்றனர். 64 சக்தி பீடங்களில் இது பராசக்தி பீடம் என்றும் தரணி பீடம் என்றும் போற்றப்படுகிறது. ஒன்பது அம்பிகையரின் அம்சமாக இங்குள்ள பராசக்தி இருப்பதால் பெளர்ணமி இரவில் நவசக்தி பூஜை நடைபெறுகிறது. பராசக்தியின் உக்கிரம் தணிக்க காமகோடீஸ்வரர் என்ற சிவமூர்த்தம் எதிரே பிரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது.

* சிவமதுகங்கை, வட அருவி, சித்ரா நதி ஆகியவை இங்கு ஆலய தீர்த்தங்கள். ‘பித்தம் தெளிய சித்ரா நதி’ என்பது முதுமொழி. இத்தலத்தில் உள்ள பலா மரம், லிங்க வடிவிலான பலாச் சுளைகளைக் காய்க்கிறது. ஆண்டு முழுவதும் காய்த்துக்கொண்டிருக்கும் இந்தப் பலாக்களை யாரும் பறிப்பதில்லை.

* இங்குள்ள முருகப்பெருமான், கையில் வில்லேந்தியபடி வேடனாகக் காட்சி தருகிறார். இவருடன் வள்ளியம்மை, தெய்வானை இருவரும் ஒருவரை ஒருவர் நேராகப் பார்த்தபடி அருள்கின்றனர். இது தமிழகத்திலேயே பழைமையான வடிவம் எனப்படுகிறது.

குறையைத் தீர்ப்பான் குற்றாலநாதன்!

* குற்றால அருவி விழும் பாறையில், பல சிவலிங்க வடிவங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. முற்காலப் பாண்டியர்கள் ஏழு பேர், மிக மிக சூட்சுமமாக சிவலிங்கத்தின் மீது அருவி நீர் எப்போதும் கொட்டும்படி பாறைகளில் செதுக்கி யுள்ளனர். இவர்களை தரிசித்தால், அங்கு குளித்தால் நோய்கள் தீரும் என்பது ஐதிகம்.

* அர்ஜுனன், தான் பூஜித்த லிங்கம் வைத்திருந்த சம்புடத்தை ஒருமுறை தொலைத்துவிட்டுத் தேடியலைந்து இங்கு கண்டெடுத்தான். ஆனால் சம்புடத்தை எடுக்க முடியாமல்போனதால் இங்கேயே பூஜித்துவிட்டுச் சென்றான். அந்த லிங்கம் பிராகாரத்தில் தனிச் சந்நிதியில் உள்ளது. ஏதேனும் பொருளைத் தொலைத்தவர்கள் இங்கு வேண்டிக்கொள்ள, அவை மீண்டும் கிடைக்கும் என்கிறார்கள்.

* கோயில் பிராகாரத்தில் மணக்கோலநாதர் சந்நிதி உள்ளது. ஈசன்-உமையாள் திருமணத்தை நடத்திய பிரம்மா, தாரை வார்க்கும் திருமால், திருமகள், திருமணக் கோலத்தை தரிசிக்கும் அகத்தியர், பிருங்கி மகரிஷி ஆகியோரும் உடன் உள்ளனர். திருமணத்தடை உள்ளவர்கள் நல்ல வரன் அமைய, இந்த ஏழு மூர்த்தங்களுக்கும் மஞ்சள், பன்னீர் அபிஷேகம் செய்து, வாசனை மலர்கள் சாத்தி வழிபட்டால், விரைவில் பலன் பெறுவர்.

* பிதுர் கண்டம் தீர்த்தபுரம், சிவத் துரோகம் தீர்த்தபுரம், மதுவுண்டான் உயிர் மீட்ட புரம், வசந்தப் பேரூர், முதுகங்கை வந்தபுரம், செண்பகாரணிய புரம், முக்தி வேலி, நதிமுன்றில் மாநகரம், ஞானப்பாக்கம், வேடன் வலஞ்செய்த புரம், தேவகூட புரம், திரிகூடபுரம், புடார்ச்சுனபுரம், குறும்பலா விசேட புரம் என 108 திருநாமங்கள் கொண்ட ஊர் இது. மாணிக்கவாசகர், அப்பர், திருஞானசம்பந்தர், பட்டினத்தார், கபிலர், அருணகிரிநாதர், திரிகூடராசப்ப கவிராயர் என இந்த ஆலயத்தைப் பற்றி எழுதியவர்கள் அநேகம் பேர்.

குறையைத் தீர்ப்பான் குற்றாலநாதன்!

* குற்றாலம் என்றால் தாண்டவ தீபாராதனை விசேஷம். மார்கழித் திருவாதிரை விழாவில் காலை, மாலையில்நடராஜருக்குச் செய்யப்படும் தீபாராதனை நடராஜரின் நடனத்தைப் போல, தாண்டவ பாவனையில் நடைபெறும். இதுவே தாண்டவ தீபாராதனை. இவ்விழாவில் நடராஜருக்கு `வெள்ளை சாத்தி’, `பச்சை சாத்தி’ என இரண்டு விதமான அலங்காரம் செய்யப்படும். சித்திரை பிரம்மோற்சவத்திலும் தாண்டவ தீபாராதனை உண்டு.

* பஞ்ச சபைகளில் குற்றாலம் சித்திர சபை. குற்றாலநாதர் கோயிலிலிருந்து ஒரு கி.மீ. தொலைவில் சித்திர சபை அமைந்துள்ளது. மரத்தாலேயே ஆன அற்புத வேலைப்பாடுகளுடன்கூடிய இந்தச் சித்திர சபையில், காலத்தால் முந்தைய இயற்கை வர்ணங்களுடன்கூடிய அழகிய சித்திரங்கள் அமைந்துள்ளன. இங்குள்ள மூலவர் நடராஜர் சித்திரமாக நர்த்தனமாடுகிறார்.

* வாசுகிப் பாம்பின் வேண்டுகோளுக்காக சகல தேவர்களும் புடை சூழ ஈசன் சித்திர சபையில் தாண்டவமாடினார். பிரம்மன் தாண்டவ கோலங்களைச் சித்திரமாக வரைந்தார். குற்றாலத்தில் ஐந்தாவது சபையான சித்திர சபை உருவாயிற்று.

* இமயத்தினும் பெருமை கொண்ட மலை குற்றாலம், கங்கையினும் பெருமை கொண்ட தீர்த்தம் குற்றால அருவி. அதனால்தான் ‘குளிச்சா குத்தாலம், கும்பிட்டா பரமசிவம்!’ என்ற பழமொழி வந்தது. `வினையில் பாதியைத் தீர்த்தான் பாபநாசன், குறையையும் தீர்த்தான் குற்றாலநாதன்’ என்பது பழமொழி. ஆரோக்கியம், ஆன்மிகம் இரண்டும் செழிக்கும் இடம் குற்றாலமே!