Published:Updated:

மகா காளரும் மாதங்கி தேவியும்!

மகா காளரும் மாதங்கி தேவியும்!
பிரீமியம் ஸ்டோரி
மகா காளரும் மாதங்கி தேவியும்!

மிருகசீரிடம், மூலம், கேட்டை மற்றும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம்

மகா காளரும் மாதங்கி தேவியும்!

மிருகசீரிடம், மூலம், கேட்டை மற்றும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் வழிபடவேண்டிய ஆலயம்

Published:Updated:
மகா காளரும் மாதங்கி தேவியும்!
பிரீமியம் ஸ்டோரி
மகா காளரும் மாதங்கி தேவியும்!
புண்ணியம்பதியாம் காசி க்ஷேத்திரத்தில் வசித்த விமலன் என்ற அன்பருக்குத் திருமணமாகி வெகுநாள்களாகக் குழந்தைப் பேறு வாய்க்கவில்லை. அதன்பொருட்டு மிகவும் மனம் கலங்கிய விமலன் தனக்கு விரைவில் குழந்தைப்பேறு வாய்க்கவேண்டும் என்று ஈசனை வணங்கி வழிபட்டு வந்தார்.
விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.800 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா949 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

ஒருநாள் இரவு அவர் கனவில் தோன்றிய ஈசன், “கோயில் திருமாகாளம் எனும் தலத்துக்குச் சென்று எம்மை வழிபடுவாயாக. அத்துடன், அங்கே மனித முகத்துடன் அருளும் விநாயகனையும், குழந்தை வடிவில் அருளும் முருகனை வணங்கினால், உனக்குக் குழந்தைச் செல்வம் வாய்க்கும்’ என்று அருளி மறைந்தார்.

அதன்படியே தமிழகத்தில் கோயில்திருமாகாளம் தலத்துக்கு வந்து, மூவரையும் வழிபட்டு குழந்தை வரம் பெற்றாராம் விமலன்.

`காசிக்குச் சென்றால் கருமம் தொலையும். கங்கையில் மூழ்கினால் பாவம் தொலையும்’ என்பார்கள் பெரியோர்கள். அத்தகைய காசியிலேயே வாழ்ந்தும் அங்கு கிடைக்காத வரம், விமலனுக்குக் கோயில் திருமாகாளத்தில் கிடைத்தது என்றால், இந்தத் தலத்தின் பெருமையை என்னவென்பது?!

அச்சம் தீர்த்த விநாயகர் - வாசுகி
அச்சம் தீர்த்த விநாயகர் - வாசுகி

வாருங்கள்... 1500 ஆண்டுகள் பழைமையானதும், திருஞான சம்பந்தரால் பாடல்பெற்றதும், சோமாசிமாற நாயனாரின் அவதாரத் தலமுமான கோயில் திருமாகாளத்தின் மகிமையை அறிவோம்.

சர்ப்ப தோஷங்கள் நீங்கும்

உலகத்திலேயே ஆயுளை நீட்டிக்கக்கூடிய தலங்கள் மூன்று உண்டு. முதலாவது உஜ்ஜயினி மாகாளம்; இரண்டாவது அம்பர் மாகாளம்; மூன்றாவது புதுவை அருகிலுள்ள இரும்பை மாகாளம். இவற்றில் தலையையும் கடையையும் தரிசிக்க முடியவில்லை என்றால், அதற்குப் பரிகாரம்... ஸ்ரீராஜமாதங்கி எனும் ஸ்ரீபயக்ஷாம்பிகை சமேதராய் ஸ்ரீமகாகாளநாதர் கோயில்கொண்டிருக்கும் கோயில் மாகாளத்தைத் தரிசிப்பது ஒன்றுதான் என்பார்கள் ஆன்மிகப் பெரியோர்கள்.

திருவாரூர் மாவட்டம் பூந்தோட்டம் அருகில், காவிரியின் கிளை நதியான அரசலாற்றங்கரையில் அமைந்திருக்கிறது இந்தத் தலம்.இங்கே கிழக்கு நோக்கி சுயம்புலிங்கமாக அருள்பாலிக்கிறார் ஈசன்.

