Published:Updated:

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 17: பிரமாண்ட யோகநரசிம்மர், பிணிதீர்க்கும் முருகன்... யானைமலைக் கோயில்கள்!

யானைமலை

பெருமாளின் அற்புதத் திருவுருவம் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். அந்தத் தருணத்தில் நம் கவலைகள் எல்லாம் மறந்து மனம் லேசாவதை இங்கு தரிசனம் செய்யும் அனைவரும் உணர்வார்கள்.

வைகை நதிக்கரை ஆலயங்கள் - 17: பிரமாண்ட யோகநரசிம்மர், பிணிதீர்க்கும் முருகன்... யானைமலைக் கோயில்கள்!

பெருமாளின் அற்புதத் திருவுருவம் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். அந்தத் தருணத்தில் நம் கவலைகள் எல்லாம் மறந்து மனம் லேசாவதை இங்கு தரிசனம் செய்யும் அனைவரும் உணர்வார்கள்.

Published:Updated:
யானைமலை

மதுரை, கோயில் நகரம் மட்டுமல்ல... வரலாற்று ஆவணங்களின் நகரமும் கூட. இங்குள்ள கோயில்கள் அனைத்தும் ஆன்மிகத் தலங்கள் மட்டுமல்ல... இரண்டாயிரம் ஆண்டுள் மதுரை மாநகரின் வரலாற்று தடங்களும்தான். அரசு, அரசியல், சமயம், கலை என அனைத்திலும் நிகழ்ந்த மாற்றங்களின் சான்றுகள் நிறைந்து வழியும் பொக்கிஷங்கள். மதுரை மாநகரில் காலவெள்ளத்திலும் ஆக்கிரமிப்பின் அரசியலிலும் பல அழிந்துபோனாலும் இன்றும் நிலைத்திருக்கும் செல்வங்களில் ஒன்று யானைமலை. மாபெரும் இயற்கைப் பொக்கிஷங்களைப் பாதுகாக்கவே நம் முன்னோர்கள் பல மலைகளை ஆன்மிகத்தோடும் கலையோடு பிணைத்துவைத்தனர். அப்படிப்பட்ட ஓர் இடம்தான் இந்த யானைமலை.

யானைமலை நரசிம்மர் கோயில்
யானைமலை நரசிம்மர் கோயில்

மதுரையிலிருந்து மேலூர் செல்லும் சாலையில் 4 கி.மீ. தொலைவிலுள்ளது ஒத்தக்கடை. இங்குதான் உள்ளது இந்த யானைமலை. தொலைவிலிருந்து பார்த்தால் ஒரு யானை படுத்திருப்பதுபோலவே தோற்றமளிக்கும் இந்த மலை சுமார் 250 அடி உயரமும், 5 கி.மீ. நீளமும் கொண்டது. இந்த மலையில்தான் பழைமையான முருகன் கோயில் ஒன்றும் அதன் அருகிலேயே யோகநரசிம்மர் கோயில் ஒன்றும் குடைவரைக் கோயில்களாக உள்ளன. இந்த இடத்துக்கே அந்தக் காலத்தில் நரசிங்கமங்கலம் என்னும் பெயர் உண்டு.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

நலம் தரும் நரசிம்மர்

பாண்டியர் காலக் கலைக்கு சான்றாகத் திகழ்வது இந்த நரசிம்மர் ஆலயம். கி.பி. 770 ம் ஆண்டு மதுரையை ஆண்ட பாண்டிய மன்னர் மாறஞ்சடையன் பராந்தக நெடுஞ்சடையன். இவருக்கு மந்திரியாக விளங்கியவர் மூவேந்த மங்கலப் பேரதையன் ஆகிய மாறன்காரி கலிக்குடா வைத்தியன் என்பவர். இவரே நரசிங்கப் பெருமாளுக்குக் குடைவரைக் கோயில் ஒன்றை உருவாக்கத் தீர்மானித்து, பூர்வாங்க வேலைகளைத் தொடங்கினார்.

ஆனால் கோயில்பணி நிறைவேறுவதற்கு முன்பாகவே அவர் நோய்வாய்ப்பட்டு இறந்தார். அவருக்குப் பின் அவரின் தம்பியான பாண்டா மங்கல விஜய தையன் என்னும் மாறன் எயினன் மந்திரிப் பதவியை ஏற்றுக்கொண்டதோடு இக்கோயிலின் திருப்பணியையும் செய்துமுடித்தான். இந்தத் தகவல்களைக் கோயிலில் காணப்படும் கல்வெட்டுகள் விளக்குகின்றன. இங்கு வட்டெழுத்துகளிலும் கிரந்த எழுத்துகளிலும் கல்வெட்டுகள் காணப்படுகின்றன. இங்கு காணப்படும் கல்வெட்டுகளின் மூலம், முற்காலப் பாண்டியர், சோழர், சோழ பாண்டியர், பிற்காலப் பாண்டியர், விஜயநகர மன்னர் ஆகியோர் இக்கோயிலுக்குப் பல்வேறு காலகட்டங்களில் திருப்பணிகள் செய்துள்ளமை தெரிய வரும்.

