Published:Updated:

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 6 | மன பயம் போக்கி செல்வ வளம் சேர்க்கும் திருவேடகம்!

திருவேடகம்

இந்தத் தலம் பிரம்மா, திருமால், வியாசர், பராசரர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்ட தலம் என்பதால் இங்கு வந்து இறைவனை வேண்டிக்கொண்டால் மும்மூர்த்திகளின் அருளும் கிடைப்பதோடு குருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 6 | மன பயம் போக்கி செல்வ வளம் சேர்க்கும் திருவேடகம்!

இந்தத் தலம் பிரம்மா, திருமால், வியாசர், பராசரர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்ட தலம் என்பதால் இங்கு வந்து இறைவனை வேண்டிக்கொண்டால் மும்மூர்த்திகளின் அருளும் கிடைப்பதோடு குருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும்.

Published:Updated:
திருவேடகம்
திரு ஏடகமும் மதுரையும் வேறுவேறல்ல. மதுரையின் வரலாற்றோடும் பண்பாட்டோடும் நெருங்கிய தொடர்புடையது. தமிழகத்தில் காசிக்கு இணையான முக்தித்தலங்கள் பலவற்றைக் குறிப்பிடுவார்கள். அவற்றில் முக்கியமானது திருவேடகம். இங்கு ஒரு நாள் தங்கி ஈசனை வழிபட்டால் வாழ்நாள் முழுவதும் காசியில் வாழ்ந்த புண்ணியம் கிடைக்குமாம். அவ்வாறு முக்தி தரும் தலங்களில் இது முக்கியமானது என்கிறார்கள் அடியவர்கள்.

சமணர்களுடன் அனல்வாதம் புனல்வாதம் செய்து வென்றார் ஞானசம்பந்தர். நெருப்பில் இடப்பட்ட சம்பந்தரின் திருநள்ளாற்றுப்பதிகம் தீயில் வாடாது பசுமை மாறாது மீண்டது. அனல் கைவிட்டாலும் புனல் கைவிடாது என்று நம்பிய சமணர்கள் வைகையில் தம் வாதத்தை ஏட்டில் எழுதி ஓட விட்டனர். அது ஆற்றில் விழுந்த இலை போல ஒடி மறைந்தது. ஞானசம்பந்தர், ‘வாழ்க அந்தணர்’ என்ற பதிகத்தை எழுதி வைகையில் இட்டார்.

திருவேடகம்
திருவேடகம்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நதி வெள்ளத்தில் சிக்கியவர்கள் அதன் போக்கிலேயே சென்றுதான் கரையேற வேண்டும். பலர் கரையேறாமல் மூழ்கிவிடவும் கூடும். அப்படித்தான் இந்தப் பிறவியும். அது இழுத்துச் செல்லும் பிறப்புகளில் எல்லாம் நகர்ந்து செல்லவேண்டும். அதை எதிர்த்து நீந்தும் வல்லமை நீச்சல் அறிந்தவர்களிலும் ஒரு சிலருக்கே கூடும். நதியின் சுழலில் சிக்கியவர்களுக்கே இந்த நிலை என்றால் பிறவிச் சுழலில் சிக்கியவர்களின் நிலையை என்ன சொல்வது... பிறவிப் பிணி நீங்கிக் கரைசேர வேண்டுமானால் அந்த ஈசனின் அருள் வேண்டும்.

ஞானசம்பந்தர் இட்ட ஏடு வைகையின் போக்கில் நகராமல் எதிர்த்திசையில் நகரத்தொடங்கியது. ஈசனின் அருள் சுமந்த அந்த ஏடு கரையேறிய இடம் திரு ஏடகம். ஏட்டைக் கரையேற்றியவனே நம் பிறவிப் பிணியையும் தீர்த்து நம்மையும் கரையேற்ற வல்லவன். அதனால்தான் திருவேடகம் வந்து திருஏடகநாதரை வணங்கினால் பிறவிப் பிணி தீரும் என்கிறார்கள் அடியவர்கள்.

உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க

VIKATAN DEALS
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

இந்தத் தலத்து ஈசன், ஏடகேசர், ஏடகநாதர், ஏடகநாதேஸ்வரர் என்று பல்வேறு திருநாமங்களால் போற்றப்படுகிறார். ஆலயத்தில் அம்மை - அப்பன் இருவருக்கும் இரு கோபுரங்கள் அமைந்துள்ளன. ஈசனின் ஆலயத்தின் உள் பிராகாரத்தில் கிழக்குச் சுற்றில் சூரியன் சாயா, சமிக்ஞை சமேதராகக் காட்சி தருகிறார். உள் பிராகார தெற்குச் சுற்றில் அறுபத்துமூவர் அமர்ந்து அருள்பாலிக்கிறார்கள். தென்மேற்கு மூலையில் உற்சவ மூர்த்தங்களின் சந்நிதி. ஏடகநாதர், ஏலவார்குழலி, ஆறுமுக சுவாமி, கணபதி, சோமாஸ்கந்தர், ஞானசம்பந்தர் என்று ஏராளமான உற்சவத் திரு மேனிகள் அங்கே இருந்து நம் கவனத்தைக் கவர்கின்றன. அடுத்து மெய்கண்ட சிவம், உமாபதி சிவம், அருள் நந்தி சிவம், மறை ஞான சிவம் ஆகியோரின் சந்நிதியும் அமைந்திருப்பது மிகச் சிறப்பாகும்.

ஏடகநாதர்
ஏடகநாதர்

கோயில் அமைப்பில், அதற்கு இணையாக, சுவாமிக்கு வலப் பக்கமாக, கிழக்குப் பார்த்து அமைந்துள்ள அம்மன் கோயில். விசாலமான உள் பிராகாரம். அம்மன் சந்நிதிக்கு எதிரில் பலி பீடம், நந்தி, துவார கணபதியையும் துவார தண்டபாணி ஆகியோரை வணங்கி அம்மன் சந்நிதிக்குள் நுழையலாம். அம்மன் கோயில் தூண்களிலும் நிறைய சிற்பங்கள் நம் கருத்தைக் கவர்கின்றன. ரிஷப நாதர், நாகலிங்கம், நடனமாதர், சங்கணன், தண்டபாணி, புலிக்கால் முனிவர் (வியாக்ரபாதர்), வினோதமுனி, இசையில் லயித்திருக்கும் தும்புரு, கதாயுதம் தாங்கிய துர்கை, யானைகள் விசிற தவம் செய்யும் முனிவர், அன்னங்கள் உள்ளிட்ட பலவிதமான பறவைகள் அழகு சிற்பங்களாக வடிக்கப்பட்டு நம் நெஞ்சைக் கொள்ளை கொள்கின்றன. அம்மன் கருவறை வாயிலின் மேல் பகுதியில் ரிஷப வாகனர், கஜலட்சுமி, விநாயகர், முருகர், வீணை ஏந்திய பெண்கள் ஆகியோர் காட்சி கொடுக்கின்றனர்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இங்கு அருளும் அம்பிகைக்கு ஏலவார்குழலி என்று பெயர். இங்கு அம்மை நின்ற திருக்கோலத்தில் காட்சி அருள்கிறார். நான்கு திருக்கரங்களில் இரண்டில் அபயமும் வரமும் தாங்கி அருள்பாலிக்கிறார். இங்கு அம்மையை வேண்டிக்கொண்டால் திருமண வரம் வாய்க்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

கோஷ்டத்தில் இச்சா, கிரியா மற்றும் ஞான சக்திகள். பிராகாரத்தின் தென்மேற்கு மூலையில் விநாயகர் சந்நிதி; வடமேற்கு மூலையில் சுப்பிர மணியர் சந்நிதி. பிராகாரத்தின் வடக்குச் சுற்றில் பள்ளியறை. தனி மண்டபத்தில் சண்டேஸ்வரி தேவி சந்நிதி கொண்டு அருள்கிறார்.

ஏலவார் குழலி
ஏலவார் குழலி

அம்மன் சந்நிதித் தூண்கள் ஒன்றில் திருஞான சம்பந்தக் குழந்தையின் திருவுருவம் சிற்பமாக உள்ளது. சின் முத்திரையுடன், தலையில் மாலை சூடி, கைத்தாளம் இல்லாமல் ஞானசம்பந்தரின் அழகு மனதைக் கொள்ளைகொள்வதாக அமைகிறது.

இந்த ஆலயம் மிகவும் எழிலுடன் எழுப்பபட்டுள்ளது. தன் நோய் தீர்த்த இறைவன் என்பதால் நின்ற சீர் நெடுமாறர் இந்த ஆலயத்தில் திருப்பணிகளைச் செய்தான். அவருக்குப் பின் வந்த பாண்டிய மன்னர்கள் பலரும் இந்த ஆலயத்துக்குத் திருப்பணிகள் செய்து பேறுபெற்றனர். விஜயநகர அரசர்களும் இந்தக் கோயிலுக்கு நிறைய திருப்பணிகள் செய்துள்ளனர்.

கார்த்திகை சோமவாரத்தில் இந்தக் கோயில் தரிசனம் செய்வது மிகவும் சிறப்பானதாகக் கருதப்படுகிறது. ஏடு எதிர் ஏறிய திருவிழா இந்தத் தலத்தில் ஆவணி மாதத்தில் நடைபெறும். இந்த விழாவினை தரிசனம் செய்தால் பிறவிப்பிணி தீர்ந்து முக்தி கிடைக்கும் என்கிறார்கள் பக்தர்கள்.

பிறவிப்பிணி தீர்வது இருக்கட்டும், இம்மையில் என்னென்ன கிடைக்கும் என்று கேட்பவர்களுக்குப் பல்வேறு நன்மைகளைப் பட்டியல் இடுகிறார்கள் பக்தர்கள். ஞானசம்பந்தர், இறையருளால் தன் பகைவர்களை வென்ற தலம் என்பதால் இங்கு வந்து ஈசனை வேண்டிக்கொண்டால் பகைவர்களால் உருவாகும் பிரச்னைகள் நீங்கும். பாண்டிய மன்னனின் நோய் நீக்கி அருளிய ஈசன் இத்தலத்தில் மன நலம் அருளும் மகாதேவராகக் காட்சி தருகிறார் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் மனபயம், சோர்வு, நம்பிக்கையின்மை ஆகியன நீங்குவதோடு உடல் நோய்கள் அனைத்தும் விலகி உடலும் மனமும் ஆரோக்கியம் பெறும் என்கிறார்கள் அடியவர்கள்.

திருவேடகம் முருகன்
திருவேடகம் முருகன்

இந்தத் தலத்தைப் பாடும்போது,

ஏலமார் தருகுழல் ஏழையோடு எழில்பெறும்

கோலமார் தருவிடைக் குழகனார் உறைவிடம்

சாலமாதவிகளும் சந்தனம் சண்பகம்

சீலமார் ஏடகம் சேர்தலாம் செல்வமே

என்று பாடுகிறார். ஏடக நாதரைச் சரணடைந்தால் செல்வம் சேரும் என்பதுவே ஞானசம்பந்தர் வாக்கும். எனவே ஏடக நாதரைப் பணிந்து வேண்டுவோருக்கு வறுமை நீங்கி செல்வ வளம் சேரும் என்கிறார்கள் பக்தர்கள்.

இந்தத் தலம் பிரம்மா, திருமால், வியாசர், பராசரர் ஆகியோர் வந்து ஈசனை வழிபட்ட தலம் என்பதால் இங்கு வந்து இறைவனை வேண்டிக்கொண்டால் மும்மூர்த்திகளின் அருளும் கிடைப்பதோடு குருவருளும் பரிபூரணமாகக் கிடைக்கும். எனவே, நவகிரக தோஷங்கள் எது இருந்தாலும் அதைத் தீர்க்கும் தலமாக திரு ஏடகம் விளங்குகிறது. இங்கு அம்பிகையை வழிபட்டு வேண்டிக்கொண்டால் திருமணத் தடைகள் நீங்கும்.
தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism