Published:Updated:

இன்று பட்டாபிஷேகம்... 24-ம் தேதி திருக்கல்யாணம்... மண்ணகம் கொண்டாடும் மாமதுரைத் திருவிழா!

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்

Use App
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா
மதுரை மீனாட்சி அம்மன் கோயில் திருவிழா

தென்னிந்தியாவின் கும்பமேளா என்று சொல்லும் அளவுக்கு ஒவ்வோர் ஆண்டும் பத்து லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் கூடும் மதுரை சித்திரைத் திருவிழா. இத்திருவிழா குறித்த சிறப்பு தகவல்களின் தொகுப்பு இது.

செய்திகளை உடனுக்குடன் தெரிந்துகொள்ள... இங்கே க்ளிக் செய்து இன்றே விகடன் ஆப் இன்ஸ்டால் செய்யுங்கள்!

தமிழ்நாட்டின் முக்கிய விழாக்களில் முதன்மையானது மதுரை சித்திரைத் திருவிழா. சித்திரை மாத வளர்பிறையில் மதுரை மீனாட்சி அம்மன் ஆலயத்தில் 12 நாள்கள் சித்திரைத் திருவிழா நடைபெறும். அதில் 8-ம் நாள் இரவில் மீனாட்சி பட்டாபிஷேகம், 9-ம் நாள் இரவில் மீனாட்சி திக்விஜயம் நடைபெறும். இது வேறெங்கும் நடைபெறாத திருவிழா. திக்விஜயம் என்றால் எல்லையை விரிவாக்கும் போர் அல்ல, எட்டுத் திசையிலும் உள்ள ஜீவன்களையும் தன் அன்பினால் அன்னை மீனாள் ஆட்கொள்ளும் அருள் உலா எனலாம்.

அழகிய மீனாள் அவதரிக்கும் முன்பு சொக்கநாதருக்கு இணையாய் இருந்து மதுரையில் வீற்றிருந்தவள் ஷியாமளா என்ற ராஜமாதங்கி என்றும், இவளே மலையத்துவஜ பாண்டியருக்கும் காஞ்சன மாலைக்கும் திருமகளாக அவதரித்தார் என்றும் புராணங்கள் கூறுகின்றன.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
இந்த ஆண்டு மதுரை சித்திரைத் திருவிழா 15-4-2021 அன்று (வியாழக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்கியது. அருள்மிகு சுந்தரேசுவரர் சந்நிதி முன்பு உள்ள கொடிமரம் அலங்கரிக்கப்பட்டு, காலை 10.35 மணி முதல் 10.59 மணிக்குள் கொடியேற்றம் நடைபெற்றது.

சித்திரை விழாவின் சிறப்பான விழாக்களில் 4-ம் நாள் விழாவும் ஒன்று. அப்போது சொக்கநாதர் மீனாளுடன் வில்லாபுரம் பாவக்காய் மண்டபத்தில் எழுந்தருள்வார். ஆதியில் வில்வபுரம் வில்லாபுரம் என்றாகிவிட அதேபோல் பக்தர்களின் பாவங்களைக் காய்ந்துபோகச் செய்து விடும் பாவ காய்ச்சின மண்டபம் தற்போது பாவக்காய் மண்டபம் என்றாகி உள்ளது. அந்தக் காலத்தில் இந்தப் பகுதியில் பாகற்காய்கள் அதிகம் விளைந்ததாலும், இங்கு எழுந்தருளும் ஈசனுக்கும் அன்னைக்கும் பாகற்காய் நைவேத்தியம் செய்ததாலும் இந்த மண்டபத்துக்கு பாவக்காய் மண்டபம் என்றும் பெயர் உண்டானதாம்.

சித்திரை விழாவின் முத்திரைக் கொண்டாட்டமாகத் திகழ்வது மீனாட்சி - சுந்தரேஸ்வரர் திருமணம். இது பத்தாம் நாள் விழாவாகக் கொண்டாடப்படுகிறது. அன்று அதிகாலையில் மீனாட்சியும் சுந்தரேஸ்வரரும் வெள்ளி சிம்மாசனத்தில் எழுந்தருளி, கோயிலைச் சுற்றியுள்ள நான்கு வீதிகளிலும் பவனி வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவார்கள். வீதியுலா நிறைவு பெற்றதும், கோயிலின் முத்துராமையர் மண்டபத்தில் வீற்றிருந்து, கன்னி ஊஞ்சல் ஆடி, பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள். இங்கேதான் இந்திராதி தேவர்கள் கூடி, திருமணத்தை நிச்சயிப்பதாக ஐதீகம்.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

மணம் நிச்சயிக்கப்பட்டதும், அம்மை மீனாட்சியும் அப்பன் சொக்கநாதரும் புதுப்பட்டு உடுத்தி, ஆபரணங்கள் அணிந்து வரும் கோலமே அழகு. அதிலும் அப்போது மட்டுமே அழகிய மீனாளின் திருமுகத்தில் வெட்கம் படர்ந்திருப்பதைக் கண்டு பக்தர்கள் பூரித்துப் போவார்கள். இந்த மீனாட்சி திருக்கல்யாண வைபவத்தை தரிசிக்க திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமியும், மீனாட்சி அம்மனை தாரை வார்த்துக் கொடுக்க பவளக்கனிவாய் பெருமாளும் அங்கே எழுந்தருளுவார்கள். மணம் முடித்த மீனாட்சி - சுந்தரரேஸ்வரர், நான்கு மாசி வீதியெங்கும் இரவு வீதி உலா வருவார்கள். சுந்தரேஸ்வரர் யானை வாகனத்திலும், அன்னை மீனாட்சி ஆனந்தராயர் பூப்பல்லக்கிலும் எழுந்தருளி ஆசி வழங்குவார்கள்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

தங்கை மீனாட்சியை அண்ணன் திருமால் தாரை வார்த்துக் கொடுக்கும் நிகழ்விலும் ஒரு சுவாரஸ்யம் உண்டு. மீனாட்சி திருக்கல்யாணத்தில் திருப்பரங்குன்றம் பவளக்கனிவாய்ப் பெருமாள் முன்நின்று மீனாட்சியின் அண்ணனாக சொக்கருக்குத் தாரை வார்த்துக் கொடுப்பார். புராணத்தின்படி மதுரை கூடலழகர் பெருமாள்தான் இதை நடத்தினார் என்றும், இன்றும் மீனாட்சி கோயிலிலும் புதுமண்டபத்திலும் உள்ள தாரை வார்க்கும் சிற்பங்களில் இருப்பவர், கூடலழகரே என்றும் கூறுவார்கள். எப்போதோ சிக்கல் வந்து கூடலழகர் நின்றுவிட, பவளக்கனிவாய்ப் பெருமாள் வந்துவிட்டார் என்கிறது வரலாறு.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்

திருமலை நாயக்கரின் முதல் அமைச்சரான நீலகண்ட தீட்சிதருக்கு கண்ணொளி தந்த தேவி மீனாட்சி என்பதால் இவளை கண் சம்பந்தப்பட்ட நோய்களுக்கு நிவாரணம் வேண்டி வேண்டிக் கொள்கிறார்கள் பக்தர்கள். திருவனந்தல், விளா பூஜை, கால சந்தி, திரிகால சந்தி, உச்சி காலம், சாயரட்சை, அர்த்த ஜாமம், பள்ளியறை பூஜை என இங்கு தினமும் எட்டுகால பூஜை நடைபெறுகிறது. அதில் முறையே மஹாஷாடசி, புவனை, மாதங்கி, பஞ்சதசாட்சரி, பாலா, சியாமளா, சோடஷி, ஷியாமளை என்று மீனாட்சி வணங்கப்படுகிறாள். மீனாட்சி அன்னையின் பூஜை முறைகள் யாவும் நீலகண்ட தீட்சிதரால் வகுக்கப்பட்டு இன்றளவும் அதன்படியே நடைபெறுகிறது.

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 13 | உலகின் பெருமிதம்... மதுரையின் சிறப்பு... மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!

மதுரையம்பதியில் 63 திருவிளையாடல்கள் நடைபெற்றன. (வலை வீசிய 64 விளையாடல் உத்திரகோச மங்கை அருகே கடலில் நடைபெற்றது.) இதில் முதல் திருவிளையாடலான இந்திரனுக்கு சாபவிமோசனம் கொடுத்த விளையாடல் இன்றும் சித்ரா பவுர்ணமி தினத்தில் இங்கே நடக்கிறது. அன்று உச்சி காலத்தில் சொக்கநாதர் சந்நிதிக்கு எதிரில், இந்திரன் சிலையை வைத்து சொக்கநாதருக்கு பூஜைகள் செய்கின்றனர். இந்த பூஜையை இந்திரனே செய்வதாக ஐதிகம்.

மீனாட்சி திருக்கோயிலின் பழைய திருமண மண்டபத்தில் உள்ள ககோளம், பூகோளம் என்ற இரண்டு ஓவியங்கள் பிரபஞ்ச ரகசியங்களை எடுத்துக் கூறும் அற்புத வடிவமாகக் காணப்படுகின்றன.

மீனாட்சி சுந்தரேஸ்வரர்
மீனாட்சி சுந்தரேஸ்வரர்
இந்த ஆண்டு சித்திரை திருவிழாவின் முக்கிய அம்சமாக வரும் 22-ம் தேதி மீனாட்சி அம்மனுக்கு பட்டாபிஷேகமும் 23-ம் தேதி மீனாட்சி அம்மன் திக் விஜயமும் நடைபெற உள்ளன. ஏப்ரல் 24 மீனாட்சி சொக்கநாதர் திருக்கல்யாணம் மற்றும் ஏப்ரல் 25 அன்று மீனாட்சி சொக்கநாதர் தேர் திருவிழா நடைபெற வேண்டும். ஆனால் கொரோனா கட்டுப்பாடுகளால் இந்த விசேஷங்கள் எல்லாம் ஆலய வளாகத்துக்குள்ளேயே நடைபெற இருக்கின்றன.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism
அடுத்த கட்டுரைக்கு