அனந்தன், வாசுகி, தட்சகன், கார்கோடன், சங்கபாலன், குனிகன், பத்மன், மகாபத்மன் ஆகிய எட்டு நாகர்கள் இந்தப் பூமியைத் தாங்கிப் பிடித்துள்ளதாக ஐதிகம். இவற்றில் வாசுகி நாகம் இங்கு வந்து வழிபட்டு சிவதோஷ நிவர்த்தி பெற்று, தனிச் சந்நிதியில் அருள்கிறார். ஆகவே, ராகு - கேது தோஷம் மற்றும் சர்ப்ப தோஷங்கள் உள்ளவர்கள், இங்கு வந்து வாசுகி நாக தெய்வத்திற்கு பாலபிஷேகம் செய்து வழிபட்டு நிவர்த்தி பெறலாம் என்பது ஐதிகம்.

மதங்க மாமுனிவரின் மாதவச் செல்வியே...

மதங்க ரிஷி, குழந்தைப் பாக்கியம் வேண்டி இந்தத் தலத்து ஈசனைப் பிரார்த்தனை செய்து, சாட்சாத் அம்பிகையையே மகளாகப் பெறும் பாக்கியம் பெற்றாராம். அதன்படி, ராஜமாதங்கி எனும் திருப்பெயருடன் மதங்க ரிஷியின் மகளாகப் பிறந்து வளர்ந்த அம்பிகையின் முன் ஈசன் தோன்றி, `‘வேண்டும் வரம் கேள்’’ என்றார்.

அதற்கு ராஜமாதங்கி, “நான் தங்களுடன் தினமும் திருமணக் கோலத்தில் இத்தலத்தில் இருக்க விரும்புகிறேன்” என்றாள். அப்படியே வரம் தந்தார் சிவனார். ஆக திருமணத் தடை நீக்கும் தலமாக, குழந்தை வரமருளும் க்ஷேத்திரமாகத் திகழ்கிறது, கோயில் மாகாளம்.

மகா காளரும் மாதங்கி தேவியும்!

அறுபத்துமூன்று நாயன்மார்களில் ஒருவர் சோமாசிமாற நாயனார். அவர், தான் நடத்தும் சோமாசி யாகத்திற்கு இறைவனை அழைத்து வரும்படி சுந்தரமூர்த்தி நாயனாரிடம் வேண்டினார். சுந்தரரும் சம்மதித்தார். வைகாசி மாசம், ஆயில்ய நட்சத்திரம் அன்று நடத்தும் யாகத்திற்கு ஈசனை அழைத்து வருவதாக வாக்களித்தார்.

அதன்படி திருவாரூர் தியாகராஜர் நான்கு வேதங்களை நான்கு நாய்களாகப் பிடித்துக்கொண்டு யாகத்தில் கலந்து கொள்ள வந்தார். விநாயகரும் மானுட ரூபத்தில் உடன் வந்தார். இவர்களைக் கண்டு, `யாகத்துக்குத் தீங்கு செய்ய வருகிறார்களோ...’ எனும் எண்ணத்தில் யாக சாலையில் இருந்தவர்கள் எல்லாம் பயந்து ஓடினார்களாம்.

அப்போது அவர்களைத் தடுத்து நிறுத்தி, `வந்திருப்பது எங்கள் குடும்பமே’ என்று அவர்களுக்கு விளக்கி, அவர்களின் அச்சத்தைப் போக்கி அருளினாராம் மனித முகத்துடன் வந்த விநாயகர். ஆகவே, இந்தத் தலத்து விநாயகர் அச்சம் தீர்த்த விநாயகர் என்று அழைக்கப்படுகிறார். இவரை வழிபட்டால், மன சஞ்சலங்கள், மனத்தில் எழும் வீண் அச்சங்கள் விலகி, நன்மைகள் உண்டாகும் என்பது நம்பிக்கை.

