Published:Updated:

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 3 | தேனூர் மண்டபம் வைகை ஆற்றுக்குள் வந்த கதை தெரியுமா?

தேனூர் மண்டபம்

மற்ற மண்டபங்களில் எழுந்தருள மக்கள் அழகருக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் இந்த மண்டபத்தின் உள்ளே வருவதற்கு மட்டும் இப்போதும் அழகர்தான் தேனூர் மக்களுக்கு வரி செலுத்திவிட்டு வருகிறார்.

மதுரை, மூதூர் மாநகரத்தின் கதை - 3 | தேனூர் மண்டபம் வைகை ஆற்றுக்குள் வந்த கதை தெரியுமா?

மற்ற மண்டபங்களில் எழுந்தருள மக்கள் அழகருக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் இந்த மண்டபத்தின் உள்ளே வருவதற்கு மட்டும் இப்போதும் அழகர்தான் தேனூர் மக்களுக்கு வரி செலுத்திவிட்டு வருகிறார்.

Published:Updated:
தேனூர் மண்டபம்
மதுரை என்றாலே நம் எல்லோருடைய மனதிலும் 'சட்' என்று நினைவுக்கு வருவது மீனாட்சியம்மன் கோயிலும், அழகர் வைகையாற்றில் இறங்கும் சித்திரை திருவிழாவும்தான். படிக்கப் படிக்கத் தீராத சுவாரஸ்யமான புத்தகம்போல மதுரையைச் சுற்றி நடந்திருக்கும் வரலாறும், கதைகளும் ஒவ்வொரு முறையும் புதிதாக எதையாவது நம் அனைவருக்கும் சொல்லிக்கொண்டேதான் இருக்கும்.

பாண்டிய மன்னர்களின் காலத்தில், மதுரை நகருக்குள் மீனாட்சியம்மையின் திருமண வைபவம் மாசித் திருவிழாவாக நடைபெறும். ஆடி மாதத்தில் நான்மாடக்கூடலின் நான்கு வீதிகளிலும் மீனாட்சியம்மையின் தேர்த்திருவிழா நடக்கும். இது சைவர்களின் திருவிழா.

மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரர் தேரோட்டம்

அழகர்கோயில், திருப்பதிக்கு நிகராகப் போற்றப்படும் வைணவத்தலம். மகாவிஷ்ணு உலகை அளக்க தன் பாதங்களைத் தூக்கியபோது, பிரம்மன் அவரது பாதங்களைக் கழுவி பூஜித்தாரம். அப்போது விஷ்ணுவின் காற்சிலம்பு (நூபுரம்) அசைந்து, ஒரு துளிநீர் அழகர்மலையில் விழுந்ததாம். அதனால் அங்கு உருவான தீர்த்தமே நூபுர கங்கை தீர்த்தம். இது கங்கையைவிடப் புனிதமானது என்கின்றன சமய நூல்கள்.

அந்த மலையில் திருமாலை நினைத்து தவமிருந்தாராம் சுதபஸ் என்கிற மகரிஷி. அப்போது மகா கோபக்காரரான துர்வாச முனிவர் அங்கு வந்தார். சுதபஸ் ரிஷியோ தவத்திலேயே கருத்தாக இருந்ததால் துர்வாசரை வரவேற்கவில்லை. இதனால் கோபம் கொண்ட துர்வாசர், சுதபஸ் ரிஷியை 'தவளையாகப் போ' என்று சாபம் கொடுத்தாராம். பதறிப்போன சுதபஸ் ரிஷி, சாப விமோசனத்திற்கு வழி கேட்க, "மண்டூக (தவளை) மகரிஷியான நீ, வேதவதி என்று அழைக்கப்படும் வைகை ஆற்றுக்குள் தவமிரு; உனக்கு அழகரே தேடிவந்து சாப விமோசனம் கொடுப்பார்" என்று சொல்லிப் போனாராம்.

தன் சாப விமோசனத்திற்காகத் தவமிருந்த மண்டூக முனிவருக்கு அருளவே, அழகர் வைகையாற்றுக்குள் இறங்குவதாக நம்பிக்கை. இந்தத் திருவிழா சித்திரை மாதத்தில் நடக்கும்.

