Published:Updated:

நோய் நீக்கி, மன அமைதி அருளும் சுயம்புலிங்கம் - நரசிம்மர் பூஜை செய்த திருத்தலத்தின் சிறப்புகள்!

நரசிம்மர் பூஜித்த சுயம்புலிங்கம்

நரசிம்மர் சிவனைப் பூஜித்த காரணத்தினால் இத்தலத்திற்கு 'நரசிங்கபுரம்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், 'நரசிங்கமங்கலம்' என்று வழங்கப்பட்ட இவ்வூர் தற்போது நரசிங்கன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

நோய் நீக்கி, மன அமைதி அருளும் சுயம்புலிங்கம் - நரசிம்மர் பூஜை செய்த திருத்தலத்தின் சிறப்புகள்!

நரசிம்மர் சிவனைப் பூஜித்த காரணத்தினால் இத்தலத்திற்கு 'நரசிங்கபுரம்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், 'நரசிங்கமங்கலம்' என்று வழங்கப்பட்ட இவ்வூர் தற்போது நரசிங்கன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது.

Published:Updated:
நரசிம்மர் பூஜித்த சுயம்புலிங்கம்
ஹிரண்யாசுரனை அழித்திடவும், பிரகலாதனின் பக்தியை உலகிற்கு உணர்த்திடவும் திருமால் எடுத்திட்ட அவதாரம் நரசிம்ம அவதாரம். அசுர வதம் முடிந்த பின்னர், குருதிக்கலப்பால் ஏற்பட்ட விளைவினால், நரசிம்மமானது தன்னிலை மறந்து ஆக்ரோஷமான நிலையில் கட்டுப்பாடின்றி திரிந்ததைக் கண்டு அண்டசராசரங்களும் நடுநடுங்கின.

இந்நிலையைப் போக்கிட எண்ணிய சிவபெருமான் சாளுவ பக்ஷியாக (சரபம்) உருவெடுத்துத் தன் சிறகுகளால் அணைத்து நரசிம்மத்தைக் குளிர்வித்தார். சாந்தமடைந்த நரசிம்மம் தன்னிலை உணர்ந்தது. அசுர வதம் செய்தமையால் ஏற்பட்ட ஹத்தி தோஷத்தினைப் போக்கிக்கொள்ள நரசிம்மம் சிவ பூஜை செய்த தலம்தான் தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகேயுள்ள  'நரசிங்கன்பேட்டை' ஆகும். 

நரசிம்மர் சிவனைப் பூஜித்த காரணத்தினால் இத்தலத்திற்கு 'நரசிங்கபுரம்' என்ற பெயர் ஏற்பட்டது. பின்னாளில், 'நரசிங்கமங்கலம்' என்று வழங்கப்பட்ட இவ்வூர் தற்போது நரசிங்கன்பேட்டை என்று அழைக்கப்படுகிறது. சுமார் ஆயிரம் ஆண்டுகள் பழைமையான ஆலயமாகும்.

நரசிம்மர் பூஜித்த சுயம்புலிங்கம்
நரசிம்மர் பூஜித்த சுயம்புலிங்கம்

இப்பகுதியை ஆண்ட 'நரசிம்மவர்மன்' எனும் அரசன் இத்தீர்த்தத்தில் நீராடி, மூலவரை வழிபட்டுத் தன் மனைவியின்  தீராத நோய் நீங்கப் பெற்றதாகத் தலவரலாறு கூறுகிறது.

ஸ்ரீ நரசிம்மமூர்த்தி மூலத்தானத்து இறைவனை வழிபடுவதற்காக நீராடிய தீர்த்தம் ஆலயத்தின் முன்புறத்தில் இன்றைய நாளில் சிறு குளமாகக் காட்சியளிக்கிறது. இதற்கு 'நரசிம்மதீர்த்தம்' என்று பெயர். இதே தீர்த்தத்தில் ஸ்ரீ பிரம்மாவும் நீராடியமையால்,  'பிரம்மதீர்த்தம்' என்ற பெயராலும் குறிக்கப்படுகிறது என்பர்.

