Published:Updated:

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 18 | துணைவரும் தோழனாய் அருளும் திருமோகூர் காளமேகப் பெருமாள்!

திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில்
திருமோகூர் காளமேகப் பெருமாள் திருக்கோயில்

இங்குள்ள உற்சவருக்கு, ‘திருமோகூர் ஆப்தன்’ என்று பெயர். ஆப்தன் என்றால் நண்பன் என்று பொருள். தெய்வம் என்ற நிலையிலிருந்து நண்பனாய் நம் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து நம்மோடு வழித்துணையாய் வரும் பெருமாள் இவர் என்பதால் ஆப்தன் என்ற திருநாமத்தாலேயே அழைக்கப்படுகிறார்.

‘தெய்வம் நமக்குத்துணை பாப்பா... ஒரு தீங்குவரமாட்டாது பாப்பா!’

பாரதியின் இந்த வரிகள்தான் எவ்வளவு சத்தியமானவை. தெய்வம் நம் கூடவேயிருந்து துணைக்கும் வந்தால் இந்த உலகில் வேறு எத்துணை நமக்குத் தேவை... இந்த உலகில் நமக்குக் கிடைக்கும் துணைகள் எல்லாம் ஒரு எல்லைக்குமேல் நம்மோடு வரமுடியாது. நம் துயர் தீர்க்க முடியாது. ஆனால் காலமெல்லாம் நம் கூட இருந்து நம் துணை தீர்க்க வேண்டுமென்றால் எக்காலமும் அழிவில்லாத அந்தப் பரம்பொருளால் மட்டுமல்லவா முடியும். அப்படி, நண்பனாக எப்போதும் நம் துணைவரும் தோழனாக, பிரார்த்தனைகளுக்குச் செவிசாய்த்து நிறைவேற்றுபவராகப் பெருமாள் அருளும் தலம் ஒன்று மதுரை அருகே உள்ளது. அதுதான் திருமோகூர் திருத்தலம்.

மதுரை- மேலூர் சாலையில் உள்ள ஒத்தக்கடை எனும் ஊரிலிருந்து திருவாதவூர் செல்லும் வழியில், சுமார் 3 கி.மீ. தொலைவில் அமைந்துள்ள இந்தத் திருத்தலம். 108 திவ்ய தேசங்களில் திருமோகூர் 94 வது திருத்தலம். நம்மாழ்வாரும் திருமங்கையாழ்வாரும் மங்களாசாசனம் செய்த தலம். இங்கு பெருமாள், காளமேகப் பெருமாளாக அருள்பாலிக்கிறார்.

திருமோகூர் காளமேகப் பெருமாள்
திருமோகூர் காளமேகப் பெருமாள்

காளமேகம் என்றால் கருமையான மழையைத் தரும் மேகம் என்று பொருள். பக்தர்களின் வேண்டுகோளுக்கு தாமதிக்காமல் அருளை மழைபோல் பொழியும் பெருமாள் என்பதால் இவருக்கு அந்தப் பெயர். இங்குள்ள உற்சவருக்கு, ‘திருமோகூர் ஆப்தன்’ என்று பெயர். ஆப்தன் என்றால் நண்பன் என்று பொருள். தெய்வம் என்ற நிலையிலிருந்து நண்பனாய் நம் வேண்டுகோளுக்குச் செவி சாய்த்து நம்மோடு வழித்துணையாய் வரும் பெருமாள் இவர் என்பதால் ஆப்தன் என்ற திருநாமத்தாலேயே அழைக்கப்படுகிறார்.

திருமோகூர் தலத்துக்கு வரலாற்றுச் சிறப்புகளும் புராணச் சிறப்புகளும் ஏராளம். இங்குதான் பெருமாள். இந்தத் தலத்தில் தேவர்களுக்கு மட்டுமல்ல, துவாபர யுகத்தில் புலஸ்திய முனிவர் தவம் இருந்து வேண்டிக்கொள்ள, அவருக்குக் கூர்ம அவதாரத்தின்போது தான் எடுத்த மோகினி அவதாரத்தைக் காட்டியருளினாராம் பகவான். எனவேதான் இந்த ஊர் மோகூர் என்ற பெயர் பெற்றது.

