Published:Updated:

குமரி முனையில் மஹா சமுத்திர ஆரத்தி!

குமரி பகவதி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
குமரி பகவதி அம்மன்

கன்யாகுமரியில் தீப வழிபாடு!

குமரி முனையில் மஹா சமுத்திர ஆரத்தி!

கன்யாகுமரியில் தீப வழிபாடு!

Published:Updated:
குமரி பகவதி அம்மன்
பிரீமியம் ஸ்டோரி
குமரி பகவதி அம்மன்

புராணங்கள் போற்றும் அற்புதப் பதி கன்யா குமரி. `மகிமை மிக்க தீர்த்தக் கட்டம்’ என்று கன்யா குமரியை வால்மீகி ராமாயணம் மற்றும் வியாச பாரதம் சிறப்பிக்கிறது. கொல்லூர் - மூகாம்பிகா, வடகரா- லோகாம்பிகை, பாலக்காடு- ஹேமாம்பிகை, கொடுங்கல்லூர்- மகா பகவதி, கன்யாகுமரி- பாலாம்பிகா ஆகிய ஐந்தும் ஸ்ரீபரசுராமரால் நிறுவப்பட்ட க்ஷேத்திரங்கள். இவை பஞ்ச பகவதி தலங்கள் எனப்படுகின்றன.

குமரி முனையில் 
மஹா சமுத்திர ஆரத்தி!

முன்னொரு காலத்தில் பகன், முகன் என்ற அசுரர் இருவர் தேவர்களுக் குத் தொல்லை கொடுத்தனர். தேவர்கள், காசி விஸ்வநாதரிடம் சென்று முறையிட்டனர். அசுரர்களை அழிக்க காசி விஸ்வநாதர் இரண்டு பெண் களைப் படைத்தருளினார். அவர்களுள் ஒருத்தி வடக்கே (கொல்கத்தா) உள்ள காளிதேவி. மற்றொருத்தி தெற்கே கன்யாகுமரியின் பகவதியம்மன். இவர்கள் பகன் - முகனை அழித்ததுடன் பாரதத்துக்கு தீங்கு நேராமலும் காத்தருள்கின்றனர். இன்னொரு திருக்கதையும் உண்டு.

சிவனருள் வேண்டி குமரிமுனையில் தவத்தில் இருந்தாள் அன்னை பகவதி. அவளை மணமுடிக்க விரும்பிய தாணுமாலய ஸ்வாமி, தேவர் களை அழைத்து தக்க ஏற்பாடுகள் செய்யும்படி பணித்தார்.

தேவர்களோ பாணாசுரன் என்பவனால் மிகுந்த துன்பத்துக்கு ஆளாகியிருந்த காலம் அது. கன்னி பகவதியால் அவன் அழிவான் என்பது விதி. ஆனால் ஸ்வாமிக்கும் பகவதி அன்னைக்கும் கல்யாணம் நடந்தால், அசுரவதம் தடைப்படுமே என்று எண்ணினர் தேவர்கள். அப்போது அங்கு வந்த நாரதர், திருமணத்தை தான் முடித்து வைப்பதாகக் கூறி, தாணுமாலயரிடம் இரண்டு நிபந்தனை கள் விதித்தார். ஒன்று- கண் இல்லாத தேங்காய், காம்பில்லாத மாங்காய், நரம்பில்லாத வெற்றிலை, கணு இல்லாத கரும்பு மற்றும் இதழ் இல்லாத மலர் ஆகியவை சீதனப் பொருள்களாக வேண்டும். இரண்டாவது- உதயத்துக்கு ஒரு நாழிகை முன்பாக மணமகன் மண வறைக்கு வர வேண்டும்.

இதன்படி தாணுமாலயக் கடவுள் சீதனப் பொருள்களை முதலில் அனுப்பினார். ஐந்து மைல் தூரத்தைக் கடக்க நள்ளிரவிலேயே புறப்பட்டார். உடனே நாரதர் சேவல் உருவெடுத்து உதயத்துக்கு அடையாளமாகக் கூவினார். அதனால் முகூர்த்த நேரம் தவறிவிட்டதாகக் கருதிய தாணுமாலயக் கடவுள் சுசீந்திரம் திரும்பினார். திருமணம் தடைப்பட்டது. அதனால் அன்னை பகவதி ஆக்ரோஷம் கொண்ட வேளையில், பாணாசுரன் வந்து அன்னையின் சீற்றத்தை அதிகப்படுத்தினான். அவனை அழித்து தேவர்களைக் காப்பாற்றினாள் அம்பிகை. இன்றும் முக்கடல் சங்கமிக்கும் குமரி முனையில் கோயில்கொண்டு நம் அனைவரையும் காத்து வருகிறாள்.