யானைமலை யோக நரசிம்மர்
யானைமலை யோக நரசிம்மர்

இங்கு கருவறையில் நரசிங்கப் பெருமாள் யோக நரசிம்மராகக் காட்சி தருகிறார். சுமார் 6 அடி அகலமும் நீண்டு உயர்ந்த பிரமாண்டத் திருமேனியராக அமர்ந்திருக்கும் நரசிம்மப் பெருமாளின் திருமேனி இம்மலையின் தாய்ப்பாறையிலேயே அமைக்கப்பட்டுள்ளது. பெருமாளின் அற்புதத் திருவுருவம் காண்பவர் உள்ளத்தைக் கொள்ளைகொள்ளும். அந்தத் தருணத்தில் நம் கவலைகள் எல்லாம் மறந்து மனம் லேசாவதை இங்கு தரிசனம் செய்யும் அனைவரும் உணர்வார்கள்.

இக்கோயிலில் நின்றகோலத்தில் நரசிம்ம மூர்த்தியின் உற்சவத் திருமேனி உள்ளது. ஆனால் இத்திருமேனி ஆலய வளாகத்தை விட்டு வெளியே வருவதில்லை. மாறாக, உற்சவ காலங்களில் அருகில் இருக்கும் காளமேகப் பெருமாள் உற்சவ மூர்த்தியே இங்கு எழுந்தருள்கிறார்.

இங்கு கருவறைக்கு முன் உள்ள அர்த்த மண்டபம், பிற மண்டபங்கள் அனைத்தும் பிற்காலக் கட்டுமானங்களே எனலாம். ஆலய வளாகத்தின் வடகீழ் பகுதியில் உள்ள நரசிங்கவல்லித் தாயாரின் சந்நிதியும் பிற்காலக் கட்டுமான பாணியிலேயே அமைந்துள்ளது.

இங்கு ஆலயத்தை ஒட்டியே நன்னீர்ப் பொய்கை அமைந்துள்ளது. இந்தத் தீர்த்தம் கங்கைக்கு இணையான புண்ணிய தீர்த்தமாகப் போற்றப்படுகிறது. இந்தத் தீர்த்தம் உடல் மற்றும் மன நோய்களைப் போக்கும் ஆற்றல் கொண்டது என்கின்றன தலபுராணங்கள்.

இங்கு பெருமாளுக்கு மாசி மாதப் பௌர்ணமித் திருவிழா மிக விசேஷமாக நடைபெறும். குறிப்பாக கஜேந்திர மோட்சம் இத்திருக்குளத்தில் நிகழ்த்தப்படும்.

லாடன் சித்தர் வழிபட்ட முருகன்
லாடன் சித்தர் வழிபட்ட முருகன்

லாடன் சித்தர் வழிபட்ட முருகன்

இந்த மலையில் அமைந்திருக்கும் மற்றுமொரு குடைவரை லாடன் முருகன் கோயில். கி.பி. 8-ம் நூற்றாண்டைச் சேர்ந்த இக்கோயில், தொல்லியல் துறைக் கட்டுப்பாட்டில் உள்ளது. லாட தேசத்திலிருந்து வந்த லாடன் சித்தர் தங்கியிருந்து வழிபட்ட தலம் ஆதலாம் இம்முருகன் அவர் பெயரிலேயே அழைக்கப்படுகிறார்.

மதுரையை ஆண்ட பாண்டியன் பராந்தக நெடுஞ்சடையன் காலத்தில் வட்டக்குறிச்சியைச் சேர்ந்த நம்பிரான் பட்டர் சோமாசியார் செய்வித்த குடைவரைக் கோயில் இது என்கிறது கல்வெட்டு.

இந்த லாடன் கோயில் கருவறையில் தெய்வானை மட்டுமே உடனிருக்க, அமர்ந்த நிலையில் காட்சி தருகிறார் முருகப்பெருமான். இங்கு முருகப்பெருமான் முப்புரி நூலும், போர்த் தெய்வங்கள் அணியும் சன்ன வீரம் எனும் அணிகலனும் அணிந்துள்ளார். சூரசம்ஹாரம் முடிந்ததும் தெய்வானையை மணமுடித்த பிறகான திருக் கோலம் இது என்கிறார்கள் அடியவர்கள். தெய்வானை கையில் மலர்ச் செண்டு தாங்கி வீற்றிருக்கிறாள். அர்த்த மண்டபத்தில் சேவற் கொடியும், மயில் வாகனமும் புடைப்புச் சிற்பங்களாக உள்ளன. அதன் அருகிலேயே நம்பிரான் பட்டர் சிலையும், பாண்டிய மன்னர் சிலையும் காணப்படுகின்றன.

சித்தர் வழிபட்ட இந்த முருகப்பெருமானை தரிசனம் செய்தாலே நாம் செய்த பாவங்கள் அனைத்தும் நீங்கிப் புண்ணியம் பெருகும் என்கிறார்கள் பக்தர்கள். மேலும் இத்தலத்துக்கு வந்து வேண்டிக்கொண்டால் நோய்கள் நீங்குவதோடு ஆரோக்கியம் மேம்படும் என்பது நம்பிக்கை.