Published:Updated:

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் சிவாலய ஓட்டம்! - குமரியில் ஒலிக்கும் கோபாலா, கோவிந்தா கோஷம்

சிவராத்திரி விழாவை முன்னிட்டு குமரியில் சிவாலய ஓட்டம்

சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது.

ஹரியும் சிவனும் ஒன்று என்பதை உணர்த்தும் சிவாலய ஓட்டம்! - குமரியில் ஒலிக்கும் கோபாலா, கோவிந்தா கோஷம்

சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது.

Published:Updated:
சிவராத்திரி விழாவை முன்னிட்டு குமரியில் சிவாலய ஓட்டம்

சிவராத்திரி விழாவை முன்னிட்டு கன்னியாகுமரி மாவட்டத்தில் பிரசித்திபெற்ற சிவாலய ஓட்டம் நடைபெற்று வருகிறது. ஹரியும் சிவனும் ஒன்று என்ற தத்துவத்தை உணர்த்தும் விதமாக கோவிந்தா... கோபாலா... என்ற கோஷம் முழங்க பக்தர்கள் பன்னிரண்டு சிவாலயங்களுக்குச் சென்று தரிசனம் செய்கிறார்கள். முன்சிறையில் உள்ள திருமலை சிவன் கோயிலில் தொடங்கி திக்குறிச்சி, திற்பரப்பு, திருநந்திக்கரை, பொன்மனை, பன்னிப்பாகம், கல்குளம், மேலாங்கோடு, திருவிடைக்கோடு, திருவிதாங்கோடு, திருப்பன்றியோடு, திருநட்டாலம் ஆகியோ கோயில்களில் சென்று வழிபடுகின்றனர். இது சிவாலய ஓட்டம் என அழைக்கப்படுகிறது. 12 சிவாலயங்களுக்கும் செல்ல சுமார் 108 கிலோ மீட்டர் தூரம் பயணிக்க வேண்டும். கால் நடையாகவும் சைக்கிள், டூவீலர் மற்றும் கார் உள்ளிட்ட வாகனங்களிலும் பக்தர்கள் சிவாலய தரிசனம் நடத்துகின்றனர். திருநட்டாலம் சிவன்கோயில் அருகிலேயே சங்கர நாராயணர் கோயில் என்ற மஹாவிஷ்ணு கோயில் உள்ளது. இறுதியாக இந்தக் கோயிலில் வழிபட்டு சிவாலய ஓட்டத்தை நிறைவு செய்கின்றனர்.

சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள்
சிவாலய ஓட்டத்தில் பக்தர்கள்

பிரசித்திபெற்ற இந்த சிவாலய ஓட்டத்திற்குப் புராணகால வரலாற்றுக் கதை கூறப்படுகிறது. மகாபாரத போர் முடிவில் அதர்ம சக்திகளான கௌரவர்கள் முற்றிலும் அழித்தொழிக்கப்பட்டனர். அதன் பிறகு பஞ்ச பாண்டவர்களில் மூத்தவரான தருமர் மன்னராகப் பதவி ஏற்கும் பட்டாபிஷேகம் நடத்த திட்டமிடப்பட்டது. தருமரின் பட்டாபிஷேகத்துக்கு புருஷாமிருகத்தின் பால் தேவைப்பட்டதாம். புருஷா மிருகம் என்பது இடுப்புக்கு மேல் மிருக உடலும் இடுப்புக்குக் கீழ் மனித உடலும் கொண்டது. மிகுந்த சிவ பக்தி உடையது. புருஷா மிருகம் தான் வாழும் எல்லைக்குள் வருபவர்களைப் பிடித்து தின்றுவிடுமாம். அந்த மிருகம் வாழும் எல்லைக்கு வெளியே யாராவது கொண்டுவந்தால், அவர்களின் கட்டளைக்குக் கட்டுப்படுமாம். தன் பலத்தின் மீது அதீத கர்வம் கொண்ட பீமன் புருஷாமிருகத்தின் எல்லைக்குள் புகுந்து அதை எல்லைக்கு வெளியே துரத்திக்கொண்டு வர ஒத்துக்கொண்டார்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விகடனின் அதிரடி ஆஃபர்!
தற்பொழுது ரூ.750 சேமியுங்கள்! ரூ.1749 மதிப்புள்ள 1 வருட டிஜிட்டல் சந்தா999 மட்டுமே! மிஸ் பண்ணிடாதீங்க!Get Offer