குமரி பகவதிக்கு கன்னி தெய்வம், அபர்ணா, கன்னிகா பரமேஸ்வரி, பகவதி அம்மன் என்ற பெயர்களும் உண்டு. பண்டைய காலத்தில் இவளை சங்கரி, கௌரி, ஆர்யா, சாமரி, குமாரி, சூலி, நீலி, செய்யாள், கொற்றவை ஆகிய பெயர்களாலும் அழைத்தனராம்.

இந்தியாவின் புண்ணிய தீர்த்தங்களில் கன்யாகுமரி சிறப்பிடம் பெற்றுள்ளதை, `இமயப் பொருப்பகத் தீராண் டுறைந்த பின் குமரித் தீர்த்த மரீ இய வேட்கையின் தரும யாத்திரையெனத் தக்கிணம் போந் துழி’ எனப் போற்றுகிறது பெருங்கதை.

அற்புதமான இந்தத் தலத்தையும் தீர்த்தத் தையும் சிறப்பிக்கும் விதம் விசேஷ ஆராதனை வழிபாடு தொடங்கப்பெற்றுள்ளது.

புனிதமான கங்கைக்கு தினமும் ஆரத்தி நடைபெறுகிறது. கங்கா, யமுனா, சரஸ்வதி நதிகள் சங்கமிக்கும் அலகாபாத்திலும் நதிகளை ஆராதிக்க ஆரத்தி நடைபெற்று வருகிறது. அதேபோல் வங்காளவிரிகுடா, இந்து மஹா சமுத்திரம், அரபிக்கடல் ஆகிய முக்கடலும் சங்கமிக்கும் கன்னியாகுமரி புனித திரிவேணி சங்கமத்திலும் `சமுத்திர ஆரத்தி’ கடந்த புரட்டாசி பெளர்ணமி தினத்தில் நடைபெற்றது.

குமரி முனையில் 
மஹா சமுத்திர ஆரத்தி!

கன்னியாகுமரி மாவட்ட இந்து தொண்டர் பேரவை சார்பில் இந்த மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடைபெற்றது. இதுபற்றி இந்த அமைப் பின் தலைவர் எஸ்.ராஜகோபால் கூறுகையில், “இயற்கை வழிபாடு தொன்று தொட்டே இருந்து வருகிறது. வடக்கே கங்கையில் ஆரத்தி நடைபெறுவதுபோல தெற்கே முக்கடல் திரிவேணி சங்கமத்தில் மஹா சமுத்திர ஆரத்தி நடத்த வேண்டும் என இறை அடியார்கள் விரும்பினோம்.

புரட்டாசி பெளர்ணமி தினத்தில் மூன்று முறை பஞ்ச சங்கு முழங்க, சப்த கன்னியர் பூஜை, 27 சுமங்கலி பூஜை ஆகியவற்றை நடத்தினோம். மாலை 7 மணிக்கு முக்கடல் சங்கமத்தில் மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடத்தினோம். இதுபோன்று ஒவ்வொரு பெளர்ணமி தினத்திலும் மஹா சமுத்திர தீர்த்த ஆரத்தி நடத்த உள்ளோம். பெருந்தொற்று கட்டுப்பாட்டு விதிமுறைகளைக் கடைப்பிடித்து இந்த வைபவம் நிகழும்” என்றார்.

இனி குமரிமுனை செல்லும் பக்தர்கள் பெளர்ணமியை ஒட்டி இருக்கும்படி பயணத் திட்டத்தை வகுத்துக்கொள்ளலாம். அற்புதமான மகா சமுத்திர தீர்த்த ஆரத்தி வைபவத்திலும் கலந்துகொண்டு, புண்ணிய அனுபவத்தைப் பெற்று வரலாம்.