Published:Updated:

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 14 - ஆதித்தலம்... ஆதி தீர்த்தம்... மீனாட்சி அம்மன் திருக்கோயில்!

மதுரை மீனாட்சி அம்மன்

பச்சைத் திருமேனி. வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தம் (தொங்கு கரம்). வலது தோளில் பச்சைக் கிளி. இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ் சிறுமியின் முகம். அன்னையில் அழகுத் திருக்கோலத்தை தரிசித்தவர்களுக்கு இம்மையில் கல்வி கேள்விகளில் மேன்மை உண்டாகும்.

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 14 - ஆதித்தலம்... ஆதி தீர்த்தம்... மீனாட்சி அம்மன் திருக்கோயில்!

பச்சைத் திருமேனி. வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தம் (தொங்கு கரம்). வலது தோளில் பச்சைக் கிளி. இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ் சிறுமியின் முகம். அன்னையில் அழகுத் திருக்கோலத்தை தரிசித்தவர்களுக்கு இம்மையில் கல்வி கேள்விகளில் மேன்மை உண்டாகும்.

Published:Updated:
மதுரை மீனாட்சி அம்மன்
முன்னொரு காலத்தில் மதுரைத் தலத்துக்கு தன் பரிவாரங்களோடு எழுந்தருளிய ஈசன் புண்ணியம் அருளும் தீர்த்தம் ஒன்றை உண்டாகத் திருவுளம் கொண்டார். அவர் தன் திரிசூலத்தை பூமியில் குத்த, அது பிரம்ம தடாகத்தையும் துளைத்து அப்பாலிருந்த பெரும்புறக் கடல், பொங்கி துளை வழியே புகுந்தது. பூமியை அடைந்த கடலின் கொந்தளிப்பைத் தமது கையைக் காட்டி அடக்கிய இறைவனார், ஜடாமுடியிலிருந்து கங்கை நீரை எடுத்து அதனுள் தெளித்தார்.

இறைவனார், ஆதியில் உண்டாக்கியதால் இந்தத் தீர்த்தம் ஆதித் தீர்த்தம் என்று பெயர்பெற்றது. உலகில் உள்ள தீர்த்தங்களில் எல்லாம் மேலானதால் பரம தீர்த்தம் என்றும் மங்கலங்களைத் தரக்கூடியதால் சிவ தீர்த்தம் என்றும் அஞ்ஞானத்தை நீக்கி ஞானத்தைக் கொடுப்பதால் ஞான தீர்த்தம் என்றும் முக்தி வழங்குவதால் முக்தி தீர்த்தம் என்றும் கங்கை கலந்தமையால் சிவகங்கை தீர்த்தம் என்றும் உத்தமமானதால் உத்தம தீர்த்தம் என்றும் அறம், பொருள், இன்பம், வீடென்னும் பயன்களை அருள்வதால் தர்ம தீர்த்தம் என்றும் பற்பல திருநாமங்கள் கொண்டு விளங்கியது அந்தத் தீர்த்தம். அந்தத் தீர்த்தமே பொற்றாமரைக் குளம் என்ற திருப்பெயரையும் பெற்றது.

மதுரை மீனாட்சி அம்மன் கோயில்
மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

மீனாட்சி அம்மை ஆட்சி செய்யும் ஆலய முகமண்டபம், வரலாற்றுச் சிறப்பு மிக்கது. மீனாட்சி அம்மையைக் குழந்தையாக பாவித்து, பிள்ளைத் தமிழ் பாடியவர் குமரகுருபரர். ஆலயத்தின் முகமண்டபத்தில் நின்றுதான், தாம் இயற்றிய பிள்ளைத் தமிழைத் திருமலை நாயக்க மன்னர் முன்னிலையில் அரங்கேற்றினார் குமர குருபரர்.

