Published:Updated:

வரதர் தந்த வாழ்க்கை!

திருத்தொண்டர் ஆட்சிப்பாக்கம் ரகுநாதன்

பிரீமியம் ஸ்டோரி

ஆட்சிப்பாக்கம் ஆலயம் சக்திவிகடன் வாசகர்களுக்கு மிகவும் பரிட்சயமான ஒன்றுதான். இங்குதான் கடந்த அட்சயதிருதியை அன்று சக்திவிகடன் சார்பில் லட்சுமி குபேர பூஜை நடைபெற்றது. அலைமகள் தங்கியிருந்து தவம்புரிந்த தலங்களில் ஒன்று ஆட்சிப்பாக்கம்.

வரதர் தந்த வாழ்க்கை!
ABMANI2018

ங்கு அருள்பாலிக்கும் பெருமாளுக்கு ஶ்ரீஅட்சய வரதர் என்றே பெயர். தாயார் ஶ்ரீபெருந்தேவித் தாயார். அற்புதங்கள் அநேகம் நிறைந்த இந்தத் தலத்தில்தான் அர்ச்சகராக இருக்கிறார் ரகுநாதன். அவரிடம் பேசினோம்.

“ஒவ்வொருவரும் ஒரு செயலை செய்யறதுக் காகத்தான் பிறப்பெடுக்கிறார்கள். அப்படி நான் பிறப்பெடுத்தது இந்த சுவாமிக்குக் கைங்கர்யம் பண்ணத்தான்னு நினைக்கிறேன். அதனாலதான் வேற வேற வேலைகளுக்குப் போனாலும் எப்படியோ வாழ்க்கை திரும்பத் திரும்பப் பெருமாளிடமே கூட்டி வந்து, அவர் திருவடிக்கே சேவை செய்யும்படி பார்த்துக் கொண்டது.

இது எங்க தாத்தா பூஜை பண்ணின கோயில். தாத்தா பெயர் ராஜகோபாலாச்சார்யர். அவரைப் போல பெருமாள் மேல பக்தியும் அனுஷ்டானமும் உடைய இன்னொரு நபரை இதுவரைக்கும் நான் பார்க்கலை. தாத்தாவுக்கு நாலு பசங்க. ஒரு பொண்ணு. என் அப்பாதான் மூத்தவர். ராமன்னு பெயர். மற்ற பசங்களுக்கு லட்சுமணன், பரதர், சத்ருக்கனன் என்று பெயர் வச்சார். அந்த அளவுக்குப் பெருமாள் மேல அவருக்கு ஈடுபாடு.

அவர்கூட இருந்து அவர் பண்ற பூஜைகளைக் கண்டு வியந்திருக்கேன். அவர் காலத்துலயே எங்க அப்பா, சித்தப்பா எல்லாம் வேற ஊர்களுக்குக் குடிபோயாச்சு. காரணம் இந்தக் கோயில் வேலைக்கு அந்தக் காலத்தில் சம்பளம் எல்லாம் கிடையாது. நெல் மட்டும்தான் கூலி. அதனால படிச்சி வேலைக்குப் போகணும்னு கிளம்பிட்டோம்.

நான் ஆரம்பத்திலே `கிராம சேவக்' வேலைக் குச் சேர்ந்தேன். மாநில அரசு வேலைதான். ஆனா அதில் என் மனம் செல்லவேயில்லை. காரணம், அந்தக் கால ஆட்சியாளர்களில் பலர் நாத்திகம் பேசுகிறவர்களாக இருந்தார்கள். வேலையை விட்டுவிட்டேன். மத்திய அரசு வேலைக்காக முயற்சி பண்ணேன். ரயில்வே எக்ஸாம் எழுதி முடிச்சேன். ரிசல்ட் எப்ப வரும்னு தெரியாது. அதனால தாத்தாவுக்குப் பிரயோஜனமா கோயில் கைங்கர்யம் பண்ண லாம்னு இங்கேயே வந்துட்டேன்.

இங்கேயே தங்கி இந்தப் பெருமாளுக்கு சேவை செய்துகிட்டு இருந்தேன். பக்கத்துல `முன்னூர்'ன்னு ஒரு கிராமம். அங்கே ஒரு பெருமாள் கோயில். அங்கே வருஷத்துக்கு ஒரு தடவை கருடசேவை உற்சவம் மட்டும் நடக்கும். தாத்தா என்கிட்ட, ‘நீ போய் உற்சவம் பண்ணேன்’னு சொன்னார். நானும் இந்தப் பெருமாளை வேண்டிக்கொண்டு முன்னூர் போய் உற்சவம் நடத்த ஆரம்பிச்சேன்.

அப்போ என் கூடப் பொறந்தவன் ஒரு கடுதாசியோட ஊர்ல இருந்து வந்து ‘உனக்கு ரயில்வேல வேலை கிடைச்சிருக்கு. நாளைக்கே நீ மெட்ராஸ்ல ஜாயின் பண்ணனும்’னு சொன்னான். பிறகு ஊருக்கு வந்து பெருமாளை சேவித்துக் கொண்டு கிளம்பினேன். அப்பவும் அரை மனதோடதான் கிளம்பிப் போனேன்.