மதுரை வரலாற்றில் திருமலை நாயக்கர் காலம் முக்கியமான சில மாற்றங்களைக் கொண்டுவந்தது. கிருஷ்ண தேவராயரின் விஜயநகர சாம்ராஜ்யத்திற்குள் அடங்கி, கப்பம் கட்டும் சூழல்மாறி, தனித்து இயங்கும் மன்னராக திருமலை நாயக்கர் உருவெடுத்தார். கலை, இலக்கிய ஈடுபாடு மிக்க இவர் நான்மாடக்கூடலின் தேரோடும் வீதிகளில், மீனாட்சிக்கு மிகப் பிரமாண்டமான தேர் ஒன்றைச் செய்கிறார். அம்மை திருக்கல்யாணம் முடிந்து, அத்தேரில் திருவீதியுலா வர வேண்டும் என்பது அவரது ஆசை. மதுரையின் மாநகருக்குள் இருக்கும் மக்களால் மட்டும் அத்தேரை இழுத்து, திருவிழாவைச் சிறப்பிக்க முடியவில்லை. மக்களை ஊருக்குள் இழுக்க என்ன செய்யலாம் என்று மன்னர் யோசிக்கிறார். அப்போதுதான் தேனூர் வைபவம் அவரின் கவனத்துக்கு வருகிறது.

தேனூர் மண்டபம்
தேனூர் மண்டபம்

தேனூர், பாண்டியர்கள் காலத்தில் பொன்னும் மணியும் புரண்ட வணிக நகரமாக இருந்தது என்கிறது திருமலை நாயக்கர் மகாலில் வைக்கப்பட்டிருக்கும் கல்வெட்டு. சித்திரை மாத முழுநிலவு நாளில், அலங்காநல்லூர் வழியாக சோழவந்தானுக்கு அருகே உள்ள இந்தத் தேனூர் கிராம மக்களின் கொண்டாட்டங்களோடு, அழகர் வைகையாற்றில் இறங்கி, மண்டூக முனிவருக்கு சாப விமோசனமளித்து, அழகர்மலை திரும்பும் விழா நடைபெறுவதைக் கண்டார். இந்தத் திருவிழாவிற்கு திருப்பதியில் இருந்து புனிதநீர் கொண்டுவரப்பட்டதாம்.

இங்குகூடும் மக்கள் கூட்டம் திருமலை நாயக்க மன்னரின் பார்வையில்படுகிறது. திருப்பதியைப் போல தல்லாகுளத்தில் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயிலை நிர்மாணிக்கிறார். திருப்பதியில் வரும் புனித நீருக்கு இணையாக, தல்லாகுளம் பிரசன்ன வேங்கடேச பெருமாள் கோயிலின் தீர்த்தம் கருதப்பட்டது. அதன்பின் அழகர் வைபவம் முழுக்க மதுரை சார்ந்ததாக மாற்றப்பட்டது.

சைவத்திற்கும் வைணவத்திற்கும் ஆன இணைப்பை வலுவாக்க இந்தக் கண்ணியைப் பிடித்துக் கொண்டார் திருமலை நாயக்கர். சங்கம் வைத்துத் தமிழையும் சைவத்தையும் வளர்த்த மாமதுரையில், தெலுங்குமொழி பேசுகிற, திருமாலை வணங்குகிற மன்னன் ஒருவன், இன்றளவும் பேசப்படுவது அவரது அதிகாரத்தால் அல்ல; மாறாக, எல்லோரையும் இணைக்கிற புள்ளியாக செயல்பட்ட அரவணைத்துப் போகும் திறனால் என்று சொன்னால் அது மிகையில்லை.

மன்னர் திருமலைநாயக்கர் காலத்தில், மாசி மாதத்தில் நடைபெறும் திருக்கல்யாண உற்சவமும், ஆடி மாதத்தில் நடைபெறும் தேரோட்டத் திருவிழாவும், அழகரின் சித்திரை திருவிழாவோடு இணைந்து, ஒன்பது நாள்கள் ஊரே கொண்டாடிக் களிக்கிற திருவிழாவாக சித்திரைத் திருவிழா உருமாறியது.