பாண்டவர்களுக்கு வழக்கமாக உதவும் மாயக்கண்ணன் பீமனிடம் சென்று 12 ருத்திராட்சங்களை வழங்கி ஒரு ஆலோசனையும் சொன்னார். ``புருஷா மிருகம் தன்னை மறந்து தன் எல்லைக்கு வரவேண்டுமென்றால், மிகுந்த ஆவேசத்துடன் உன்னைத் தொடர வேண்டுமென்றால் ஒரே வழிதான் உள்ளது. மிகவும் முரட்டுத்தனமான சிவ பக்திகொண்ட அந்த புருஷா மிருகத்துக்குக் கேட்கும்படி “கோபாலா... கோவிந்தா...” என்று சத்தமாக என் பெயரைக் கூவி விளித்தால் போதும். அது சிவ எல்லைக்குள் பிறிதொரு பெயரைச் சொல்பவன் எவன் என ஆத்திரத்துடன் கிளம்பி உன்னைத் துரத்த ஆரம்பிக்கும். புருஷா மிருகம் உன்னைத் துரத்தும்போது ஒருவேளை நீ தளர்வடைந்து அந்த புருஷாமிருகம் உன்னைப் பிடித்துவிடும் நிலை வந்தால் இந்த உத்திராட்சங்களில் ஒன்றைக் கீழே போடு, அது சிவலிங்கமாகிவிடும். புருஷாமிருகம் உடனே சிவ பெருமான் முன் அமர்ந்து வழிபட்டுவிட்டுதான் மீண்டும் உன்னைத் தொடரும். அதற்குள் நீ ஓடி வந்து விட முடியும்" என்றார் கண்ணன்.

சிவாலய ஓட்டத்தின்போது தாகம் தணிக்கும் பக்தர்கள்
சிவாலய ஓட்டத்தின்போது தாகம் தணிக்கும் பக்தர்கள்

கண்ணனின் கருத்துக்கு பீமன் உடன் பட்டான். புருஷா மிருகத்தின் எல்லைக்குள் சென்றான். ``கோபாலா கோவிந்தா” என உரக்க விளித்தான். சிவ பூஜையிலிருந்த புருஷாமிருகம் ஆத்திரமும் ஆவேசமுமாகக் கிளம்பியது. பீமன் ஓடினான். ஆனால் புருஷாமிருகம் பீமனைவிட வேகமாக ஓடியது. இதை பீமனும் உணர்ந்தான். புருஷா மிருகம் பீமனைப் பிடிக்கும் நிலை வந்த போது கிருஷ்ணன் கொடுத்த உத்திராட்சங்களில் ஒன்றைக் கீழே போட்டான். அந்த ருத்திராட்சம் சிவ லிங்கமாக மாறியது. புருஷாமிருகம் சிவலிங்கத்தின் முன்பு அமர்ந்து சிறிதுநேரம் வழிபட்டது. அதற்கும் கொஞ்சம் ஆசுவாசமாகிவிட்ட பீமன் மீண்டும் “கோபாலா கோவிந்தா” என கோஷமிட, மீண்டும் புருஷாமிருகம் ஆத்திரத்துடன் பாய்ந்து துரத்தியது. மீண்டும் பீமன் ஓடினான். மறுபடியும் ஒரு ருத்திராட்சத்தைக் கீழே போடுவதும், அது சிவலிங்கமாக மாறுவதும், புருஷாமிருகம் வழிபடுவதும் தொடர்ந்தது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