வரதர் தந்த வாழ்க்கை!
ABMANI2018

ரொம்ப லேட்டாத்தான் கல்யாணம் பண்ணிண்டேன். மனைவி பெயர் ஹரிணி. எங்களுக்கு ஒரு பொண்ணு, ஒரு பையன். அம்பது வயசுக்கு மேல மனம் லௌகீக விஷயங்களில் இருந்து விலக ஆரம்பிச்சது. அதனால் 7 வருஷம் சர்வீஸ் இருக்கும்போதே விருப்ப ஓய்வு கொடுத்துட்டேன். அமைதியா வாழணும்னு முடிவு பண்ணினேன். அப்பவும் இந்த ஊருக்கு வரணும்னு நான் நினைக்கலை.

பெருமாள் பார்த்தார். ‘இன்னும் என்கிட்ட வர மனசில்லையா’ன்னு கேக்குற மாதிரி, ஊர்ல இருந்து ஆள்களை அனுப்பிவச்சார். அவங்க வந்து, ‘உங்க தாத்தா பூஜை பண்ணின பெருமாள். இப்போ பூஜை செய்ய யாருமே இல்லை'ன்னு சொன்னாங்க. எனக்கு சப்த நாடியும் ஒடுங்கிப் போச்சு. உடனே கிளம்பி வந்துட்டேன். இனி என் லைஃப் இங்கேதான்னு முடிவு பண்ணிட்டேன்.

இப்போ எனக்கு 68 வயசு. 14 வருடங்களுக்கு முன்னாடி இங்கே வந்தேன். குடும்பத்தை சென்னையிலேயே இருக்கச் சொல்லிட்டேன். நான் ஒரு பக்கம், அவங்க ஒரு பக்கம்னு ஆரம்பத்துல நிறைய பிரச்னைகள். இத்தனை ஆண்டுகள் பெருமாளைப் பிரிஞ்சி இருந்துட் டோம். இனி பெருமாளைத் தவிர வேறு எதுவும் வேண்டாம்னு தோணித்து.

கோயிலைப் பற்றி சக்திவிகடனில் எழுதின துக்கு அப்புறம் வெளி ஊர்ல இருந்து சிலர் வந்து போறாங்க. பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்றுவதில் இவர் பெரிய வரப்பிரசாதி.

பக்தர்கள், கோயிலுக்கு வந்து ஏதேனும் வேண்டுதல்னு சொல்லிட்டுப் போவாங்க. நான் அதைப் பெருமாளோடு தனியாக இருக்கும்போது... நண்பன்கிட்ட சொல்றமாதிரி, ‘என்னப்பா, இத்தனை வயசாகியும் கல்யாணம் ஆகலைன்னு சொல்றாங்களே... குழந்தை இல்லேன்னு அழறாளே... தீர்த்துவைக்கக் கூடாதா’ன்னு வேண்டிப்பேன். வெகு சீக்கிரத்தில் அவர்களின் பிரச்னைகள் தீர்ந்து சந்தோஷமா அவங்க கோயிலுக்கு வருவாங்க.

வரதர் தந்த வாழ்க்கை!

காஞ்சிபுரம் வரதரைப் போலவேதான் இவரும். உற்சவங்களும் அதேபோலத்தான். வைகாசி பிரம்மோற்சவத்தில் அபராஜித ஹோமம்னு ஒரு ஹோமம் பண்ணுவோம். 10 நாளும் ஹோமத்தை ஒட்டிக் கும்பம் வைப்போம். அந்தத் தீர்த்தத்தை பத்தாம் நாள் பக்தர்களுக்குக் கொடுப்போம். குழந்தை பாக்கியம் இல்லாதவங்க கலந்துக்கிட்டா அடுத்த வருஷத்துக்குள்ள அவங்களுக்குக் குழந்தை பாக்கியம் கிடைச்சிடும்!

லௌகீகக் கடமைகள் பாக்கியிருக்கு. ஆனா, பயம் இல்லை.பெருமாள் நிச்சயம் முடித்துக் கொடுப்பார்ன்னு நம்பிக்கை உண்டு. அவர் தந்த வாழ்க்கைதானே இது. எல்லாம் அவரோட அனுக்கிரகம்!'' என்று சொல்லி முடித்தார்.

ஊர்மக்கள் எல்லோரும் ரகுநாதனின் அர்ப்பணிப்பைப் பற்றியே பேசினார்கள். பெருமாள் மனதிலேயே இடம் பிடித்து, அவருக்கு சேவகம் செய்ய வாய்த்த ஒருவரை மக்களுக்குப் பிடிக்காமல் இருக்குமா என்ன?!

பெருந்தேவித்தாயாரையும் அட்சய வரதரை யும் மீண்டும் ஒருமுறை வணங்கி விடை பெற்றோம். ``முடிஞ்சா வைகாசி பிரம்மோற்சவத் துக்கு வாங்கோ” என்று புன்னகை ததும்பக் கூறி வழியனுப்பினார் ரகுநாதன்.

- தொண்டர்கள் வருவார்கள்...

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு