Published:Updated:

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 12: கபிலரின் பூக்களைப் போன்ற நல்லிணக்கம் கொண்ட மக்களின் திருவாதவூர்!

திருவாதவூர் மாணிக்க வாசகர் கோயில்

மூதூர் மதுரையின் எந்த ஊருக்குள் நுழைந்தாலும், அங்குள்ள கோயில்கள், தெய்வங்கள், புராணக்கதைகள் தாண்டி, அங்கு வசித்த மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஒரு வாழ்க்கை விழுமியம், ஒரு குறுந்தகவல் என ஏதேனும் நமக்குக் கிடைக்கும். அப்படியான ஓர் ஊர்தான் திருவாதவூர்.

மதுரை மூதூர் மாநகரத்தின் கதை - 12: கபிலரின் பூக்களைப் போன்ற நல்லிணக்கம் கொண்ட மக்களின் திருவாதவூர்!

மூதூர் மதுரையின் எந்த ஊருக்குள் நுழைந்தாலும், அங்குள்ள கோயில்கள், தெய்வங்கள், புராணக்கதைகள் தாண்டி, அங்கு வசித்த மக்களிடமிருந்து கற்றுக்கொள்ள ஒரு வாழ்க்கை விழுமியம், ஒரு குறுந்தகவல் என ஏதேனும் நமக்குக் கிடைக்கும். அப்படியான ஓர் ஊர்தான் திருவாதவூர்.

Published:Updated:
திருவாதவூர் மாணிக்க வாசகர் கோயில்

திருவாசகம் பாடிய மாணிக்கவாசகர் பிறந்த ஊர் திருவாதவூர் என்றும், சிவபெருமான் இவருக்காக நரியைப் பரியாக்கித் திருவிளையாடல் நிகழ்த்திக் காட்டினார் என்பதும் நம்மில் பலரும் அறிந்த கதை.

நாம் அறியாத, அறிந்து கொள்ள வேண்டிய பல கதைகள் இத்திருவாதவூர் மண்ணில் புதைந்திருக்கிறது. மதுரையில் இருந்து வடக்கே, 20 கி.மீ தொலைவில், மேலூர் வட்டத்தில் இருக்கிறது திருவாதவூர். இருந்தையூர் என்ற பழைமையான ஊரின் ஒரு பகுதியே திருவாதவூர். இவ்வூரின் சிறப்பாக, சிற்ப எழில் நிறைந்த திருமறைநாதர் வேதநாயகி திருக்கோயில், வாதநோயால் பீடிக்கப்பட்ட சனிபகவானுக்கு சிவன் வாதநோய் நீக்கிய தலம் என்றும் சொல்லப்படுகிறது.

திருவாதவூர் திரௌபதியம்மன் கோயில்
திருவாதவூர் திரௌபதியம்மன் கோயில்

அத்துடன், தமிழரின் பாரம்பர்யப் பெருமைகளுள் ஒன்றாய் நாம் அழகர்கோயில் திருவிழாவில் இருந்து, பல ஊர்த்திருவிழாக்களிலும் கொண்டாடிக் களிக்கும் மதநல்லிணக்கம், மக்கள் நல்லிணக்கம் என்கிற விஷயம் இன்றும் இவ்வூரின் தொடக்கத்தில் இருந்தே காணமுடிகிறது.

ஊரின் நுழைவாயிலில் இருக்கும் சமத்துவபுரத்தில் இருக்கும் நூறு வீடுகளுக்கும் பூக்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன. 1997-ம் ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசின் மக்கள் நலத்திட்டமாக தொடங்கப்பட்ட சமத்துவபுரம் என்கிற திட்டம் இதுவரை 240 ஊர்களில் உருவாக்கப்பட்டிருக்கின்றன. ஐந்து செண்ட் இடத்தில் வீடற்றவருக்கு ஒரு வீடு என்கிற தன்மையில் நூறு வீடுகள் கட்டப்பட்டு, குடிநீர், ஆரம்ப சுகாதார நிலையம், ஆரம்பக்கல்வி, சாலைவசதி என அடிப்படை வசதிகளோடு பல இன மக்களும் இணைந்துவாழும் சமத்துவ இடமாக இச்சமத்துவபுரம் இருக்கும் என்பதே நலத்திட்டத்தின் அடிப்படை நோக்கம்.