தேனூர் மண்டபம்
தேனூர் மண்டபம்

தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடக்கிற கோயில் திருவிழாக்களில் மிகப் பெரியதான திருவிழா மதுரையின் சித்திரைத் திருவிழாதான். ஒவ்வோர் ஆண்டும் சித்திரை மாதம் வளர்பிறை பதினொன்றாம் நாளில் தொடங்கி ஒன்பது நாள் கோலாகலமாக நடக்கிற ஊர்த்திருவிழா. திருவிழாவின் ஐந்தாம் நாளான முழுநிலவு நாளில் அழகர் ஆற்றில் இறங்கும் திருவிழா தூங்கா நகரமான மதுரைக்கு உயிரூட்டும் திருவிழாவாக மாறியது.

காலங்காலமாக, தங்கள் ஊரில் சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வந்த திருவிழா ஒன்று மன்னரின் ஆணைக்கிணங்க மதுரை நகருக்குள் இடம் பெயர்ந்து போனால், தேனூர் மக்கள் மனசொடிந்து போக மாட்டார்களா... மக்களை இணைக்கத்தானே இந்த மாற்றத்தையே திருமலை நாயக்கர் யோசித்திருக்கிறார்! அதற்கான பதிலாக, எழுப்பப்பட்டதுதான் வைகை வடகரையில், வண்டியூர் செல்லும் வழியில், ஆற்றுக்குள் நிமிர்ந்து நிற்கும் தேனூர் மண்டபம்.

புதுப்புனல் பாயும் வைகை எதிர்கொண்ட வெள்ளங்களை எல்லாம் பார்த்தபடி நிற்கிற தேனூர் மண்டபம், நாயக்கர்கால கட்டிடக்கலையின் தொழில்நுட்ப மேன்மைக்கும் ஒரு வாழும் சாட்சியே! மண்டபத்தின் மேற்குப்புறம் படகை ஒத்ததாய், கூம்பு வடிவில் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. பாய்ந்து வரும் வைகை வெள்ளம் மண்டபத்தின் கற்தூண்களைச் சிதைக்காமல் இருக்கவே இப்படியான ஏற்பாடு. இப்போது சுமார் 40 லட்சம் ரூபாய் செலவில், பழமை மாறாமல் அறநிலையத்துறையினரால் சீரமைக்கப்பட்டிருக்கும் தேனூர் மண்டபத்தில் படிகள் உயர்த்தப்பட்டு, கிழக்கு நோக்கி அமைக்கப்பட்டிருக்கிறது.

இப்போதும், கள்ளழகர் வைகையாற்றில் இறங்கிய பின், மண்டூக முனிவருக்கு சாப விமோசனம் கொடுக்க, தேனூர் மண்டபத்திற்குள்தான் வருவார். மற்ற மண்டபங்களில் எழுந்தருள மக்கள் அழகருக்கு வரி செலுத்த வேண்டும். ஆனால் திருக்கண் மண்டபத்துள் வர அழகர் தேனூர் மக்களுக்கு வரி செலுத்திவிட்டே இப்போதும் மண்டபத்துள் வருகிறார். தேனூர் மக்களுக்குக் கொடுக்கப்படும் மரியாதையும், மூன்று முறை மண்டபத்தை கள்ளழகர் சுற்றி வருவதும் இப்போதும் நடக்கிற நிகழ்வாகும். எதிரே, வைகையாற்றில் மீனும், தவளையும், நாரையும் இருக்கும். நாரைக்கு முக்தி அளித்த திருவிளையாடல் புராணக் கதையை நினைவூட்டுவதுபோல நாரையைப் பறக்க விடும் நிகழ்வு இப்போதும் நடத்தப்படுகிறது.

அழகர்
அழகர்

தென்னிந்தியாவின் கும்பமேளா என்று போற்றப்படும் இந்த சித்திரைத் திருவிழா சைவமா, வைணவமா என்ற வாதங்களைத்தாண்டி, மக்களை ஒருங்கிணைக்கிற விழாவாக மாறிப்போய் பல நூற்றாண்டுகளாகிவிட்டன.

மதுரைக்கு மேற்கே இருந்த தேனூர் மண்டபம் மதுரை வண்டியூருக்கு வந்த கதை இதுதான். தேனூர் மண்டபம் இன்றும் வரலாற்றின் சின்னமாகவும் சமயங்களின் சங்கப் பெருமையாகவும் கம்பீரமாக நிற்கிறது. மதுரை செல்லும்போது தேனூர் மண்டபத்தைப் பார்வையிடுங்கள்.