இப்போதும் வைகாசி மாதம் ஆயில்ய நட்சத்திரத்தில் சோமயாகப் பெருவிழா சிறப்பாக நடைபெறுகிறது. இவ்விழாவின்போது, காலில் செருப்பு, கையில் மத்தளத்துடனும், மதுக்குடம் ஏந்திய பார்வதியுடன் சிவனார் அருள்பாலிப்பது மிகச் சிறப்பாகும். திருவாரூர் தியாகேசர் தன் குடும்பத்துடன் இந்த விழாவில் கலந்து கொள்வதால், அன்றைய தினம் திருவாரூரில் தியாகராஜருக்கு அபிஷேக ஆராதனைகள் கிடையாது என்பது குறிப்பிடத்தக்கது.

மகா காளரும் மாதங்கி தேவியும்!

இத்தலம் தொடர்பாக வேறோரு திருக்கதையும் உண்டு.

ஒருமுறை வான் வழியே பயணித்துக்கொண்டிருந்த துர்வாச முனிவரைக் கண்டு, அவர் மீது மையல் கொண்டாள் மதலோலை என்ற பெண். அவள் அவரிடம் விருப்பத்தைக் கூறி தனக்குப் புத்திரப் பேறு அளிக்கும்படி வேண்டினாள். துர்வாசரும் அவளுக்கு அந்தப் பாக்கியத்தை வழங்கினார்.

மதலோலை வரம் கேட்டது மதியவேளை. அதனால் அவள் கருவுற்ற நேரம் மதியமாயிற்று. விளைவு... நடுவானில் அவள் அம்பன், அம்பராசுரன் ஆகிய அசுரர்களைப் பிள்ளைகளாகப் பெற்றாள். அன்னை பாலூட்ட முயன்றபோது, அந்தப் பிள்ளைகள் அவளின் ரத்தத்தையே உறிஞ்சிக் குடித்தனர்.

அவர்களின் அசுரத் தன்மையைக் கண்டு வருந்திய மதலோலை, பிரம்மபுரீஸ்வரரை வழிபட்டு வரும்படி பணித்து, அவர்

களிடமிருந்து பிரிந்து சென்றாள். அதன்படியே இருவரும் இறைவனை வழிபட்டு அரிய வரங்களையும் பெற்றனர். தொடர்ந்து, அவர்களின் கொடுமைகள் உலகத்தை வாட்டத் தொடங்கின. தேவர்களும் முனிவர்களும் மும்மூர்த்திகளிடம் சென்று முறையிட்டனர்.

தன்னிடம் பெற்ற வரப்பயனை அசுரர்கள் இருவரும் முறைதவறிப் பயன்படுத்துகிறார்கள் என்பது சிவனாருக்குப் புரிந்தது. அவரின் எண்ணத்தைக் குறிப்பால் அறிந்த அம்பிக்கை அசுரர்களை வதைக்க முடிவு செய்தாள். பூலோகத்தில் மோகினியாய் வந்திறங்கினாள். அவளின் அழகில் மயங்கிய அசுரர்கள் தங்களை மணந்துகொள்ளும் படி மோகினியிடம் விண்ணப்பம் வைத்தனர்.

``இருவரையும் மணக்க இயலாது. உங்களில் சிறந்தவர் யார் என்பதை நீங்களே முடிவு செய்துகொள்ளுங்கள்’’ என்றாள்.

ஆகவே, அசுரர் இருவருக்கும் இடையே மோதல் உருவானது. அம்பன், அம்பராசுரனைக் கொன்றான். மோகினியிடம் வந்தான்.