அப்படியோர் சமத்துவபுரத்தில், தங்கள் ஊரின் பெருமையையும் இணைக்க வேண்டும் என தமிழன்னை தவழ்ந்து விளையாடிய மண்ணின் மக்களான திருவாதவூர் மக்கள் நினைத்ததில் வியப்பென்ன... தங்களூர் சமத்துவபுர வீடுகளுக்கு, திருவாதவூரில் தமிழன்னை போற்றி வளர்த்த இன்னொரு மகவான கபிலரின் குறிஞ்சிப்பாட்டில் வரும் பூக்களின் பெயர்களைச் சூட்ட வேண்டும் என அன்றைய முதல்வர் கலைஞர் கருணாநிதியிடம் எழுத்துபூர்வமான கோரிக்கையை வைத்திருக்கின்றனர். இலக்கிய ஆர்வம் மிகுந்த கலைஞரும் அக்கோரிக்கையை ஏற்று, வீடுகளுக்கு கபிலர் பாடிய பூக்களின் பெயர்களைச் சூட்டி, திறப்பு விழாவிற்கும் வந்துள்ளார்.

திருவாதவூர் கபிலர் பிறந்த ஊர் என்பதைப் பல வரலாற்றுச் சான்றுகளோடு நிறுவுகிறார், அவ்வூரில் பிறந்து வளர்ந்து, மாணிக்கவாசகர் பிறந்த இடத்தில் அவருக்கு கோயில் கட்டிய சீனிவாசன் என்கிற பெருந்தகையின் பேரனும், ஓய்வுபெற்ற தமிழ்த்துறைப் பேராசிரியருமான முனைவர் சோமு. இன்றும் மாணிக்கவாசகப் பெருமானின் கோயிலை நிர்வகிக்கும் அறங்காவலர்களுள் ஒருவரான இவர் திருவாதவூரின் சிறப்புகளை எடுத்துச் சொல்வதைக் கேட்கும்போது, நேரம் பறப்பதே தெரியவில்லை.

விஷ்ணு தீர்த்தம்
விஷ்ணு தீர்த்தம்

சமத்துவபுரத்தைத் தாண்டி, கபிலரைப் பற்றி யோசித்தபடியே, ஊருக்குள் நுழைந்தால், முதலில் நம் கண்ணுக்குத் தெரிவது தருமர் கோயில் என்கிற திரௌபதியம்மன் கோயில் கொடிமரம்தான். பிளாக்பெர்ன் கலெக்டர் மதுரை நகரை விரிவாக்கம் செய்வதற்காக மதுரைக் கோட்டைச் சுவரை இடித்தபோது, அங்கிருந்த வெளியேறிய மக்கள் தாங்கள் வழிபட்ட திரௌபதை அம்மன் சிலையையும், பிடிமண்ணையும் எடுத்து வந்து, திருவாதவூரில் குடியேறி, தீமிதி விழாவைத் தொடர்ந்து வருகின்றனர். ஒவ்வொரு ஊருக்குள்ளும் மூதூர் மதுரையின் தொன்மம் ஒரு பிடிமண்ணாய்த் தொடர்கிறது என்பது ஆச்சர்யமான விஷயம்.

பங்குனி மாதம் நடைபெறும் தீமிதித்தல் திருவிழா இப்பகுதியிலே மிகப்பிரமாண்டமான திருவிழாவாகும். ஆண்கள் மட்டுமே பூக்குழி இறங்கும் இத்திருவிழாவில், உள்ளூர் தலைக்கட்டு என்று சொல்கிற குடும்பங்களில் இருக்கிற ஆண்கள் மட்டுமே காப்புக்கட்டி, விரதமிருந்து, தீமிதிப்பார்களாம். அர்ச்சுனன் தபசும், அரவான் தலைவெட்டும் காட்சியும் எனத் திருவிழா பதினெட்டு நாள்கள் நடைபெறும். இத்திருவிழா இன்றுவரை சிறப்பான நிகழ்வாக, நிகழ்த்துகலையாக நிகழ்த்திக் காட்டப்படுகிறது. இந்த தருமர்கோயிலின் சிறப்பு என்னவெனில், இங்கு இசுலாமிய அவுலியா ஒருவரின் சமாதியும், அதன்மேல் நாட்டப்பட்டிருக்கும் பச்சைத் துணியும், இன்றும் இரு மதத்தைச் சார்ந்தவர்களும் வந்து வணங்கிச் செல்லும் இடமாக இருப்பதுதான். இக்கோயிலின் மண்டப நிர்மாணங்களையும், பராமரிப்பையும் இரு மதங்களைச் சார்ந்த மக்களும்தான் ஏற்றுச் செய்கிறார்கள் என்பதைக் காணமுடிகிறது.

திருவாதவூருக்கு இவ்வளவு சிறப்பா என்று வியந்தபடி, திருமறைநாதர் கோயிலுக்குள் நுழைந்தால், தம் பாதச் சிலம்பொலி எழுப்பி, மாணிக்கவாசகரை ஈர்த்த சிவன் நின்ற இடத்தில், மாணிக்கவாசகர் கட்டிய நூற்றுக்கால் மண்டபம் சிற்ப எழிலோடு நம்மை வரவேற்கிறது. ஆவுடையார்கோயிலின் சிற்ப எழிலுக்குக் காரணமாக இருக்கும் கொடுங்கைகள் எனும் நுட்பமான சிற்ப வேலைப்பாட்டை இந்த நூற்றுக்கால் மண்டபத்திலும் காணமுடிகிறது. நுழைவாயிலில் கபிலமுனிவர் சிலையும், கோயிலுக்குள் நொண்டிச்சனீச்வரர் என்கிற வாத நோயால் பீடிக்கப்பட்ட சனிபகவானின் ஒற்றைக்கால் தாங்கி நிற்கும் சிலையும் காணமுடிகிறது. எண்ணற்ற கிளிகளும், பரந்து விரிந்து நிற்கும் தலவிருட்சமான மகிழமரமும், ஐந்து ஏக்கர் பரப்பளவில் பரந்து நிற்கும் இக்கோயிலுக்கு மேலும் அழகூட்டுகின்றன.

கோயிலின் வடபுறம் இருக்கும் பெரிய கண்மாயும், அங்குள்ள விஷ்ணுதீர்த்தம் என்றழைக்கப்படுகிற ஏரிநீரில் நிற்கும் புருஷாமிருகமும் (மனிதத்தலையும் மிருக உடம்பும் கொண்டது) சொல்கிற புராணக்கதை நம்மில் பலர் அறியாதது. பஞ்சபாண்டவர்களின் தந்தையான பாண்டு மகாராஜா அசுவமேதயாகம் செய்யாது இறந்துவிட்டதால், அவருக்கு மேலுலகில் உரிய மரியாதை கிடைக்கவில்லை என நாரத முனிவர் சொல்கிறார். அக்குறையைத் தீர்க்க பஞ்சபாண்டவர்களும் பெரும்பொருள் சேர்த்து, அசுவமேதயாகம் நடத்துகின்றனர். அப்போது அவர்களுக்கு பீமன் மூலம் உதவியது புருஷாமிருகம். சிவபக்தியில் சிறந்த இப்புருஷாமிருகத்தை கண்ணபிரான், திருவாதவூரின் விஷ்ணுதீர்த்தத்தில் காவல் தெய்வமாக நிறுத்துகிறார் என்கிறது புராணக்கதை.

திருவாதவூர் திரௌபதி அம்மன் கோயில்
திருவாதவூர் திரௌபதி அம்மன் கோயில்

இன்றும் அவ்வூர் மக்களோடு இணைந்த உள்ளூர்த் தெய்வமாக இருக்கிறது புருஷாமிருகம். ஊரின் மழையின்றிப் போனால், ஊர்மக்கள் ஒவ்வொருவர் வீட்டிலிருந்தும் ஒரு தேங்காயை எடுத்துவந்து, உடைத்து எரித்து, அக்கரியை புருஷாமிருகத்தின் மீது பூசி வழிபடுகிறார்கள். இந்த வழிபாடு முடிந்து, ஊர் திரும்புவதற்குள் மழை வரும் என்பது இம்மக்களின் நம்பிக்கை. மழை பெய்து கண்மாய் நிறைந்து, வெள்ளாமை ஆரம்பிக்கும் முன் அவ்வூரின் இசுலாமிய மக்கள் இதே பகுதியில் கந்திரித் திருவிழா நடத்துகின்றனர். மழையும் நம்பிக்கையும் இம்மக்களை மதம் தாண்டி இணைக்கும் மாயம் இன்றும் நிகழ்கிறது என்பதே திருவாதவூரின் பெருமை.

'திருவாசகத்திற்கு உருகார் ஒரு வாசகத்திற்கும் உருகார்' என்கிற பெருமையைத் தமிழுக்குத் தந்த மாணிக்கவாசகரையும், குறிஞ்சிப்பாட்டு முதல் தனிப்பாடல்களாக கடைச்சங்க காலத்தில் ஏராளமான பாடல்ளைத் தமிழுக்குத் தந்த குறிஞ்சித்திணைப்பாடல்களில் சிறந்த கபிலர் (கபிலர் என்ற பெயரில் பல புலவர்கள் இருந்திருக்கக்கூடும் என்கிறது தமிழ் இலக்கிய வரலாறு) வாழ்ந்த ஊர் என்கிற பெருமையும் சுமந்தபடி, இன்றும் திருமறைநாதர் கோயில் மணியோடு திருவாசகப்பாடல்களையும், மதம் கடந்த மனிதநேயத்தையும், காற்றோடு பயணிக்கச் செய்கிறது திருவாதவூர்.