பெண் குழந்தைகள் வளரும்போது, அந்த வளர்ச்சியின் பருவங்களைப் பத்தாகப் பகுத்து, ஒவ்வொரு பகுப்புக்கும் பத்துப் பத்துப் பாடல்கள் பாடினார் குமரகுருபரர். இதில், ஆறாவது பருவம், வருகைப் பருவம். சிறு குழந்தை, தளர் நடையிட்டு நடக்கின்ற பருவம். இந்தப் பருவத்தின் ஒன்பதாவது பாடல்...

தொடுக்கும் கடவுள் பழம்பாடல் தொடையின் பயனே நறைபழுத்த

துறைத் தீந்தமிழின் ஒழுகு நறுஞ்சுவையே அகந்தைக் கிழங்கைஅகழ்ந்து

எடுக்கும் தொழும்பர் உளக்கோயிற்கு ஏற்றும் விளக்கே வளர்சிமய

இமயப் பொருப்பில் விளையாடும் இளமென் பிடியே எறிதரங்கம்

உடுக்கும் புவனம் கடந்துநின்ற ஒருவன் திருவுள்ளத்தில் அழ(கு)

ஒழுக எழுதிப் பார்த்திருக்கும் உயிரோவியமே மதுகரம்வாய்

மடுக்கும் குழல் காடேந்தும் இளவஞ்சிக் கொடியே வருகவே

மலையத்துவசன் பெற்ற பெருவாழ்வே வருக வருகவே...

இந்தப் பாடலைக் குமரகுருபரர் பாடியபோது, கோயில் அர்ச்சகருடைய மகளான சின்னஞ்சிறுமி, தளர் நடையிட்டு வந்து, திருமலை மன்னரின் மடியில் ஏறி அமர்ந்தாள். மற்றவர் எல்லாம் மன்னவர் மடியில் மற்றவர் மகளா என்று பதறினர். மன்னரோ அவர்களைக் கை காட்டி அமரச் செய்தார். குழந்தை குமர குருபரரின் பாடல்களை ரசித்துக்கேட்பதைக் கண்டு வியந்தார். சிறுமியின் கண்களில் தெய்விக ஒளி. அடுத்து அந்தக் குழந்தை செய்த செயல்தான் அனைவரையும் வியக்க வைத்தது. மன்னர் கழுத்திலிருந்த மணிவடத்தைக் கழற்றி குமரகுருபரரின் கழுத்தில் போட்டுவிட்டு சந்நிதி நோக்கி நடந்துபோய் ஒரு நொடியில் மாயமானாள் சிறுமி.

மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா
மதுரை அருள்மிகு மீனாட்சி அம்மன் திருக்கோயிலில் சித்திரைத் திருவிழா

இதைக் கண்ட அவை திகைத்துப் போய் நின்றது. வந்தவள் யார் என்று கண்டுகொண்டது. திருமலை மன்னன் தன் முன்வினைகள் அனைத்தும் தீர்ந்ததென்று எண்ணிச் சிலிர்த்தான். மலையத்துவஜனுக்கு மகளானவள் திருமலை மன்னனுக்கும் மகளாகி மடியில் அமர்ந்தாள் என்றால் அவன் பெற்ற பேறு உலகெங்கும் பேச்சாகியது. இந்தத் திருவிளையாடல் நடைபெற்ற முக மண்டபத்தில்தான் சித்திரைத் திருவிழாவின்போது அம்மனுக்கு முடிசூட்டு விழாவும் நடைபெறும். நாயக்க மன்னர்கள், அம்பாளிடம் செங்கோல் வாங்கியதும் இந்த மண்டபத்தில் வைத்துத்தான் என்கிறார்கள்.