இப்படி பன்னிரண்டு உத்திராட்சங்களும் போட்டு முடிந்துவிட்டது. இறுதியில் புருஷா மிருகத்தின் எல்லைக் கோட்டை பீமன் தாண்டும் சமயத்தில் எல்லைக்கு உள்ளிருந்த ஒரு காலை மட்டும் புருஷாமிருகம் பிடித்துவிட்டது. அத்துடன் அவர்களது ஓட்டமும் நின்றது. புருஷாமிருகத்தின் எல்லை தாண்டிவிட்ட தன்னை விட்டுவிட வேண்டும் என பீமன் வாதிட்டான். எல்லைக்குள்ளே ஒரு கால் இருப்பதால் பீமன் தனக்குச் சொந்தம் என புருஷாமிருகம் சொல்லியது. இதற்குத் தீர்வு காணும் விதமாக வழக்கு தருமரிடம் சென்றது. தம்பி என்றும் பாராமல் பீமன் உடலை இரண்டாகப் பிளந்து ஒரு பகுதியை புருஷாமிருகத்திடம் கொடுக்கும்படி தருமர் தீர்ப்பு சொன்னார். தருமரின் நீதி வழுவாத நியாய உணர்வைப் பார்த்து மெய்சிலிர்த்த புருஷாமிருகம் பீமனை விட்டுவிட்டது.

முதல் கோயிலான முஞ்சிறையில் அலைமோதும் பக்தர்கள்
முதல் கோயிலான முஞ்சிறையில் அலைமோதும் பக்தர்கள்

இது ஒருபுறம் இருக்க பன்னிரண்டாவது உத்திராட்சத்தை பீமன் கீழே போட்ட இடத்தில் தோன்றிய சிவலிங்கத்தை புருஷா மிருகம் பூஜை செய்யத் தொடங்கியது. அப்போது சிவலிங்கத்தில் மகாவிஷ்ணுவின் ரூபம் தெரிந்தது. இதனால் புருஷாமிருகம் குழப்பமடைந்தது. அப்போது சிவனும், விஷ்ணுவும் கலந்த சங்கர நாராயணனாக புருஷாமிருகத்துக்குக் காட்சி அளித்து இறைவன் ஆட்கொண்டார். சிவனும், ஹரியும் ஒன்று என்பதை உணர்ந்து கொண்டு தனது மூர்க்கத்தனத்தை விட்டு உள்ளத் தெளிவு அடைந்தது புருஷாமிருகம். இதையடுத்து புருஷாமிருகம் தன் எல்லையை விட்டு வெளியே வந்து தருமர் பட்டாபிஷேகத்துக்குப் பால் அளிக்க ஒத்துக்கொண்டது. இந்தச் சம்பவம் மூலம் தன்னை மிகவும் பலசாலி என நினைத்துக்கொண்டிருந்த பீமன் புருஷாமிருகத்தின் பிடியில் சிக்கியதால் தன் பலத்தின் மீதிருந்த கர்வம் குறைந்தது. 12 உத்திராட்சங்களும் வைக்கப்பட்ட பகுதியில் உள்ள சிவன் கோயில்களில்தான் சிவாலய ஓட்டம் நடக்கிறது. புருஷா மிருகத்துக்கு ஹரியும் சிவனும் ஒன்று எனக் காட்சியளித்த திருத்தலம்தான் நட்டாலம். நட்டாலத்தில் சிவன் கோயிலும் அருகில் சங்கரநாராயணராக மஹா விஷ்ணுவும் காட்சி தரும் கோயிலும் உள்ளது. சிவராத்திரி விழாவான இன்று சிவாலய ஓட்டத்துக்காக கன்னியாகுமரி மாவட்டத்துக்கு இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டுள்ளது.

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism