Published:Updated:

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

திருமணப் பரிகாரம் சிறப்பு தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
திருமணப் பரிகாரம் சிறப்பு தரிசனம்

திருமணப் பரிகாரம் சிறப்பு தரிசனம்

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

திருமணப் பரிகாரம் சிறப்பு தரிசனம்

Published:Updated:
திருமணப் பரிகாரம் சிறப்பு தரிசனம்
பிரீமியம் ஸ்டோரி
திருமணப் பரிகாரம் சிறப்பு தரிசனம்
இந்தப் பூமி தோன்றிய காலம் முதல் இன்றுவரை மனித குலத்துக்குத் தேவைகளும், தேடுதல்களும் அதிகம். குறிப்பாக, ஒவ்வொரு மனிதருக்கும் வாழ்வின் மிக அவசியத் தேவை திருமணம். திருமணம் என்ற நிகழ்வுக்குப் பிறகே, வாழ்வு பூரணத்துவம் அடைகிறது என்பார்கள் சான்றோர். அத்தகைய வாழ்வியல் முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வானது, ஜாதக ரீதியிலான பிரச்னைகளால் தடைபடும்போது, அதற்கான தீர்வினை வேண்டி இறையருளை நாடுவதும் ஆலயம்தோறும் சென்று வழிபாடுகள் செய்வதும் நேர்த்திக் கடன் செலுத்துவதும் இயல்பான விஷயங்களாக அமைந்துவிடுகின்றன. திக்கற்றவருக்கு தெய்வம்தானே துணை! அவ்வகையில், தோஷங்கள் மற்றும் தடைகளை நீக்கி திருமண வரமளிக்கும் திருத்தலங்கள் பல உண்டு. அவற்றுள், ஒன்றுடன் ஒன்று புராணத் தொடர்புடைய - மிகத் தொன்மையான காவிரிக்கரை சிவத் தலங்கள் சிறப்பு மிகுந்தவையாக அறியப்படுகின்றன. அவற்றில் ஈசனின் திருக்கல்யாண வைபவத்துடன் தொடர்புடைய ஐந்து தலங்களின் மகிமையைக் காண்போம். கல்யாண வரம் அருளும் அற்புதத் தலங்கள் அவை!
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

குத்தாலம்

ஸ்வாமி: ஸ்ரீஉக்தவேதீஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீஅரும்பன்ன வனமுலையாள்

திருத்துருத்தி என்பது இத்தலத்தின் தேவாரப் பெயர். இரண்டு ஆறுகளுக்கு இடைப்பட்ட பகுதிக்கு ‘துருத்தி’ என்பது பெயர். புராணக் காலத்தில், உத்தால மரங்கள் நிறைந்த வனமாக இருந்து, உத்தாலமாகத் திகழ்ந்தது. காலப்போக்கில் இப்பெயர் திரிந்து குத்தாலம் எனவாயிற்று.

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

தேவாரப் பாடல் பெற்ற 37-வது காவிரித் தென்கரைத் தலம் இது. சமயக்குரவரில் மூவரால் பாடல் பெற்ற மிகவும் பழைமையான தலம். மேற்கு நோக்கிய ஆலயம் என்பது சிறப்பு. சப்தரிஷிகள், அக்னி, சூரியன், வருணன் ஆகியோர் வணங்கிய திருத்தலம். சுந்தரர் உடற்பிணி தீர்த்த தலம். செம்பியன் மாதேவி எடுப்பித்த தொன்மையான கற்றளி. அம்மையுடன் வந்த பிள்ளை, ‘துணை வந்த விநாயகராக’ அருள்வது கூடுதல் சிறப்பு.

இறையின் கட்டளைப்படி, பரத முனிவரின் மகளாகப் பிறந்த உமையம்மை, காவிரிக் கரையில் உத்தால மரத்தின் அடியில் தவம் இயற்ற, குறித்த காலத்தில் அம்மை பூஜித்த லிங்கத்திலிருந்து இறைவன் ஆவிர்பவித்தார். அம்பிகையைக் காந்தர்வ விவாகம் புரிந்தார்.

ஆயினும் விண்ணவரும் மண்ணவரும் அறிய திருமணம் புரிந்தருள வேண்டும் என்ற பரத்வாஜ முனிவரின் வேண்டுகோளை ஏற்று, குறிப்பிட்ட நாளில் திருமணக்கோலம் காட்டுவதாக அருளி மறைந்தார். சிவபெருமான் இங்கு எழுந்தருளியபோது அவரைத் தொடர்ந்து வந்த குடை உத்தால மரமாகவும்; அவரின் திருவடிகளைத் தாங்கியபடி வந்த வேதமானது திருப்பாதணிகளாகவும் திகழ்ந்தனவாம். ஸ்வாமி முனிவருக்கு அருள்புரிந்து மறைந்தபோது குடையையும் பாதணிகளையும் மறந்துவிட்டபடியால் அவை இத்தலத்திலேயே தங்கிவிட்டனவாம்! இந்தத் திருச் சின்னங்களை இன்றும் இக்கோயிலில் முன்பகுதியிலேயே தரிசிக்கலாம்.

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

சொன்னபடி தன் வாக்கினைக் காத்ததால், இறைவன் ‘ சொன்னவாறு அறிவார்’ என்ற பெயரில் இங்கே அருள்கிறார். பக்தர்களுக்கும், திருமண யோகத்தினைத் தந்து சொன்ன வாக்கு காத்து அம்மையும், ஈசனாரும் அருள்வதாக ஐதிகம். ரிஷப ராசிக்காரர்கள், ஜாதகத்தில் சுக்கிரன் பலமிழந்த வர்கள் இங்கு வந்து வழிபட்டால் நற்பலன்கள் கைகூடும் என்பது நம்ப்பிக்கை.

மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து, மற்றும் ரயில் மார்க்கத்தில் , மயிலாடுதுறையிலிருந்து சுமார் 10 கி்.மீ. தொலைவில் குத்தாலம் அமைந்துள்ளது.

எதிர்கொள்பாடி

ஸ்வாமி: ஸ்ரீஐராவதேஸ்வரர்

அம்பாள் : ஸ்ரீசுகுந்தகுந்தளாம்பிகை

திருவேள்விக்குடி எனும் தலத்தில் சிவக் கல்யாணத்தின் கங்கணதாரணம் நிகழ்ந்தது. பின்னர், மணமகன் ஸ்ரீமணவாளேஸ்வரரை அவருடைய மாமனார் பரதமுனிவர், பூரண கும்ப மரியாதையுடன் எதிர்கொண்டு திருமண நிகழ்விற்கு அழைத்த தலம்தான் எதிர்கொள்பாடி.

திருவேள்விக்குடியில் தாம் மணம்செய்து வைத்த அரசகுமாரனை, அவருடைய மாமனார் உருவில் ஈஸ்வரனே எதிர் கொண்டு அழைத்தபடி யால், இத்தலத்திற்கு ‘எதிர்கொள்பாடி’ என்ற பெயர் ஏற்பட்டது எனக் கூறுவோரும் உண்டு.

சுந்தரரால் பாடல்பெற்ற இத்தலம் காவிரி வடகரைத் தலங்களில் 24-வது தலம். அழகிய சிறியதோர் ஆலயம். திருமணத் தலம் என்பதால் இவ்வாலயத்தில் கொடிமரம் கிடையாது. பரத முனிவர் பிரதிஷ்டை செய்து வழிபட்ட லிங்கத் திருமேனியையும் திருச்சுற்றில் தரிசிக்கலாம்.

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

தூர்வாஸ முனிவரின் சாபத்திற்கு உள்ளான ஐராவத யானை இங்கு பூஜித்ததால், சிவனாருக்கு ஸ்ரீஐராவதேஸ்வரர் என்று திருநாமம். இதனால் இங்கு யானை சுற்றி வலம் வரும்படியான கர்ப்பக் கிரகம் அமைந்திருப்பதைக் காணலாம். பதவி இழந்தவர்கள் மீண்டும் அதனைப் பெற இங்குள்ள மூலவரைப் பிரார்த்திக்கின்றனர்.

அம்மையப்பரை திருமண வரம் வேண்டி வணங்கிடும் பக்தர்களுக்குத் தாமும் பெருங் கருணையுடன் அருளுவதால், இத்தலத்து அன்னைக்குப் பெருங்கருணைப் பிராட்டி என்ற நாமமும் உண்டு.

சித்திரை மாதத்தில் திருக்கல்யாணம் ஏற்கும் திருமணஞ்சேரி இறைவன் இத்தலத்திற்கு எழுந்தருளி, பரத முனிவர் எதிர்கொண்டு அளித்திடும் பூரணகும்ப மரியாதையை ஏற்ற பின்னரே, மீண்டும் திருமணஞ்சேரி சென்று திருக்கல்யாணத்தை ஏற்பதாக ஐதிகம். வருடாந்திர பிரம்மோற்சவ நிகழ்வில் இது விழாவாக இன்றும் நடத்தப்பெறுகிறது.

திருமணஞ்சேரி தரிசனத்திற்கு வரும் அன்பர்கள் இத்தலத்திலும் தரிசனம் செய்வது விசேஷம் என்பது ஐதிகம். குறிப்பாக, திருமணம் பேசியபின் மனவேறுபாடுகளால் பிரச்னைக்கு உள்ளானவர்கள், இத்தலத்திற்கு வந்து அபிஷேகம் செய்து வழிபடுவதால், மனப்பிணக்கு தீர்ந்து மகிழ்ச்சியான வாழ்வு அமையும் என்பது நம்பிக்கை.

மயிலாடுதுறை - கும்பகோணம் பேருந்து மற்றும் ரயில் மார்க்கத்தில் குத்தாலத்திலிருந்து திருமணஞ் சேரி செல்லும் வழியில் 4 கி்.மீ .தொலைவில் எதிர்கொள்பாடி உள்ளது.

திருமணஞ்சேரி

ஸ்வாமி: ஸ்ரீஉத்வாக நாதர்

அம்பாள் : ஸ்ரீகோகிலாம்பாள்

அப்பர் பெருமான், ஞானசம்பந்தர் ஆகியோர் பாடி வழிபட்ட 25- வது காவிரி வடகரைத்தலமாகும்.அம்மையப்பர் திருமணக் கோலத்தில் விண்ணவர்க்கும் மண்ணவர்க்கும் காட்சி தந்த புண்ணிய தலம் இது.

எம்பெருமான் நெற்றிக்கண் தீயினால் எரிந்து சாம்பலான மன்மதனுக்கு மீண்டும் விமோசனம் கிடைத்தது இங்கேதான். மன்மதன் பூஜித்த தலம் என்பதால் கூடுல் விசேஷம். பெருமானின் திருமணத்திற்கு மாலைகளாக அமைந்த சப்த சாகரங்களும் (ஏழு கடல்கள்) ஒருங்கே சேர்ந்து, இத்தலத்தில் தீர்த்தமாக நிலைபெற்றுவிட்டன என்பது ஐதிகம்.

வைசியகுலப்பெண்கள் இருவர். நாத்திமுறை உடையவர்கள். ஒரே நேரத்தில் கருவுற்ற இருவரும், பிறக்கப்போகும் குழந்தைகளை ஒருவருக்கொருவர் மணமுடிப்பது என சம்பந்தம் செய்து கொள்கிறார்கள். ஒருத்திக்கு பெண் மகவு. ஆனால் மற்றொருத்திக்கோ ஆமையுருவில் பிள்ளை பிறந்து விடுகிறது. பெண்ணைப் பெற்றவள் பெண் தர மறுத்து விட, ஆமைக்குமாரனோ இத்தலத்து இறையை பூஜிக்கின்றான்.

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

மனம் நெகிழ்ந்த இத்தலத்து ஈசன், அவனது ஆமையுரு நீங்கும்படி செய்து, அவனது திருமணத்தை நடத்தி வைத்ததுடன், அவனுக்குத் தம்முடைய மணக்கோலத்தினைக் காட்சி அருளினார். எனவே, இக்கோயிலிலும் அழகான கல்யாண சுந்தரக்கோலத் திருமேனி உண்டு.

நாணத்தால் வெட்கமுற்ற மணக்கோலத் தினளாய் அம்மையும், அவரைக் கைப்பிடித்த கோலத்தில் உத்வாக நாதராய் கம்பீரத்துடன் காட்சியளிக்கும் ஸ்வாமியின் உலோகத் திருமேனி சிறப்பாகப் போற்றப்பெறுகிறது.

ஜாதகத்தில் திருமணத்தடை உள்ளவர்கள் இத்தலத்து அம்மையப்பருக்கு, அர்ச்சனை செய்வித்து மாலை மற்றும் எலுமிச்சம்பழம் சமர்ப்பித்து வேண்டுகின்றார்கள். வீடு திரும்பியதும் சமர்ப்பிக்கப்பட்ட எலுமிச்சை பிரசாதத்தினை சாறாக்கி உட்கொள்ள வேண்டும் என்பது ஐதிகம்.