ஆலயத்தின் மஹா மண்டப வாயிலில், துவாரபாலகியர். இரு புறமும், மீனாட்சியம்மை பிள்ளைத் தமிழ்ப் பாடல்கள் பொறிக்கப்பட்டுள்ளன. மஹாமண்டபத்துக்குள் நுழைந்தால் அம்மன் சந்நிதி முதல் பிராகாரத்துக்குள் இரட்டை விநாயகர் கோயில், முருகன் கோயில் தென்மேற்கிலும் வடமேற்கிலும் இரண்டு சிறிய கோயில்கள் எனப் பல சந்நிதிகள். இந்தப் பிராகாரத்தின் வடக்குச் சுற்றில், பள்ளியறை. பிராகார வலத்தை நிறைவு செய்து அம்மன் சந்நிதி அர்த்த மண்டபத்தை அடையலாம்.

அன்னை மீனாட்சி அங்கயற்கண்ணி கருவறையில் புன்னகை தவழும் திருக்கோலம் காட்டி அருள்கிறாள். நின்ற திருக்கோலம். பச்சைத் திருமேனி. வலது கரத்தில் மலர்; இடது கரம் லோல ஹஸ்தம் (தொங்கு கரம்). வலது தோளில் பச்சைக் கிளி. இடது பக்கம் சாயக் கொண்டை; சின்னஞ் சிறுமியின் முகம். அன்னையில் அழகுத் திருக்கோலத்தை தரிசித்தவர்களுக்கு இம்மையில் கல்வி கேள்விகளிலும் செல்வச் சிறப்புகளும் குறையாது கிடைக்கும் என்பது நம்பிக்கை.

இத்தலம் அம்மை ஆட்சி செய்யும் தலம் என்பதால் இங்கு வந்து வேண்டிக்கொண்டால் அன்னை பதவி யோகம் அருள்வாள். அன்னையைத் தேடி ஈசன் வந்து திருமணம் புரிந்துகொண்ட தலம் என்பதால் இங்கு அன்னையை வேண்டிக்கொண்டால் பெண்களுக்குத் திருமண வரம் உடனே கிடைக்கும். மனதுக்கு இனிமையான கணவர் தேடிவந்து மணம்புரிந்துகொள்வார் என்பது நம்பிக்கை.

அழகர்... அற்புதங்கள்!

அன்னையின் திருக்கல்யாண வைபவம் முன்பெல்லாம், கோயிலுக்குள் திருமண மண்டபத்தில்தான் நடந்ததாம். ஆனால், அடியார் திருக்கூட்டம் பெருகியதால், மேற்கு ஆடி வீதி - வடக்கு ஆடி வீதி சந்திப்பில் உள்ள திருப்புகழ் மண்டபத்தில் திருக்கல்யாணம் செய்யும் வழக்கம் ஏற்பட்டது. மணமக்களுக்கு அணிவிக்கப்படும் அணிகலன்கள், திருமலை நாயக்கர் அன்னைக்குக் காணிக்கையாகச் செய்து கொடுத்தவைதாம்.

சித்திரைத் திருவிழாவின் முக்கிய நிகழ்வே மீனாட்சி அம்மைத் திருக்கல்யாணம். இதை ஒட்டி நிகழ்ந்த திருவிளையாடல்களும் உண்டு. நாளை (24.4.21) திருக்கல்யாண வைபவம் மதுரையில் நடைபெறுகிறது. கொரோனா தொற்று அச்சம் காரணமாக பக்தர்கள் காண இந்த வைபவம் நடைபெறாது ஆலய வளாகத்துக்குள்ளேயே நடந்து முடியும். நேரலையாகப் பல இணையதளம் வழியாகவும் காணமுடியும்.

என்ன இருந்தாலும் அன்னை மணப்பெண்ணாக நாணம் சுமந்து நிற்கும் அந்த அற்புதத் திருக்கோலத்தை நேரில் காணும் பாக்கியத்துக்கு ஈடாகுமா... அடுத்த ஆண்டாவது இந்த கொரோனா அச்சமெல்லாம் நீங்கி அன்னையின் திருக்கல்யாண வைபவத்தைக் காணும் அருளை அம்மை வழங்க வேண்டும் என்று மனதார வேண்டிக்கொள்வோம்.