இத்தலம் அருகிலுள்ள திருவாவடுதுறையில் உறைந்திருந்த  போகரின் மாணவரும், பெரும் சித்தருமாகிய 'திருமாளிகைத் தேவரும்', இத்தலத்து இறைவனை வழிபட்டுள்ளார் என்பது தல புராணம் சொல்லும் செய்தி.

திருவாவடுதுறையில் சிவயோகம் புரிந்து 'திருமந்திரம்' அருளிய  'திருமூலதேவ நாயனார்' தான் பரகாய பிரவேசம் செய்த உடலை நிவர்த்தி செய்து கொள்வதற்காக, இத்தலத்து இறையை வழிபட்டுப் பின்னர் சிவ சாயுஜ்யப் பதவி அடைந்தார் என இத்தலத்து வரலாறு உரைக்கிறது. யோக நிலையில் உள்ள அரிய நரசிம்மமூர்த்தமுடைய தனித்த ஆலயம் ஒன்றும் இச்சிவாலயத்திற்கு அருகில் அமைந்துள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது.

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer
நரசிம்மம் சிவலிங்கத் திருமேனியை பூஜை செய்கின்ற தொன்மையான புடைப்புத் திருவுரு இக்கோயிலில் உள்ளது.  சுயம்புவாகத் தோன்றிய லிங்கத்திருமேனியினர் ஆனபடியால் `சுயம்புநாதர்' என்ற திருநாமம் தாங்கினவராய், மூலவராக அருள்பாலிக்கின்றார்.

மூலவர் ஸ்ரீ சுயம்புநாதர் பெரும் பாணமுடன் காட்சியருளும் அழகிய வடிவினர். அன்னை ஸ்ரீ லோகநாயகி எனும் திருநாமம் தாங்கி உலகம்மை வடிவில் சிறியனள் ஆயினும் அருளில்  பெரியவள். தெற்கு நோக்கி அருள்பாலிக்கின்றாள்.

மூலவர் உறைந்திருக்கும் கருவறை மண்டபம் வேசர (வட்ட வடிவ) வடிவமுடையது. 'கஜ ப்ருஷ்ட' அமைப்புடைய மூலஸ்தான மண்டப அமைப்பு இவ்வாலயத்தின் சிறப்பு அம்சமாகும். மண்டபத்தின் சுவரில் ஸ்ரீ நரசிம்மமூர்த்தியானவர், ஸ்ரீ சுயம்புநாதரைப் பூஜிக்கும் காட்சியானது அழகிய புடைப்புச் சிற்பமாக வடிக்கப் பெற்றுள்ளதைக் கண்டு தரிசிக்கலாம்.

நரசிம்மர் பூஜித்த சுயம்புலிங்கம்
நரசிம்மர் பூஜித்த சுயம்புலிங்கம்

பின்புற மண்டபத்தில் கோஷ்ட பரிவாரங்களாக விநாயகர்,  வள்ளி தேவசேனா சமேத சுப்பிரமணியர், ஞானாம்பிகை, சோழலிங்கம், இராகு, கேது, கஜலக்ஷ்மி, ஆகிய மூர்த்தங்களும், சுற்றுப்பக்கத்தில்  தட்சிணாமூர்த்தி, பிரம்மா, லிங்கோத்பவர், துர்காம்பிகை, சண்டேசர் ஆகிய மூர்த்தங்களும் சிவாலய விதிப்படி அழகுற அமைக்கப் பெற்றுள்ளதைக் காணலாம். கடுமையான மன வியாதிகளுக்கு ஆட்பட்டவர்களும், மனஅமைதி வேண்டுபவர்களும், நரம்பு வியாதிகளால் பாதிப்பு உடையவர்களும் இந்த சுயம்புநாதரை சுவாதி நட்சத்திரம் மற்றும் பிரதோஷ தினங்களில் வணங்கினால் நன்மை பெறலாம் என்பது நம்பிக்கை.