Published:Updated:

மத்திய அரசின் தூய்மை விருதை பெற்றது மதுரை மீனாட்சி அம்மன் கோயில்!

முத்துக்குமரன் மு
ஈ.ஜெ.நந்தகுமார்

மதுரை மீனாட்சி அம்மன் கோயிலுக்கு தூய்மையான ஆலயத்துக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. மேலும், செல்போன் பாதுகாப்புக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது. இந்த இரு அறிவிப்புகளும் பக்தர்களிடையே பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளன.

Madurai Meenakshi Amman Temple
Madurai Meenakshi Amman Temple

இந்தியாவிலுள்ள தூய்மையான புனிதத்தலங்களின் வரிசையில் மதுரை மீனாட்சியம்மன் கோயில் இரண்டாவது இடத்தைப் பிடித்து, தூய்மை கோயில்களுக்கான மத்திய அரசு விருதை வென்றுள்ளது. ஆண்டு முழுவதும் கோயிலில் குப்பைகளை உடனுக்குடன் அகற்றி தொடர் பராமரிப்புகள் மேற்கொள்ளப்பட்டதால் இந்த அங்கீகாரம் கிடைத்துள்ளது.

Madurai Meenakshi Amman Temple
Madurai Meenakshi Amman Temple

இந்த நிலையில், கோயிலுக்கு வரும் பக்தர்களின் செல்போன் பாதுகாப்புக் கட்டணத்தை கோயில் நிர்வாகம் குறைத்து அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மத்திய அரசின் சார்பில் விருது அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், பக்தர்களின் செல்போன் பாதுகாப்புக் கட்டணமும் குறைக்கப்பட்டுள்ளது மக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ளது.

Vikatan

மீனாட்சியம்மன் கோயிலுக்கு வரும் பக்தர்கள் செல்போனை உள்ளே கொண்டு செல்ல அனுமதிக்கப்படுவதில்லை. அவற்றைக் கோயில் வாசலிலேயே விட்டுச் செல்ல வேண்டும். செல்போன் பாதுகாப்புக் கட்டணமாக 10 ரூபாய் வசூலிக்கப்பட்டு வந்தது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இந்த கட்டணம் வசூலிக்கப்படுவதற்கு எதிர்ப்பு தெரிவித்த பக்தர்கள் கட்டணத் தொகையைக் குறைக்க வேண்டுமெனக் கோரிக்கை விடுத்து வந்தனர்.

Madurai
Madurai

இதுதொடர்பாக விகடன் இணையதளத்திலும் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. இந்த நிலையில், 10 ரூபாயாக வசூலிக்கப்பட்டு வந்த செல்போன் பாதுகாப்புக் கட்டணத்தை 5 ரூபாயாகக் குறைப்பதாகக் கோயில் நிர்வாகம் நேற்று அறிவித்தது. மீனாட்சி கோயில் தொடர்பான இந்த இரு அறிவிப்புகளும் அடுத்தடுத்து வெளியானது பக்தர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

மத்திய அரசு விருது, கட்டணக்குறைப்பு குறித்து மீனாட்சி கோயில் இணை ஆணையர் நடராஜனிடம் பேசினோம். ``கோயிலுக்கு வெளியே சித்திரை வீதிகள் மற்றும் அருகிலுள்ள இடங்களை மாநகராட்சி பராமரித்து வருகிறது. கோயிலுக்கு உள்ளே கோயில் நிர்வாக ஊழியர்கள் பராமரிக்கின்றனர். பக்தர்களின் கோரிக்கை மற்றும் சில காரணங்களின் அடிப்படையில் செல்போன் பாதுகாப்புக் கட்டணத்தைக் குறைத்து அறிவித்துள்ளோம். கோயிலைத் தூய்மையாக வைத்திருப்பதற்காக மத்திய அரசு விருது வழங்கியிருப்பது மகிழ்ச்சியளிக்கிறது'' என்றார்.

Nataraj, Temple Joint Commissioner
Nataraj, Temple Joint Commissioner

மாநகராட்சி ஆணையர் விசாகன் பேசும்போது, ``மாநகராட்சி நிதி மட்டுமின்றி, பாரத் பெட்ரோலியம் வழங்கிய நிதியையும் கொண்டு கோயில் தூய்மைப்பணிகளை மேற்கொண்டுவருகிறோம். மேலும், அடுத்த ஆண்டுக்குத் திட்டமிட்டுள்ள நீர்வள மேம்பாட்டுப் பணிகளுக்காகவும் பாரத் பெட்ரோலியத்திடம் நிதி கேட்டுள்ளோம். மேலும், நிலத்தடிக் குழாய் மாற்றுதல், சாலை அமைத்தல் உள்ளிட்ட பணிகள் சித்திரை வீதிகளில் நடைபெற்று வருகின்றன. தூய்மை மற்றும் பராமரிப்புப் பணிகளைத் தொடர்வோம்" என்றார்.