ராஜகோபுரமும் உயர்ந்த மதில்களும் விசாலமான பிராகாரமுமாக அழகுற அமைந்திருக்கிறது ஆலயம். இந்த ஆலயத்தை தேவ சிற்பியான விஸ்வகர்மாவே கட்டியதாக ஐதிகம். கோயிலுக்குள் நுழைந்ததும் வடக்கில் கம்பத் தடி மண்டபம். இதில், ஆலயத் திருப்பணி செய்த மருது சகோதரர்களின் சிலாரூபங்கள் காணக்கிடைக்கின்றன. அடுத்தது கருட மண்டபம். சீதாதேவியை அணைத்தபடி காட்சிதரும் ஸ்ரீராமன், ரதி மன்மதர் என்று இந்த மண்டபத்தின் தூண் சிற்பங்கள் எழிலுறத் திகழ்கின்றன. மண்டபத்தில் நடுநாயகமாக கருடாழ்வார் அருட்காட்சி தருகிறார்.

ரதி - மன்மதன்
ரதி - மன்மதன்

இந்த ரதி - மன்மதன் உருவங்களுக்குத் திருமணமாகாதவர்கள் மஞ்சள் பூசி வழிபடும் வழக்கம் இருந்துவருகிறது. அவ்வாறு செய்தால் தங்களின் இளமையும் அழகும் அதிகரித்து விரைவில் திருமணவரம் கைகூடப் பெறுவார்கள் என்பது நம்பிக்கை.

தொடர்ந்து... மகாமண்டபத்தைக் கடந்து சென்றால் அர்த்த மண்டபம். கருவறையில், அழகிய விமானத்தின் கீழ், தேவியர் இருவருடன் கிழக்கு நோக்கி அருள்பாலிக்கிறார் ஸ்ரீகாளமேகப் பெருமாள். மேலிரு கரங்கள் சங்கு சக்கரம் ஏந்தியிருக்க, கீழ் வலக் கரத்தால் தனது பாதார விந்தத்தைச் சுட்டிக்காட்டி, 'என்னைச் சரணடைவோருக்கு நற்கதி அளிப்பேன்' என்று பகவான் அருளும் கோலம் அற்புதத் திருக்கோலம்.

இங்கு மற்றுமொரு சந்நிதியில் பெருமாள், பிரார்த்தனை சயனப்பெருமாளாக அருள்பாலிக்கிறார். தேவர்கள், அசுரர்களால் தங்களுக்கு ஏற்பட்ட துன்பத்தினைக் கூறி முறையிட பாற்கடலுக்கு வந்தனர். ஆனால் ஹரியோ அறிதுயிலில் இருந்தார். பார்ப்பதற்கோ உறக்கம் ஆனால் உள்ளூர அனைத்தையும் அறியும் யோக நிலை. தேவர்கள் அவன் பராக்கிரமங்களில் ஒன்றாக இதை அறியவில்லை போலும். பெருமாளின் நித்திரைக்கு பங்கம் விளைவிக்கக் கூடாது என்று தம் வேண்டுதலை பூதேவி, ஸ்ரீதேவித் தாயாரிடம் முறையிட்டுச் சென்றனர். தேவியர் இருவரும் பெருமாளை எழுப்பவில்லை. காரணம் அவர்களின் ஆத்மனாகச் செயல்படுபவன் அவன்தானே.

அதனால் கண்களை மூடித் தம்முள் இருக்கும் அந்தப் பரம்பொருளிடம் விண்ணப்பம் செய்தனர். அடுத்த கணம் பெருமாள் கண் திறந்து அவர்களின் வேண்டுதலை நிறைவேற்றினாராம். அவ்வாறு அறிதுயில் கொண்ட பெருமாள் பக்தர்களின் பிரார்த்தனையை உடனே நிறைவேற்றித்தருவதால் இந்தப் பெருமாளுக்குப் பிரார்த்தனை சயனப்பெருமாள் என்ற திருநாமம் ஏற்பட்டது.

எழில் கொஞ்சும் திருமோகூர் திருக்கோயில் காட்சிகள்

இங்கு தாயார் சந்நிதியை விட்டு வெளியே வருவதில்லை. இந்தக் கோயிலில் பெருமாள் மட்டுமே வீதியுலா காண்கிறார். உற்சவ காலங்களில் ஆண்டாள் நாச்சியார் பெருமாளுடன் உலா வருகிறார். வைகாசி மாத உற்சவத்தில் எட்டாம் திருநாளில் பெருமாள் இங்கு மோகினி அவதாரத்தில் காட்சிகொடுக்கிறார். மாசிமகத்தன்று ஒத்தக்கடை நரசிம்மர் ஆலயத்துக்கும் இந்தப் பெருமாள் எழுந்தருள்வது வழக்கம்.

இங்கு நடைபெறும் மோட்ச தீப வழிபாடு மிகவும் சிறப்புவாய்ந்தது. இங்குள்ள பெருமாளுக்கும் மோட்சம் அருளும் பெருமாள் என்ற பெயர் உண்டு. பித்ருக்களுக்கு சரியான முறையில் திதி கொடுக்காதவர்கள் இத்தலத்துக்கு வந்து அரிசிமாவில் செய்த தீபத்தில் நெய்விட்டு 3,5,9 என்ற எண்ணிக்கையில் விளக்கேற்றினால் பித்ருக்களின் ஆன்மா சாந்தியடைந்து மோட்சம் அடையும் என்பது நம்பிக்கை.

க்ஷேத்திர ரட்சகர் ஸ்ரீசக்கரத்தாழ்வார்

இங்கு எழுந்தருளியிருக்கும் சக்கரத் தாழ்வார் மிகவும் விசேஷமான திருமேனி. 16 திருக்கரங்கள்; அவற்றில் ஆயுதங்கள் ஏந்தி காணப்பட்டாலும் தன்னை நாடி வரும் அன்பர்களுக்கு, கருணையுடன் வரங்களை வாரித் தருகிறார் ஸ்ரீசக்கரத் தாழ்வார். இங்கேயுள்ள ஸ்ரீசக்கரத்தாழ்வாரின் விக்கிரகத் திருமேனியில் 48 அதி தேவதைகளும் 154 மந்திரங்களும் அமைந்திருப்பதாகச் சொல்கிறார்கள். தொடர்ந்து 11 சனிக்கிழமைகளில், திருமோகூர் திருத்தலத்துக்கு வந்து ஸ்ரீசக்கரத்தாழ்வாரைத் தரிசித்துப் பிரார்த்தித்தால், திருமணத் தடை நீங்கும்; நினைத்த காரியம் நிறைவேறும். வீடு - மனை வாங்குகிற யோகம் கிட்டும். எதிரிகள் தொல்லை ஒழியும் என்கிறார்கள் பக்தர்கள்!

சக்கரத்தாழ்வார்
சக்கரத்தாழ்வார்

ஆனி சித்திரை நட்சத்திர நாளில், ஸ்ரீசுதர்சன ஜயந்தி. அன்று, இங்கு பிரமாண்டமாக நடைபெறும் ஸ்ரீசுதர்சன ஹோமத்தில் கலந்து கொண்டால், சகல யோகங்களும் கை கூடும் என்பது நம்பிக்கை!

புளியோதரை அல்லது தயிர்சாதம் நைவேத்தியம் படைத்து அவரை வணங்கினால், தம்பதி ஒற்றுமை மேலோங்கும்; பதவி உயர்வு கை கூடும். தொடர்ந்து, 12 சனிக்கிழமைகள் நெய் தீபமேற்றி, ஸ்ரீசக்கரத்தாழ்வாரை வணங்கினால், எல்லா வளமும் பெறலாம் என்பது நம்பிக்கை.

அடுத்த கட்டுரைக்கு