கோரிக்கை நிறைவேறிய பின்னர் தம்பதி சமேதராக வந்து நேர்த்திக்கடன் செலுத்துவதுடன், பிரசாதமாக பெற்ற மாலையை இங்கேயே மீண்டும் கொண்டு வந்து சேர்த்துவிடுகிறார்கள்.

மயிலாடுதுறை - கும்பகோணம் மெயின்ரோட்டில் குத்தாலத்திலிருந்து 6 கி்.மீ தொலைவில் திருமணஞ்சேரி திருத்தலம் அமைந்துள்ளது. கார், ஆட்டோ, வேன் வசதியுண்டு.

திருவாவடுதுறை

ஸ்வாமி: ஸ்ரீஅணைத்தெழுந்த நாதர்

அம்பாள்: ஸ்ரீஒப்பிலாமுலையம்மை

சாப விமோசனம் பெறவேண்டிய அம்பிகை பசுவுருவில் - கோரூபாம்பிகையாக பூசித்தத் தலம். இந்நிகழ்வு ஓர் பூச நட்சத்திர நன்னாளில் நடைபெற்றதால், பூச நட்சத்திரக்காரர்கள் இத்தலத்தில் வந்து வழிபட்டால், வாழ்வு வளம்பெறும்.

திருமந்திரம் தோன்றிய தலம். சமயக்குரவரில் மூவரால் பாடல் பெற்ற 36-வது காவிரி தென்கரைத் தலம். திருவிசைப்பா, திருப்புகழ் பெற்ற தலம்.செவ்வாய்க்கு கிரகப் பதவி கிட்டிய தலம். செவ்வாய்தோஷம் உள்ளவர்கள் வழிபட ஏற்ற தலம்.ஏராளமான சித்தர்கள் வழிபட்ட தலம்.

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

தமிழகத்திலேயே மிகப்பெரிய (கல்) மகா நந்தியினை இங்கு தரிசிக்கலாம். திருமூல சித்தரின் ஜீவசமாதியாகிய குகைக்கோயில் இத்தலத்தின் சிறப்புகளில் ஒன்று. சம்பந்தருக்கு உலவாப் பொற்கிழி அளிக்கப்பெற்ற தலம்.

பிள்ளை வரம் வேண்டி நின்ற முசுகுந்த சக்கரவர்த்திக்கு அருளும்விதம், ஆரூர் தியாகராஜர் ‘புத்திரத் தியாகேசர்’ கோலத்தில் தனிக்கோயிலில் எழுந்தருளி இருப்பது இக்கோயிலுக்கே உரித்தான சிறப்பு. இத்தலத்து விழா நாயகரும் இவரே.

பசுவுருவுடன் கயிலையை விட்டு அன்னை நீங்கியது கண்டு, கன்றாக மாறி உடன் ஓடிவந்த மகனார் கணபதியும் தல விநாயகராக அருள்கிறார். அகத்திய முனிவருக்கு பஞ்சாட்சரம் உபதேசித்த கணபதியும் இவர்தான்.

இத்தலத்தில் ஈசனும் உமையும் தம்பதி சமேதராக ‘அணைத்தெழுந்த கோலத்துடன்’ காட்சித் தருகிறார்கள். சிற்பக்கலைக்கு எடுத்துக்காட்டான இதுபோன்ற கல்யாணசுந்தரர் கோலத்தினை, வேறு தலங்களில் காண்பதரிது. ஆகவே, இந்தத் திருக்கோலத்தை தரிசிப்பது மிகவும் விசேஷம்.

இந்த அம்மையும் அப்பனும், தங்களை வழிபடும் அன்பர்களுக்கு இல்லற வாழ்வினை இனிமையாக்கித் தருகின்றார்கள்.

நல்ல வரன் அமையாமல் வருந்துபவர்களும், கருத்து வேறுபாட்டால் பிரிந்த தம்பதிகளும், இந்த நாயகரை வழிபட, நிம்மதியான இல்லறம் அமையும் என்பது நம்பிக்கை.

இந்த அணைத்தெழுந்த நாதர் கோலத்தினை வாசனைப் பூக்களால் அர்ச்சித்து, விளக்கேற்றி வழிபட்டால், ஜாதகங்களில் உள்ள தோஷங்கள் நீங்கப்பெற்று மணவாழ்க்கை சிறப்புற அமையப் பெறுவார்கள்.

கும்பகோணம் - மயிலாடுதுறை வழித்தடத்தில் குத்தாலத்திலிருந்து 4.கி.மீ தொலைவில், திருவாவடுதுறை அமைந்துள்ளது.

திருவேள்விக்குடி

ஸ்வாமி: ஸ்ரீகல்யாணசுந்தரேஸ்வரர்

அம்பாள்: ஸ்ரீபரிமள சுகந்த நாயகி

பேரருள் தரும் ஸ்வாமியாய் ஈசன் அருளும் அற்புதத் தலம் இது. கல்யாண வரம் அருளும் தலங்களில் ஒன்று. குத்தாலத்தில் எழுந்தருளியுள்ள ஈசனார் பகல் பொழுதில் அங்கும், இரவு நேரத்தில் அருகிலுள்ள இந்தத் திருவேள்விக்குடியிலும் எழுந்தருளிவிடுவார் என்பது இத்தலம் குறித்த செய்திகளில் ஒன்றாகும்.

சம்பந்தர் மற்றும் சுந்தரரால் பாடல் பெற்ற காவிரி வடகரையில் அமைந்துள்ள 23- வது தலம். அகத்தியர் வாதாபி எனும் அசுரனைக் கொன்ற தோஷத்தினை இத்தலத்தில் போக்கிக்கொண்டதாக ஐதிகம்.அம்மையப்பர் திருமணத்திற்கான வேள்வி நடந்த தலம் இது. தவிர, திருமணத்திற்கு முன் செய்யப்படவேண்டிய கங்கணதாரணம் முதலான புனிதச் சடங்குகள் நடந்ததும் இத்தலத்திலேதான்.

திருக்கல்யாண சிவத் தலங்கள்!

மாப்பிள்ளையாக வந்த சிவபெருமான் மணவாளேஸ்வரர் என்ற பெயரிலும் அழைக்கப்படுகிறார். அம்மையப்பருக்குக் கங்கணதாரணம் செய்யப்பட்ட தலம் என்பதாலேயே அவர்களுக்கு, கௌதுகேஸ்வரர் மற்றும் கௌதுகேஸ்வரி என்ற நாமங்களும் உண்டு. திருக்கல்யாண தலம் என்பதால் கொடிமரம் கிடையாது. இவ்வாலயத்தில். மூலவர் சுயம்புவாக உருவானவர்.

இன்னொரு சுவையான வரலாறும் உண்டு. சிவபக்தனான ஓர் அரசிளங்குமரன். அவனுக்கென நிச்சயித்த பெண்ணை சுற்றத்தார் மணம் செய்து தர மறுக்கின்றனர். தமது பக்தனுக்கிரங்கிய ஈசனாரோ தமது பூதகணங்களை அனுப்பி அப்பெண்ணைத் தூக்கி வரச் செய்து, தாமே வேள்வி நடத்தி திருமணத்தையும் செய்து வைத்து விட்டாராம். தவிர, தாமும் இறைவியுடன் மணக் கோலத்தில் காட்சியளித்தார். அக்கோலத்திலேயே இத்தலத்தில் அருள்பாலித்து வருகிறார்.

இதனாலேயே, நீண்டகாலமாக திருமணத்தடங்கல்களால் வருந்துபவர்களுக்கு இத்தலத்து ‘மணவாளேஸ்வரர்’ வாட்டம் போக்கி, திருமண வரத்தினை உடனடியாக அருள்கிறார். இத்தலத்து கௌதுகாபந்தன தீர்த்தத்தில் நீராடி கல்யாண சுந்தரேஸ்வரர் திருக்கோலத்தை அர்ச்சித்து வழிபடுபவர்கள், எண்ணியபடியே வாழ்க்கைத் துணை அமையப்பெறுகிறார்கள் என்பது கண்கூடு. நல்ல வரன் அமைய வேண்டி ஹோமங்களும் செய்து வழிபடலாம்.

மயிலாடுதுறை - கும்பகோணம் (பூம்புகார் சாலை) வழித்தடத்தில், மயிலாடுதுறையிலிருந்து 8. கி.மீ. தொலைவில் திருவேள்விக்குடி தலம் அமைந்துள்ளது.