அவள் பத்ரகாளியாய் உருமாறினாள்; அதிர்ந்துபோன அம்பன் எருமைக்கடாவாக உருமாறினான். எனினும் அவனை விரட்டிச் சென்று வதம் செய்தாள் அம்பிகை. (அவள் அசுரனை வதைத்த இடம் `கிடாமங்கலம்’ என்ற பெயரில் திகழ்கிறது). அசுர வதத்தால் தோஷத்துக்கு ஆளான அம்பிகை, இந்தத் தலத்தில் சிவலிங்க பிரதிஷ்டை செய்து வழிபட்டு, தோஷம் நீங்கப் பெற்றாள் என்கிறது தலபுராணம்.

மகா காளரும் மாதங்கி தேவியும்!

திருக்கோயிலின் மகிமைகள் குறித்து சிவாசார்யர் மாதுரு பூதேஸ்வரரிடம் பேசினோம்.

“ராகு தோஷம், நாகதோஷம், பிரம்மஹத்தி தோஷம் ஆகிய சகல தோஷங்களையும் போக்கக்கூடிய திருத்தலம் இது. குறிப்பாக மிருகசீரிடம், மூலம், கேட்டை மற்றும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வந்து வழிபட வேண்டிய கோயிலும்கூட.

புத்திரப்பேறு இல்லாதவர்கள் இங்குள்ள ஹம்ச தீர்த்தத்தில் நீராடி, இறைவனை வழிபட்டால், புத்திரப்பேறு கிடைக்கும். அதேபோல் தோஷம் மற்றும் தடைகளால் நீண்ட நாள்களாக திருமணம் ஆகாதவர்கள், செவ்வரளி பூமாலை 3 வாங்கி வந்து, ஒன்றை இறைவனுக்கும் இரண்டை அம்பாளுக்கும் சாத்தி அர்ச்சனை செய்து வழிபட வேண்டும். பின்னர், இறைவிக்கு அளித்த மாலைகளில் ஒன்று பிரசாதமாகத் தரப்படும். அதை கழுத்தில் அணிந்து, ஆலயத்தை வலம் வந்து வணங்கினால், விரைவில் திருமணம் நடைபெறும்.

மேலும், மகாகாளநாதரின் திருவருளால் தொழில் அபிவிருத்தி, வியாபாரத்தில் மேன்மை, பதவி உயர்வு, கல்விச் செல்வம், அருள்செல்வம், பொருள் செல்வம் ஆகிய அனைத்தும் கிடைக்கப்பெற்று, மனமகிழ்ச்சியோடு வாழ்வாங்கு வாழ்வர்” என்றார்.

நீங்களும் ஒருமுறை கோயில் மாகாளத்துக்குச் சென்று வழிபட்டு, அல்லல்கள் அனைத்தும் நீங்கி, மகிழ்ச்சிகரமான வாழ்வை வரமாகப் பெற்று வாருங்கள்!

பக்தர்கள் கவனத்துக்கு...

தலம்: கோயில் மாகாளம்

ஸ்வாமி: மகா காளநாதர்

அம்பிகை: ஸ்ரீராஜமாதங்கி எனும் ஸ்ரீபயக்ஷாம்பிகை

தீர்த்தம்: ஹம்ச தீர்த்தம்

வழிபாட்டுச் சிறப்பு: கல்யாண வரமும், குழந்தை பாக்கியமும் அருளும் புண்ணிய தலம். அம்பிகை மதங்கமாமுனிவருக்கு மகளாக அவதரித்த இடம் என்று புராணங்கள் போற்றுகின்றன. விநாயகர் மனித முகத்துடன் அருள்பாலிக்கும் தலம் இது. மிருகசீரிடம், மூலம், கேட்டை மற்றும் ஆயில்யம் நட்சத்திரக்காரர்கள் அவசியம் வழிபட வேண்டிய ஆலயம் இது.

எப்படிச் செல்வது?: மயிலாடுதுறை - திருவாரூர் ரயில் மற்றும் பேருந்து மார்க்கத்தில் உள்ள ஊர் பூந்தோட்டம். இவ்வூரிலிருந்து கிழக்கே 3.கி.மீ. தூரத்தில் இக்கோயில் அமைந்துள்ளது. பேரூந்து, கார், ஆட்டோ வசதியுண்டு.